Tuesday, May 30, 2017

காணும் யாவும் கருவாகிப் போகவும் எழுதும் எல்லாம் கவியாகிப் போகவும்...

தன்னுள் அடைக்கலமான
ஜீவத் துளியினை
உயிரெனக் காக்கும்
தாயென மாறிப் போனால்....

கூட்டில் உயிரைவைத்து
குஞ்சுகளுக்கென
பலகாதம் கடக்கும்
பறவையென மாறிப்போனால்...

இன்னும் இன்னும் என
மிக மிக நெருங்கி
ஓருடலாகத் துடிக்கும்
காதலர்கள் ஆகிப் போனால்..

விட்டு விலகி
விடுதலையாகித்
தாமரை இலைத் துளிநீர்த்
தன்மையடைந்து போனால்..

வேஷம் முற்றும் கலைத்து
ஜனத்திரளில்
இயல்பாய்க்  கலக்கும்
மன்னனாகிப் போனால்..

தானே பிரம்மம்  என்னும்
ஞானமடைந்தும்
செருக்கற்ற
அடியார்களென மாறிப்போனால்...

மொத்தத்தில்
தன்னிலை விடுத்துக்
கூடுவிட்டுக்  கூடுபாயும்
வித்தையறிந்துப்  போனால்..

காணும் யாவும்
கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்
கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

Monday, May 29, 2017

உயர்நிலைக்கு முதல் நிலை

சம நிலையது  தவறுகையில்தான்
மிகச் சரியாய் இருந்த எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்வதும்  ...

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்வதும் ....

சம நிலை தவறும்
சமயங்களிலேயே
அதிகச்  சாத்தியமாகிப் போகிறது
/
சம நிலையது  தவறும்
சாத்தியக்கூறுகள் எல்லாம்

போதையில்
 காமப்பசியில்
கோபத்தில்
பதவி மோகத்தில்
அதிகார ஆணவத்தில்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான்
எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளை
நம் கையெட்டும் தூரத்திலிருந்துத்
தள்ளியே வைக்கப் பழகுவோம்

 சரியாகக்  காலூன்றலே
கர்ணம் அடிக்க
ஏதுவாகும்என்பதனால்

சம நிலைப்  பராமரிப்பே
உயர்நிலைக்கு முதல் நிலை 
என உணர்ந்துத்  தெளிவோம்

இதை
உலகுக்கும் உரக்கச் சொல்வோம் 

Sunday, May 28, 2017

நவீன பட்டி விக்கிரமாதித்தர்களாய்...

பத்தாண்டு கால விஸாவில்
ஆறு ஆறு மாதம் எனும் கணக்கில்
ஐந்தைந்து ஆண்டுகள்
இங்கும் அங்குமாய்..

வீடெங்கும் அவசியம்
எனக் கிடந்த
மொத்தத் தேவையையும்
நூறு கிலோவுக்குள்
அடக்கியபடி..

கண்போல் பாதுகாத்த
செடி கொடிகள்
உறவுடன் நட்பையும்
மெல்ல உதறியபடி
சூழலைப் புரிந்தபடி..

எப்படியும்
போகவேண்டியிருக்கும்
திரும்பவேண்டியிருக்கும்
என எப்போதும் கவனம் கொண்டபடி...

எதிலும் அதிகம்
பற்றுக் கொள்ளாதபடி
பட்டுக் கொள்ளாதபடி...

அந்தப் பெருமையை இங்கும்
இந்தப் பெருமையை அங்கும்
பகிர்வதில் ஒரு
அற்பச் சுகம் கண்டபடி
அது ஒன்றே பலன் என்றபடி...

எது நாடு எது காடு
என்னும் குழப்பம் கொண்டபடி...
நவீன மோஸ்தரில்
உடையணிந்தபடி
விமானங்களில்மாறி மாறிப்
பயணித்தபடி....

நவீனப்  பட்டி விக்கிரமாதித்தியர்களாய்
பயணித்தபடியே  இருக்கிறது
ஒரு புதிய இனம்
வளர்ச்சி தந்த வரமா
தவிர்க்க இயலா  சாபமா
என ஒன்றும்  புரியாதபடி

அறியாதவர்கள்
அதிகப்பொறாமை கொள்ளும்படியும்
மிக நன்றாய் அறிந்தவர்கள்மட்டுமே
சிலவற்றை இழந்துதான் 
சிலவற்றைப் பெற்றதனை  
மிகச் சரியாய்ப் புரிந்து  கொள்ளும்படியும் ..

Saturday, May 27, 2017

பதிவர்கள் ஊடக எழுத்தாளரினும்....

அன்றாட நிகழ்வுகளைத் தான்
பதிவு செய்து போகிறோம்
 எனினும்
பதிவெழுத்தினை
நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை

 ஆயினும்
நிகழ்வுகளின்சாரத்தை,
அதன் உள்ளார்ந்த காரணத்தைக்
குறிப்பாகப் பதிந்து போவதால்

அது நாட்குறிப்பினும்
அதிகம்  மேம்பட்டதே     

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை

ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை

ஆயினும்
அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்

பதிவர்களின் படைப்புகள்
கவித்துவத்தில்
அதனினும்அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை

ஏனெனில்
ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை

ஆயினும்
 சுயக் கட்டுப்பாடும்ஒரு நொடியில்
உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்

பதிவர்களின் ஆக்கங்கள்
வேறு ஊடகத்தினும் நிச்சயம்  உயர்வானதே

பதிவர்கள்
 ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை

ஆயினும்
போட்டிப் பொறாமையின்றி
ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு
நேர் எதிரானவர்களாய் இருப்பதால்

பதிவர்கள் வேறு  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

Thursday, May 25, 2017

கட்டுப்பட்டதைக் கொண்டு கட்டுப்படாததை சமாளித்தலே....

இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..

கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட

கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..

கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...

கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...

கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை

கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை

இப்படி உதாரணங்கள்  நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்.

கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக்  கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...


தமிழ் மண வாக்களிக்க லிங்க் இதோ...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461287

வால்மார்ட்டும் இரஜினியும்




Image result for walmart shopfront photo



இலாப நோக்கில்
கூடுதல் விலையில்
தரம் குறைந்த
சாமான்களத் தரும்
அரசியல்  வியாபாரிகளே

உங்கள் மீது
வாடிக்கையாளர்களாகிய
நாங்கள் கொண்ட கோபம்
வால்மார்ட்டுக்கும்  தெரிந்துவிட்டது

அனுபவமிருந்து
முதல் இல்லாதவர்களை
விலைக்கு வாங்கியேனும்

எப்போது வேண்டுமானாலும்
கடையைத் துவங்கும்
சாதுர்யமும் வால்மார்டிடம் இருக்கிறது

ஊழல்  வியாபாரிகளே

கிடைத்த சந்தை வாய்ப்புகளை
அபரிதமான பேராசையால்
நீங்களே அழித்து ஒழித்துவிட்டு
வால்மார்ட் வருவது குறித்து
கூச்சலிடுவது
எந்த விதத்தில் நியாயம் ?

வாடிக்கையாளர்களாகிய எங்களின்
இப்போதையத் தேவை
எப்படியாவது உங்கள்
மோசமான வியாபாரம்
நாசமாகவேண்டும் என்பதுதான்

உங்கள்
போலிச் சரக்குகளால் உண்டான
ஒவ்வாமை நோயின் பாதிப்பை
உடனடியாக குறைக்க வேண்டும்
படிப்படியாய்
அழிக்க வேண்டும் என்பதுதான்

ஆம்
சொரிந்து சுகம் பெற
எங்களுக்கு ஒரு மாற்று
இன்றைய சூழலில்
அவசியம் தேவை
அவசரமாய்த் தேவை
வேறு வழி தெரியவில்லை

வால்மார்ட்
சேவை  அமைப்பல்ல
அதுவும் இலாப நோக்கமுடையதே
என்பது  எங்களுக்கும் தெரியும்

அப்படிப்பட்டதாயினும்  கூட...
உங்கள் லொள்ளுக்கு ...
அது வந்தால் கூட

ஆம் அது
எப்படிப்பட்டதாயினும்   கூட
அது வந்தால் கூட
தேவலாம் எனத்தான் படுகிறது   எங்களுக்கு

Wednesday, May 24, 2017

கோப்பெரும்சோழனும் பிசிராந்தையாரும்...

மூன்றுபேரைக் கடக்கும்
சமுத்திரம் எனும் சொல்
சமூத்திரமாகி
முடிவாக
மூத்திரமாகி
அர்த்தம் கெட்டுப்போவதைப்போல

சப்தமென
வார்த்தைகளென
உருமாற்றம்கொண்ட
உணர்வுகள்எல்லாம்
படைப்பிலயங்களில்
அர்த்தமற்றுத்தான்போகின்றன

ஒருகுயிலின் கூவல்  
ஒருகுழந்தையின்சிரிப்பு
நொந்தவளின்விசும்பல்
அபயம்வேண்டி
அலறுவோனின்கூக்குரல்....

எந்தஉணர்வுகளின்வெளிப்பாடும்
சப்தங்களாய்இருக்கையில்
சங்கடப்படுத்துகிறஅளவு
நம்மை இம்சிக்கிற அளவு
வார்த்தைகளில்
 வசப்படுவதேஇல்லை

வாசகனின்அனுபவங்களோடு
ஒத்தஅலைவரிசையில்
எப்போதேனும்
ஒத்துப்போகையில்
உச்சம்தொடும்படைப்பு

அதுஅற்றுப்போகையில்
சவக்கிடங்கின்பிணஅடுக்களாய்
அசைவற்று த்தான்கிடககிறது

இருப்பினும்
எடுப்பதெல்லாம்
சிப்பி ஆகிப்போயினும்
என்றேனும் முத்தும்கிடைக்குமெனும்
நம்பிக்கையில்
உயிர்ப்பயம் விடுத்து
கடல் மூழ்கும்  மனிதனாய்

கவிபடைத்துக் கொண்டிருக்கிறேன் நான்

காடுமலைகடந்து
 நாடு கடந்து
எங்கோ
முத்தின்அருமைதெரிந்த
அதை அடைவதற்கான சிரமம் புரிந்த 
முகமறியாஒருவன்  இருப்பான்
என்கிறநம்பிககையில்

வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கி
நம்பிக்கையுடன்
காற்றில்விதைத்தும்  போகிறேன் நான்

கோப்பெரும்சோழனும்
பிசிராந்தையாரும்
அவ்வப்போது
நம்பிக்கையூட்டிப்போகிறார்கள்