Wednesday, January 29, 2020

அரைப்பைத்தியமும் முழுப்பைத்தியமும்

சமீபமாக ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் போது எனது இருக்கைக்கு அருகாமையில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மிகவும் பதட்டமாகவே இருந்தார்...முஹுர்த்த நேரம் நெருங்க நெருங்க இன்னும் பதட்டமாகி திருமண மேடையையும் மண்டப வாயிலையும் திரும்பத் திரும்பப் பார்த்தபடி   இன்னும் பதட்டமானார்...அவர் செய்கையைப் பார்க்கப் பார்க்க எனக்கும் நிச்சயம் ஏதோ நடக்கப் போகிறது..போலீஸோ இல்லை யாரோ வந்து எதற்காகவோ திருமணத்தை நிறுத்தப் போகிறார்கள்.அந்த விசயம் எப்படியோ இந்தப் பெண்மணிக்குத் தெரிந்திருக்கிறது..அதனால்தான் இத்தனைப் பதட்டமடைகிறார் எனப் புரிந்து கொண்டு நானும் பதட்டமாய் இருபக்கமாய் மாறி மாறி பார்க்கத் துவங்கினேன்.சிறிது நேரத்தில் கெட்டி மேளம் கெட்டி மேளம் எனச் சப்தம் வர மண மேடை பக்கம் திரும்பி தம்பதிகள் மீது அட்சதையைப் போட்டு ஆசீர்வதித்துவிட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்தேன்.அவரும் அது மாதிரியே செய்துவிட்டு நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்சு விட்டு விட்டு ஆண்டவனுக்கு நன்றி சொல்வது போல வானம் நோக்கி கைகளைக் குவித்து வணங்கினார்..எனக்கு இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியவில்லை..என்ன விசயம் எனத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டைவெடித்துவிடும் போலாகிவிட்டது...பின் இயல்பாக நகர்ந்து அமர்வது போல் அவர் அருகில் அமர்ந்து அவர் யாருக்கு உறவு முறை என்பதையெல்லாம் விசாரித்து கொஞ்சம் இயல்பான நிலைக்கு அவர் வந்ததும் "என்னம்மா ரொம்ப நேரமா உங்களை கவனிச்சுக்கிட்டே வர்றேன்..ரொம்ப டென்ஸனாகவே இருத்தீங்க என்ன காரணம் " என்றேன்.. அவர் நிதானமாகவே பேச ஆரம்பித்தார்.." இப்ப எல்லாம் எந்தக் கல்யாணத்துக்குப் போனாலும் இப்படித்தான் டென்ஸனாயிடுது.தாலி கட்டுறதுக்குள்ளே யாரும் வந்து என்னவோ சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவாங்களோன்னு மனசு பட படன்னு அடிச்சிக்கிறுது...அதைத் தடுக்க முடியலே " என்றார்..எனக்குத் தூக்கி வாரிப் போட்டது...அட...இது சீரியல் மெண்டல் எனப் புரிய முதலில் சிரிக்கத் தோன்றியது.பின் யோசித்துப் பார்த்து அடக்கிக் கொண்டேன்..காரணம் முழுப்பைத்தியத்தைப் பார்த்து அரைப்பைத்தியம் சிரிச்சா நல்லாவா இருக்கும்..

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியுமா...!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல நகைச்சுவையான விஷயம். அதை நீங்களும் கடைசிவரை சஸ்பென்ஸாக வைத்து திறம்பட பகிர்ந்திருக்கிறீர்கள். மிகவும் அருமை. எல்லாம் இப்போது வரும் இந்த சீரியல் தொடர்களுக்கு அடிமையாவதால் வரும் வினையோ?

முன்பு ஒரு திரைப்படத்தில்,காமெடி காட்சியாக ஒரு திருமணத்தில்,நாகேஷ் அருகில் எரியும் எண்ணெய் விளக்கின் சுடர் ஒருவர் மீது பற்றிக்கொண்டால் வரும் விளைவுகளை எண்ணி எண்ணி பதற்றமடைந்து அழ, அனைவரும் அவர் அழுவதைப் பார்த்து அழ, அதன் பின் காரணம் தெரிந்த பின் நல்ல நகைச்சுவையாக காட்சியாக முடியும்.

அந்த பெண்மணி அடிக்கடி வெளியிலும், அங்குமிங்கும் பார்த்து பதற்றமடையும் போது, அருகிலிருக்கும் தங்களுக்கும் கொஞ்சம் பதற்றமாகத் தானே இருந்திருக்கும். விசாரித்து பதற்றத்திற்கு காரணம் தெரிந்ததும் எப்படியோ சிரிக்காமல் இருந்திருக்கிறீர்கள். இப்படியும் சிலர்..என்ன செய்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நடந்ததோர் சம்பவத்தை நயம்பட எழுதியுள்ளீர்கள். ஆஹா, அருமை.

ஸ்ரீராம். said...

சிரிப்புதான்!

Avargal Unmaigal said...

சீரியல் தொடர்களுக்கு அடிமையாவதால் வரும் வினை

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படியும் இருக்கிறார்களா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்பதிவினை முகநூல் பக்கத்தில் கண்டேன். வாழ்க்கை என்பதன் பொருள் பலருக்கு இப்படியாக ஆகிவிட்டது. என்ன செய்வது?

வெங்கட் நாகராஜ் said...

சீரியல் பார்த்துப் பார்த்து இப்படி ஆகிவிட்டார் போலும்! ரொம்பவே அடிக்ட் ஆகி விடுகிறார்கள் பலரும்.

Post a Comment