Saturday, April 30, 2016

எங்கள் "வேண்டுதல் வேண்டாமை "

சோறு வேண்டும் எங்களுக்கு
சொர்க்கம் வேண்டாம் - வீண்
வார்த்தைகளைச் சொல்லியெம்மை
ஏய்க்க வேண்டாம்

ஆடை வேண்டும் எங்களுக்கு
"அணிகள்" வேண்டாம்
மேடையேறி பொய் உதிர்த்து
"நடிக்க" வேண்டாம்

வீடு வேண்டும் எங்களுக்கு
"கோட்டை" வேண்டாம் - எம்மை
மன்னரெனச் சொல்லி நீங்கள்
சுருட்ட வேண்டாம்

வாழ்வு வேண்டும் எங்களுக்கு
"ஆறுதல்" வேண்டாம் - எல்லாம்
ஆண்டவனின் லீலை என்று
"அளக்க" வேண்டாம்

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!!!!!!!!!!

Friday, April 29, 2016

தவறாது மே 16 இல் இந்தத் "தலை "களைத்.....

சமாதான காலங்களில்
சாய்வு நாற்காலிகளில்
சௌகரியமாய் அமர்ந்தபடி

" இந்து " என்றால்
திருடன் என
ஏதோ ஒரு மொழியில் இருப்பதாய்
வியாக்கியானம் செய்து கொண்டு

தேர்தல் காலங்களில்
புரோகிதர் புடைசூழ
பிரசாதம் பெற்றுக் கொண்டபடி

மருமகள்களையும்
மனைவியையும்
கோவில் கோவிலாய்ப்
போகவைத்துக் கொண்டிருப்பவரையும்..

ஊழிக்காலம் போல்
ஊரே மழை வெள்ளத்தால்
சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கையில்

எங்கிருக்கிறார்
என்ன செய்கிறார் என
அறியாதபடி இருந்துவிட்டு

தேர்தல் காலங்களில்
தாய்க்குத்தான் தெரியும்
என்ன செய்வதென்று
ஊர் ஊராய்
பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவரையும்

முக்கியமாய்
முதல்வர் வேட்பாளர்
என்னும் மதிப்புக் கூட அறியாது
மேடைகளில்
போகுமிடங்களில்
காமெடியனாகி
அரசியலை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும்
அந்தச் "சிப்பாயையும் "

முதுகு கை கால்
பகுதிகளை விட
தலையில் குட்டுவதே
ஞாபகத்தில் இருக்கவைக்கும் என்பதால்

தவறாது
மே 16 இல்
இந்தத்  "தலை " களைத்
தோற்கடிப்பதம் மூலம்
 அதிர்ச்சி வைத்தியம்
கொஞ்சம்  கொடுத்து  வைப்போம்

தமிழக அரசியலை
மே 16 இல்
இனி வருங்காலமேனும் சிறக்க
நம்மாலானதை
கொஞ்சம்  செய்து வைப்போம்

அகில இந்தியத் திராவிட மச்சான்ஸ் முன்னேற்றக் கழகம்



இந்தப் படத்தைப் பார்த்ததும்  புரட்சித் தலைவரும்
புரட்சித் தலைவியும்  நின்ற பழைய
புகைப்படம் நினைவுக்கு  வந்தாலோ ..

அகில இந்தியத்  திராவிட  மச்சான்ஸ்
முன்னேற்றக் கழகம்
என்கிற பெயர் நினைவுக்கு வந்தாலோ ...
(.அ இ.தி .ம.மு. க  )

( நிச்சயம் இவருக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து
புரட்சித்ததலைவி அவர்கள் கட்சியின்
கொள்கைப் பரப்புச் செயலாளர்  பதவி
கொடுத்தாலும் கொடுக்கலாம்

அல்லது

கோபத்தில்கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்கலாம்
நீக்கினால் அ .இ.தி.ம.மு.க நிச்சயம்  )

உறவுகளில் அண்ணா, ,தம்பி, உடன்பிறப்பு
அம்மா , அண்ணி , எல்லாம் அரசியலில் வந்தாச்சு

அதைப் போல் ஏன்  மச்சான்ஸ்ஸு ம்
வரக்கூடாது என்கிற எண்ணம்
லேசாக உங்களுக்குள்  எட்டிப்பார்த்தாலோ..

அதற்குக்  கம்பெனி பொறுப்பல்ல...

( எத்தனைப் பதிவுகள்தான் சீரியஸாகவே எழுதுவது
 நண்பர்  அவர்கள் உண்மைகள் பாணியில்தான்
ஒன்று எழுதிப் பார்ப்போமே என   முயன்றது
சரியாய் வந்திருக்கிறதா ? நீங்கதான் சொல்லணும்  )


Thursday, April 28, 2016

தேர்தலில் விஷ ஊற்று

விஷ ஊற்றை அடைக்காது
தூர்வாரி
கிணற்றைச் சுத்தப்படுத்த நினைத்தல்
நிச்சயம் பேதமையே

ஜாதி மத இனப் பிரிவுகளுக்கு
அடிப்படையாய் இருப்பதும்
அவைகளை வளர்த்தெடுப்பதும்
தேர்தல் களமே

தேர்தலில்
விஸ்வரூபம் எடுக்கும் அதை
ஜாடிக்குள் அடைக்காது
பின் போரிட்டு நோதல்
நிச்சயம் அறிவீனமே

தலையோ
நெற்றியோ
கழுத்தோ
உடலில்
மதச் சின்னம் தாங்கி வருபவன்
உள்ளத்திலும் அதைத் தாங்கித்தான் வருவான்

குறைந்தபட்சம்
இவர்களையாவது மாற்ற முயல்வோம்

எண்ணத்தை
இறக்க முடியவில்லையெனில்
மதச் சின்னத்தையாவது
இறக்கி வைக்கப் பணிப்போம்

ஏனெனில் இவர்கள்
தன் மதத்தினரை
மதச் சின்னத்தால்
திருப்திப் படுத்திவிட்டு
மற்ற மதத்தவரை
எளிதாய் ஏமாற்றவே
"மதச் சார்பற்றவற்றவன் " என
வார்த்தை ஜாலம் காட்டுவார்கள்

நீங்கள் மதச் சார்ப்பற்றவர் எனில்
இவர்கள் விஷயத்தில்
எச்சரிக்கையாய் இருங்கள்

அவர் எந்த மதத்தினராயினும் சரி

போலி மதச்சார்பின்மை
மதச் சார்பினை விட
மிக மிக ஆபத்தானது

எண்ணங்களின்
அதீத வெளிப்பாடே  மதச் சின்னங்கள்

மதச் சின்னங்களே
நம் ஒற்றுமையை
சின்னாபின்னப்படுத்தும்
வலிமை  மிக்க முதல் காரணிகள்

இந்தத் தேர்தலிலேனும்
விஷ ஊற்றுக்களை
அடைக்க முயல்வோம்

பின் படிப்படியாய்
சமுதாயக் கிணற்றில்
தூர்வாரத் துணிவோம்

Wednesday, April 27, 2016

நம் சட்ட மன்றத் தேர்தல்...அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்
 மிக மகிழ்வாய் இருந்தோம்

எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது

உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது

அதனால்தான் இரவெல்லாம்
உங்கள் வரவுக்காக   நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவுக்
கணக்கின்றி  நீங்களும் சோராது
எங்களைச் சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

அதனால்
எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் உங்கள்
அழைப்பை எதிர்பார்த்து
அன்புடன் அல்லாது
 அண்டாக்களுடன் காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
வாஞ்சையுடன் அல்லாது
பணத்துடனும்  பொட்டலத்துடனும்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
தேர்தலெனும் பெயரிலே
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

நம் அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...

Tuesday, April 26, 2016

தேர்தல் வாக்குறுதிகள்

ஆட்சியில் இருப்பவர்களோ இதுவரை
இல்லாதவர்களோ மக்கள் எதைச் சொன்னால்
மயங்குவார்கள் எனக் கவனித்து அதை
வாக்குறுதிகளாகச் சொல்லி கவர முயல்வது
அரசியல் கட்சிகளுக்குச் சகஜம்.

ஜெயித்த பின்  மக்கள் அதை
நினைவில் கொள்ளமாட்டார்கள் என்பது
அவர்களுக்கும் தெரியும்.அப்படி ஒருவேளை
ஞாபகம் வைத்துக் கேட்டால்
அதற்குச் சாமர்த்தியமாய் மிகச் சரியான
ஒரு பதிலும் சொல்ல அவர்களுக்குத் தெரியும்

1967 இல் எல்லா பத்திரிக்கையிலும்
குண்டடிபட்டுக் கட்டுப்போட்ட நிலையில்
புரட்சித் தலைவரின் படத்தைப் போட்டு
அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ஒரு ரூபாய்க்கு  மூன்று படி அரிசி தருவோம்
என தி.மு க வாக்குறுதி கொடுத்து விளம்பரம்
கொடுத்திருந்தார்கள்

உண்மையில் அப்போது அரிசிப் பஞ்சம் நிலவிய காலம்

அந்த வாக்குறுதியும், புரட்சித் தலைவரின்
மீதிருந்த அனுதாபமும் தான் அதிக இடங்களில்
அப்போது தி. மு. க வெல்லக் காரணமாக இருந்தது
என்றால் அது மிகையில்லை

ஆனால் வென்று முடித்ததும் அவர்கள்
சொன்ன வாசகம் "அல்வா கொடுப்பது "
என்பதற்கு மிகச் சரியான உதாரணமாக இருந்தது

அந்த  "அல்வா  "வாசகம்.....

ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம்
ஒரு படி நிச்சயம்
ரூபாய்க்கு மூன்று படி அரிசி எண்ணம்
ஒரு படி திண்ணம்

இப்படி வாசகத்தை மாற்றியதோடு அல்லாமல்
தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களில்
போட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றி விட்டதாக பிரச்சாரமும்
செய்து விட்டார்கள். மக்களும் மறந்து விட்டார்கள்

எனவே மயானத் தீர்மானம்,
பிரசவ காலத் தீர்மானம் போல
இந்த தேர்தல் கால வாக்குறுதிகளும்
என்பதில் அரசியல் கட்சிகள் மிகத்
தெளிவாய்தான்  இருக்கின்றன

எனவே நாமும் இதை ஒரு பொருட்டாக
எடுத்துக் கொள்ளாது , மற்ற விஷயங்களில்
கட்சியையும்,வேட்பாளர்களையும்
தேர்வு செய்வதில் மிகக் கவனமாய் இருப்போம்

ஒரு நொடித் தவறில் ஐந்தாண்டு கால
அவஸ்தையைத் தவிர்ப்போம்

Monday, April 25, 2016

தேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்

இன்னும் மிகச் சரியான முடிவுக்கு
வரமுடியாமல் வாக்காளர்கள் எல்லாம்
குழம்பிக் கிடக்கிறார்கள்

பிரச்சாரத்தின் உச்சக் கட்டத்தில்
புதிது புதிதாக   எதையாவதுச் சொல்லி
இன்னும் குழப்புவார்கள்

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்

இந்தத் தேர்தலில் ஒருவேளை
தி.மு.க மெஜாரிட்டிப் பெற்று
ஆட்சி அமைக்குமானால் ஏதாவது
ஒரு காரணம் சொல்லிப் புரட்சித் தலைவி அவர்கள்
சட்டசபை செல்ல மாட்டார்கள்

ஒருவேளை அ.இ அ.தி.மு.க மெஜாரிட்டிப் பெற்று
ஆட்சி அமைக்குமாயின் ஏதாவது
ஒரு காரணம்சொல்லி கலைஞர்
அவர்களும் சட்டசபை செல்லமாட்டார்கள்

இவர்கள் இருவரில் யார் ஜெயித்து
ஆட்சி அமைத்தாலும் கேப்டன்
சட்டசபை செல்ல மாட்டார்

இதில் யாருக்கும் சந்தேகமில்லை

ஆகையால் முடிவு எப்படி இருக்கும்
எனத் தெரியாத பட்சத்திலும்

இவர்கள் மூவரும் ஆட்சிப் பொறுப்பு இல்லையெனில்
சட்டசபை செல்ல மாட்டார்கள் என்பது
சர்வ நிச்சயம்

எனவே  இந்த மூவரும் நம்மை, நம்
வாக்கினை உதாசீனப் படுத்த வாய்ப்புத் தராமல்
நாம் ஆரம்பத்திலேயே அவர்களை
உதாசீனப்படுத்திவிட்டால்
தோல்வியுறச் செய்துவிட்டால்.......

ஒரு கட்சி ஜெயித்துத்  தோற்றத் தலைவர்
மீண்டும் மறுதேர்தலில் நின்று ஜெயித்துவிட்டுப்
போகட்டும்

மற்றபடி தலைவர்கள் அல்லாத
இரண்டு எம்.எல் ஏக்களாவது தங்கள் தொகுதி சார்பாக
சட்டசபையில் இருக்க வாய்ப்புண்டு இல்லையா ?

அல்லது

ஆட்சிக் கட்டிலில் அமரவில்லையாயினும்
சட்டசபை சென்று ஜன நாயகக் கடமை ஆற்றுவேன்
ஓட்டளித்த தொகுதி மக்களை ஏமாளியாக்க மாட்டேன்
என்கிற வாக்குறுதியை இந்தப் பிரச்சாரக்
காலத்திலேயே தர  வேண்டும் என்பதை
கோரிக்கையாக  வைக்கலாமா ?

இதையும் கொஞ்சம் யோசித்து வைப்போமே ?