Tuesday, May 31, 2016

கறிக்கடை வாசல் ஆடு

வாகனம் விட்டு இறங்கியதும்
சப்தமாய் கதறியபடி
வீட்டிக்குள் ஓடுபவர்கள்...

வாகனம் விட்டு இறங்கியதும்
வாசலில் அமர்ந்திருப்பவர்களிடம்
விசாரித்துவிட்டுப் பின்
சாவதானமாய் உள் நுழைபவர்கள்

அடுத்து ஆகவேண்டியதைக்
கவனிக்கும் முகத்தான்
ஆட்களை மௌனமாய் ஏவியபடி
அலைந்து கொண்டிருப்பவர்கள்
.......................................
..............................................

துக்கம் விசாரித்த பின்
அந்த வீட்டு வாசலில் அமர்ந்து
இவை அனைத்தையும்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

சாவுக்கும் எனக்கும் சம்பந்தம்
இல்லாதவனைப் போலவும்

சாவு வீட்டுக்கு மட்டும்
சம்பந்தப்பட்டவனைப் போலவும்...

எல்லாம் முடிந்துத்
திரும்பும் வழியில்
ஒரு கறிக்கடை வாசலில்
கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது

குடல் கேட்டபடியும்
சுவரொட்டிக் கேட்டபடியும்
மூளைக் கேட்டபடியும்....

அந்தக் கறிக் கடை வாசலில்
கட்டப்பட்டிருந்த ஆடு
இவை அனைத்தையும்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது

கறிக்கும் தனக்கும் சம்பந்தம்
இல்லாததைப் போலவும்

கறிக்கடைக்கு மட்டும்தான்
சம்பந்தப்பட்டதைப் போலவும்...

Monday, May 30, 2016

நீயும் கவியில் மன்னர் தானே

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நீயும் 
கவியில்  மன்னர் தானே

Sunday, May 29, 2016

சம நிலை மகாத்மியம்

சம நிலையது  தவறுகையில்தான்
 எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பதில்
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்வதில் ...

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்வதில்

போதையில்
 காமப்பசியில்
கோபத்தில்
பதவி மோகத்தில்
அதிகார ஆணவத்தில் 

சம நிலையது  தவறும் சாத்தியக் கூறுகள்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளைக்
தள்ளியே வைக்கப் பழகுவோம்

சம நிலைப்  பராமரிப்புக்  கூட
ஒர்வகையில்
சவ நிலை அனைய தவ நிலையென   
உணர்ந்துத்  தெளிந்து   உய்வோம்

Saturday, May 28, 2016

சூட்சுமக் கோடே லெட்சுமணக் கோடு

கஞ்சத்தனத்திற்கும்
சிக்கனத்திற்கும் இடையில்
தாராளத்திற்கும்
ஊதாரித்தனத்திற்கும் இடையில்

பழக்கத்திற்கும்
நட்புக்கும் இடையில்
நட்புக்கும்
காதலுக்கும் இடையில்

விளக்கதிற்கும்
விவாதத்திற்கும் இடையில்
விவாதத்திற்கும்
பகைமைக்கும் இடையில்

வேண்டுதலுக்கும்
கோரிக்கைக்கும் இடையில்
கோரிக்கைக்கும்
போராட்டத்திற்கும் இடையில்

பொறுமைக்கும்
சகிப்பினுக்கு இடையில்
சகிப்பினுக்கும்
வெறுப்பினுக்கும் இடையில்

எதிர்பார்ப்பிற்கும்
ஆசைக்கும் இடையில்
ஆசைக்கும்
வெறித்தனத்திற்கும் இடையில்

அனுபவ உரைக்கும்
அறவுரைக்கும் இடையில்
அறவுரைக்கும்
அறிவுரைக்கும் இடையில்
.....................................
...........................................
மொத்தத்தில்

சிவப்புக்கும்
பச்சைக்கும் இடையில்
மஞ்சளாய் எச்சரிக்கும்
ஒரு சூட்சுமக் கோடே
லெட்சுமணக் கோடு

அதைக்
காணத் தெரிந்தவனுக்கு
கண்டுத் தெளிந்தவனுக்கு
அதன் பலம் அறிந்தவனுக்கு
என்றும் இல்லை கேடு

Thursday, May 26, 2016

தேர்தல்--- யுத்தக் களமல்ல

பழிக்குப் பழி
இரத்தம் முண்டம்
அழிவு சீரழிவு
தொடரும் வன்மம்
இவைகளுக்குப் பின்
பெறுகிற வெற்றியினை
உயர்வாகக் கொள்ளுதல்
யுத்தத்  தர்மம்

இதில் தோற்பவர்கள்
அழிவது அல்லது
அழிக்கப்படுவது
ஒப்புக்கொள்ளப்பட்ட  நீதி

தேர்தல் களம்
யுத்தக்  களமல்ல
அது விளையாட்டு மைதானம்

பயிற்சி
முயற்சி
முறையான அணுகல்
மகிழ்ச்சி ஆரவாரம்
இவைகளோடுப்  பெறுகிற
வெற்றியினை
அடித்தளமாய்க் கொண்டது
தேர்தல் களம்

இதில் வெற்றிக்கொடி நட்டவர்கள்
தோற்பதுவும்
தோற்பவர்கள் தொடர்ந்து முயன்று
வெல்லுவதும்
அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை

விளையாட்டு மைதானத்தை
யுத்தக் களமாக் க விழையும்
சமூகக் காரணிகள் விஷயத்தில்
விழிப்போடுக்  கவனமாய்  இருப்போம்
 இந்தத் தேர்தலைப் போலவே

மேம்பட்டப் பார்வையாளர்களாய்
நாமும் இந்த  உன்னத
ஜனநாயக விளையாட்டில்
அதன் தரத்தை மேம்படுத்துவோம்
இந்தத் தேர்தலைப் போலவே  

Wednesday, May 25, 2016

அரசியல் நாகரீகம்

பச்சைத் தன்மை
துளியுமின்றி
பட்டுப்போய் நிற்கும் மரமாய்

அரசியல் நாகரீகத்திற்கும்
தமிழகத்திற்கும்
ஏழாம் பொருத்தமே
என்று இருந்த வேளையில்

வரிசை முக்கியமில்லை என
ஜனநாயகக் கடமையாற்ற
வந்தமர்ந்திருந்த
எதிர்கட்சித்தலைவரின்
பெருந்தன்மையும்

கவனத்திற்கு வராததால்
நேர்ந்த தவறென்றும்
ஒருங்கிணைந்து  பணியாற்றவே
விருப்பம் எனத் தெரிவித்த
முதல்வரின் விளக்கமும்

கொஞ்சம் நம்பிக்கையூட்டிப் போகிறது

பார்ப்போம்

Tuesday, May 24, 2016

இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்

நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு
இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின்
அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின்
சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது