Tuesday, December 22, 2015

" அவர் "

எப்போதிருந்து " அவரைத் " தெரியும்
என்றிலிருந்து "அவர் " என்னை முழுவதும்
ஆக்கிரமித்துக் கொண்டார்..

 நினைவுச் சரடின் நுனிப்பிடித்து
மெல்லக் காலம் கடக்கிறேன்.

"படம் போட்டு எத்தனை நேரம் ஆச்சு
எத்தனைக் கட்டம் போச்சு " எனக் கேட்டபடி
மிகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த அந்த இருபத்தைந்து
பைசாக் காசில் எடுத்த தரை  டிக்கெட்டில்
மண் குவித்து அமர்ந்தபடிக் கேட்கிறேன்.

"இரண்டு கட்டம்தான் ஆகியிருக்கு.இன்னும்
அண்ணன் வரல " என்கிறான் முன்னால்
குந்தி இருந்த ஒருவன்.

திரையில் ஒரு சுடுகாட்டில் பண்ணையார்
 தன் முன் செருப்புப் போட்டு நின்றதற்காக
ஒரு பராரியை , சவுக்கால் அடிக்கத் துவங்குகிறார்

அந்தக் காட்சியின் கொடுமை,அவன் அடிபடும் விதம்
என்னுள் தானாகவே ஒரு ஆக்ரோஷத்தைக்
கிளப்பிவிடுகிறது

"என்ன கொடுமை இது.செருப்புப் போட்டு அவர் முன்
வருவது அத்தனை கொடிய செயலா ? இது என்னடா
அநியாயமாக இருக்கிறதே " என எண்ணத்
துவங்குகையிலேயே சட்டென
அடுத்தக் கட்டம் மாறுகிறது

ஒரு அருமையான காளை பூட்டிய ரேக்ளா  வண்டியில்
சாட்டையை சுழற்றியபடி "ஹேய் மனிசனை மனிசன்
சாப்பிடறாண்டா அருமைத் தம்பி " எனப் பாடியபடி
சீறிக் கொண்டு வருகிறார்  "அவர் "

கீற்றுக் கொட்டகையில் சீல்கை ஒலி  சீறிப்பறக்கிறது

மேலே விளக்குகளை போட்டுப் போட்டு அணைக்க
கூட்டத்தில் சப்தம் இன்னமும் கட்டுக்கடங்காது
காதை அடைக்கிறது.

 முதன் முதலாய் அந்த க் கூட்டத்தின் ஆக்ரோஷச்
சப்தத்தில் நானும் சங்கமிக்கிறேன்.....


--தொடரும்---

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

என்னுள்ளும் ஓர் ஆர்வம் அடுத்து என்ன என்று தொற்றிக் கொள்கிறது! தொடர்கிறேன்! நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

’உயர்ந்த மனிதன்’ என்ற சிவாஜி நடித்தப்படத்திலும், இதே போல ஒரு காட்சி (செருப்பு அணிந்து நிற்கும் ஒரு வயதானவரைக் காயப்படுத்தும் காட்சி) உண்டு. ஏனோ அந்த ஞாபகம் எனக்கு வந்தது. தங்களின் நினைவலைகள் தொடரட்டும்.

Unknown said...

தொடர்கிறேன்!என்மீது கோபமா! வலைப்பக்கம் வரவேயில்லையே!

நிஷா said...

அட நானும் கேட்க வேண்டும் என்றிருந்தேன். நலம் தானே ஐயா?வலைப்பக்கம் காணவே இல்லையே! உங்கள் உற்சாக பின்னூட்டங்கள் மிஸ்ஸானதேன்?

தொடர்கின்றோம் ஐயா1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

நன்றாக உள்ளதுதொடருங்கள்... படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

அவர்தான் நம்மை ஆக்கிரமிக்கிறார். நாம் அவருக்கு ஒரு பொருட்டா என்னும் எண்ணமே மேலோங்குகிறது

Post a Comment