Monday, April 28, 2014

முட்டுச் சந்து

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் 

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

26 comments:

Anonymous said...

வணக்கம்
ஐயா

"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

அருமையானகருத்தை மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள் இறுதியில் வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

மிக அருமை. அதுவும் காய்ந்த இலை எடுக்கும் உவமை நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்.....!

கரந்தை ஜெயக்குமார் said...

///"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.///
ஆகா
படிக்கப் படிக்க மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது ஐயா.
மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்தில் வடிக்கச் சிலரால்தான் முடியும்,அக் கலையில் கைதேர்ந்தவர் நீங்கள்.
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 4

இராஜராஜேஸ்வரி said...

தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்

காய்ந்த இலை உவமை நிதர்சனம்..

இன்று சுட்ட போண்டாவை நாளை விற்று
நேற்று சுட்ட போண்டாவை இன்று விற்று
ஊசிப்போன போண்டா விற்கும் கடையாக
பெயர் பெற்றது போல...!

நிகழ்காலத்தைத்தொலைத்து
நேற்றிலும் நாளையிலுமாக தடுமாறுகிறதே..!

RajalakshmiParamasivam said...

காய்ந்த இல்லை எடுக்க முயலும் உவமை நம் தினசரி நிகழ்வில் காண்கிறேன்.

RajalakshmiParamasivam said...

த.ம 5

Avargal Unmaigal said...

எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் வாழாமல் விடப்பட்ட இந்தியரின் நிலையை அப்பட்டமாக அதே நேரத்தில் அழகாக சொல்லிஸ் சென்று இருக்கின்றீர்கள்

காரஞ்சன் சிந்தனைகள் said...

//"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.//

எதார்த்தமான வரிகள்! இரசித்தேன்! அருமை!நன்றி ஐயா!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

எதிா்காலம் எண்ணி நிகழ்காலம் வேகும்
உதிா்காலம் முன்னே உணா்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


தமிழ்மணம் 7

Unknown said...

இந்த க்ஷண நேரத்தில்(எதிர்காலம் இறந்த காலத்தை நினைக்காமல் ) வாழுவதே பேரின்பம் என்பதை நன்றாகச் சொன்னீர்கள் !
த ம 8

அருணா செல்வம் said...

இச்சை எதையும் தள்ளிவைத்தே
இன்று பழஞ்சோர் உண்டுவாழ்ந்தே
மிச்சம் மீதி நடந்துவந்து
முட்டுச் சந்தில் ஏங்குவதை
“நச்“சென்(று) உரைத்தீர் ரமணிஐயா!
நாளும் நாளை என்றுவாழும்
பச்சை இலைகள் பழத்துவிடும்!
பாவம்! பாவி நாங்களும்தான்!

தி.தமிழ் இளங்கோ said...

எனக்கு ஒரு ஆறுதல்! எனக்கு மட்டுமே ஏன் இப்படி? என்று நானும் அங்காலய்த்துக் கொள்ளுவதுண்டு. உங்களுக்கும் அப்படியேதானா? காரணம், ந்ம்மை வளர்த்தவர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்! அனுபவ பகிர்வுக்கு நன்றி!
த.ம.11

வெங்கட் நாகராஜ் said...

சரியான உவமை.... பல சமயங்களில் எதிர்காலம் குறித்த நினைவுகளிலேயே நிகழ்காலத்தினை அனுபவிக்கத் தவறுகிறோம்....

சிறப்பாய் கவிதை மூலம் சொல்லி விட்டீர்கள்....

கார்த்திக் சரவணன் said...

இது தான் வாழ்க்கை..

திண்டுக்கல் தனபாலன் said...

உவமை மிகவும் சிறப்பு...

Unknown said...

அனுபவித்து எழுதிய ,அருமைக் கவிதை! சொல்லிப்போன விதம் சுவைத்திட முளைத்த விதை!

Thulasidharan V Thillaiakathu said...

எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.//

எதிர் காலம் இல்லை இறந்த காலம் இதில் பலர் வாழ்வதிலதான் பிரச்சினைகளே! நிகழ்காலத்தில் அதை உணர்ந்து வாழ்ந்தால் அதுதான் வாழ்வு! மிகர் அருமையான கவிதை!

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான கவிதை! கிழிந்த சாக்குபை, உலர்ந்த இலை அருமையான உதாரணம்! ரசித்தேன்! மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள்!

ப.கந்தசாமி said...

கடமைகளை முடித்த பின் ஆனந்தத்தை அனுபவிப்போம் என்று காலத்தை ஓட்டிவிட்டு, இன்று கடமைகள் முடிந்தபின் ஆனந்தத்தை அனுபவிக்க உடலில் தெம்பு இல்லையே என்று நினைக்கும்போது ஒரு வருத்தம் தோன்றுகிறது.

Packirisamy N said...

என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும், இது ஒரு வகையில் கையாலாகாத தன்மைதான். அடுத்தவர்கள் மீது சாடுவது, பொறுப்பைத் தட்டிக்கழிப்பது என்று நினைக்கிறேன். ஆனால், நடைமுறையை சரியாக சொல்லியுள்ளீர்கள்.

Yarlpavanan said...

""வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில் தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது." என்பது
மிகச் சிறந்த தத்துவம் ஐயா!
தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

கோமதி அரசு said...

"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்"//

என் மாமியாரும் இப்படி சொல்வார்கள்.
வாழுதல் பற்றிய அருமையான கவிதை இன்று என்றே வாழ்தல் இல்லை நாளை நினைத்துதான் எப்போதும் வாழ்கிறோம் உண்மை.

ezhil said...

வாழ்வியலை படம் பிடித்துச் செல்கிறது கவிதை அருமை.

Post a Comment