Thursday, June 29, 2023

மலரோடு உறவாடி...

 மலரோடு உறவாடி

மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாப் போகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்

Monday, June 26, 2023

இணைந்து மகிழ்வோம்..உயர்வோம்..

 நான் விழிக்கும் முன்பே

கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

(வெறுமனே பதிவுகளை  படித்துச் செல்வதை விட
 இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பதிலைப் பதிவு செய்வதிலும்   கிடைக்கும் சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை   )

Monday, June 19, 2023

கட்டுப்படாததுள் கட்டுப்படுதல்..

 பகலும் இரவும்

நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....

Friday, June 16, 2023

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்..

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

Thursday, June 15, 2023

அந்தப்புற மெத்தை கூட..

 பசித்தலில் குடலில் ஏதும்

பிரச்சனை இல்லை யென்றால்
புசித்திடும் உணவு எல்லாம்
நிச்சயம் விருந்து தானே

பசித்தலில் குறைகள் ஏதும்
தொடர்ந்திடக் கூடும் ஆயின்
புசித்திடும் மருந்தும்  கூட
நிச்சயம் சுமைபோல் தானே

உறங்கிட முயலும் போதில்
உடனது தழுவும் ஆயின்
உறங்கிடும் இடங்கள் யாவும்
உன்னத மெத்தை ஆமே

உறக்கமே எதிரிப் போலே
உறுத்தியே இருக்கு மாயின்
அந்தப்புற மெத்தைக் கூட
முள்ளென உறுத்தும் தானே

பழகிடும் பாங்க றிந்து
பழகிடக் கூடு மாயின்
துயர்தரும் பகைவர் கூட
விரும்பிடக் கூடும் தானே

பழகிடும் நேர்த்தி தன்னில்
பங்கமே இருக்கு மாயின்
உறவுகள் கூட நம்மை
ஒதுக்கிடக் கூடும் தானே

கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம் ஆயின்
நதியெனக் கருக்கள் நம்முள்
மகிழ்வுடன் பாயும் நாளும்

இலக்கண அறிவு இன்றி
இலக்கண மீறல் செய்யின்
குழப்பமே வந்து சூழும்
மனமதில் கொள்வோம்  வெல்வோம் 

புலிவேஷம்

 மனித மனங்களில் எல்லாம்

புதர் மண்டி
காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
நிஜ உருவை விட
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற
பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டேன் ஆயினும்
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்  மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப்  போகிறது

ஆனாலும் என்ன
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

Wednesday, June 14, 2023

கவிதையும் குழம்பும்..

 கவிதைகள் குறித்து

நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்

கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்

வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே
 நினைவூட்டிப்போகின்றன

மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தானோ  ? "
என்றாள் துணைவி

"குழம்பு எப்படிக்  கவிதையாகும் ? "
என்றேன் குழப்பத்துடன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும்
கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப்
படைக்கும் குழம்பு - கவிதை

நாங்கள் பிறர்
ருசிக்கச் செய்யும்
கவிதை- குழம்பு" என்றாள்