Showing posts with label அரட்டைக் கச்சேரி. Show all posts
Showing posts with label அரட்டைக் கச்சேரி. Show all posts

Sunday, May 8, 2016

பாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட்டுவாடா

ஒரு நல்ல பேச்சாளரை பேச்சாளராகவே
வைத்திருக்காதுத்
தலைவராகக் கொண்டாடியதால்தான்

கட்சியில் பிளவு எனச் சொல்லத்  தக்க அளவு
பெரும்போலோர் அவர் பின் வந்தும்
அவர்களைத் தங்கவைத்துக் கொள்ள இயலாது
இன்று மிகச் சிலருடன் கட்சி நடத்தும்
வை. கோ அவர்கள்


ஒருங்கிணைப்பாளர் என மக்கள் நலக் கூட்டணிச்
சொல்ல இப்போது தினம் அந்த வேலையையும்
ஒழுங்காகப் பார்க்காது.....

ஆயிரம் கோடி ஐநூறு கோடி பேரம்,
கண்டெய்னரில் கோடிக் கோடியாய்ப் பணம்
கலைஞரின் பூர்வீகத் தொழில்,
ரேசன் கடையில் பட்டுவாடா என

தினம் தினம் பேப்பரில் பெயர் வரவேண்டும்
என்பதற்காக ஒரு கமர்சியல் கதாசிரியரைப்போல
மூன்றாம்தரப் பேச்சாளரைப் போல
தினம் ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்

அவருக்கு உதவும் விதமாக
வித்தியாசமாக உங்களுக்கு ஏதும் ஐடியா
தோன்றினால் சொல்லலாம்

நிஜமாய் இருக்கவேண்டும் என அவசியமில்லை
பொய்யை நம்ப வைக்கவேண்டுமெனில் அதில்
கொஞ்சம் உண்மை இருக்கவேண்டுமென்பது போல
கொஞ்சம் " இருக்கலாமோ " என எண்ணும்படியாய்
ஒரு இடம் பொருள்  இருந்தால் போதும்

எனக்கொரு யோசனை தோன்றுகிறது

இன்னும் அனைவரும் அவரைக் கவனிக்க வேண்டுமெனில்
பாடையில் பணம், செத்த வீட்டில்
சுடுகாட்டில் பணம் பட்டுவாடா எனச் சொல்லலாம்

இரண்டு நாள் கழித்து
உண்மையில் செத்ததாகச் சொன்னவர்
சாகவே இல்லை, சுடுகாட்டில் இரண்டு நாளில்
எந்தப் பிணமும் எரிக்கப் படவில்லை
இதோ ஆதாரம் என போடோவைக் காட்டலாம்

அதன் மூலம் இன்னும் இரண்டு நாள்
மக்கள் அவரை நினைக்கும்படியாகச் செய்யலாம்

அவருக்காக  என் ஐடியா  எப்படி ?

Friday, April 29, 2016

அகில இந்தியத் திராவிட மச்சான்ஸ் முன்னேற்றக் கழகம்



இந்தப் படத்தைப் பார்த்ததும்  புரட்சித் தலைவரும்
புரட்சித் தலைவியும்  நின்ற பழைய
புகைப்படம் நினைவுக்கு  வந்தாலோ ..

அகில இந்தியத்  திராவிட  மச்சான்ஸ்
முன்னேற்றக் கழகம்
என்கிற பெயர் நினைவுக்கு வந்தாலோ ...
(.அ இ.தி .ம.மு. க  )

( நிச்சயம் இவருக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து
புரட்சித்ததலைவி அவர்கள் கட்சியின்
கொள்கைப் பரப்புச் செயலாளர்  பதவி
கொடுத்தாலும் கொடுக்கலாம்

அல்லது

கோபத்தில்கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்கலாம்
நீக்கினால் அ .இ.தி.ம.மு.க நிச்சயம்  )

உறவுகளில் அண்ணா, ,தம்பி, உடன்பிறப்பு
அம்மா , அண்ணி , எல்லாம் அரசியலில் வந்தாச்சு

அதைப் போல் ஏன்  மச்சான்ஸ்ஸு ம்
வரக்கூடாது என்கிற எண்ணம்
லேசாக உங்களுக்குள்  எட்டிப்பார்த்தாலோ..

அதற்குக்  கம்பெனி பொறுப்பல்ல...

( எத்தனைப் பதிவுகள்தான் சீரியஸாகவே எழுதுவது
 நண்பர்  அவர்கள் உண்மைகள் பாணியில்தான்
ஒன்று எழுதிப் பார்ப்போமே என   முயன்றது
சரியாய் வந்திருக்கிறதா ? நீங்கதான் சொல்லணும்  )


Wednesday, April 20, 2016

தேர்தல் முடிவுகள்... மிகச் சுருக்கமாக

தேர்தல் முடிவுகள்
மிகச் சுருக்கமாக இப்படி இருக்கலாம்
என்பது என் எண்ணம்

நிச்சயமாக அ.இ அ தி.மு.க பூரண
மெஜாரிடி பெறாது

இரண்டாவது இடத்தில்  தி.மு.க. இருக்கும்

மூன்றாவது இடம் வரும்
மக்கள் நலக்கூட்டணி எவரை ஆதரிக்கிறோர்களோ
அவர்கள் ஆட்சி அமைப்பார்கள்

நிச்சயமாக, இருவரில் யாரையாவது ஒருவரை
ஆதரித்துத் தான் ஆகவேண்டும் என ஆகும்பட்சத்தில்
அ.இ.அ தி.மு.கவை ஒதுக்கி  தி.மு.க வையே
இவர்கள் ஆதரிப்பார்கள்

இப்படி ஒரு சூழல் வருவதே
தமிழகத்துக்கு நல்லது என்பது
என் விருப்பமும் கூட

முடிந்தால்
உங்கள் எண்ணத்தையும்
ஆசையையும் தங்கள் பக்கத்தில் செய்யுங்களேன்

மக்கள் மனங்களை பதிவர்களாகிய நாம்
ஓரளவு  பிரதிபலிக்கிறோமா என்பதற்கு
இது ஒரு உதாரணமாக இருந்து விட்டுப் போகட்டுமே 

Tuesday, December 16, 2014

லிங்கா சொல்லும் செய்தி ---விமர்சனமல்ல

அடுத்தவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தைத் 
திருடிக் கொள்ளையடித்து வாழ்வதாக
பேரன் லிங்கேஸ்வரன் அறிமுகமாகிறான்

அவனது தாத்தாவின் கொடைத் தன்மையை
அறியாமலும் தனது அரண்மனை தஙகம்
வெள்ளி மற்றும் நவரத்தினங்கள் முதலான
சொத்துக்கள் அனைத்தையும்
தனக்கென தன் குடும்பத்திற்கென ஏதும்
ஒதுக்கிவைக்காது அந்த ஊருக்கே
அனைத்தையும்கொடுத்திவிட்டுத்
தன்னை அனாதையாக
ஏதுமற்றவனாகவிட்டுச் சென்றதற்காகவே
தான் அவ்வாறுஅடுத்தவர் சொத்தைக்
கொள்ளை அடிப்பவனாக
மாறிப் போனதாகவும் விளக்கம் தருகிறான்

சந்தர்ப்ப சூழ் நிலையில் தன் ஊருக்கு வந்து
தாத்தாவின் அருமை பெருமைகளை
ஊருக்காகவும் உலகுக்காகவும் வாழ்ந்ததை
அறிந்து மனம் மாறி இனி தானும் தன் தாத்தாபோல
ஏதாவது உருப்படியாக மக்களுக்கு ஏதாவது
செய்தபின் திரும்ப அந்த ஊருக்கு வருவதாகச்
சொல்லி ஊரைவிட்டுக் கிளம்புகிறான்
லிங்கேஸ்வரன்

இது படத்தின் கதை

புரட்சித் தலவர்  அவர்களின் படத்தின் கதையையோ
அல்லது சூப்பர் ஸ்டார் அவர்களின் படத்தின் கதையோ
நாம் வெறும் கதையாகவோ அல்லது அவர்களை
நாம்வெறும்கதாப்பாத்திரமாகவோ எடுத்துக்
 கொள்வதில்லை

அதையும் மீறி அந்தப் படத்தின் மூலம்
மறைமுகமாக அவர் நமக்குச் சொல்ல
 நினைக்கும் செய்திஒன்று உண்டு
என்கிற நோக்கத்தில்தான் பார்த்துப்
பழகியுள்ளோம்.

அவர்களும் தங்கள் அனைத்துப்
படங்களிலும் பூடகமாக பல செய்திகளைச்
சொல்லியும் இருக்கிறார்கள்

அவர்கள் திரையை மீறி மக்களிடம்
மிக நெருக்கமாகஇருப்பதற்கு
இதுதான் திட்டவட்டமான
காரணமும் கூட

என்னைப் ஒருத்தவரை லிங்கேஸ்வரனின்
தாத்தாவுக்கும்புரட்சித்தலவருக்கும் அதிக
வேறு பாடுகள் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவர் மறைந்து எத்தனை ஆண்டு காலமானாலும்
அவர் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் அரசியல்
நடத்தவேண்டிய சூழலில் அவருடைய கட்சி இன்றும்
இருக்கிறது தொடர்ந்தும் இருக்கும்
லிங்கேஸ்வரனின் தாத்தாவை நினைத்தபடி வாழும்
அந்த ஊரைப் போல

தனது திருட்டில் மிக உட்ச பட்ச திருட்டின் மூலம்
திசை மாறும் பேரன் லிங்கேஸ்வரன் போல
தன் நடிப்புச் செல்வாக்கின் மூலம் இதுவரை
அடைந்த பலனின் உச்சபட்சமாக இந்த
இந்தப் படத்தின் மூலம் தனக்கென தன்
குடும்பத்திற்கென வாழும் ஸூப்பர் ஸ்டார்
அவர்கள் புரட்சித் தலைவரைப் போல
இனி தானும் மக்களுக்கென வாழ்வதற்காக
முடிவெடுப்பார் எனும்  மறைமுகச் செய்திதான்
இந்தப் படம் என்பது ஆணித்தரமான கருத்தாக
எனக்குப் படுகிறது

இவ்வளவு நாள் பொறுத்தோம்
சில அரசியல் சூழல் மாறும் நேரத்திற்காக
கொஞ்சம் பொறுக்கமாட்டாமோ என்ன ?

Wednesday, November 20, 2013

தமிழ்மணக் குழப்பம் வந்ததுவே எனக்கும்

சங்கர பாஷ்யத்திற்கு அர்த்தம் அத்துப்படி
பிரம்ம ரகசியம் என்பதெல்லாம் எனக்கு வெறும் ஜுஜுபி
என்பவர்களையெல்லாம் அழைத்து
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியல் எப்படி
தீர்மானிக்கப்படுகிறது எனக் கேட்டால்
நிச்சயம் தலையைப் பிய்த்துக்
கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்

அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்
என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து
கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்

சரி அது எப்படியோ போகட்டும்
அது அவர்கள் விதிப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்

போட்டி என்றால்
தனி நபருக்கும் தனி நபருக்கும்
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
குழுக்களுக்கும் குழுக்களுக்கும்
நடப்பதைப் பார்த்திருக்கிறோம்

தனி நபருக்கும் குழுக்களுக்கும்
குழுக்களுக்கும் தனி நபருக்கும் இருப்பதை
எங்காவது பார்த்திருக்கிறோமா ?

அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர் 
என்றாவது முதலாவதாக வரச்   சாத்தியம் உண்டா ?

தமிழ்மணத் தர வரிசைப் பட்டியலில்
பதிவர்களைப் பொருத்துப் பட்டியலிடுவது சரி

அதற்குள் திரட்டிகளையும் ஒரு பதிவர் கணக்கில்
எடுத்து பட்டியலிடுவது எப்படிச் சரி ?

தமிழ் நியூஸ்,புரட்சி நியூஸ் மற்றும்
வலைச்சரத்தையெல்லாம் ஒரு பதிவாகக் கொண்டு
பட்டியலிடுதல் எந்த வகையில் சரியென எனக்கு
விளங்கவே இல்லை

இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்
 திரட்டிகளைத்  தவிர தனிப்பதிவர்கள்  என்றேனும்
வெற்றிபெற  வாய்ப்பிருக்கிறதா ?
எனக்குப் புரியவில்லை
   
இது குறித்துப் புரிந்தவர்கள் பதிவிட்டால்
மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்

Sunday, June 10, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்-6 (எம். ஜிஆர்./ எஸ் எஸ்.ஆர்,/ராமராஜன் )

புராணக் கதைகளின் தொடர்ச்சியாக நாடகங்களும்
அதன் நீட்சியாகவே சினிமாவும் தொடர்ந்ததாலோ
என்னவோ கதை மாந்தர்களை கதையின்
போக்கைவிட மிக உயர்த்திச் சொல்லுதல்
ஒரு தவிர்க்க இயலாஅம்சமாக மாறிப் போனது
நாளடைவில் அது மக்கள் விரும்புகிற
அம்சமாகவும் மாறிப் போனது

ஆதியில் நாடகங்களாக  நடிக்கப் பட்ட
ஹரிச்சந்த்ரா வள்ளி திருமணம் பவளக் கொடி
முதலான கதைகளில்  கதை அம்சம்
அதிகமாக இருந்தாலும் கூட அதை விட
கதாபாத்திரத்தின் அம்சம் கொஞ்சம்
கூடுதலாகவே இருந்தது

அதன் போக்கில் வந்த முந்தைய
ராஜா ராணிக் கதைகளில் சுவாரஸ்யமான
கதை இருந்த போதிலும் கதைக்கு அடங்காது
கதாபாத்திரங்கள் திமிரித் தெரியும் படியான
படங்கள்வெளிவந்தபோது அதன் போக்கில்
கதா நாயகத் தன்மையும் தவிர்க்க இயலாமல்
கதையை விட கொஞ்சம் முன்னால்
 துருத்திக் கொண்டே வந்தது

புரட்சித்தலைவர் அவர்கள் சண்டைப்பயிற்சி
முறையாகக் கற்றவர் என்பதால்
அவருக்கு இயல்பாகவே
அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அமைந்தது
குறிப்பாக நடிப்பைவிட பிரமிப்பூட்டும்
(ஆக்ஸன் படங்கள் எனச் சொல்லலாமா )
சண்டைக் காட்சிகளுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன
பின்னாளில் அவருக்கென ஒளிவட்டம்அமைந்து
தனிப்பட்ட ரசிகர்கள்ஆதரவும் கூடக் கூட
அவராகவே அந்த பாணிக்
கதாபாத்திரங்களை அமைத்து மகத்தான்
வெற்றியும் பெற்றார்

அதே சமயத்தில் கதையும் கதா பாத்திரமும்
சம  நிலையில் இருக்கிற அல்லது
கதாபாத்திரத்தை விட கதை மிக முக்கியமாகப்
-படுகிற ,அல்லது ஆணை விட பெண் கதாபாத்திரம்
முக்கியமாகப் படுகிற திரைக் கதை அமையும் போது
அதற்கு பொருந்தி வரக் கூடியவராக
புரட்சித் தலைவர் இல்லை.
அவர் அதைமீறி இருந்தார்

.அதைப் போன்ற கதைகளுக்கு
(குறிப்பாக கதையை மீறிய நடிப்பும் தேவையிலை
அதிக உக்கிரமான சண்டையும் தேவை இல்லை)
எஸ் எஸ்.ஆர் அவர்கள் மிகப் பொருத்தமானவராக
இருந்தார்..அந்த இடத்தை அவர் மிகச் சரியாகப்
பூர்த்தி செய்தார்.புரட்சித் தலைவர் ரசிகர்களையும்
நடு நிலை ரசிகர்களையும் அது திருப்தி செய்ததால்
அவருடைய படங்களும் வெற்றிகரமாக ஓடின

மனோ தத்துவ அறிஞர்கள் நாம் வீட்டில் மின் விளக்கை
ஏற்றுகையில் கன்னத்தில் போட்டுக் கொள்ளுதல் கூட
காட்டு வாசியாய் இருந்த மனிதன் நெருப்புக்கு பயந்து
வணங்கி வந்ததன் மிச்ச சொச்சம் என்பார்கள்

நாம் முன் பின் அறியாத ஒருவரை சந்திக்கையில்
ஏற்கெனவே அவர் சாயலில் பிடித்த நபர் ஒருவர் நமக்கு
ஒருவர் இருந்தால் இவரை நமக்கும் பிடித்துப் போகும்
பிடிக்காதன் நபர் எனில் பிடிக்காமல் போகும்

அந்த வகையில் புரட்சித் தலைவர் பாணியில்
பாதி அளவு வெளிப்படு த்தி வெற்றி கண்ட
எஸ்.எஸ் ஆர் அவரகளது  பாணியை மிகச்
 சரியாகப் புரிந்து(இயக்கு நர் என்பதால்)
 தன் உடல் மொழி மற்றும்அது போன்ற
கதைகளை மட்டும்  தேர்ந்தெடுத்து
நடித்ததால் இவர் சில காலம் வெற்றி பெற்றார்
என்பது எனது கருத்து

 ( அவர் நடை உடை பாவனைகளை
 ஒப்பிட்டு ஏதாவது ஒரு படம் பார்த்தால்
இது விஷய்ம்தெளிவாகப் புரி யும் )

தனக்கு அதிர்ஷ்டத்தால் அல்லது
மிகச் சிறந்த கதை அமைப்பால்
கரகாட்டக் காரனுக்குக்கிடைத்த வெற்றியை
 ராம ராஜன் அவர்கள் 
கொஞ்சம் அதிகப்படியாக
கற்பனை செய்து கொண்டு அகலக் கால்
வைத்ததால்தான் என்னவோ அவர்
அடியோடு  காணாமலும் போனார்

(தொடரும் )

Friday, June 8, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (எம்.ஜிஆர் ) 5 தொடர்ச்சி

ஐந்தாவது பதிவாக எனது தலைப்பினை விளக்கி
பதிவினை முடிக்கலாம் என இருந்தேன்
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் மறைந்து
 இத்தனை காலத்திற்குப் பின்னும் அவர்கள்
 மக்களிடம் கொண்டிருக்கிற
செல்வாக்கிற்கான காரணம் இன்னும்
விரிவாக அலச ஆசைதான் என்றாலும்
பதிவின் நோக்கம் விட்டு விட்டு செல்லும்
சாத்தியக் கூறு அதிகம் என்பதால் நான
விரிவாக எழுதவில்லை.

ஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்கள் குறித்த
பதிவுக்குப் பின் வந்தபின்னூட்டங்கள் அவசியம்
இன்னும் கொஞ்சம்புரட்சித் தலைவர் குறித்து
எழுதி இருக்கலாமோ என்கிற எண்ணத்தைத்
தந்ததால் இதைத் தொடர்கிறேன்

இருவர் படத்தில் மணிரத்தினம் அவர்கள்
அரசியலும் சினிமாவும் தனிப்பட்ட வாழ்வும்
புரட்சித் தலைவர் வாழ்வில் எப்படி மிகச் சரியாக
தன்னை இணைத்துக் கொண்டே வந்தன என்பதை
மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போதுதான்
ஒரு முழுமையான அரசியல்வாதி பொருளாளராக
நியமிக்கப் பட்டுள்ளார்.அதற்கு முன்னாள்
நடிகர்களே பொருளாளராக இருந்து வந்துள்ளர்கள்
நடிப்பிசைப் புலவர் கே.ஆர் ராமசாமி அவர்களும்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களும்
அதற்குப் பின்னர் புரட்சித் தலைவரும்
பொருளாளரராக இருந்துள்ளனர்.

வீறுகொண்ட இரு குதிரைகளாக இருக்கிற
சினிமாத் துறையிலும் அரசியல் துறையிலும்
முன்னர் சொன்ன இருவருக்கும் பிந்தியவராக
இருந்தபோதிலும் இரண்டிலும் மிகச் சரியாக
பயணித்து வெற்றி கண்டவர் புரட்சித் தலைவர்

அரசியலில் கண்ட சாதுர்யங்களை
சினிமாவில் கிடைத்த தனது புகழை மிக நேர்த்தியாக
இடம் மாற்றம் செய்ததன் மூலம் எப்படி
அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு
எப்படி நனமை செய்யலாம் என்கிற ஒரு
புதிய பாதையை உலகுக்கே காட்டியவர்
புரட்சித் தலைவர்தான்

மு. க .முத்து அவர்களுக்கு முன்பாகவே
புரட்சித் தலைவருக்கு எதிராக இலட்சிய நடிகரை
பிரதானப் படுத்த அரசியலிலும் சினிமாவிலும்
எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயினும் அவைகள் எல்லாம் சம்பத்தப் பட்டவர்கள்
மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை
என்பதால் தோற்றும்போயின

இவர்களின் நோக்கம் அறிந்த புரட்சித் தலைவர்
அவர்கள் தனது ஒவ்வொரு அசைவிலும்
மிகக் கவனமாக இல்லையெனில் இத்தனை
உயரத்தை அடைந்திருக்கச் சாத்தியமே இல்லை

இல்லையெனில்
காமராஜர் போல் எளிமையானவராக
இலலாது போயினும்
அண்ணா போல பேரறிஞராக
இல்லாது போயினும்
இலட்சிய நடிகர் போல் அத்தனை
அழகானவராக இல்லாது போயினும்
(நான் இருவரையும் நேரடியாகப்
 பார்த்திருக்கிறேன் )
ராஜாஜி போல் மதி நுட்பம்
இல்லாத வராக இருந்த் போதிலும்
கலைஞர் போல அத்தனை
பேசுசுத் திறன் அற்றவராக இருந்தபோதிலும்
சிவாஜி போல அத்த னை சிறந்த
நடிகர் இல்லைஎன்ற போதிலும் 

இன்னும் எத்தனையோ போதினும்
சொல்லிக் கொண்டே போகலாம்

இப்படி சினிமாத் துறையில் நடிப்பில்
ஜாம்பவான்கள் எல்லாம் இருந்தபோதும்
கடைசிவரையில்
வசூல் சக்கரவர்த்தியாக இருந்ததும்

அரசியல் துறையில் சாணக்கியர்கள் கூட்டம்
நிறைந்திருந்த்போதும்
இறுதிவரையில்
எவரும் வெல்ல முடியாத்
மக்கள் தலைவராக இருந்ததும்
வெறும் சந்தர்ப்ப சூழ் நிலையால் ஏற்பட்டதில்லை

அவரை மிகச் சரியாக அறிய முயல்வது
நமக்கும் கூட நல்ல வழிகாட்டியாக அமையலாம்


(தொடரும்)


Thursday, June 7, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (4) (எம்.ஜி.ஆர்)

பதிவின் தலைப்பில் குறிப்பிட்டுள்ள மூவரும்
காலியாகக் கிடந்த இடத்தை மிகச் சரியாகப்
புரிந்து கொண்டு களமிறங்கியதால்தான் அவர்களால்
வெகு நாட்கள் நீடித்து திரையுலகில் பவனி வர
முடிந்தது என்பதை தற்போதைய இளைஞர்கள்
ஓரளவு மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்
என்பதற்காகத்தான் கொஞ்சம் விரிவாகவே
இந்தப் பதிவைத் தொடர்கிறேன்

திரை யுலகைப் பற்றி மக்கள் ரசனை குறித்து
மிகத் தெளிவான கருத்து கொண்டிருந்தவர்
புரட்சி நடிகர் அவர்கள்.

திரைப்படம் என்பது பொழுது போக்கு
அம்சத்திற்கானதேபாடுபட்டு பல்வேறு
துயருக்கிடையில் அவதியுறும்
பாட்டாளி மக்கள் கொஞ்சம் இளைப்பாறிப்
 போகும் இடம்திரைப்படம் எனப்தில்
அவர் திட்டவட்டமாக இருந்தார்

கலை கலைக்காவே என்கிற ஓரத்திற்கும் போகாமல்
கலை மக்களுக்காகவே என்பதையும் மறக்காமல்
அதே சமயம் அதற்காக அதிகம் மெனக்கெடாமல்
தனக்கென ஒரு புதிய பாணியை அவர்
அமைத்துக் கொண்டதால்தான் கடைசிவரையில்
திரைப்படத்துறையில் முடி சூடா மன்னனாகவே
இருக்க முடிந்தது

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இருக்கும் சாகஸம்
இருக்கும்படியாகவும் (செக்ஸ் இல்லாதபடியும் )
அதே சமய்ம் காதல் தாய்ப்பாசம்
ஏழைகளிடம் பரிவு கொள்ளுதல்
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் வெற்றி உண்டு
பொய்யும் பித்தலாட்ட்டமும்
இறுதியில் தோற்றே தீரும் முதலான
 விஷயங்களை மிக நேர்த்தியாகக் கலந்து
ஒரு புதிய பாணி கதைகளைக் கொண்ட
படங்களைத் தொடர்ந்து தந்தாலும் நடிகர் திலகம் போல்
கதாபாத்திரத்தில் தன்னை ஒளித்துக் கொள்ளாமல்
கதாபாத்திரங்களை அவராகவே உணரச் செய்வதில்
மிகச் சரியாக இருந்தார்.அவரது வெற்றியும் அதில்தான்
அடங்கி இருந்தது .

ஒளிவிள்க்கு படத்தில் புரட்சி நடிகர் முத்து என்கிற
திருடனாக நடித்திருப்பார்.அவர் ஜெயிலில்
இருந்து வந்த சமயம் அவர் இருப்பிடத்தை
 ஒட்டி இருக்கும் குழந்தைகள் அவரை அனபுடன்
சூழ்ந்து கொள்வார்கள்.எம் .ஜி ஆர் அவர்கள்
அருகில் இருந்த தள்ளுவண்டிக்காரனிடம்
அனைவருக்கும் இனிப்பு வழங்கச் சொல்லி
நூறு ரூபாய் நோட்டைத் தருவார்.அவன் எடுத்துக்
கொடுத்துக்கொண்டிருக்கும் போதே
குழந்தைகளின் பெற்றோர் "திருடனிடமா
வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் "என குழந்தைகளை
அடித்து இழுத்துப் போவார்கள்.வியாபாரம்
ஆகாத சோகத்தில் தள்ளுவண்டிக்காரன்
நூறு ரூபாய் நோட்டைத் திருப்பித் தருவான்

அந்த சமயம் தியேட்டரில் ஒரு ரசிக்ரின் குரல்
"டேய் எங்கள் தலைவருக்கு கொடுத்ததை
திருப்பி வாங்கிப் பழக்கமில்லை "எனஓங்கி ஒலிக்கிறது

அவன் சொன்னது போலவே வேண்டாம்
வைத்துக் கொள் என்பது போல் சைகை காட்டிவிட்டு
எம்.ஜி ஆர்.நடக்கத் துவங்கிவிடுகிறார்
தியேட்டரில் விசில் சபதம் காதைப் பிளக்கிறது

காவல்காரன் என்கிற படத்தில் ஒரு அருமையான
சண்டைக் காட்சி.ஒரு முரடனை அடிக்கும் போது
அவன் விலக தலைவரின் கை கண்ணாடி பீரோவை
உடைத்துக் கொண்டு செல்லும் .
கண்ணாடி உடைந்து சிதறும். நாம் அவர் கை என்ன
ஆகி இருக்குமோ என நினைக்கும் சமயம்
அவர் கையைக் கவனிக்காமல் கையில்
கட்டியிருக்கிற கடிகாரம் சரியாக ஓடுகிறதா
எனப் பார்ப்பார்.அதே சமயம் அவரைத் தாக்க
அவர் அறியாமல் பின்னே ஒருவன் வருவான்

தியேட்டரில் ":தலைவா பின்னால ஆளு "
என ஒருவன்கத்துகிறான்

அடுத்து ஒருவன் "அதெல்லாம தலைவருக்குத்
தெரியும்பா " எனச் சொல்கிறான்

அவன் சொல்லி முடிப்பதற்குள் தலைவர்
திரும்பாமலே அவனுக்கு ஒரு டிஸும் விடுகிறார்
தியேட்டரில் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது.

இப்படி திரையைத் தாண்டி தன் ரசிகர்களிடம்
அவர் மிகவும் நெருங்கிவிட்டதாலும்
தன் ரசிகர்களுக்கு ஓரளவுக்கு மேல் நடிப்பு
தேவையில்லை என்பதாலும் அவர் நடிப்பு
குறித்து அதிகம் கடைசி வரையில்
அதிகம் அலட்டிக் கொள்ளவேஇல்லை
(மற்றபடி நடிக்கத் தெரியாமல் எல்லாம் இல்லை)

சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை கொள்வது
மற்றபடி எந்தக் காட்சி என்றாலும்
முன்னிலை என்றால் முன்பக்கம் கைகாட்டுவது
படர்க்கை என்றால் பின் பக்கம் கைகாட்டுவது
உண்மை நேர்மை முதலான விஷயங்களுக்கு
நெஞ்சைத் தொட்டுக் காட்டுவது.,
அம்மா அண்ணா முதலானவைகளுக்கு கை கூப்புவது
காதல் காட்சியில் லேசாக உதட்டைச் சுளித்து
விஷமப் புன்னகை பூப்பது,
கோபம் எனில் பற்களைக் கடிப்பது
அழுகை என்றால் எதையாவது வைத்து
முகத்தை மறைத்துக் கொள்வது அல்லது
தூணில் மறைந்து கொள்வது
மற்றபடி அனைத்திற்கும் கைகளை இரண்டு புறமும்
மிக நேர்த்தியாக விரிப்பது மட்டுமே போதும்
என்பதில் மிகச் சரியாக இருந்தார்
கதைக்கும் அவரது ரசிகர்களுக்கு அதுவே
போதுமானதாகவே இருந்தது

அவரும் ,கதையும் ,.இசையும் ,பாடலும்
ஒவ்வொரு படத்தில் ஏற்றுக் கொள்ளும்
மாறுபட்ட கதாபாத்திரமும்
புத்தம் புதிய இளமையான கதா நாயகிகளும்
அவர் படத்தின் பால் எப்போதும் ஒரு
அதிக ஆர்வத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன

இப்படி மக்கள் திலகமாகவும் நடிப்புத் திலகமாகவும்
இருந்த இரு துருவங்களுக்கிடையில்
நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களும்
காதல் மன்னன் ஜெமினி அவர்களும்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ் ஆர் அவர்களும்
மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்ததும் அவர்கள்
நடித்த படங்கள் மிகச் சிறப்பாக ஓடியதும்தான்
மிகுந்த சுவாரஸ்யமான விஷயமே

(தொடரும்)

Wednesday, June 6, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்(சிவாஜி)3

முதல் மரியாதை படம் வெளியான சமயம்
நடிகர் திலகம் அவர்கள்  அளித்தபே ட்டியில்
குறிப்பிட்ட பல்வேறு அதி முக்கிய விஷ்யங்களில்
இது மிக முக்கியமானது

"இப்போது இருக்கிற இயக்கு நர்கள்
இப்போது க்ளோசப்தான் எடுக்கிறோம்
முக பாவனை மட்டும் இப்படி இருந்தால் போதும்
என்கிற மாதிரிச் சொல்லி சூட் செய்கிறார்கள்
உடல் முழுவதும் நடிக்காமல்
முகம் மட்டும் நடிக்கச் சாத்தியமா ?
மன்னன் என்று சொன்னால் கால நுனி முதல்
உச்சம் தலைவரை வரை மன்னனாக
இருத்தல் தானே சரி. "எனச் சொல்லி
இடது காலைதரையில் அழுத்தி ஊன்றி
நெஞ்சை நிமிர்த்திகம்பீரமாகப் பார்த்தபோது
அங்கே ஒரு நொடியில் நடிகர் திலகம் மறைந்து போய்
ஒரு சக்கரவர்த்தி அங்கே அமர்ந்திருந்தார்

இப்படி ஒரு கதாபாத்திரம் என்றால்
அதுவாகவே அனைத்திலுமாக மாறிப்போகும்
அசாத்திய வல்லமை படைத்திருந்ததால்தானே
இன்றுவரை நடிப்பிற்குஒரு இலக்கண நூலாக
நடிகர் திலகம் அவர்களின் படங்கள்
விளங்கிக் கொண்டிருக்கின்றன

ஆலயமணியில் நண்பனுடன் வெளியே போன
மனைவியை சந்தேகித்து அந்த ஈசி சேரில்
வெறிகொண்டு அமர்ந்திருக்கையில்
ஒரு வெறிபிடித்த சிங்கத்தை நினைவுறுத்தும் காட்சி..

பாபுவில் மிகக் கடினப்பட்டு பள்ளிக்காண கட்டணத்தை
கட்ட வகுப்பு வகுப்பாகத்தேடி அலைந்து முடிவில்
துணியில் முடிந்து வைத்த காசுகளைக் கொடுக்கையில்
அந்த்ச் சிறுபெண் ஏன் இங்கே வந்தீர்கள்
எனக் கேட்கையில் முகத்தில் காட்டும் மனோபாவம்...

பாசமலரில் மனம் வெறுத்து வெளியேறி
ஊர் உலகெல்லாம் சுற்று மீண்டும் வீடு நுழைகையில்
நான் உள்ளே போகலாம என அவர் வீட்டு வாட்ச்மேனிடமே
கேட்கும் அந்த நொடி..

 கவரிமானில் தனது ஆசைமனைவியை அடுத்தவனுடன்
 கட்டிலில் பார்த்ததும் கொண்ட அதிர்ச்சியை
வெளிப்படுத்தும் வித்தியாசமான நடிப்பில்

அப்பராகவே திருவருட்செல்வரில்...
வ.வூ. சி யாக்வே கப்பலோட்டிய தமிழனில்

 பதறவைக்கும்வில்லனாக அந்த நாளில்,
பெண்ணின் பெருமையில், ரங்கோன் ராதாவில்

இப்படியே சொல்லிக் கொண்டு போனால்
குறைந்த பட்சம் ஐம்பது படங்களையாவது
நிச்சயம் சொல்லவேண்டி இருக்கும்

சுருக்கமாகச் சொன்னால் சிவாஜி நடித்த
 மோசமான படங்கள் உண்டு
ஆனால் சிவாஜி மோசமாக நடித்த படம்
 ஒன்று கூட நிச்சயம்   இல்லை என
உறுதியாகக் கூ றலாம்

இப்படி நடிப்பின் அனைத்து அம்சங்களையும்
விரல் நுனியில் வைத்திருந்தவர்
நடிப்பைப் பொருத்தவரை ஒரு
சர்வகலாசாலையாகவே விளங்கியவர்
சினிமா அரசியல் குறித்தும்
அரசியல் பித்தலாட்டங்கள் குறித்தும்
அதிகம் அறிந்து கொள்ளவிரும்பாததாலோ
என்னவோஒருசினிமாவை இயக்கவோ
குறைந்த பட்சம்ஒரு சட்டமன்ற
 உறுப்பினராகவோ ஆகக் கூட
கடைசிவரையில் முடியாமலே போனது

 இதற்கு நேர்மாறாக சினிமா குறித்தும்
அரசியல் குறித்தும் மிகத் தெளிவான கருத்தை
கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்
அதனால்தான் அவரால் ரிக்சாக் காரனுக்கு
சிறந்த நடிகருக்கான அவார்டையும்
மூன்று படங்களை தயாரித்து இயக்கவும்
ஒரு மா நிலத்தின் முதல்வராகவும் ஆக முடிந்தது
என்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை

(தொடரும் )


Monday, June 4, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் -2

மோகன் தவிர மணிவண்ணன் அவர்களும்
ராம ராஜன் அவர்களும் இயகு நர்கள் என்பதால்
அவர்கள் எப்படி மிகத் தெளிவாக அவர்களுக்கான
இடத்தை மிகச் சரியாக தேர்ந்தெடுத்தார்கள் என்பதை
மிகச் சரியாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் முன் கதைச்
சுருக்கம் இருந்தால்தால் உதவும் என நினைக்கிறேன்

முன்பெல்லாம் வயதுக்கு மீறிப் பேசினாலே
புத்திசாலி யெனவும் ஒரு பிரபலமான
குட்டி நட்சத்திரத்தை ஒப்பிட்டுப் பேசுதலும்
கொஞ்சம் அழகாய் இருந்தாலே
பத்மினிபோல் வைஜந்திபோல் சாவித்திரிபோல்
என ஒப்பீடு செய்கிற கால கட்டம் அது.

பொழுது போக்கு என்றால் அது சினிமா மட்டுமே.
திருவிழா என்றால் சினிமா பார்த்தல் என்பது
நிச்சயமாக இருக்கவேண்டும் என அனைவரும்
ஏற்றுகொண்டிருந்த காலமது.

மதுரையைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட
இன மக்கள் திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை
பெண் வீட்டுக்காரர்களை புதிய திரைப்படத்திற்கு
அழைத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு
அங்கீகரிக்கப் பட்ட சடங்காகவே கூட இருந்தது
கூடுமானவரையில் இன்றைய அலங்கார் தியேட்டரும்
(அன்றைய லெட்சுமி ) சிந்தாமணி தியேட்டரும்
தினமணி டாக்கீசும் அதற்கான தியேட்டர்களாக்வே
அங்கீகரிக்கப் பட்டிருந்தன

இளைஞர்களாக் இருந்த நாங்கள் எல்லாம்
எங்களை சிவாஜி ரசிகராகவோ அல்லது
எம்.ஜி.ஆர் ரசிகராகவோ எங்களை
பிரித்துவைத்துக் கொண்டிருப்போம்.
எப்போதும் இரண்டு திலகங்களின் படங்களும்
ஒன்றாகவே திருவிழா நாட்களில் வெளியாகும்
அப்போதெல்லாம் ஒரு வார காலம்
மாலை நேர விவாதங்கள் எல்லாம் சினிமா குறித்தே
இருக்கும்.முதலில் அவர் அவர்கள் மதிக்கிற
திலகங்களைப் புகழ்வதில் துவங்குகிற விவாதம்
பின் அவர்களுக்கு எதிராகப் பேசுவதில் தொடர்ந்து
சண்டை சச்சரவு அடிதடியென முடிவதுண்டு

பெரும்பாலான சமயங்களில் நடிகர் திலகம்
அவர்களின் தொந்தி குறித்தும் மக்கள் திலகம்
அவர்களிம் சொட்டை குறித்தும் பேசினால் போதும்
அங்கு நிச்சயம் ஒரு பிரளயம் உருவாகிவிடும்

தங்கள் ரசிகர்களிடையே தங்கள் இமேஜ் குறித்து
இருக்கிற சாதக பாதகங்க்களை இர ண்டு திலகங்களும்
மிகத் தெளிவாக அறிந்திருந்தோடு மட்டுமல்லாது
அதனை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்
என்பதுதான் சுவாரஸ்யத்திலும் சுவாரஸ்யம்

(தொடரும் )

Sunday, June 3, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும்...

சனி மாலையில் துவங்கி நள்ளிரவு வரை நீளும் 
அரட்டைக் கச்சேரியில் அந்த அந்த
வாரத்தில் நடந்த நாட்டு நடப்புகள்  குறித்து
விரிவான காரசாரமான விவாதம் எங்கள்
நண்பர் குழுவில் நடைபெறும்

ஒரு பொருள் குறித்த விரிவான விவாதம்
என்பதைவிட பல பொருள் குறித்த
முடிவற்ற விவாதமே அதிகம் நடைபெறும்
எப்போதேனும் ஒரு பொருள் குறித்த
விவாதம் நாங்களே எதிர்பாராது அமைந்துவிடும்

அந்தவகையில் இந்த வாரம் மாட்டியவர்
நடிகர் ராம ராஜன்தான்

நடிப்புத் திறனோ அல்லது சண்டைக் காட்சியில்
மிளிரும் திறனோஅல்லது சொல்லிக்
கொள்ளும்படியானஎந்த வித்தியாசமான
 நடிப்புத் திறமையோ இல்லாத நடிகர் ராம ராஜன்
எப்படி இத்தனைப் படங்களில்
நடித்து முடித்தார் என்கிற விவாதத்தை ஒருவர்
துவங்கி வைக்க விவாதம் சூடு பிடித்தது

நல்ல வேளையாக ராம ராஜன் அவர்களுக்கு
தீவீர ரசிகர் யாரும் கூட்டத்தில் இல்லாததால்
அவர் நடிப்பு குறித்த, கோடு போட்ட
உள்ளாடை குறித்த,லிப்ஸ்டிக் போட்ட உதடுகள்
குறித்த மோசமான விமர்சனங்களுக்கெல்லாம்
எவ்வித எதிர்ப்பும் இல்லை

ஆனாலும் கூட அவர் நடித்த படங்கள் எல்லாம்
ஓரளவு வசூல் குவித்தது குறித்தும் அவர் நடித்த
கரகாட்டக்காரன் தமிழ் பட உலகில் நிகழ்த்திய
சாதனைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில்
மாற்றுக் கருத்தில்லை

நிச்சயமாக ஓரளவேனும் காரணமில்லாமல்
எவரும் வெற்றி கொள்ள சாத்தியமில்லை
ராம ராஜன் மட்டும் அல்ல மணிவண்ணன்
மற்றும் மோகன் அவர்கள் கூட
அதிகப் படங்களில் நடித்ததற்கு
ஒரு அடிப்படையான ஒரு காரணம் உண்டு

குறிப்பாக இயக்குநர்களாக இருந்த  ராம ராஜனும்
மணிவண்ணன் அவர்களும் மிகப் புத்திசாலித்தனமாக
தமிழ்த்திரையுல்கில் வெகு நாட்களாக
 காலியாகக் கிடந்தஅனைவரையும் கவர்ந்த
 காலி இடத்தை மிகச் சரியாகத்கண்டுபிடித்து
 நிரப்பியதுதான் அவர்கள் வெற்றிக்கான
விஷயமேயன்றி அவர்கள் நடிப்புத் திறனில்லை
என்பதை நான் விளக்கத் துவங்கினேன்

(தொடரும் )