Showing posts with label கவிதை... Show all posts
Showing posts with label கவிதை... Show all posts

Monday, June 8, 2020

நதி மூலம்...ரிஷிமூலம்..

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு தலைவனை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

Monday, June 1, 2020

எண்ணமே வாழ்வு...

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வெல்வோம்