Thursday, May 27, 2021

முதல் பிரசவம் 4 /--

கவிதை எழுதும் முன்  அவர் புனைப்பெயர்

வைத்துக் கொள்ளச் சொன்னதன் காரணமே

என் பள்ளிப் பெயர் ரொம்ப நீளமானது

இனிசியலுடன் சேர்த்தால் பதிமூன்று எழுத்து


எனவே வீட்டில் கூப்பிடும் பெயரான

ரமணி என்கிற பெயரை வைத்து ஒரு

புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் என

முடிவு செய்தோம்


முன்பு பிரபலமானவர்கள் எல்லாம் தங்கள்

பெயருக்கு முன்னால் ஊரின் பெயரைச்

சேர்த்து தங்கள் பெயரை வைத்திருப்பார்கள்


கொத்தமங்கலம் சுப்பு../நாஞ்சில் பி.டி சாமி

நெல்லைக் கண்ணன் ...இப்படி...

அந்த வகையில் எங்கள் ஊரின் பெயரான

அவனியாபுரத்தின் பெயரில் மூன்று எழுத்தையும்

என பெயரையும் சேர்த்து அவனி,ரமணி

என வைப்பதென முடிவு செய்தோம்..

பின் அது கூட சரியில்லை இனிசியலையும்

சேர்த்து அவனி..எஸ்.வி ரமணி என வைத்துக்

கொள்வதென முடிவாயிற்று


மூவரும் ஏதோ  அரஞ்சு மிட்டாயை மெல்வதுபோல்

மெல்ல மெல்ல வாய்க்குள் சொல்லிப் பார்த்து

பிரமாதம் அப்படியே இருக்கட்டும் என முடிவு செய்து...

பெயர் நன்றாக அமைந்துவிட்டது அப்படியே

இனி கவிதையும் அமையும் என வாழ்த்துக்

கூற அடுத்த விஷயங்களில் கவன்ம் செலுத்தத்

துவங்கினோம்


முதல் பிரதி என்பதால் அட்டைபடத்தில்

விநாயகர் படம் போடுவது..அட்டைப்படத்திற்கான

கவிதையாக நான் விநாயகர் குறித்து

ஒரு கவிதை எழுதுவது...

தலையங்கத்திற்கு ஒரு இரண்டு பக்கம்/

கதைக்கு ஆறு பக்கம்/கட்டுரைக்கு மூன்று பக்கம்/

புத்தக அறிமுகம் அல்லது விமர்ச்சனம்

அதற்கு ஒரு நான்கு பக்கம்/ பின்

படித்தவர்கள் கைப்பிரதி குறித்த கருத்துக்களை

பதிவு செய்ய காலியாக ஐந்து பக்கம் என

திட்டமிட்டு எப்படியும் ஒரு 

கைப்பிரதியின் பக்கஙகள்  இருபத்தைந்தைத்

தாண்டாது பார்த்துக் கொள்வது என்றும்

தீர்மானிக்கப்பட்டது


அதற்குத் தயாரிப்புச் செலவாக ரூபாய்

பதினைந்து ஆகும் என்றும் அதில் எட்டு

ரூபாயை நாங்கள் பகிர்ந்து கொள்வது என்றும்

மீதம் ஏழு ரூபாயை நன்கொடைகள் பெற்று

ஈடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது

(அன்றைய நிலையில்  பதினைந்து ரூபாய் என்பது

அரசு அதிகாரி ஒருவரின்  ஒரு நாள் சம்பளத்திற்கு 

ஈடானது .)


பின் எழுதுபவரிடம் எழுதி வாங்கி கையெழுத்து

நன்றாக உள்ள இருவரிடம் பிரித்துக் கொடுத்து

எழுதி வாங்குவது ஓவியம் வரையக் கொடுத்து

வாங்குவது முதலான அனைத்துப் பணிகளையும்

நான் பார்ப்பது என முடிவானது.


இப்படிப் பேசி முடிவெடுத்து நாளை முதல்

செயல்படுத்தத் துவங்குவோம் என பேசிக்

கலைகிற சமயத்தில் தூரமாக இருந்து

எங்கள் நடவடிக்கைகளை கவனித்துக் 

கொண்டிருந்த எங்களூரின் கம்னியூஸ்ட்

கட்சியில் முழு நேர ஊழியராகப் பணியாற்றிக்

கொண்டிருந்த வாசு என்கிற தோழர்

எங்களை நெருங்கி வந்தார்..


அவர் வரவும் பேச்சும் நாங்கள் ஏற்கெனவே

புத்தகத் தயாரிப்புக்கென வகுத்திருந்த

உள்ளடக்கங்களை அப்படியே தலைகீழாக

மாற்றும் என நாங்கள் 

அப்போது உணர்ந்திருக்க வில்லை


(தொடரும் ) 

5 comments:

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் அனுபவங்கள் அருமை. சுவாரசியமாகவும் செல்கிறது. தொடர்கிறோம்

துளசிதரன்

கீதா

வெங்கட் நாகராஜ் said...

தலைகீழாக மாறிய திட்டங்கள் - மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன். புனைப்பெயர் நன்று.

ஸ்ரீராம். said...

ஹா..  ஹா...  ஹா...   அவ்வளவு செலவா ஆகும்?  

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கிறேன்...

G.M Balasubramaniam said...

நாங்கள்அம்பர்நாதில் விடுதியிலிருண்ட போதுகையெழுத்து பிரதி ஒன்றைகொண்டு வந்தோம் அதில் இருக்கும் சிரமங்கள்நான் அறிவேன்

Post a Comment