Showing posts with label சிறப்புப்பதிவு. Show all posts
Showing posts with label சிறப்புப்பதிவு. Show all posts

Tuesday, January 14, 2020

பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

(  அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

Friday, February 9, 2018

காதலர்கள் வித்தியாசமானவர்கள் காதல் விசித்திரமானது !

காதலர்கள்
வித்தியாசமானவர்கள்
காதல்
விசித்திரமானது

காதலியின் முகங்கான
ஒட்டடை நூல்பிடித்துக் கூட
கொடிய எதிரியின் கோட்டை ஏறும்
அசட்டுத் துணிச்சலும்...

காதலை இழந்தால்.
அனைத்துச் சுகங்களையும் ஒதுக்கி
ஏதுமற்ற ஆண்டியாய்த் திரியும்
மனோ வலிமையும்

காதலர்களையன்றி
வேறு யாருக்கு வரும் ?

வெற்றிக் கொண்டவனை
கூட்டத்தில் ஒருவனாக்கி
சராசரியாக்கி உலவ விடும்
அபூர்வச் சக்தியும்

தோற்றவனை
அமரகாவிய நாயகனாக்கி
காலம் கடந்தும் வாழவைக்கும்
ஈடில்லா சாதுர்யமும்

காதலையன்றி
வேறு எதற்கு வரும் ?

ஆம்
அதனால்தான்
இன்னும்
எத்தனை யுகமாயினும்

காதலர்கள்தான்
வித்தியாசமானவர்களாய்த்
தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்

ஆம்
அதனால்தான்
எத்தனை
மாறுதல் நேரினும்

காதல் ஒன்றே
விசித்திரமானதாகத்
தொடர்ந்து கொண்டும் இருக்கிறது

வித்தியாசமானதை
விசித்திரமானதை
நாமும் வாழ்த்தி வைப்போம்

இல்லையேல்
நாமும்
வித்தியாசமானவர்களாகத் தெரிவோம்
விசித்திரமானவர்களாக அறியப்படுவோம்

வாழ்க காதலர்கள்
வாழ்க காதலர்தினம்

Friday, October 14, 2016

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

Sunday, September 4, 2016

கணபதி திருவடி



கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இலையினி -தொடர் 
செழுமையே  உனக்கினி 

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உனை  
வலம்வரும்  கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது இலையினி -முழு 
நிறைவுதான் எனத்தெளி


Wednesday, June 1, 2016

மெய்நலம் போற்றிக் காத்து...

உலகிது விழிக்கும் முன்னே-நித்தம்
விழித்து எழுந்துப்  பாரு
உலகிது வியக்கும் வண்ணம்-உந்தன்
உயர்வது இருக்கும் பாரு

உடலினை வருத்தி நாளும்- உடற்
பயிற்சியைச் செய்துப்  பாரு
உடலது பணியாள் போல-உனக்கு
உதவிடும் முயன்றுப்  பாரு

உணவது வயிற்றில் பாதி-நல்ல
நீரும் காற்றும் மீதி
தினமிதை மறவா திருந்தால்-உன்னிடம்
நோய்நொடிக் கில்லை ஜோலி

ஓய்வதும் வேலை போல-தினமும்
அவசியம் என்றே அறிவாய்
ஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்
உண்மையை என்றும் மறவாய்

சுவரினை வைத்தே என்றும்-நல்ல
சித்திரம் வரையக் கூடும்
பழமொழி மேன்மை அறிந்தால்-எளிதாய்
பலநிலைக்  கடக்கக் கூடும்

தும்பதை விட்டு வாலைப்-பிடித்து
தோற்கிற அவலம் வேண்டாம்
மெய்நலம்  போற்றிக் காத்து-  எதிலும்
நிலையென நிற்போம்  வாராய்