Wednesday, March 27, 2013

இறுதிப் போட்டி ?


உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் ரசிகனாக
காலமும் இதயமும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து ஓய்ந்து
அலுத்த இதயம்
இயலாது தன் நுனியை
மருத்துவரிடம் சேர்க்க
எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல்
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அதிசயத் திரு   நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?

17 comments:

அம்பாளடியாள் said...

உண்மைதான் ஐயா தெரியாமல் இவ்வுலகிற்கு வந்து விட்டோம் இன்னும் என்ன பாடு படப் போகிறோமோ யாருக்குத்தான் தெரியும் !சிறப்பான சிந்தனைக் கவிதை வாழ்த்துக்கள் ஐயா .

K.s.s.Rajh said...

////வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல////

மெளனத்தின் சக்தியை ஒரு வரியில் எளிதாக சொல்லியுள்ளீர்கள்
கவிதையும் அழகு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொஞ்சமா பயமாத்தான் இருக்கு.
உண்மைகளை நறுக்கென சொல்லும் கவிதை

பூந்தளிர் said...

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல்
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அதிசயத் திரு நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?

ரொம்ப நிதர்சனமான கவிதை. பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்... நடக்கலாம்...

Anonymous said...

''..உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் ரசிகனாக
காலமும் இதயமும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்...'' அதே தான்!
நல்ல சிந்தனையான சிறு கவிதை.
ரசித்தேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைச் சுடும் என்பார்கள், தங்கள் கவிதையும் சுடுகின்றது. வாழ்வியல் யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

அழகான சிந்தனை கவிதை....! அருமையாக இருக்குது குரு...!

இராஜராஜேஸ்வரி said...

கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

அருமையான ஒப்பீடு ...

கோமதி அரசு said...

கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?
//
உண்மைதான் நீங்கள் சொல்வது கயிறிழுக்கும் போட்டிதான்.
வெல்வது யார் என்று காலம் பதில் சொல்லும்.

சாந்தி மாரியப்பன் said...

அருமை.. அருமை. வாழ்க்கையே ஒரு போராட்ட விளையாட்டுக்களம்தான்.

goma said...

வாழ்க்கை ஒரு இழுபறி ஆட்டம் என்பதை அழகாக விளக்கி விட்டீர்கள்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு சிந்தனையை தூண்டும் கவிதை! அருமை!

kowsy said...

வாழ்வும் இறப்பும் உங்கள் சிந்தனையில் அழகாகத் தெரிந்தன . கயிறிழுக்கும் போட்டியில் காலத்தை வெல்பவர்கள் யாருமே இல்லை. ரூபத்தை வெட்டிச் சாய்த்து அரூபம் வெல்லும் நாள் நிச்சயம் .நாம் இது புரிந்தும் புரியாத மனிதர்களே

சிவகுமாரன் said...

கயிறு இழுக்கும் போட்டி - நல்ல உவமை அருமை .

கீதமஞ்சரி said...

கயிறு இழுக்கும் போட்டியாய் வாழ்நாளை வர்ணித்த கவிதை மனம் இழுக்கிறது. அபாரமான கற்பனை! அத்தனையும் உண்மை! பாராட்டுகள் ரமணி சார்.

G.M Balasubramaniam said...


இதுபற்றி நினைக்க நினைக்க இன்னும் என்னவெல்லாமோ கற்பனைகள் கண்முன்னே சதிராடும். காலமும் இதயமும் நடத்தும் போட்டிதான் என்கிறீர்கள். போட்டி என்றால் இரு தரப்பினரும் வெல்லும் வாய்ப்புகள் இருக்க வேண்டும். ஆனால் இங்கோ......?

Post a Comment