Showing posts with label கவிதை - - படைத்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label கவிதை - - படைத்ததில் பிடித்தது. Show all posts

Friday, August 11, 2017

நம்பிக்கையுடன் எழுதிக்கொண்டிருப்போம்...

நம்
இளமைப் பருவத்தில்
தீமைகள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவைகள் எல்லாம் எங்கோ
மிக மறைவாய்க்
கண்ணுக்குத் தெரியாதபடி..
கைகளுக்கு எட்டாதபடி
மிக மிக முயன்றால் மட்டுமே
அபூர்வமாய்க்  கிட்டும்படி...

இப்போது
நல்லவைகள் இருக்கிறபடி...

நம்
இளமைப் பருவத்தில்
தீயவர்கள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவர்கள் எல்லாம்
மிக ஒதுங்கியபடி
அனைவருக்கும் தெரியாதபடி
அன்றாடவாழ்வில் தட்டுப்படாதபடி
அளவை மீறுகையில் மட்டும்
இருப்புத் தெரியும்படி

இப்போது
நல்லவர்கள் உள்ளபடி

என்ன செய்வது ?

கள்குடித்தக் குரங்கதுப்
பாறையில் நின்றபடித்
தன் முட்டைவைத்து
விளயாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறப்
பெட்டைகளாய்...

நாகரீகக் காலம்
நுகர்வுக்கலாச்சாரத்தில்
இளமையைவைத்து
விளையாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறோம்
ஊமைகளாய்..

என்ன செய்யலாம் ?

மழையில்லை என
புலம்பிய படியும்
அழுதபடியும்
இருத்தலை விடுத்து
நமபிக்கையுடன்
உழுதுக் கொண்டிருக்கும்
புஞ்சை விவசாயியாய்

மாற்றும் வழியதுத்
தெரியவில்லையெனப்
புரியவில்லையெனச்
சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்

Thursday, June 1, 2017

முயன்று அடைந்தே மகிழ்வோம்

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே


யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   ஆயினும்
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க

 சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே


முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு


மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்று  அடைந்தே மகிழ்வோம் 

Tuesday, May 23, 2017

மண் சட்டியில் ஃபளூடாவையும் வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்....

" குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
உன் படைப்புகளில் ஏதும் இல்லை

ஆனாலும் ஏதோ இருப்பது போல
பாவனை காட்டி மயக்குகிறது

அது எப்படி ?  "என்றேன்
எனைக் கவர்ந்த கவிஞனிடம்

"அது பெரிய விஷயமே இல்லை
யாரிடமும் சொல்லாவிட்டால்
உனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்"என்றான்
சத்தியம் வாங்காத குறையாய்

எதற்கும் ஆகட்டும் என
தலையாட்டி வைக்க
அவனே தொடர்ந்தான்

"எதனை எழுதத் துவங்கும் முன்பும்
அறிஞர் சபையில்
அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய
கருவினைத்  தேடி மெனக் கெடுகிறேன்

கரு கிடைத்ததும்
பாமரன் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
எளிய சொற்களால் பகிர்கிறேன்
அவ்வளவே" என்றான்

நான் குழம்பி நின்றேன்
அவனே தொடர்ந்தான்

"சில சமயம்
எதை எழுதத் துவங்கும் முன்பும்
பாமரர் முன் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய
கருவினைத்  தேடி மெனக்கெடுகிறேன்

அது கிடைத்ததும்
அறிஞர் சபையில் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி
படைப்பாக்கிக் கொடுக்கிறேன்

மொத்தத்தில்
மண் சட்டியில் ஃபளூடாவையும்
வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்.."
எனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்

கண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை
குழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது

அவன் படைப்புகளை
மீண்டும் படித்துத்தான்
தெளிவு கொள்ள வேண்டும்

Monday, May 22, 2017

மின்மொழி அறிந்திடும் முன்னால்...

வலைத்தளம்   அறிந்திடும் முன்னால்-அதன்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம்

விண்வெளி ஒருநொடிக் கடக்கும்-புதிய
மின்மொழி அறிந்திடும் முன்னால்
மண்ணடிக் கிடந்திடும் பொன்போல்-நாமும்
மண்னெனக் கிடந்தோம் பலநாள்

சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்
சவமெனக்  கழித்தோம் வெகுநாள்

விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
குறையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்

கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் நிறைவாய்

இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் மகிழ்வாய்  

Sunday, May 21, 2017

நம் துணைவியார் கூட நமக்குப் புத்தன்தானே...

முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
மிதக்கத்  துவங்கிவிடுவேன்

நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்திய களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல

அதிகாலையில் இருந்து
சமையலறையில்  தனியாய் போராடி
அனைவருக்கும் இதமாய்ப்  படைத்து
அவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்
அலுப்பில் ஓய்வெடுக்க முயலாது

மீண்டும் அடுத்த வேளைக்கென
பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைக் கண்டது முதல்

இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததை  உடன்  சிந்திக்கத்  துவங்கிவிடுகிறேன்

புத்தித் தெளிவடைதலே
ஞானமெனில்

அதைத் தருமிடமே
போதிமரமெனில்

சமையலறையதுக் கூட
நமக்கு போதிமரம்தானே

அதைத் தன் செயலால்
அன்றாடம்போதிக்கும்
நம்  துணைவியார்   கூட
நமக்குப் புத்தன்தானே

Thursday, May 11, 2017

பதிவர் மேடை

இந்த மேடை
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை
சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்
சுமைகளின்றி

போலி முக
 வேஷங்களின்றி

நமது குளியறையில்
பாடுதல் போல்

நமது தோட்டத்தில்
உலாவுதல்   போல

இயல்பாகவே இருக்க  முடிவதாலே

 இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

இருள் உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவருமே
படைப்பாளிகளாகவே இருப்பதாலே

இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

நேரக்கணக்கின்றி
இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்

பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்
வெளிச்சமும் சப்தமும்
ஆரவார ரசிகர்கள் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது

நிலையாக என்னுள்
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது


Thursday, May 4, 2017

கவிதையைப் போலவும்...

"இப்படி விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்று பார்த்தே
விலகிப் போயினர் சிலர்

"அதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
உருண்டு விளையாடி
மனம் களித்துப் போயினர் பலர்

"முழுதும் நனைந்திடாது
பட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் "என
உணவுக்கு  ஊறுகாயாய்
அளவோடு இணைந்துப் பின் விலகி
உற்சாகம் கொண்டனர் சிலர்

"அதனுள் வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி முற்றாக
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்...