Showing posts with label அரசியல் கவிதை. Show all posts
Showing posts with label அரசியல் கவிதை. Show all posts

Saturday, January 19, 2019

கலகக்காரன்.

."எத்தனை தடைகள் எதிர்ப்புகள்
வந்த போதும்
எப்படி உன்னால்.
கலகக்காரனாகவே தொடர்ந்து இருக்க முடிகிறது..
இந்த அசுர மனோபலம்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?"
என்கிறான் நண்பன்

" எங்கிருந்தும் கிடைக்கும்
நமக்குப் பார்க்கத் தெரிய வேண்டும்
நம் சக்தியில் நமக்கு
நம்பிக்கையும் வேண்டும்
அவ்வளவே " என்கிறேன்

"புரியவில்லை" என்கிறான்

அவனுக்கு விளக்குவதுபோல்
எங்களெதிரே
சாலையின் மறுபுற சாக்கடையோரமிருக்கும்
பூக்கடைக்கு வாக்கப்பட்டும்
நாற்றத்தை மீறி
மணந்து சிரிக்கிறது
குண்டு மல்லிகைப் பந்து

Friday, June 9, 2017

நடுவிலிருப்பவனே என்றென்றும் ...

நடுவிலிருப்பவனே
அனைத்திற்கும்
காரணமாய் இருக்கிறான்

கீழிருப்பவனின் அறியாமையையும்'
மேலிருப்பவனின் பேராசையையும்
மிகத் தெளிவாய்ப்
புரிந்துவைத்திருக்கும்...   (நடுவிலி )

கீழிருப்பவனுக்கு மேலிருப்பவன் மேல்
அதிகக் கோபமூட்டி
அந்தக் கோபத்தைக் காட்டியே
மேலிருப்பவனுக்கு அச்சமூட்டி...
                                     (நடுவிலி)
கீழிருப்பவனுக்கு எனச் சொல்லி
கிடைத்ததில் பாதி ஒதுக்கிக்
கீழிருப்பவன் பரம்பரையாய்
கீழேயே இருப்பதற்கு          (நடுவிலி)

மேலேறவும் திறனில்லாது
கீழிறங்கவும் மனம் இல்லாது
மூன்று இரண்டாகிவிடவோ
ஒன்றென மாறிவிடவோ  விடாது
                                    (நடுவிலி)
நடுவிலிருப்போனின் நயவஞ்சகத்தை
மேலிருப்போனும் கீழிருப்போனும்
உணர்ந்து தெளியாதவரையில்
அவனை ஒதுக்கி வைக்காதவரையில்

இன்னும் எத்தனைக் காலமாயினும்
இன்னும் எவர் எவர் வழிகாட்டினும்
அத்தனையையும் மடைமாற்றி
வழக்கம்போல் திசைமாற்றி

நடுவிலிருப்பவனே என்றென்றும்
காரியவாதியாக இருப்பான்
தொடரும் அவலங்கள் தொடர்ந்து நிலைக்க
அவனே காரணமாகவும் இருப்பான்

Wednesday, April 12, 2017

அட... சாராய சாம்ராஜ்ய மன்னர்களின் அடிவருடிகளே...



அன்று
மதுரைப்  பாண்டிய ராஜனால்
ஈஸ்வரனின் முதுகில் பட்ட அடி
உலகில் உள்ளோர்
அனைவரின் முதுகிலும்
பட்டதாமே

இதை
நாத்திக வாதிகள்
ஒப்புக் கொள்வதில்லை

ஆயினும்
இன்று
திருப்பூர் பாண்டியராஜனால்
ஈஸ்வரியின் கன்னத்தில் விழுந்த அடி

எங்கள்
அனைவரின் இதயத்திலும்
இடியாய் இறங்கியிருக்கிறதே

இதை நினைக்க
அதுவும் கூட
சாத்தியமாயிருக்கச்
சாத்தியமே எனப் படுகிறது எனக்கு

அட...
சாராய சாம்ராஜ்ய மன்னர்களின்
அடிவருடிகளே
அடியைவருடுங்கள்

அழுக்குப்போக
நக்கக் கூடச் செய்யுங்கள்

அதற்காக
அவர்கள் காலே  கூட
 புண்ணாகிவிடும்படி இப்படியா ?

Tuesday, December 27, 2016

பேய் அரசு செய்தால்தான்....

பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னச் சாத்தியமா ?

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

அதனால்தான்

முறையான  வாரிசைப்
பின் தள்ளி
உலகே வேடிக்கைப் பார்க்க
பெண் சடங்குகள் செய்ததும்

துரோகம் செய்தவர்கள் எல்லாம்
பிரேதம் சுற்றி நிற்க
இரத்த உறவுகள்
நெருங்கமுடியாது தவித்ததும்

ஊழல் பெருச்சாளியே
ஊழலுக்கான கண்காணிப்பு
ஆணையராய் இருக்கவும்

புறக்கடை வழி
அரியாசனம் ஏறுதல் கூட
சாத்தியம்  ஆவதும்

எரிக்கும் சூரியனை
கூடைக்குள் அடைக்கும்
கண்கட்டு வித்தையாய்

பெரும் மரணத்தின்
காரணத்தைக் கூட
மிக எளிதாய் மறைக்கவும்

..............................
.......................................

இப்படி இதுவரை
தமிழகம் கண்டிராத
எத்தனையோ அசிங்கங்கள்
மிக இயல்பாய் அரங்கேறவும்

ஊமை ஜனங்களாய்
சோற்றுப் பிண்டங்களாய்
குருட்டுப் பார்வையாளர்களாய்
தமிழகமே திகழவும்

இதற்கு மேல்
என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது... ?

ஆம்
பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னும் என்பதில்லை

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

Wednesday, November 30, 2016

பின்னணி பாராது பின்னணி தொடரின்.....

முந்தைய காலங்களில்

முன்னணி இருந்தவர்
பின்னணிப் பார்க்கின்..

உழைப்பு இருக்கும்
தியாகம் இருக்கும்
நேர்மை இருக்கும்
வீரமும் இருக்கும்
விவேகமும் இருக்கும்

இன்றைய காலங்களில்

முன்னணி நிற்பவர்
பின்னணிப் பார்க்கின்

ஜாதி இருக்கும்
மதம் இருக்கும்
பொய்மை இருக்கும்
பணமும் இருக்கும்
பரம்பரையாயும் இருக்கும்

இனியும் வரும் காலங்களில்

முன்னணி செல்பவர்
பின்னணி பாராது
பின்னணி தொடரின்..

எந்நிலை ஆயினும்
மேலும் கொள்ளும்
 நம் நிலை  நிச்சயம்
கையறு நிலையே

உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே 

Wednesday, May 18, 2016

தேர்தல்... கிழக்கில் ஒளி

"வரப்புயர "
எனச் சொல்லிப் பின்
அதன் காரணமாய்
நீர் உயரும்
நெல் உயரும்
குடி உயரும்
கோன் உயரும்
எனச் சொன்ன
ஔவையைப் போல்

"மது ஒழிய "
நிச்சயம்
அதன் காரணமாய்
மடி ஒழியும்
மடிமை ஒழியும்
மடமை ஒழியும்
மிடிமை ஒழியும்

அதற்காகவேனும்
அதற்காக மட்டுமேனும்

அடர்ந்த இருள்
இன்றோடு
விலகி ஒழியட்டும்

கிழக்கில் ஒளி
மெல்ல எழுந்துப்
படர்ந்து விரியட்டும்

( மடி--நோய்,,மடிமை ..சோம்பல்
மடமை  ..அறியாமை
மிடிமை...வறுமை
வார்த்தைகளுடன் சிநேகம்
கொள்ளும் நோக்குடனும் )

Thursday, March 10, 2016

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட.....

குடிகாரர்களும்
கொள்ளைக்காரர்களும்
ஆணவக் காரர்களும்

நம் வீட்டு வாசலில்
விதம் விதமாய்
வேஷமிட்டப்படி
விதம் விதமாய்க்
கோஷமிட்டப்படி

நாம்
கையிலேந்தி இருக்கும்
கூர்மிகு வாளினைக் கோரியபடி..

பாதுகாப்பாய்
வைத்துக் கொள்வதாய்
வாக்குறுதி கொடுத்தபடி.

 தனக்கென இல்லை
நம்மைக் காக்கத்தான் என
சத்தியம் செய்தபடி...

முன் அனுபவங்கள்
கொடுத்த மிரட்சியில்
நாம் அவர்களைக் கடந்துப் பார்க்க

 கைகளற்றவன் மீதமர்ந்த
கால்களற்றவனும்

காது கேளாதவன்
வழிகாட்டக் கண்களற்றவனும்...

ஒருவர் தயவில் ஒருவர்
நம் இல்லம் நோக்கி
நகர்ந்து வர....

குழம்பத் துவங்குகிறோம் நாம்
கனக்கத் துவங்குகிறது
அந்தக் கூரிய வாள்

தகுதியற்றவர்களிடம்
கொடுத்து நோவதை விட
கொடுத்துச் சாவதை விட..

கூரிய வாளின்
சக்தி அறிந்திருந்தும்
அதன் பலன் புரிந்திருந்தும்

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட
சரிதானோ எனப்படுகிறது
"அது  "முட்டாள்த்தனம் என அறிந்திருந்தும்....

Wednesday, November 25, 2015

குறைகளும் குற்றங்களும் ...

தவறு என்பது தவறிச் செய்வது
இவன் வருந்தியாகனும்

தப்பு என்பது தெரிந்து செய்வது
இவன் திருந்தியாகனும் என

தவறுக்கும் தப்புக்கும்
தெளிவான எளிமையான விளக்கத்தை
"பட்டுக்கோட்டையார்" அளித்ததைப்போல்

குறைகளுக்கும் குற்றங்களுக் கும்
யாரும்  சரியாக விளக்கம் அளிக்காததால்தான்

குறைகளைக்  குற்றங்களாகவும்
குற்றங்களைக்   குறைபோலும் மதிப்பிடும்
தவறுகளைத் தொடர்ந்து  செய்கிறோமோ ?

நிவாரணப் பணிகளில் தொய்வு
இவைகள்  குறைகளே

இது  இயற்கையின் பெரும் சீற்றம்
நிச்சயம்  அனுமானிக்க முடியாதவையே
ஆதலால்  பொறுத்துக் கொள்ளக் கூடியவை

கட்சிகள் அரசியல் செய்வதை
கண்டு கொள்ளவேண்டியதில்லை

மோசமான நகரமைப்பு
நிச்சயம்குற்றங்களே

அதிகாரம் அளித்திருந்தும்
முறையாக  செயல்படுத்தாததால்
மன்னிக்க முடியாதவைகளே

பொறுப்பில் இருந்த கட்சிகள் இரண்டும்
தண்டிக்கப் படவேண்டியவைகளே

எப்படிச் செய்யப்போகிறோம் ?

Tuesday, October 22, 2013

அரசியல் விளையாட்டு

மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன

விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆகி
பழக்கப்பட்டும் போய்விட்டது

பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

அணிகள் கூட
எதிரிகளாகக் களம் இறங்கி
பரம எதிரிகளாய் வெளியேறுகிறார்கள்

காவலர்களும் மருத்துவர்களும் இன்றி
விளையாட்டுச் சாத்தியமில்லை என்றாகி
அதுவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது

ஆயினும் கூட
விளையாட்டு துவங்கும் முன்பும்
விளையாட்டும் முடிந்த பின்பும்

"விளையாட்டு ஒன்றுதான்
மனித நாகரீகத்தின் உச்சம்
மனிதன் உயர்வுக்கு அச்சாணி "எனப்
பிரச்சாரம் செய்து போகிறார்கள்
விளையாடிச்செல்பவர்கள்

ஊட்டப்பட்ட போதையில்
ஆக்ரோஸ அணிகளாக
ஆட்டம் போட்ட பார்வையாளர்கள்

ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாறி
கடந்து போகிறார்கள்
தத்தம்ம் பிழைப்புத் தேடி
"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி

Monday, December 31, 2012

வாழ்த்தி வளமாய் வாழ்வோம்

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Monday, October 8, 2012

ஆத்திக நாத்திகப் பார்வை

நாத்திகன் இப்படி ஆரம்பித்தான்

"தொப்புள் கொடியிலிருந்து
ஒரு தாமரைக்கொடியாம்
அதிலொரு தாமரைப் பூவாம்
அதில் நான்கு முகங்களுடனும்
மனைவியுடன்
கையில் வேதப்புத்தகங்களுடன் ஒருவராம்
அவர்தான் படைப்பவராம்

கேட்கவே கேலிக் கூத்தாயில்லை "

ஆத்திகன் பதட்டமடையவில்லை

"படைப்பவன் எப்போதும்
நாற்திசைகளிலும் நடப்பதை
அறியும் திறன் படைத்தவனாகவும்
முன்னோர்களின் பொக்கிஷங்களைக் கற்று
கைப்பிடிக்குள் கொண்டவனாகவும்
எப்போதும் பக்கத் துணையாக
கற்றலையும் நுண்ணறிவையும் கொண்டவானகவும்
இருந்தால்தானே
நல்ல படைப்புகளை தர ஏதுவாகும்

கூடுதலாக
மார்க்ஸுக்கு வாய்த்த ஒரு
ஏங்கெல்ஸ்  போல
மலர் கைகளில் வைத்துத் தாங்கக் கூடிய
செல்வந்தனும் கருணை மிக்கவனும்
படைப்பாளின் திறனறிந்தவனும் இருந்தால்
கூடுதல் சிறப்புதானே "  'என்றான்

"என்ன சொல்ல வருகிறாய்
எனக்கேதும் புரியவில்லை '
எரிச்லுற்றான் நாத்திகன்   

" எந்தக் கதைக்கான காரணத்தையும்
 எந்தக் குறியீடுகளுக்கான அர்த்தத்தையும்
புரிந்து கொள்ள முயன்றால்
இதுவும் புரியும்" என்றான் ஆத்திகன் 

 "அப்படியானால்
பிரம்மன் இருக்கிறான் என்கிறாயா
 பிரம்மன்தான் படைக்கிறான் என்கிறாயா "
ஆவேசப்பட்டான் அவன்

"இல்லையில்லை
அப்படிச் சொல்லவில்லை
படைப்பவன் பிரம்மன் போல்
திறன் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன்
படைப்பவன் எல்லாம்
 நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "
அமைதியாகச் சொன்னான் இவன்


( அச்சப்பட வேண்டாம் அடுத்தது திருமால் )