Showing posts with label பயணங்களும் அனுபவங்களும்-. Show all posts
Showing posts with label பயணங்களும் அனுபவங்களும்-. Show all posts

Friday, May 19, 2017

நண்பர்களும் பகைவர்களும்

முள்ளும் மலருமே
ரோஜாவை
அடையாளம் காட்டிப் போகின்றன
செடிக்கு
அழகு சேர்த்துப் போகின்றன

நண்பர்களும்
 பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்

நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல

இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?

நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்

நாளடைவில்நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்

நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்

பின்  ஒரு நாள் உ யிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்

நண்பர்கள் என
அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்

பகைவரென
அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்

நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்

இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல

இன்றைய நிலையில்...

அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை

Monday, May 15, 2017

சராசரி படைப்பாளியாய் இருப்பது....

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும் தொண்டனுக்கும்
இடைப்பட்ட அல்லக்கைகள் போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
கீறிவிட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கல்  இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கும்
வெகுஜனம் தரும் மரியாதைக்குப்
பங்கமும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணி ஓரத்துப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டத்திற்கு அழைத்து
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை

மௌனங் காத்தலே
அறியாமைக்கு உற்றத் திரையென
ஒதுங்கியே  நட்புகொள்ளும் வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளைத் தேடி  ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

Tuesday, May 2, 2017

பயணச் சாலையும் பயணச் சூழலும் ஒன்றுதான் ஆயினும்...

பயணச் சாலையும்
பயணச் சூழலும்
ஒன்றுதான் ஆயினும்...

தனிமையும்
இருளும்
முன்னம் கேட்டுப்பதிந்த
பேய்க்கதைகளும்
மனமெங்கும்
அச்ச உணர்வைக் கூட்டிப் போக

கரவொலி எழுப்பியபடியும்
விதம் விதமாய்
சப்த மெழுப்பியபடியும்
விரைந்து நடக்கிறான் ஒருவன்

பயணப்பாதை
நீண்டு கொண்டே போகிறது
அச்சமூட்டியபடி...

தனிமையும்
இருளும்
முன்னர் கிடைக்காத
சந்தர்ப்பமாய்
மனமெங்கும்
இன்ப உணர்வை கூட்டிப் போக

தாளமிட்டபடியும்
அதற்கேற்ப
பாட்டிசைத்தபடியும்
மெல்லப் பயணிக்கிறான் ஒருவன்

பயணப்பாதை
சுருங்கிக் கொண்டே போகிறது
மகிழ்வூட்டியபடி

ஆம்
பயணச் சாலையும்
பயணச் சூழலும்
ஒன்றுதான் ஆயினும்...

Wednesday, March 22, 2017

அதிகாரமற்ற அதிகாரியின்.....



அதிகாரபலமற்ற அதிகாரியின்
ஆ ணைக்கு அடங்காது
நமட்டுச் சிரிப்புச் சிரிக்கும்
கடை நிலை ஊழியனாய்..

வெப்பமற்ற சூரியனின்            
வெளிச்சத்திற்கு அடங்காது
பளீரெனச் சிரிக்கிறது
வெண்பனி எங்கும்...

                                                   நிலைமை இப்படியே
                                                  நிச்சயம் தொடராது
                                                 என்னும் நம்பிக்கையுடன்
                                                 மெல்ல நகர்கிறான் கதிரவன்

"அப்போது பார்க்கலாம்"
என அசட்டுத் துணிச்சலுடன்
பரவிச் சிரிக்குது
வெண்பனி எங்கும்.    

                                             ஒருவகையில்
                                             மக்களின் ஆதரவற்று
                                             பதவியில் தொடரும்
                                             அமைச்சர்கள் போலவும்

ஆடும்வரை ஆடட்டும்
தேர்தல்வரட்டும்
 பார்க்கலாம்  என நினைக்கும்
தமிழக மக்கள் போலவும்



Friday, March 17, 2017

அறியாமையில் விளைந்த குழப்பம்

சென்ற முறை அமெரிக்கப்பயணத்தின் போது
சென்னையில் கொஞ்சம் வேலை இருந்ததால்
சென்னை வரை காரிலேயே வந்துப் பின்
விமானம்பிடித்தோம்

இந்த முறை சென்னையில் வேலையில்லாததாலும்
கூடுதலாக ஆறு மணி நேரக் கார் பயணம் கூடுத்ல்
அலுப்பைச் சேர்க்கும் என்பதாலும் மதுரையிலிருந்தே
விமானம் மூலம் கிளம்பிவிடுவது என முடிவெடுத்து
டிக்கெட்டும் எடுத்து விட்டோம்

கிளம்புகிற தினத்திற்கு முதல் நாள் காலை திடுமென
உடனெடுத்துச் செல்லும் பெட்டி எண்ணிக்கை குறித்தும்எடை குறித்தும் ஒரு சிறு குழப்பம்

குழப்பதிற்குக் காரணமுமிருந்தது

சென்ற முறை அமெரிக்காவிலிருந்து திரும்பியதும்
விமானத்திலேயே மதுரை திரும்பிவிடலாம் என
டிக்கெட் புக் செய்ய முயல அவர்கள் உள்ளூர்
விமானத்தில் ஒருவருக்கு ஒரு பெட்டிதான் எனவும்
அதுவும் பதினைந்து கிலோவுக்கு மேல்
இருத்தல் கூடாது என்றும் அப்படி இருப்பின்
கூடுதல் எடைக்கு கிலோவுக்கு ஐநூறு ரூபாய்
கூடுதல் கட்டணம்செலுத்த வேண்டும் எனவும்
திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்

எங்களிடம்   வெளி நாட்டுப்பயணத்திற்கு
அனுமதிக்கிறபடி22 கிலோஎடையில்
இரண்டு பெட்டிகள்இருந்ததால் கார் பயணமாகவே
மதுரை வந்து சேர்ந்தோம்

இந்தமுறையும் அப்படி ஏதும் இருக்குமா என்கிற
குழப்பம் வர , முதல் நாளே அந்த
விமான அலுவலக்த்தில்பணிபுரிகிறவரிடம்
கேட்க முயல அவரைத் தொடர்பு
கொள்ள இயலவில்லை

நானும் அப்படி ஏதும் இருந்தால் தொடர்ந்து
பயணிக்கிற பெண்ணும் மாப்பிள்ளையும் ஞாபகப்
படுத்தி இருப்பார்களே என அலட்சியமாக
இருந்து விட்டேன்

மறு நாள் காலையில் எத்ற்கும் அந்த விமான
அலுவலக்த்தில்பணி புரிகிறவரிடம்
கேட்டு வைக்கலாமே என கேட்டு வைக்க
அவர் திட்டவட்டமாக" ஒருவருக்கு ஒரு பெட்டிதான்
அதுவும் பதினைந்து கிலோதான் கூடுதல்
எடைக்கு கிலோவுக்கு ஐ நூறு கட்டவேண்டி இருக்கும்
அந்த வகையில் உங்களிடம் இருக்கும் எடைக்கு
கூடுதலாக இருபத்தைந்தாயிரத்துக்குக் குறையாமல்
கட்டவேண்டி இருக்கும் " என ஒரு பெரிய
அணுகுண்டாகத் தூக்கிப் போட்டுவிட்டார்

நான் ஒருகணம் ஆடிப் போனேன்

(தொடரும் )

Tuesday, April 14, 2015

மீண்டும் யாதோ


சின்னஞ் சிறுவயதிலிருந்தே எனக்கு விரும்பியோ 
அல்லது வாழ்ந்த சூழல் காரணமாகவோ 
பொதுப் பணியில்ஈடுபடுவது என்பது 
தவிர்க்க முடியாததாகிவிட்டது

காலப் போக்கில் நானும் அதை விரும்பிச் 
செய்யத் துவங்கியதால் அனைவரை விடவும் 
மிக நேர்த்தியாகவும்எளிமையாகவும் வித்தியாசமாகவும் 
செய்யவேண்டும்என்கிற எண்ணம் என்னுள் 
உறுதியாய் வேறூன்றிவிட்டது

அப்போதெல்லாம் எங்கள் கிராமப் பகுதியில் 
திருமணமண்டபம் என்பது கிடையாது.
தர்ம சிந்தனையுடன் கூடியபெரிய வீடுடைய உறவினர்கள் 
மூன்று நாட்களுக்குதங்களை ஒரு அறைக்குள் 
சுருக்கிக் கொண்டுமொத்த வீட்டையும்
 திருமண வீட்டார்கள் உபயோகித்துக்
கொள்ள விட்டு விடுவார்கள்

அதைப் போல இப்போது போல ஏ முதல் இஜட் வரை
என்கிற காண்டிராக்டர்கள் கிடையாது.ஒரு மெயின்
சமையல் காரரும் இரண்டு மூன்று கைப்பானங்களும்
தவிர மற்ற வேலைகளையெல்லாம் உறவினர்கள்தான்
பகிர்ந்து கொள்வார்கள்.

அந்த வகையில் நான் சிறுவனாக இருக்கையில்
 எனக்குமுதலில் அனைத்து எடுபிடி வேலைகளும்
 பின் கொஞ்சம்கொஞ்சமாக முதலில் இலைபோடுதல்
 தண்ணீர் பரிமாறுகிறவேலையும்பின் அப்பளம் 
வடை நெய் எனத் தொடங்கி பின் காய்கறி 
சாதம் பறிமாறுதல்
  அதுதான் கொஞ்சம் கடினம் )
எனப் படிப்படியாய் முன்னேறி ஒன்பதாவது பத்தாவது
படிக்கையில் ஒட்டு மொத்த பந்தி வேலையையே
பார்த்துக் கொள்கிற அளவு தேர்ச்சிப் பெற்றுவிட்டேன்

அது போன்ற சமயங்களில் எல்லாம் தொடந்து
சாப்பாடு வாடையில் இருப்பதாலோ என்னவோ
சாப்பிடப் பிடிக்காது. ஆனாலும் சாப்பிடாது தொடர்ந்து
வேலை செய்யவும் முடியாது

அந்த நேரத்தில்தான் மெயின் சமையல்கார்கள்
சாப்பிடுகிற முறையை அறிந்து கொண்டேன்

அவர்கள் தொடர்ந்து அனைத்து பதார்த்தங்களையும்
ருசிபார்க்கவேண்டியிருப்பதாலும் தொடர்ந்து 
அடுப்படியிலேயே இருப்பதாலும் சாப்பிடும் ஆர்வம்
இல்லையென்றாலும் கூட தெம்புக்குச் 
சாப்பிடுகிறவகையில் ஒரு சட்டியில் 
கொஞ்சமாக சாதத்தைப் போட்டுக் கொண்டு 
அதனுடன் அனைத்து காய்கறிகளையும் 
உடன் சாம்பார் ரசம் மற்றும் நெய்யையும் ஊற்றி
கெட்டியாகப் பிசைந்து மூன்று நான்கு கவளம்
மட்டும் சாப்பிடுவார்கள்.அதைக்  
கலவை சாதம் என்பார்கள்

அது அத்தனை ருசியாகவும் இருக்கும் .
சத்தாகவும் இருக்கும்தொடர்ந்து அலுப்பில்லாமல்
 வேலை செய்யவும் உதவும்

நான் வெகு நாட்களுக்கு பாதி பந்தி 
வேலை முடிந்ததும்கொஞ்சம் சோர்வு ஏற்படுகையில் 
மெயின் சமையல்காரரைஅணுகி இரண்டு கவளம் 
கலவை சாதம் போட்டுத் தரும் படியே கேட்டு 
வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன்

அதனால் கால நேர விரயம் மிச்சம் ,ருசிக்கு ருசி
சத்துக்குச் சத்து என அத்தனை அம்சங்களும்
அதில் எளிதாய்க் கிடைத்தது

அது சரி 
அதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் ?


( அடுத்த பதிவில் )

Thursday, November 27, 2014

நதி மூலம் ரிஷி மூலம் ......

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு படைப்பாளியை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )