Sunday, March 26, 2017

எழுத்து மட்டுமே எதையும் சாதித்துவிடும் எனும்....

அழுந்தக் கீறிக் காயப்படுத்தி  
கவனம் திருப்புவதில்
எனக்கு உடன்பாடில்லை

இப்படிச் செய்வதில்
கவனம் காயத்தில் தொடரவே
சாத்தியம் அதிகம்

மெல்லத் தடவிச் சுகப்படுத்தி
கவனம் கவர்வதிலும்
எனக்கு உடன்பாடில்லை

இப்படிச் செய்வதில் சுகத்தில்
இன்னும் விழிமூடவே
சாத்தியம் அதிகம்

கவனம் திருப்பக்
கையோசை எழுப்பும்
ஒரு கிராமவாசியைப் போல

கரைகடக்க முயல்பவனுக்காய்
காத்திருக்கும்
ஒரு சிறு கலம்போல

அடர்காட்டில் அலைவோனுக்கு
வழிகாட்டும்
ஒருசிறு ஒளிக்கீற்றுப் போல

அலைவோனுக்கும்
முயல்வோனுக்கும் மட்டுமே
உதவும்படியாய்

என் எண்ணமிருக்கும்படியாய்
என் எழுத்திருக்கும்படியாய்
எழுதிடவே நாளும் முயல்கிறேன்

மிகத் திண்ணமாய்.....

மாற நினைப்பவனுக்கு மட்டுமே
எழுத்து ஒரு வழிகாட்டியாய்
இருக்கச் சாத்தியம் என்பதால்

மாறியவனுக்கு மட்டுமே
எழுத்து ஒரு உரமூட்டியாய்
இருக்கச் சாத்தியம் என்பதால்

எழுத்து மட்டுமே
எதையும் சாதித்துவிடும் எனும்
மூட நம்பிக்கை இல்லை என்பதால்...

அழுந்தக் கீறிக் காயப்படுத்தி
கவனம் திருப்புவதிலும்
எனக்கு   உடன்பாடில்லை

மெல்லத் தடவிச் சுகப்படுத்தி
கவனம் கவர்வதிலும்
எனக்கு  உடன்பாடில்லை

இந்த எழுத்து..

எப்போதும்சுவாரஸ்யம் தராது
என்றும்வெகுஜன மனம் கவராது
என்ற போதிலும் ...



9 comments:

ஸ்ரீராம். said...

நேர்மறைச் சிந்தனை.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அறிவுக்கு விருந்தாகும் பதிவு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எழுத்து மட்டுமே எதையும் சாதித்துவிடும் எனும்
மூட நம்பிக்கை இல்லை என்பதால்...//

மிகவும் அழகாக உணர்ந்து சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

Yarlpavanan said...

"என் எண்ணமிருக்கும் படியாய்
என் எழுத்திருக்கும் படியாய்
எழுதிடவே நாளும் முயல்கிறேன்" என
முயல்வோம் - விளைவு
காலம் பதில் சொல்லுமே!

Unknown said...

நன்று சிந்தனை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தமான சிந்தனையைப் பகிர்ந்தவிதம் நன்று

இராய செல்லப்பா said...

சமூகம் என்னும் கடலில் நாம் ஒரு சிறு துளி - என்பதை வலியுறுத்துகிறீர்கள். சரியே.
- இராய செல்லப்பா நியூஜெர்சி

கீதமஞ்சரி said...

உங்களுக்கு மாத்திரம் எப்படி இப்படி எண்ணங்களுக்கேற்ப எழுத்து வளைந்துகொடுத்துப்போகிறது.. மிகக் கச்சிதமாக மிக வாகாக மிக அழகாக வெளிப்படும் உங்கள் எழுத்தின் சூட்சுமம் இன்றுதான் புரிகிறது. பாராட்டுகள் ரமணி சார்.

Post a Comment