Sunday, November 30, 2014

அம்மணமான ஊரில் ஆடை எதுக்கு ?

நல்லதை நீ
நல்லவிதமாகச் சொல்கிறாயா ?

நீ நிச்சயம் பத்தாம்பசலி

தீயதை நீ
எரிச்சலூட்டும்படியே சொல்கிறாயா

நீ நிச்சயம் அடிமுட்டாள்

பயனுள்ளதை நீ
சுவாரஸ்யமின்றிச் சொல்கிறாயா

நீ அரை வேக்காடு

பயனற்றதை நீ
ரசிக்கும்படிச் சொல்கிறாயா

நீயே இந்தயுகத்தில்
தலைசிறந்தப் படைப்பாளி

பொழுது போக்குதலே கடமையாகிப் போன
போதை ஒன்றே கொண்டாட்டம் என ஆகிப் போன
சேர்ந்து குடிப்பவனே நண்பன் என ஆகிப் போன
பிரபலமாவதே வெற்றியென ஆகிப் போன

இந்தச் சமூகச் சூழலில்

சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்

நூலைப் போலச் சேலை இருக்கத்தானே
நூற்றுக்கு நூறு  நிச்சயம் சாத்தியம்

Saturday, November 29, 2014

சீமைக் கருவேல மரங்களின் தீமைகள்

சகோதர சகோதரிகளே !

சீமையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல
பண்பாட்டு மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளை விட
அதிகமான சீரழிவுகளைத் தருவது
வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
இந்த விஷச் சீமைக்கருவேல மரங்களே

இந்தச் சீமைக் கருவேலமரங்கள் சுற்றுப் புறச்
சூழலுக்கு ஏற்படுத்தி வரும் அதிகமான
பாதிப்பைக் கொண்டேஅமெரிக்க தாவரவியல் பூங்கா
"வளர விடக் கூடாத நச்சு மரப் பட்டியலில் "
இந்த கருவேல மரத்தைப் பட்டியலிட்டதோடு
அதை ஒழிப்பதற்கான தீவிர பிரச்சாரத்தையும்
செய்து வருகிறது

அதன்படி

1 )இது எந்த வித வறட்சியான சூழலிலும்
  வளரவும் விரைந்து பரவவும் கூடிய விஷச் செடி

2 )பூமியின் அடி ஆழம் சென்று நிலத்தடி நீரை
  உறுஞ்சுவதோடு மட்டுமல்லாது,காற்றிலுள்ள
  ஈரப்பசையையும் உறிஞ்சி, தான் வளகிற
  பகுதியையே வறட்சிப் பகுதியாக
  மாற்றிவிடும் கொடூரத்தனமை கொண்டது

3 )இந்த மரத்தின் இலை காய் விதை எதுவும்
    எதற்கும் பயன்படாதவை மட்டுமல்ல
    பயன்படித்தினால் தீங்கு
    விளைவிக்கும் தன்மையும் கொண்டவை

4 )இதனை விறக்குக்காக எரிக்கையில் ஏற்படும் புகை
   ஆஸ்துமா மூச்சுத் திணறல் முதலான நோய்களை
   ஏற்படுத்தக் கூடியது

5 )இது மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜனை
    உற்பத்தி செய்தாலும் அதிக அளவு கரிமில வாயுவை
    (கர்பன் டை ஆக்ஸைடை) வெளியேற்றுவதால்
    சுற்றுப் புறச் சூழல் அதிக விஷத்தன்மை
    உடையதாக மாறிப் போகிறது

6 )அதன் காரணமாக இதன் நிழலில் கட்டி வைக்கப் படும்
   கால் நடைகள் மலட்டுத் தனமை அடைவதோடு
   கரு அடைத்திருக்கும் பட்சத்தில் ஊனமான
   கன்றுகளை ஈனவும் செய்கின்றன்

இந்தத் தீமைகள் குறித்து மிகத் தெளிவா கப்
புரிந்துகொண்ட அதிக படிப்பறிவு விகிதத்தில் இருக்கிற
கேரள மாநில மக்கள்அரசின் ஒத்துழைப்போடு
அவர்கள் மா நிலத்தில்கருவேல மரங்களை
முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்
அதனாலயே அந்த மா நிலம் பசுமையான
இயற்கைச் சுழலை தொடர்ந்து பராமரிக்கமுடிகிறது

இந்தத் தீய விஷச் செடியின் தீமைகளை
முற்றிலும் அறிந்துஉச்ச நீதி மன்றமும் உடன் இந்த
கருவேல மரங்களைமுற்றிலும் அழிக்கும் படியான
அறிவுரையையும்உத்திரவையும் மா நில அரசுக்கும்
 உள்ளாட்சி அமைப்புகளுக்கும்வழங்கியுள்ளது

அதன் அடிப்படையில் நமது மாவட்ட ஆட்சித்தலைவர்
மதிப்பிற்குரிய  சுப்ரமணியம் அவர்கள் உலகின் சிறந்த
சேவை அமைப்பான அரிமா சங்கத்தின்
324 பி3 மாவட்டத்தின் ஆளுநர் லயன்.பி.ரகுவரன்
அவர்கள்ஏற்பாடு செய்திருந்த
மதுரை தல்லாகுளம் மாநகராட்சி நீச்சல் குளம் முதல்
 மா நகராட்சி வரை இருந்த கருவேலம்
புதர்களை முற்றிலுமாக வேரோடு அழிக்கும்
திட்டத்தைத் துவக்கிவைத்ததோடு மாவட்டத்தில்
இந்த விஷச் செடியை வேரோடு அழிப்பதற்கான
அனைத்து முயற்சிகளையும்
செய்து வருகிறார்

அதன் தொடர்சியாக மாவட்ட அரிமா சங்கமும்
தன் கிளை அமைப்புகள் மூலம் மதுரை திண்டுக்கல்
தேனி மற்றும் சிவகங்கை ரெவென்யூ மாவட்டங்களில்
பொது மக்களின் பூரண ஒத்துழைப்போடு
இதுவரை 10000 ஏக்கருக்கும் மேலாக இந்த கருவேலம்
மரத்தை வேரோடு அழித்ததோடு மட்டுமல்லாது
தொடர்ந்து அகற்றியும் வருகிறது

நமது வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர் சங்கமும்
தனது ஐந்து அம்சத் திட்டத்தில் முதல் திட்டமான
வாழ்விடங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் என்கிற
அடிப்படையில் பகுதி முழுவதும்
கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்தி அதனை
காவல் துறையிடம் ஒப்படைக்க எடுத்துவரும்
நடவடிக்கையின் தொடர்சியாக..

தற்சமயம் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும்
திட்டத்தின் அடிப்படையில் கருவேல மரங்களை
அடியோடு அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது

அதன் முதல் கட்டமாக சமூக விரோதிகளின்
கூடாரமாக இருந்த சமுதாயக் கூடம் மற்றும்
கட்டுமானக் கழக வெற்றிடங்களில் மண்டிக் கிடந்த
கருவேலம் புதர்களை பொது மக்களின் பங்களிப்போடும்
காவல்துறையின் முழுமையான ஒத்துழைப்போடும்
மிகக் குறிப்பாக ஆய்வாளர் திரு. சேதுமணிமாதவன்
அவர்களின் நல்வழிகாட்டுதலின் படியும்
முழுமையாக அகற்றி அவ்விடங்களை சீர்செய்துள்ளோம்




 


தாங்களும் இந்தச் சமுதாயப் பணியில் ஆத்மார்த்தமாக
முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதோடு
தங்களால் முடிந்த பங்க்களிப்பையும் கொடுத்து
நம் பகுதியே மதுரை மாவட்டத்திலும்
அனைத்து நிலைகளிலும் நிம்மதியாக
வாழ்வதற்குகந்த பகுதி என்கிற தகுதியை அடைய
ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்

வாழ்த்துக்களுடன்

நிர்வாகிகள்
மதுரை வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர் நலச் சங்கம்

( இந்தக்  தீமையை அவரவர் பகுதிகளில் மக்களின்
ஒத்துழைப்போடு ஒழித்து தமிழகத்தையும்
ஒரு செழிப்பான பூமியாக மாற்ற
ஆவன செய்யவேண்டும் என்கிற அன்பான
கோரிக்கையோடு அதிகப் பட்சமாக
இந்தத் தகவலை அனைவரிடமும் கொண்டு செல்ல
எங்கள்  விழிப்புணர்வுப்   பேரணிக்கான நகலையே
தகவலுக்காக  பதிவு செய்திருக்கிறோம்

இதனை தங்கள் தளங்களில் பகிர்வு செய்ய வேணுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் )

Friday, November 28, 2014

இதுவும் அதுவும் ஒன்னு தானே

ரோடெல்லாம்
துறுப்பிடித்த ஆனிகளைப்
பரப்புவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு

"ஜாக்கிரதையாக வண்டியோட்டுங்கள்
பாதையெல்லாம் துறுப்பிடித்த ஆனி "என
எச்சரிக்கைப் பலகை வைக்கும்
காவலர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?

ஊரெல்லாம்
மதுபானக் கடைகளைத் திறந்து
வைத்துவிட்டு

"குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என
எச்சரிக்கைப் பலகை வைத்து
பம்மாத்துக் காட்டும் அரசுக்கும்
இதற்கும் என்ன வேறுபாடாம் ?

குழந்தை தவழுமிடமெல்லாம்
விஷப்பாட்டில்களை திறந்து வைத்துவிட்டு
பாலையும் பிஸ்கெட்டையும்
எட்டத்தில் வைக்கிற தாயை
நீங்கள் பார்த்ததுண்டா ?

சந்து பொந்தெல்லாம்
சிகரெட்டும் குட்காவும்
கிடைக்கும்படியாக இருக்கவிட்டு

கல்வியையும் நீரையும்
விற்பனைக்கு என ஆக்கிவிட்டு
விட்டெத்தியாகத் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன மாறுபாடாம் ?

கரும் பலகையெல்லாம்
ஆபாசப் படங்களை
வரைந்து வைத்துவிட்டு

அதனைப் பார்த்துக்
கெட்டுப் போகாதே என எச்சரிக்கிற ஆசிரியரை
நீங்கள் சந்தித்ததுண்டா ?

ஊடகங்களிலெல்லாம்
ஆபாசங்கள் தலைவிரித்தாடுதலை
அனுமதித்து விட்டு

மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி
அறிவுறுத்தித் திரியும்
அரசுக்கும் இதற்கும் என்ன வித்தியாசமாம் ?

எது என்ன நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும் என
போதையில் வீதியில் கிடக்கும்
மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா ?

நாட்டில் எது நடந்தாலும்
நடந்துவிட்டுப் போகட்டும்
நாம் நம்மைக் காத்துக் கொள்வோம் என
சுயநலப் போதையில் திரியும்
பலருக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடாம் ?

Thursday, November 27, 2014

நதி மூலம் ரிஷி மூலம் ......

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு படைப்பாளியை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

Wednesday, November 26, 2014

வரம்வேண்டா தவமாக

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய் நினைப்பதில்லை 

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Tuesday, November 25, 2014

விளக்கம் கோரி ஒரு கேள்விக் கவிதை

நதியினுக்கு கரையிரண்டு உறவா பகையா ?
நாவினுக்கு பல்வரிசை உறவா பகையா ?
விழியினுக்கு இமையிரண்டு உறவா பகையா
விதியதற்கு மதியதுவே உறவா பகையா ?
மொழியினுக்கு சைகையது உறவா பகையா ?
கவியதற்கு இலக்கணமே உறவா பகையா ?
புரியாது புலம்புகிறேன் சொல்வாய் நண்பா

மனதிற்கு மறதியது அழகா குறையா ?
மங்கையர்க்கு இரக்ககுணம் அழகா குறையா ?
இனமதற்கு  தனித்தகுணம் அழகா குறையா ?
இயற்கைக்கு ஈகைக்குணம் அழகா குறையா ?
இளமைக்கு வேகமது அழகா குறையா ?
முதுமைக்கு நிதானமது அழகா குறையா ?
புலமைக்கு மிகைப்படுத்தல் அழகா குறையா ?
புரியாது தவிக்கின்றேன் புகல்வாய் நண்பா

அன்புக்கு அடிபணிதல் சரியா தவறா ?
அதிகாரம் தனைமறுத்தல் சரியா தவறா ?
பண்புக்கு துணைபோதல் சரியா தவறா ?
பகட்டுக்கு பகையாதல் சரியா தவறா ?
இன்பத்தில் மயங்காமை சரியா தவறா ?
துன்பத்தில் கலங்காமை சரியா தவறா ?
சந்தமதே இன்கவிதை சரியா தவறா ?
நல்லதொரு விளக்கமதை நவில்வாய் நண்பா?

Monday, November 24, 2014

ஆச்சாரியாரின் விபீஷண வேலையும் கலைஞரின் திருதராஷ்டிர அவஸ்தையும்

கலைஞர் அவர்களின்  இளமைக் காலம்

சமூகத்தில் புரையோடிக் கிடந்த
மூடத்தனங்களையும்முட்டாள்தனங்களையும்
தன் கூர்மிகு சொல்லாயுதங்களால்
வெட்டி வேரறுத்துக் கொண்டிருந்த காலம்

ஒரு சராசரி மனி தனைப்போல் குடும்பத்தின்
மீது மட்டும்அக்கறைகொள்ளாது சமூகத்தின் பால்
கூடுதல் அக்கறை கொண்டிருந்த
மிகச் சரியாகச் சொன்னால்
சமூகத்தின் மீதே அதிகஅக்கறை கொண்டிருந்த காலம்

அப்போது அவரின் மேடைப் பேச்சும் எழுத்தும்
மிகச் சரியாய்க்  குறிபார்த்து எய்யப்பட்ட ஈட்டியாய்
இலக்கைத் தாக்கி சின்னாபின்னப் படுத்திப் போன காலம்

அப்போது ஒரு திரைப்படத்தில் நயவஞ்சகம் குறித்துச்
சொல்லவேண்டிய இடத்தில்

 " அங்கேதான் மன்னா இருக்கிறது
ஆச்சாரியாரின் விபீஷண வேலை "

 என்கிற ஒருஅற்புதமான சொற்றொடரைப் பயன்படுத்துவார்

"கோயில்கள் கொடியோரின் கூடாரமாக
மாறிவிடக் கூடாதுஎன்பதற்காகத்தான்...

என்கிற அற்புதமான வாசகமும்

"எப்படி நோயுள்ளப் பெண்களைத் தொடுவதற்கு
டாக்டருக்கு உரிமை உண்டோ அதைப் போல
பக்தியுள்ளப் பெண்களைத் தொடுவதற்கு
பூசாரிக்கும் உண்டு"

என்கிற குயுக்தியான வாதமும் காலம்கடந்து என்றும்
பேசப்படக் கூடியது

என்ன செய்வது மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விஞ்ஞானப் பூர்வமான விதி அவரையும்
தலைகீழாக மாற்றிசமூகத்தின் பால்
கொண்டிருக்கவேண்டிய அக்கறையை
கூடுதலாக குடும்ப வாரிசுகளிடமும் மேலும்

தன் இனம் அழிந்தாலும் பதவியை கெட்டியாகப்
பிடித்துக் கொள்ளவேண்டி நடத்திய
உண்ணாவிரத நாடகமும்

எப்படியும் முதல் மற்றும் மூன்றாவது துணைவியாரின்
வாரீசுகள் மாட்டிக் கொண்டிருக்கிற
இடியாப்பச் சிக்கலில் இருந்துஅவர்களைக் காக்கவும்,
தனது இரண்டாவது மனைவியின்
வாரீசுகளின் பதவிப் போரை நிறுத்தி அவர்களை
எப்படியும்பதவிக் கட்டிலில் அமர்ந்திட வைத்திட
இந்தத் தள்ளாத வயதிலும்
ஓய்வெடுக்காது அவர் படுகிற பாடு நினைக்கையில்...

அவரைப் போலவே

"இந்தத் தள்ளாத வயதிலும் தன் குடும்ப வாரீசுகளை
பதவியில் அமர்த்தவும் தன் வாரீசுகளை இடியாப்பச்
சிக்கலில் இருந்து மாற்றவும் கலைஞர் படுகிற 
திருதராஸ்டிர அவஸ்தை.."

என்னும் புதிய சொற்றொடரை பயன்படுத்தலாமோ
எனப் படுகிறது