Saturday, December 31, 2016

இன்றோடு.......

இன்றோடு.......
தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thursday, December 29, 2016

அந்த மகத்தான தலைவிக்கு ......

இன்று எல்லாம்
சுகமாய்முடிந்தது
என மகிழ்வு கொள்ளாதீர்கள்

இன்று நடந்தது
ஒரு அழிவின் துவக்கம்

அணைகிற விளக்கின்
அதீத வெளிச்சம்

முடிகிற மூச்சுக்கு
முன் எழும்
ஒரு நீண்ட பெருமூச்சு

பெற்ற குழந்தையைப்
பலி கொடுத்து
வரம் பெற முயலும்
கொடூரப் பெற்றோராய்.

கண்களை விற்று
ஓவியம் பெறும்
கூறுகெட்ட இரசிகனாய்..

மக்களின் தொண்டனின்  மன நிலைக்கு
முற்றிலும் மாறாய்
நீங்கள் எடுத்த முடிவு...

"தனக்குள் வந்த நோய்
தன்னோடு போகட்டும்
அது கட்சிக்குள் பரவ  வேண்டாம் " என

இறுதி வரை இருந்த
அந்த மகத்தானத்  தலைவிக்கு
நீங்கள் செய்தத்   துரோகம்

துரோகங்கள் வெல்வது
அதிசயமே இல்லை
அதற்குச் சரித்திரச் சான்றுகள்
மிக மிக அதிகம்

ஆயினும்
அது நிலைத்ததில்லை என்பதற்கு
சரித்திரச் சான்றுகள்
இன்னும் மிக அதிகம்

எப்படியோ பதவியைத்
தக்க வைத்துக் கொண்டதாக
நீங்கள் நினைத்திருக்க

எங்களுக்கோ நீங்கள்
அதைப்   பலிபீடத்தில்
வைத்துவிட்டதாகவே தெரிகிறது

பார்ப்போம்....

Tuesday, December 27, 2016

பேய் அரசு செய்தால்தான்....

பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னச் சாத்தியமா ?

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

அதனால்தான்

முறையான  வாரிசைப்
பின் தள்ளி
உலகே வேடிக்கைப் பார்க்க
பெண் சடங்குகள் செய்ததும்

துரோகம் செய்தவர்கள் எல்லாம்
பிரேதம் சுற்றி நிற்க
இரத்த உறவுகள்
நெருங்கமுடியாது தவித்ததும்

ஊழல் பெருச்சாளியே
ஊழலுக்கான கண்காணிப்பு
ஆணையராய் இருக்கவும்

புறக்கடை வழி
அரியாசனம் ஏறுதல் கூட
சாத்தியம்  ஆவதும்

எரிக்கும் சூரியனை
கூடைக்குள் அடைக்கும்
கண்கட்டு வித்தையாய்

பெரும் மரணத்தின்
காரணத்தைக் கூட
மிக எளிதாய் மறைக்கவும்

..............................
.......................................

இப்படி இதுவரை
தமிழகம் கண்டிராத
எத்தனையோ அசிங்கங்கள்
மிக இயல்பாய் அரங்கேறவும்

ஊமை ஜனங்களாய்
சோற்றுப் பிண்டங்களாய்
குருட்டுப் பார்வையாளர்களாய்
தமிழகமே திகழவும்

இதற்கு மேல்
என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது... ?

ஆம்
பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னும் என்பதில்லை

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

Monday, December 26, 2016

அப்பல்லோ மர்மங்கள்

சட்டென அப்பல்லோ மருத்துவனை குறித்த
மர்மங்களை எழுதுவதை விட முதலில்
ஒரு சிறு விளக்கம் சொல்லி அதை எழுதுவது
அதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்

நான் சிறு வயதில் நில உடமைச் சமூதாயத்தின்
முழுமையான எச்சமாய் இருந்த ஒரு கிராமத்தில்
வளர்ந்தவன்

ஜாதிவாரியாகத் தெருக்கள்,ஜாதி வாரியாகக்
கோவில்கள், சுடுகாடுகள்,திருவிழாக்கள்,
இனம் சார்ந்து மரியாதை,இவையெல்லாம்
நூற்றுக்கு நூறு மிகச் சரியாகக் கடைப்பிடித்து
வந்த ஊர் அது

அதன் காரணமாகவே மத நமபிக்கைகள்
மட்டுமல்ல, மதச் சடங்குகள் மட்டுமல்ல
மூட நம்பிக்கைகளும் அதிகம் விரவிக் கிடந்த
கிராமம் அது

ஊரின் நான்கு எல்லைகளிலும் தெய்வங்கள்
இருந்து  காப்பது மட்டுமல்ல, பேய்களும்
இருந்து பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு
வித்தியாசமான ஊர் அது

எப்போதும் ஊரில் ஏதேனும் ஒரு தெருவில்
பேயோட்டும் உடுக்கைச் சப்தமும்
அது தொடர்பான கதைகளும் காற்றில்
கலந்து சிறுவர்களாய் இருந்த எங்களை
மட்டுமல்ல, பெண்களையும் ஒரு பய உணர்வுடன்
உலவும்படியே வைத்திருக்கும்

இந்தச் சூழலில் மாதம் ஒருமுறை வரும்
நடு இரவில் வரும் குடுகுடுப்பைக்காரர்களே இந்தப்
பதிவின் கதாநாயகர்கள்

ஏறக்குறைய பூம்பூம் மாட்டுக்காரன் சாயலில்
உடை அமைப்பு முதலானவைகள் இருந்தாலும்
அவன் மீசை, உருட்டும் விழி,நெற்றி குங்குமப்பட்டை
உடுக்கைச் சப்தம், இவைகளின் மொத்த உருவமாய்
இருக்கும் அவர்களை பட்டப் பகலில் பார்த்தால்
கூட பயந்து நடுங்கும்படியாக இருப்பார்கள்

காரணம் அவர்களது நடு இரவு மர்மங்கள்

அவர்கள் நட்ட நடுநிசில்தான் வருவார்கள்
நேராக சுடுகாட்டில் இருந்துதான் வருவார்கள்
அவர்கள் வருகையில் நேர் எதிராக வரக்கூடாது
அப்படி வந்தவர்கள் இரத்தம் கக்கிச்
செத்திருப்பதற்கான ஆதாரப்பூர்வமான நெடுங்கதைகளை
எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு
பயத்திலுறைந்து கிடக்கும் எப்போதும்
எங்கள் ஊர் ...

மாதம் ஒருமுறை அல்லது  இரண்டு மாதத்திற்கு
ஒருமுறை நட்ட நடு நிசியில் அவர்கள் உடுக்கைச்
சப்தமெழுப்பியபடி வரும் இரவினை
இப்போது நினைத்தாலும் என்போன்றோருக்கு
ஒருபய உணர்வு நெஞ்சில் மிக லேசாய் படரும்

இந்தச் சூழலில்
நான் சிறுவனாய் இருக்கையில், கனத்த இருளும்,
குளிரும், நிசப்தமும் விரவிக் கிடந்த ஒரு நாளில்

வீதியே அதிரும்படி உடுக்கைச் சப்தம் எழுப்பியபடி
 "நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது "
என ஒரு பொது வாக்கியத்தை சொல்லி
குடுகுடுப்பைக்காரன் வந்த ஒரு நள்ளிரவில்...

படுக்கையில் இருந்த எனது தாயார், மெல்ல
எழுந்து , விளக்கு ஏதும் போடாது ,அந்தப்
பெரிய வாசல் நிலைக்கதவை சப்தமெழுப்பாதபடி
மிக  லேசாய்த் திறந்து வாசலைப் பார்க்காதபடி
,மிகச் சரியாய் கவனிக்கும்படியாய்
காதின் அடிப்பகுதியை மட்டும் நிமிர்த்தியபடி
மிக லேசாய் உடல் நடுங்கியபடி  இருந்தச்
சூழலில்,

நான் இரு கண்களையும் இறுக்க மூடியபடி
அம்மாவின் இருகால்களையும் இறுக்க
அணைத்தபடி,மொத்த உடலும் நடுங்கும்படி
இருக்க

குடுக்குடுப்பைக்காரனின் அந்த குடுகுடுப்பை
ஒலியும்,அதைத் தொடர்ந்த அவனின் கணீரென்ற
குரலும் வீதியே அதிரும்படி எங்கள்
வீட்டுக்கு மிக அருகில் ஒலிக்கிறது

இதற்கு முன்பு வரை " நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது" எனச்
சொல்லிக் கொண்டு வந்த குடுகுடுப்பைக்காரன்
திடுதெப்பென்று "ஐய்யோன்னு போகுதே
ஐயோன்னு போகுதே..ஒரு பச்சைப்பாலகன் உசுரு
ஐயோன்னு போகுதேன்னு "வீதி அதிரக்
கத்துகிறான்

என் உடன் அந்தக் குரல் கேட்டு இன்னும்
நெருக்கமாய் அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன்
அம்மா இன்னும் இறுக்கமாய் என்னை
அணைத்துக் கொள்கிறாள்

என் உடல் நடுக்கத்தோடு அவள் உடலும்
சேர்ந்து நடுங்குகிறது

எத்தனை நேரம் அப்படி இருந்தோம் என்கிற
நினைவு இல்லை

குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பை ஒலியும்
குரலும் மெல்ல மெல்ல தூரம் சென்றுக்கரைய
பின் மெல்லக் கதவை மூடிவிட்டு
படுக்கையில் சாய்கிறோம்

பயத்தில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை
அம்மாவை இறுக அணைத்தபடி நான்
பயத்தை மறக்க முயற்சிக்கிறேன்

அம்மாவும் பேசவில்லை. ஆனால் அந்தப்
பாலகன் நானாக இருந்துவிடக் கூடாது
என்ற எண்ணமோ என்னவோ அம்மாவும்
என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்

எப்போது விடிந்தது எனத் தெரியவில்லை

நான் விழித்து எழுந்து அம்மாவைத் தேடுகையில்
அம்மா வீட்டு வாசலில் யாருடனோ
பேசிக் கொண்டிருப்பது தெரிய, வேகமாக
வாசலுக்கு ஓடுகிறேன்

தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்
நின்றபடி, நேற்றைய குடுகுடுப்பைக்காரன்
விஷயத்தை பயந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என் வீட்டிற்கு எதிர் வீட்டிலும் என் வயதொத்தவன்
இருந்த காரணத்தால் அந்த மாமியும்
என அம்மாவும் மிகச் சரியாக யார் வீட்டு
வாசலில் இருந்து அந்த "ஐயோன்னு போறானே"
என்பதைச் சொல்லி இருப்பான் என்கிற
ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்

இருவருக்கும் நம் வீடாக இருக்கக் கூடாது
என்கிற என்கிற எண்ணம் இருப்பது அவர்கள்
பேச்சில் தெரிகிறது

அம்மா என்னை அணைத்தபடி என் தலையை
கோதியபடி இருப்பதைப் போலவே
எதிர் வீட்டு மூர்த்தியின் தலையை
அவர்கள் அம்மா கோதியபடி இருக்கிறாள்

நேரமாக, நேரமாக, பேச்சு கொஞ்சம் இலகுவாக
எதிர்வீட்டு  மாமி சட்டென " அதுசரி
நேத்து நடந்ததெல்லாம் சரி. அந்த சமயம்
நம்ம தெரு நாய்களெல்லாம் எங்கே போனது
ஒரு நாய் குரைப்புச் சப்தமும் கேட்கவில்லையே"
என்கிறாள் ஆச்சரியமாக

அப்போதுதான் நினைவு வந்தவளாக என்
அம்மாவும் " அட ஆமா..நம்ம வீட்டுப் பக்கமே
எப்போதும் ஏழெட்டுத் திரியுமே அதுக்கெல்லாம்
என்ன ஆச்சு " என்கிறாள்

எனக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது

எங்கள்  பேச்சைக் கேட்டுக் கொண்டு அருகில்
இருந்த சுந்தர் மாமா சட்டெனத் திரும்பி

"உங்களுக்கு விஷயம் தெரியாதா ?
நடுச்சாமக் கோடாங்கி எல்லாரும் சுடுகாட்டில்
பூஜை செஞ்சு வரும்போது கையில் ஒரு
தாயத்து வெச்சிருப்பாங்க

அதை நாய்க்கு நேராக் காட்டினா போதும்
அது நாய் வாயைக் கட்டிடும் அவன் தெரு
தாண்டும் வரையில் வாயத் திறக்காது"
என்றார்

அப்போது அதைக் கேட்க எங்களுக்கு
இன்னமும் பயம் கூடிப் போனது

பின் வயது கூடக் கூட அப்படியெல்லாம்
நாய் வாயைக்கட்டுவது என்பது சாத்தியமே இல்லை
அது கட்டுக் கதை. நாம் குடுகுடுப்பைக்காரனையே
முழுக் கவனத்துடன் கவனிக்கிற நிலையில்
நாயின் குரைப்பைக் கவனித்திருக்க விட்டிருக்கும்
என்கிற முடிவுக்கு வந்தேன்

ஆனால் இப்போது அப்போலோவில்
நடந்த விஷயத்தைப் பார்க்கையில் எனக்கு
தாயத்தால் வாயை கட்டுதல் சாத்தியம் என்றே
படுகிறது

காரணம், எத்தனைப் பெரிய நிலையில்
இருக்கிறவர்கள் ஆனாலும் கூட இரண்டாம்
தளம் தாண்டி மூன்றாம தளம் போக முடியாமல்
போனது,....

மாதக் கணக்காகியும் முன்னாள்  முதல்வரின்
உடல் நலம்குறித்து எந்தச் செய்தியும்
யார் வாய் வழியும்கசியாதிருப்பது,....

தஞ்சை மாவட்டத்தில் இருந்து வந்த யாரோ
ஒரு கைதேர்ந்த குடுக்குடுப்பைக்காரன்
இரண்டம் தளத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிற
தாயத்தால்தான் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

( ஒரு ஜன நாயக நாட்டில், விஞ்ஞான வளர்ச்சியும்
மக்களின் விழிப்புணர்வும் உச்சத்தில் இருக்கிற
இந்த நூற்றாண்டிலும், ஒரு மக்களின் ஏகோபித்த
தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை விலக்க
முடியவில்லையெனில்,என்ன நடந்தது என்பதைத்
தெரிந்து கொள்ளமுடியவில்லையெனில்
விக்கிரமாத்தித்தன் கதைகளைப் போல நாமும்
இதுபோல அப்போலோ மர்மக் கதைகளை எழுதிக்
கொண்டிருக்கவேண்டியதுதான்.
வெட்கக் கேடு ஆனாலும் வேறு வழி ? )

Sunday, December 25, 2016

வாசித்துச் செல்பவருக்கு....

அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்

இடையில் இருப்பவருக்கு
அது புரிய வாய்ப்பே இல்லை

நேர்மையின் அசுரபலம்
அது துயரே தரினும்
அதுதரும் ஆன்மபலம்
அதை முழுமையாய்
அறிந்தவருக்குத்தான் தெரியும்

பித்தலாட்டத்தில் லாபமடைபவர்
அதை உணர வாய்ப்பே இல்லை

உண்மையின் பெரும்சக்தி
அது அரிச்சந்திர வீழ்ச்சி தரினும்
அது தரும் பெரும் எழுச்சி
அதன் பரிபூரணம்
அறிந்தவருக்கே புரியும்

பொய்யில் செல்வந்தராவனுக்கு
அது  புரிய வாய்ப்பே இல்லை

கவித்துவத்தின் அருமை
அதைப் படைப்பவனுக்கும்
அதன் உட்பொருளறிந்து
அதை முழுமையாய்
இரசிப்பவருக்கும்தான் தெரியும்

வாசித்துச் செல்பவருக்கு
அது விளங்க வாய்ப்பே இல்லை

Saturday, December 24, 2016

" உங்களால் நான் உங்களுக்காக நான் " என முழங்கிய புரட்சித் தலைவியை

Image may contain: 4 people, people standing and text

" உங்களால் நான்
உங்களுக்காக நான் ".....
என முழங்கிய
புரட்சித் தலைவியை முன் இருத்தி

"உங்களால் நாங்கள்
எங்களுக்காக நீங்கள் "
என  மறைமுகமாய்
நீங்கள்ஆடிய கூட்டத்தின்
அலங்கோலங்கள்
வெட்டவெளிச்சமாகி வருகின்றன

உயிரிடன் இருக்கையில்
இருளில் எங்கேயோ
மறைந்து அதிகார வேட்டை
ஆடியிருந்த கூட்டம்...

அமரரானதும்
அவரைச் சுற்றி நின்று
கோரமுகம் காட்டியது
எங்களுக்கு ஒரு தெளிவைத் தருகிறது

நின்றவர்களுக்கும்
நிற்க உதவியவர்களுக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றி

"ஓநாய்களும் நரிகளும்
மறைந்து "பிழைத்தலே " சரி
அணில்போல,குருவிபோல
வெட்டவெளியில் உலவுமெனில்
அது நாடாயிருக்கச் சாத்தியமில்லை

மக்கள் நாங்கள்
இது விஷயத்தில்
மிகத் தெளிவாய் இருக்கிறோம்

பதவியைத் தக்கவைக்க
உடன் படம்  மாற்றுவோரே
நீங்கள்தான் தெளிவு கொள்ளவேண்டும்

பதவியில் இருந்தோர்
ஆதரித்த ஜா  அணி கண்ட
பெரும்தோல்வியையும்

தொண்டர்கள்  மக்கள்
ஆதரித்த ஜே அணிகண்ட
மாபெரும் வெற்றியையும்

ஒரு பாடமாய் பதவியிலிருப்போர்
கொள்ளவில்லை எனில்....

முடிவினைச் சொல்லவேண்டுமா என்ன ?