Saturday, May 13, 2017

தாய்மை

அகன்று விரைந்து பரவி
ஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி
.
அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்

அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது ஒருகவிதை

அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை

சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

(அன்னையர்கள் அனைவரையும் 
அடிபணிந்து  வாழ்த்துவோமாக  )

14 comments:

Yaathoramani.blogspot.com said...


மஞ்சுபாஷிணி said...//
வார்த்தைகளின் கனம் அதை தாங்கியுள்ள வரிகளில் மிளிர தருவது தான் இக்கவிதையின் சிறப்பு...
பெருக்கெடுத்து ஓடும் காவேரியை ஒரு துளி நீர் கம்பீரமாய் உணர்வதைப்போல்....

ஆஹா ஓஹோன்னு கவிதையை பாராட்டிச்செல்வோர் அதன் கருவை சிலாகிப்பாருண்டோ? ஆனால் கரு கொள்ளும் பெருமிதம் அறியமுடிகிறது உங்களின் வரிகளில்....

இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளை வளர்க்க பெரும்பாடுபட்டு அதுவும் எத்தனையோ பெண்கள் கணவன் சரியில்லாமல், கணவன் உயிருடனில்லையென்றால் வாழ்க்கை அஸ்தமித்தது போல் சோர்ந்து உட்கார்ந்துவிடாமல் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து தானும் நின்று தன்னை உருக்கி தன் வயிற்றுப்பிள்ளையை உலகமே போற்றும் வண்ணம் உருவாக்கி அதன் பின் ?? அதன் பின் ??? வெற்றியின் விளிம்பில் நிற்கும் பிள்ளைக்கு குனிந்து தாய் நிற்கும் இடம் பார்க்கும் நேரம் இல்லையோ? ஆயினும் தாய் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னைப்பற்றி நினைக்காமல் தான் வளர்த்த குருத்து உதித்த வயிற்றை பெருமையுடன் தடவி பார்க்கும் ஆனந்தம்... தாய்மைக்கே உள்ள சிறப்பை அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி கவிதையாய் படைத்துவிட்டீர்கள் சார்..

எனக்கும் அம்மா என்றால் ஸ்வாமிக்கும் மேலே... அம்மா முகத்தில் எப்போதும் சிரிப்பை பார்க்க துடிக்கும் ஒரு சிலரில் நானும் ஒரு துளி சார்....

அன்பு வாழ்த்துக்கள் சார் தாய்மையை கௌரவித்ததற்கு....

Angel said...

ஆஹா !அன்னையர் தினத்துக்கு மிகவும் அருமையான கவிதை //அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி// எதிர்பார்ப்பில்லாத அன்னையின் பேரன்பு வாழ்க

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை//

கண்கலங்க வைத்து கண்களில் குருதியை வரவழைக்கின்றன இந்த இறுதி வரிகள்.

ஒவ்வொரு வரியிலும் பல (கோலப்) பொடிகளைப் புள்ளியாக வைத்து அழகிய கோலமாக வரைந்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

விலை மதிப்பில்லாத அந்தத் தாய்மை வாழ்க !

கோமதி அரசு said...

//அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை//

கண்ணில் நீர் துளிர்த்தது கவிதையை படித்தவுடன்.

அருமையான அன்னையர் தின கவிதை.
வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

முடிவில் அடைப்புக் குறிக்குள் கொடுத்த வரிகள் மேலும் சிறப்பு
த.ம. 2

Unknown said...

உலகத்தில் சிறந்தது தாய்மை ,அது தூய்மை ,இதை ஒப்புக் கொள்வதை நேர்மை ....பாடலை நினைவு படுத்தியது உங்களின் அருமைக் கவிதை :)

இராய செல்லப்பா said...

அன்னையைக்குனிந்து பார்க்க அவனுக்கு நேரமில்லையா, கண்ணில் ஈரமில்லையா? உருக்கமான கவிதை!

இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

சென்னை பித்தன் said...

உடனிருக்கும் உயிருள்ள தெய்வம் தாய்

Yarlpavanan said...

அன்னையர் நாள் வாழ்த்துகள்

G.M Balasubramaniam said...

அன்னையர் தின வாழ்த்துகள் ஒன்றோடு ஒன்றாய் ஒப்பிட்டுக் கவிதை எழுதும் உங்கள் பாங்கு பாராட்டுக்குரியது

பிலஹரி:) ) அதிரா said...

அனைவருக்கும் புரியும்படியான கவிதை நன்று. அன்னையர் தின வாழ்த்துக்கள். 4ம் வோட் போட்டாச்சு.

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

அருமை/

Thulasidharan V Thillaiakathu said...

தாமதமாகிவிட்டது....தாய்மையைச் சிறப்பித்த வரிகள் அருமை.

Post a Comment