Showing posts with label (அவல்). Show all posts
Showing posts with label (அவல்). Show all posts

Wednesday, October 4, 2017

ஜோதிடத்தை நம்புபவர்களுக்கும்/ நம்பாதவர்களுக்கும்/

எனக்குக்  கொஞ்சம் ஜோதிடம் தெரியும்
ஜாதகம் எழுதும் அளவுக்கு ஜோதிட
அறிவும் கொஞ்சம் உண்டு

கடந்த ஆண்டு ஏடு பார்ப்பவர்கள் குறித்து
தெரிந்து கொள்ளலாமே என
என் பகுதியில் இருந்த ஏடு ஜோசியரைப்
பார்க்கப் போனேன்

ஒரு வகையில் பரிசோதிக்கும் நோக்கத்தோடு
என்று கூடச் சொல்லலாம்

அவர்கள் வழக்கம்போல ஒவ்வொரு ஏடாக
எடுத்துப் போட்டு பெயருக்கு ஒரு குறிப்பினைக்
கேட்கக் கேட்க நானாக ஒரு வார்த்தையும்
கூடுதல் குறைவாகச் சொல்லிவிடாது
இல்லை/ஆம் என்பது போல மட்டும்
சொல்லி வந்தேன்

என் மூலம் அவர்கள் எதையாவது தெரிந்துகொண்டு
அதன் மூலம் மிகச் சரியாகச் சொல்லுகிறார்போல
ஆகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக
இருந்தேன்

மூன்று நான்கு கட்டுக்கள் முடிந்து அடுத்து
ஒரு கட்டு எடுத்தவர்,"

உங்கள் பெயர்
இரண்டு தெய்வங்கள் குறிக்கும் பெயரா ? "
என்றார்

அது அப்படித்தான் என்பதால் "ஆம்" என்றேன்

"ஒன்று வைணவம் சார்ந்து ஒன்று
சைவம் சார்ந்ததா?" என்றார்

அதுவும் அப்படித்தான் என்பதால்
"ஆம் " என்றேன்

அவ்வளவுதான். அதற்கு மேல் என்னிடம்
எதுவும் கேட்கவில்லை

மடமடவென என்பெயர் என் மனைவி பெயர்
என் தாயார் பெயர் என வரிசையாக
மிகச் சரியாக அந்த ஏட்டைப்பார்த்துச்
சொல்ல ஆரம்பித்து விட்டார்

நான் பிரமித்து விட்டேன்

இது எப்படிச் சாத்தியம் என இதுவரை
விளங்கவில்லை

இது கூடப் பரவாயில்லை

என் கட்டை விரல் ரேகையைப் பதிவு
செய்துவிட்டு "இரண்டு நாட்கள் கழித்து
வாருங்கள் உங்கள் ஜாதகம் கணித்துத்
தருகிறேன் " என்றார்

மிகச் சரியாக இரண்டு நாள் கழித்துச் செல்ல
என் ஜாதகக் கட்டம் பிறந்த தேதி அனைத்தையும்
மிகச் சரியாக கணித்து வைத்திருந்தார்

சுயமாக எழுவதானாலும், கம்பியூட்டர்
ஜாதகமாயினும் பிறந்த ஊர், வருடம்,
தேதி, நேரம்மிகச் சரியாகத் தெரியாமல்
மிகத் துல்லியமாய் லக்கின ஜாதகம்
எழுதச் சாத்தியமே இல்லை


இவர்கள் எப்படி ரேகையை வைத்தும்
ஏடைவைத்தும் மிகத் துல்லியமாகக்
கணிக்கிறார்கள்

இது இன்றுவரை எனக்கு மிகக்
குழப்பமான விஷயமாகவே இருக்கிறது

நம்புபவர்கள் அது குறித்தும்
நம்பாதவர்கள் அதில் உள்ள சூட்சுமங்கள்
குறித்தும் எழுதினால் மகிழ்வேன்

இத்துடன் உங்கள் பார்வைக்காக என்னுடைய
கம்பியூட்டர் ஜாதக நகலையும்
இவர்கள் கொடுத்த குறிப்பினையும்
இணைத்துள்ளேன்






Tuesday, July 30, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் (அவல் 2 )

ஒரு நாள் இரவு நானும் வான சாஸ்திரம் தெரிந்த
எனது நண்பனும் மொட்டை மாடியில் அமர்ந்து
பல்வேறு விஷயங்கள் குறித்துப்
பேசிக் கொண்டிருந்தோம்..

அப்போது வானில் ஊர்ந்து கொண்டிருந்த
அரை நிலவைக்காட்டி  இன்று வளர்பிறையா
தேய்பிறையா  சொல் " என்றான் என் நண்பன்

"காலண்டரைப் பார்த்து வரவா "என்றேன் நான்

"அதைப் பார்த்துத்தான் எல்லோரும்
சொல்லிவிடுவார்களே.அதில் என்ன இருக்கிறது
இங்கிருந்தே இப்படியே சொல்லவேண்டும்
அதுதான் விஷயம் "என்றான்

நிலவு அரை தேய்ந்திருந்தது.மிக லேசாக
நடு உச்சத்திலிருந்து  கொஞ்சம் கிழக்கே இருந்தது
வேறு குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை
இதைவைத்து எப்படி வளர்பிறையா தேய்பிறையா
எனச் சொல்லமுடியும்.எனக்குப் புரியவில்லை

என் நண்பனே தொடர்ந்தான்

"இதை வைத்து  வளர்பிறை தேய்பிறை மட்டுமல்ல
மிகச் சரியாக இன்றைய நட்சத்திரத்தைக் கூட
 சொல்லிவிட முடியும் " என்றான்

என்னால் நிச்சயம் அதை நம்ப முடியவில்லை

நண்பன் தொடர்ந்து பேசினான்

"முன் காலத்தில் பிராமணர்கள் என்றாலே
தனக்கென தன் குடும்பத்திற்கென வாழாது
சமூகத்திற்கு வாழ்பவர்கள் என அர்த்தம்

அதனால் தான் அவர்களுக்கான தேவைகளைப்
பூர்த்தி செய்ய அவர்கள் எந்த பணிகளையும் செய்யாது
வேத சாஸ்திரப் பணிகளை மட்டும் பார்த்துக்
கொண்டிருக்க, அவர்களுக்கான தேவைகளை
சமூகமும் சமூகத்தின் சார்பில் மன்னர்களும்
கவனித்துக் கொண்டார்கள்

அவர்களுக்கு எது தேவை என்பதைக் கூட
அவர்கள் வாய் திறந்து கேட்கவேண்டியதில்லை.
அவர்கள் மார்பில்அணிந்திருந்த பூணூலின்
எண்ணிக்கையேஅவர்கள் பிரம்மச்சாரியா கிரஹஸ்தனா
அல்லது குழந்தைகள் பெற்றவரா எனபதை மிகச் சரியாக
காட்டிக் கொடுக்க அதற்கு ஏற்ப அவர்களுக்குத்
தேவையானதை மன்னன் கொடுத்துவிடுவார்

இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் லௌகீக
விஷயங்களுக்கு என தனது நேரத்தை தேவையின்றி
செலவிடாது முழு நேரமும் எப்போது எங்கு கேட்டாலும்
அன்றைய தினம் நாள் நட்சத்திரம் மற்றும் அதன்
தொடர்ச்சியாக  சுப அசுப பலன்களை மிகச் சரியாகச்
சொல்லும்படி எப்போதும் தன்னை தயார் நிலையில்
வைத்திருக்கவேண்டும்.வைத்திருந்தார்கள்

இதுபோல் காலண்டர் இல்லாத காலங்களில்
எந்த நாட்டிற்குச் சென்றாலும் எப்போது கேட்டாலும்
மிகச் சரியாக நாள் நட்சத்திரத்தைச் சொல்ல
அவர்களுக்கு உதவியது இந்த நிலவின் சஞ்சாரமும்
அதை அறிந்து கொள்ள அவர்கள் அவர்களுக்கென
ஏற்படுத்திக் கொண்டிருந்த சில சம்பிரதாயங்களும்தான்

அதில் மிக மிக முக்கியமானது அவர்களின்
நித்திய கடமையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த
சந்தியாவந்தனம்தான் "எனச் சொல்லி நிறுத்தினான்

ஆவல் அதிகரித்தாலும் அவன் பாணியில்
அவனாகத் தொடர்வதே சிறப்பாக இருந்ததால்
நானும் அவனாகவே தொடரட்டும் என
மௌனமாய்க் காத்துக் கொண்டிருந்தேன்

(தொடரும் )