Wednesday, January 30, 2019

வரப்புயர .....

"இதனை
இதனால்
இவன்
என்பதை மட்டுமல்ல...

அதனை
அவன்கண்
என்பதையும் கூட

எதனுடனும்
எவருடனும்
இணைத்துப் பொருள் கொள்ளமுடியும்

அப்படி
இன்றைய சீரழிவுக்குக் காரணம்..

எது
எதனால்
யாரால்
ஏன் என்பதனை
பொதுமைப்படுத்திச் சொல்லமுடியுமா ?"
என்றான் நண்பன்

அது பெரிய விஷயமில்லை

தீமையை எது தருமோ
அது எட்டும்படியும்

பயனற்றதை
முயன்றால் அடையும்படியும்

நன்மையை எது தருமோ
அதை அடைய முடியாதபடியும்...
உள்ளதை அறியாது...

தேவையற்றதை
தெளிவாய்த் தெரிந்து கொண்டும்

பயனற்றதை
அரைகுறையாய் அறிந்தபடியும்

அவசியமானதை
முற்றாக அறியாதபடியும்
இருப்பதால் தான் "என்றேன்

நண்பன் ஒவ்வொன்றாய்
பட்டியலிட்டப்பின் சொல்கிறான்

"ஆம் வரப்புயர "என்பதைத் தொடர
அது எங்கெங்கோ சுற்றி
கோன் என முடிவதைப் போல்
இதுவும் மூலம் தொடுகிறது
மிகச் சரியாய்" என்கிறான் திருப்தியுடன்.

Tuesday, January 22, 2019

நமதருமைப் பதிவர்கள் போலவே....


சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்

அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை

மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..

எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்

இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும் 
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை

மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்

எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள்  போலவே....

Monday, January 21, 2019

இன்றைய அரசியல்..அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது ?

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்

எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது

உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது

அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
எம் வீட்டிலேயே காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

இன்றைய நம் அரசியல்
அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

இப்படித்தான் சொல்லணும்

இன்னும் மிகச் சரியாய் என்றால்
இன்னும்
அசிங்கமாகத்தான்தான் சொல்லணும்..

Saturday, January 19, 2019

கலகக்காரன்.

."எத்தனை தடைகள் எதிர்ப்புகள்
வந்த போதும்
எப்படி உன்னால்.
கலகக்காரனாகவே தொடர்ந்து இருக்க முடிகிறது..
இந்த அசுர மனோபலம்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?"
என்கிறான் நண்பன்

" எங்கிருந்தும் கிடைக்கும்
நமக்குப் பார்க்கத் தெரிய வேண்டும்
நம் சக்தியில் நமக்கு
நம்பிக்கையும் வேண்டும்
அவ்வளவே " என்கிறேன்

"புரியவில்லை" என்கிறான்

அவனுக்கு விளக்குவதுபோல்
எங்களெதிரே
சாலையின் மறுபுற சாக்கடையோரமிருக்கும்
பூக்கடைக்கு வாக்கப்பட்டும்
நாற்றத்தை மீறி
மணந்து சிரிக்கிறது
குண்டு மல்லிகைப் பந்து

Friday, January 18, 2019

கவிநூறு நம்வசமே

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே

கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே

நவீனத் தோட்டிகளாய்..

முன்பெல்லாம்
மாதமொரு முறை
சுத்தம் செய்தால் போதும்
எனும் அளவு
நிரம்பி வழியும்
இ.மெயில்கள்...

இப்போதெல்லாம்
வாரமொருமுறை
சுத்தம் செய்யும் அளவு
நிரம்பி வழிகிறது

எரிச்சலுடன்
தேவையானவைகளை மட்டும் 
இருக்க விட்டு
மற்றவற்றையெல்லாம்
ஒதுக்கி நிமிர்கிறேன்

எதிர் ஜன்னல்வெளியில்
காக்கிச் சட்டையணிந்த தோட்டி
இரண்டு மேடுகள் கடந்து
மூன்றாம் குப்பைமேட்டைக்
கிளறிக் கொண்டிருக்கிறான்.

அவன் பின்னால் கிடந்த
இரண்டு குப்பைக் குவியல்கள்
முகநூலையும் வாட்ஸ்-அப்பையும்
நினைவுறுத்திப் போக
மீண்டும் பொறுக்கக் குனிகிறேன்

Wednesday, January 16, 2019

தமிழகத்தின் தவப்புதல்வனே

சாணக்கியத் தனமே
அரசாள  அச்சாணி
எனும் போலி நம்பிக்கையை
மக்கள் மன்றத்தில் சிலர்
பரப்பிக் கொண்டிருந்த காலத்தில்.

இல்லையில்லை
மக்கள் நல மனத்தாலும்
மனிதாபிமானத்தால் கூட
அது சாத்தியம் என
நிரூபித்துக் காட்டியவனே..

கலை கலைக்காகவே
எனும் பழமை வாத வழியில்
பலர் பயணப்பட்டு
விருதுகளும் கேடயங்களும்
பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்

கலை மக்களுக்காகவே
எனும் கொள்கை வழியில்
திடமாய் இருந்து
ஏழை எளிய மக்களின்
உள்ளம் கவர்ந்த உயர்ந்தவனே

வாழ்ந்தவர்  கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிறைந்தவர் யார் எனும்
கேள்வியை நீயே எழுப்பி

மறைந்து ஆண்டுகள்
நாற்பதை நெருங்கியும்
மக்கள் மனங்களில்
மறையாது நிலைத்து
அது "நான் தான் "என நிரூபிப்பவனே

உன்னை நினைத்திருப்பதே
எங்கள் நலம் எங்கள் பலம்

உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளில் மூழ்குவதையே
தவமாகக் கொள்கிறோம்
இன்றுபோல் என்றென்றும்
வாழ்க நீ வாழ்க நீ
தமிழகத்தின் தவப்புதல்வனே