Showing posts with label சிறுவர்களுக்கென. Show all posts
Showing posts with label சிறுவர்களுக்கென. Show all posts

Wednesday, June 21, 2017

சின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலங்  கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்டக்  கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவால்  ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டித்  திமிராய் நிற்கும்
மலையே ஆயினும்
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Wednesday, June 1, 2016

மெய்நலம் போற்றிக் காத்து...

உலகிது விழிக்கும் முன்னே-நித்தம்
விழித்து எழுந்துப்  பாரு
உலகிது வியக்கும் வண்ணம்-உந்தன்
உயர்வது இருக்கும் பாரு

உடலினை வருத்தி நாளும்- உடற்
பயிற்சியைச் செய்துப்  பாரு
உடலது பணியாள் போல-உனக்கு
உதவிடும் முயன்றுப்  பாரு

உணவது வயிற்றில் பாதி-நல்ல
நீரும் காற்றும் மீதி
தினமிதை மறவா திருந்தால்-உன்னிடம்
நோய்நொடிக் கில்லை ஜோலி

ஓய்வதும் வேலை போல-தினமும்
அவசியம் என்றே அறிவாய்
ஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்
உண்மையை என்றும் மறவாய்

சுவரினை வைத்தே என்றும்-நல்ல
சித்திரம் வரையக் கூடும்
பழமொழி மேன்மை அறிந்தால்-எளிதாய்
பலநிலைக்  கடக்கக் கூடும்

தும்பதை விட்டு வாலைப்-பிடித்து
தோற்கிற அவலம் வேண்டாம்
மெய்நலம்  போற்றிக் காத்து-  எதிலும்
நிலையென நிற்போம்  வாராய்