Thursday, June 30, 2016

மூலதனம்

குழந்தைகளின்
சேட்டைகளை மட்டுமல்ல

அவர்களின்
அறியாமை
முட்டாள்த்தனம்
முரண்டு
முதலானவைகளை
நொடியும் விட்டுவிடாது

மிகக் கவனமாய்
இரசிக்கப் பழகுங்கள்

மிகக் கவனமாய்க்
கையாளப் பழகுங்கள்

பின்னாளில்

அவர்களின்
வளர்ச்சியை மட்டுமல்ல

அவர்களின்
அறிவு
புத்திசாலித்தனம்
பெருந்தனமை
முதலானவைகளை
மிகச் சரியாய் இரசிக்க

கூடுதலாய் இரசிக்க
முழுமையாய் அனுபவிக்க

அதுதான் மூலதனம்
அதுதான் ஆணிவேர்

Wednesday, June 29, 2016

சிரிப்பின் சுகமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Sunday, June 19, 2016

வேறு எப்படிச் சொல்லலாம் ?

பிறப்பிடமும் இருப்பிடமும்
ஒன்றாகவே இருந்தபோதும்
இருக்கிற இடம் காரணமாக
இருந்த இடத்தை மாற்றி மாற்றியே
சொல்லவேண்டி இருக்கிறது

மதுரை நகருக்குள்
புதிதாகச் சந்தித்தவர்
ஊர் குறித்து விசாரிக்க
கிராமத்தின் பெயரையும்..

சென்னையில் நண்பர் விசாரிக்க
மதுரை எனவும்

பூனேயில் அறிமுகமானவர் விசாரிக்க
தமிழ் நாடு எனவும்

இதே கேள்வியை
அமெரிக்காவில் ஒருவர் விசாரிக்க
இந்தியா எனவும்...

பிறப்பிடமும் இருப்பிடமும்
ஒன்றாகவே இருந்தபோதும்
இருக்கிற இடம் காரணமாக
இருந்த இடத்தை  மாற்றி மாற்றியே
சொல்லவேண்டி இருக்கிறது

இது ஒரு பிரச்சனை இல்லை

பின்னொரு  நாளில்
இதே கேள்வியை
"அங்கு " கேட்கையில்
என்ன சொல்வது ?

"உலகம் " என்பது
பொதுப்பெயராக இருப்பதால்
அது சரியாகப் படவில்லை

வேறு எப்படிச் சொல்லலாம் ?

Thursday, June 16, 2016

தினமலரின் " நடுநிலைமை "

தமிழகத்தில் பெரும்பாலாக எந்தப் பத்திரிக்கையும்
செய்திகளைச் செய்திகளாகத் தருவதில்லை
மாறாக தங்கள் கருத்தைச் செய்திகள் போல்
தருவதில்தான் அதிக அக்கறை கொள்கின்றன
அதில் முன் வரிசையில் உள்ளது
தின மலர் என்றால் அது மிகையில்லை

கடந்த தேர்தலில் போது தி.மு க. வெல்லும் போல
ஒரு அபிப்பிராயம் நடு நிலை வாக்காளர்களுக்கு
அதிகம் இருந்தது. அதனை பிரதிபலிக்கும் விதமாகவும்
அப்படி ஒருவேளை தி. மு.க ஆட்சிக்கு வருமானால்
நிச்சயம் அரசின் சலுகைகள் பெற  உதவும் என்று
ஒரு பொதுப் பத்திரிக்கை என்கிறப் போர்வையில்
தி.மு.க வுக்கு சாதகமாகத் தெரியும் படியாக
தினமலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டது

அந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு சூட்சுமம் இருந்தது
மிகத்  திட்டவட்டமாக அ. இ அ. தி.மு க. வெல்லும்
இடங்களை அது வெல்லும் எனக் குறிப்பிட்டு விட்டு
குழப்பம் ஏற்படுத்தும்படியாக திட்டவட்டமாக
இல்லையெனினும் வெற்றி வாய்ப்புள்ளத்
தொகுதிகளை தி. மு. க வுக்கு சாதகமாக
வெளியிட்டுத் திருப்திப்படுத்திக் கொண்டது.

(எங்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில்
 அ. இ அ. தி. மு.க வேட்பாளர் 20,000 க்கும்
 மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில்
வென்ற தொகுதியை தி. மு.. க வுக்கு வாய்ப்புள்ளத்
தொகுதியாக கருத்துக்கணிப்பில் வெளியிட்டிருந்தது
ஒரு உதாரணம்.. )

அதற்காக பதவிக்கு வந்தவுடன் இந்த அரசு
மிகச் சரியான நேரத்தில் குழப்படி ஏற்படுத்திய
பத்திரிக்கைக்கு இருக்கை ஒதுக்கீட்டில் பின் தள்ளியது
சரியில்லை என்றாலும்,

அதற்காக ஆளுநர் உரையினை இன்றைய பதிப்பில்
ஒன்பதாம் பக்கத்திற்கும் பதிமூன்றாம் பக்கத்திற்கும்
தள்ளிவிட்டு தங்கள் பத்திரிக்கைக்கு இட ஒதிக்கீட்டு
விஷயத்தை முன் பக்கத்தில் எந்த விதத்தில் சரி

பொது ஜனத்திற்குத் தேவையான விஷயத்திற்கு
முக்கியத்துவம் தராமல் தன் சுய நலத்திற்கு
முக்கியத்துவம் தரும் பத்திரிக்கையை எப்படி
நடு நிலை நாளேடாகக் கொள்ள முடியும் ?

பிற ஊடகங்களின் மூலம் இந்த இருக்கை மாற்றம்
பற்றித் தெரிந்தவுடன்,இது அரசியல் நாகரீகமில்லை
எனப் பட்ட எனக்கு, இந்த செய்தி வெளியீட்டைப்
பார்த்ததும் அவர்கள் செய்ததும்
சரியெனத்தான் பட்டது

பொது ஜனத்திற்கு தேவையானதிற்கு முக்கிய
தராமல், தனக்கு முக்கியத்துவம் தருவது
எந்த விதத்தில் நாகரீகம் என்பது
எனக்குப் புரியவில்லை

முக்கியத்துவமான செய்தி என்பது
செய்தி  பொறுத்தல்ல
நாங்கள் முடிவு  செய்வதைபி பொறுத்து
என ஒரு நாளிதழை நினைக்குமானால்
அது எப்படி ஒரு  நடு நிலை நாளேடாக
இருக்கச் சாத்தியம்  ?

 இனி நடு நிலைச் செய்திகளைப் படிக்க
வேறு ஒரு நாளேட்டத் தேர்ந்தெடுத்தலே சரி எனப்
படுகிறது  எனக்கு

உங்களுக்கு ?

Wednesday, June 15, 2016

இறைவி--விமர்சனம் போல

ஜெயகாந்தன் அவர்களின்" சில நேரங்களில்
சில மனிதர்கள் " நாவலில்

"சீட்டாடுகிற
எல்லோரும் தோற்பதில்லை. ஜெயிக்கவும்
செய்கிறார்கள் .அப்படியிருக்க சீட்டாட்டத்தை ஏன்
தீமையானது என்கிறார்கள் " என ஒரு கேள்வி
எழுப்பி,கதாபாத்திரத்தின் மூலம் அதற்கான பதிலை
இப்படிச் சொல்வார்

"சீட்டாடி ஜெயித்த பணம் வீடு வந்து சேராது
ஆனால் தோற்றால் பணமெடுக்க வீடுதான்
வரவேண்டி இருக்கும் "என்பார்

வென்றால் கொண்டாட வெளி உறவுகள்
ஆயிரம் இருக்கும். ஆனால் தோற்றால்
வந்து விழுகிற அதனால பாதிக்கிற இடம்
நிச்சயம் வீடாகவும் மனைவியாகவும்
குழந்தைகளுமாகத் தான்  நிச்சயம் இருக்கும்

வாழ்க்கை என்பது கணவன், குழந்தைகள்
வீடு என மட்டுமே எனக் கொள்ளுகிறாள் பெண்

வாழ்க்கையென்றால் குடும்பமும் என மட்டுமே
கொள்ளுகிறான் ஆண்

இந்த இரண்டு எதிர் எதிர் நிலைகள்
ஒன்றை ஒன்று  புரிந்து கொண்டு கொஞ்சம்
 அனுசரித்து விட்டுக் கொடுத்துப்போகிற நிலை
வாழ்வைச்  சுவையானதாக்கிப் போகிறதோ
இல்லையோ, பிரச்சனையற்றதாகிப் போகிறது

அதன் காரணமாகவே சில சமூக இயக்கங்களில்
 ( அரசியல்தவிர்த்து  )பயிற்சியின் போது,
முதலில் உன்னைக் கவனி,பின் குடும்பம்,
பின் தொழில்,பின்னரே இந்த சமுக
இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடு என்பதாக
பயிற்றுவிக்கிறார்கள்

சொல்லப் பட்டதிலிருந்து, சொல்லப்படாத
பலவற்றை சிந்திக்குமாறு (நல்ல திசையில்  )
ஒரு படைப்பது தூண்டிப்  போகுமானால்
அதுவே மிகச் சிறந்த படைப்பாக இருக்கும்
எனக் கொண்டால்  இறைவி திரைப்படம்
ஒரு  சிறந்த திரைப்படம்எ ன்பதுவே என் கருத்து

வாழ்த்துக்களுடன்...

Tuesday, June 14, 2016

பிரிவுகள் தருகிற ஞானம்

அவன் வீட்டில்
அன்றுதான்
அவன் அவனை
அன்னியனாய் உணர்ந்தான்

வீடு நிறையப் பொருளிருந்தும்
எது எங்கிருக்கிறது என்றும்
எது எதற்கானது என்றும்
எதற்கடுத்து எது என்றும்
அதை எப்படிப் பயன்படுத்துவதென்றும்
எதுவுமே புரியவில்லை அவனுக்கு

விழித்தது முதல்
மெத்தையில் சாயும் வரை
அறுவை சிகிச்சையின் போது
அடுத்து  அடுத்துக்  கருவிகளை
மிக நேர்த்தியாய்    எடுத்துத் தரும்
தாதியாய் இருந்தவள்
இன்றில்லை என்றபோதுதான்

கையறு நிலை என்ற
சொல்லின் பொருளும்
இரு கையிழந்தவன் 
படும் துயரும்
தெளிவாய்த்  தெரிந்தது அவனுக்கு

 இந்தச் சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....

திருமணம் முடிந்த  சில நாட்களில்
ஏதோ  ஒரு நாளில்
ஒரே ஒரு நாளில்
ஏதோ ஒரு பொருளை
 தேடித் தரத்  தாமதமானதற்காக
தான்  ஆடிய ருத்ர தாண்டவம்
நினைவுக்கு வர
வெந்துதான்   போனான்
மிகவும் நொந்துதான்  போனான்

 என்ன செய்வது
 "மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்பதுபோல
சில ஆணாதிக்க  ஜென்மங்கள்
பட்டுத் திருந்தி
சம நிலைப்பெறக் கூட
இதுபோன்ற  சிறு பிரிவுகள்
அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது    

Sunday, June 12, 2016

அவசியமும் அநாவசியமும்

ஆயுதம் என்பது
நிச்சயம் அவசியம் என்போருக்கு
கவசம் நிச்சயம் அவசியம்

அங்கீகாரம் என்பது
நிச்சயம் அவசிய மென்போருக்கு
பட்டயம்  நிச்சயம் அவசியம்

அதிகாரம் என்பது
நிச்சயம் அவசிய மென்போருக்கு
பதவி நிச்சயம் அவசியம்

அழகு
நிச்சயம் அவசியம் என்போருக்கு
அலங்காரம் நிச்சயம் அவசியம்

விவாதம்
நிச்சயம் அவசியம் என்போருக்கு
வார்த்தைகள் நிச்சயம் அவசியம்

................................................................

................................................................

..................................................................

அவசியம்
நிச்சயம் அவசியம் என்போருக்கு
எல்லாமே  நிச்சயம் அவசியம்

அவசியம் என்பது
அவசியம் இல்லை என்போருக்கோ
நிச்சயம் எல்லாமே அநாவசியம்