Showing posts with label ஜாலிக்கு-. Show all posts
Showing posts with label ஜாலிக்கு-. Show all posts

Friday, October 17, 2014

காற்று வாங்கப் போவோம்

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

எனவே நாளும்----

காற்று வாங்கப் போவோம்
கவிதை வாங்கி வருவோம்-இந்தக்
கூற்றைச் சொன்ன கவியை -நாளும்
போற்றி நாமும் மகிழ்வோம்

Friday, November 15, 2013

ஜாலியும் ஜோலியும்

"ஜோலி ஜோலி "என்றே இருந்தால்
வாழ்க்கைப் "போராய்ப்  " போகும் என்று
"ஜோலிக் "குள்ளே ஜாலியைக் கொஞ்சம்-சோற்றில்
உப்பைப் போலச் சேர்த்தார் அன்று

"ஜாலி " ஒன்றே வாழ்க்கை என்று
வாழ்தல் ஒன்றேச் சரியெனக் கொண்டு
வாலிபர் எல்லாம் மாறினார் இன்று-சோற்றை
ஊறு காய்க்குத் தொட்டுக் கொண்டு

பொழுதைப் போக்கத் தேவை இல்லை
போதல் ஒன்றே பொழுதின் தன்மை
உழைத்தக் களைப்பைப் போக்க மட்டும்-பொழுதுப்
போக்குப் போதும் என்றார் அன்று

போகும் வழியது தெரியா தென்று
பொழுது நின்று தவிப்பது போன்று
நாளும் பொழுதும் பொழுதை வீணே-இங்கே
போக்கித் திரிகிறார் பலரும் இன்று

அதனால் தானே தமிழில் இங்கு
"டயம்பாஸ் " என்கிறப் பெயரையேக் கொண்டு
உதவாக் கரையாய்ப்  புத்தகம் ஒன்று-அழகாய்
உலவியும் வருகுது பொழுதையும் விழுங்குது

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்