Showing posts with label அரசியல் ... Show all posts
Showing posts with label அரசியல் ... Show all posts

Monday, January 21, 2019

இன்றைய அரசியல்..அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது ?

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்

எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது

உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது

அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
எம் வீட்டிலேயே காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

இன்றைய நம் அரசியல்
அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

இப்படித்தான் சொல்லணும்

இன்னும் மிகச் சரியாய் என்றால்
இன்னும்
அசிங்கமாகத்தான்தான் சொல்லணும்..

Monday, September 18, 2017

யாருக்குப் பொருந்தும் ?

யாருக்குப் பொருந்தும் ?

திருடிக் கொண்டு ஓடுகையில்
கண்டு கொண்ட
மக்கள் கூட்டம்
"திருடன் திருடன்' எனக் கத்தியபடி விரட்ட

கெட்டிக்காரத் திருடன்
தானும்
"திருடன் திருடன் " எனக் கத்தியபடியே
முன்னே ஓடுகிறான்

பார்ப்பவரையும்
விரட்டுபவர்களையும்
குழப்பியபடியும்
ஏமாற்றியபடியும்..

துரோகம் இழைத்ததற்காக
"அவர்" இருக்கையில்
ஒதுக்கியே வைக்கப்பட்டவர்
இப்போது
"துரோகிகள் துரோகிகள் "
என அனைவரையும்
தூற்றியபடியே
நகர் வலம் வந்து கொண்டிருக்கிறார்

தொண்டர்களையும்
மக்களையும்
முட்டாள்கள் என
நினைத்தபடி
கணித்தபடி

(இது யாருக்குப் பொருந்தும் என
கணிக்க முடியாதவர்களுக்கு
ஒரு அருமையான க்ளூ

அவர் மூன்றெழுத்து இன்சியலால்
அழைக்கப்படுபவர்

மூவரும் அப்படித்தானே அழைக்கப்படுகிறார்கள்
என நீங்கள் யூகித்தால் அதற்கு
நான் பொறுப்பல்ல )

Tuesday, February 7, 2017

பன்னீரும் வெந்நீர் ஆனது...

மக்களின் எண்ணங்களை
அவர்தம் உணர்வுகளை
எது எதற்கோ சோரம்போய்

அரிதில் கடத்திகளாகச்
செய்தித் தாள்களும்
ஊடகங்களும் ஆகிப்போனதால்தான்

முக நூல் சுவர்களும்
வாட்ஸப்  திண்ணைகளும்
பதிவர் மேடைகளும்

உண்மைக் கடத்திகளாக
எளிதில் கடத்திகளாக
ஆகிப் போனதால்தான்

இளைஞர்களின்
எழுச்சியும் சாத்தியமானது

மெரினாவும்
மக்கள் சதுக்கமானது

ஜல்லிக்கட்டும்
சாத்தியமானது

அதன் தொடர்ச்சியாய்
இன்று பன்னீரும் வெந்நீர் ஆனது

இனிப் படிப்படியாய்
கபட வேடதாரிகளின்
வேஷம் நிச்சயம் கலையும்

இனிப் படிப்படியாய்

"போலித் தலைமைகளின் "
தான்தோன்றித்தனங்களும்
நிச்சயம் மண்ணைக் கவ்வும்

அதற்காகவேணும்

நாட்டு நடப்பினில் கூடுதல்
கவனம் கொள்வோம் வாரீர்

மனதில் பட்டதை நேர்மையாய்த்
தொடர்ந்து எழுதுவோம் வாரீர் 

Wednesday, February 1, 2017

ஜல்லிக்கட்டு.. ...போராட்டமும் முடிவும்

காலங்காலமாய்
துவக்கி வைத்துக் கொண்டிருந்தவர்கள்
அல்லது துவக்குவதாய்
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
அறியாமலேயே
இது துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அதை எட்ட நின்றுக்
கவனித்துக்கொண்டிருந்தார்கள்

காலங்காலமாய்
தொடர்ந்து கொண்டிருந்தவ்ர்கள்
அல்லது
தொடர்பவர்களாக
நடித்துக் கொண்டிருந்தவர்கள்
தொடராமலேயே
அது மிகச் சிறப்பாய்த்
தொடர்ந்து கொண்டிருந்தது

அவர்கள் மிரட்சியுடன்
அதைக் கவனமாய்க்
கவனிக்கத் துவங்கினார்கள்

காலங்காலமாய்
வென்று கொண்டிருந்தவர்கள்
அல்லது
வென்றதாக நடித்துக் கொண்டிருந்தவர்கள்
இல்லாமலேயே
அது வெல்லத் துவங்கி இருந்தது

அவர்கள் அதிர்ச்சியுடன்
அது குறித்துச்
சிந்திக்கத் துவங்கினார்கள்

துவங்குவதும்
தொடர்வதும்
வெல்வதும்
சுயம்புவாய் ஆகக் கூடுமெனில்
நம் நிலை என்ன என்பது
அவர்களுக்குள்
ஒரு எரிமலையை உருவாக்க

அவர்கள் மீண்டும்
வழக்கம்போல
மெல்ல மெல்லத் துவங்கி
மெல்ல மெல்லத் தொடர்ந்து
முடிவாய்
வழக்கம்போல
முடித்தும் வைத்துவிட்டார்கள்

வழக்கமான
ஒரு போராட்டம் என்பதைப் போலவே

ஆயினும்........