Saturday, March 4, 2017

விந்தையதே வியக்கும் விந்தைதான்

சிந்தனை யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு எண்ணச்  சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்ப்
பாண்டித்திய
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு வார்த்தைச்  சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

இலக்கண அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

சந்தமெனும்
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
அணிகள் பூட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

ஏகாந்தமாய் வேறு
 எதையோ  நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது விந்தை

ஆம்  ....

 அதிசயமே அசந்து போகும்
அதிசயங்கள் பல  போலவே
 விந்தையதே வியக்கும்
விந்தை நிச்சயம் கவிதைதான் 

3 comments:

Nagendra Bharathi said...

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விதம் விதமாய் அணிகள் பூட்டியும் வித்தைகள் செய்தும் வரமறுக்கும் கவிதைக் குழந்தை .....
ஏகாந்தமாய் வேறு எதையோ நினைத்திருக்கையில் சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது விந்தை//

இந்த சூப்பரான வரிகள், கவிதைகளை ஆக்கத் தெரியாத ஞான சூன்யமான எனக்கே, என் சிந்தையைக் கவர்ந்தது உண்மையிலேயே விந்தையே !

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

G.M Balasubramaniam said...

கவிதைபோல் ஏதோ ஒன்றை உருவாக்கி அதைப் படித்துமகிழும் எனக்கே இப்படித் தோன்றுவது உண்டு

Post a Comment