Friday, April 10, 2026

பாவப்பட்ட ஆண்டிகள்..

 தன்னையொத்தவர்கள்

தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்

Saturday, April 4, 2026

சவ (வச )மாகும் ஜனநாயகம்

 வெளியில் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்புகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து என் தெரு முழுக்கவும் ரோஜா சாமந்தி பூக்களின் இதழ்கள் சிதறிக்கிடந்தன.  தூரத்தில் எங்கோ பறையொலி, கேட்டது.


யாராயிருக்கும்? என்று யோசித்துக் கொண்ட தெருவில் மெல்ல நுழைந்தேன்.


பக்கத்து வீட்டு வாசலில் நிறைய மலர்களின் இதழ்கள்... ஒரு வேளை அந்த வீட்டின்  பெரியவர்..?   ச்சே இருக்காது.  அப்படி இருந்திருந்தால் எனக்கு தகவல் வந்திருக்குமே.  அப்போ அவர் வீட்டில் குடியிருக்கும் யாராவது...!


வாசலில் வண்டி நிறுத்தும் போதுதான் கவனித்தேன் தெருவின் எல்லா பகுதியிலுமே பூவிதழ்கள்.


புரியாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்.  சோபாவில் சப்பணமிட்டு அமர்ந்திருந்த மகள் , "ஹாய்..! அப்பா" என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த புத்தகத்தில் மீண்டும் கண் செலுத்தினாள்.  


 மனைவியிடம் கேட்டேன்.


"யாரு"?


"யாருன்னா"?


"தெருவெல்லாம் பூவா இருக்கே, அதான் யாருன்னு கேட்டேன்".


மனைவி சிரிக்க....

 மகள் சொன்னாள் "அப்பா ...கட்சி வேட்பாளரு ஓட்டுக் கேட்க வந்தாரு. நம்ம தெருவுல உள்ள அந்த கட்சிக்காரர்கள் எல்லாம் மலர் தூவி பண்ணின ஆர்ப்பாட்டம் தான் அது... அப்புறம் அவர்  நம்ம வீட்டுக்கு வந்து ஓட்டு கேட்டாருப்பா" என்று அதை ஒரு நம்ப முடியாத அதிசயமாக சொன்னாள்.


சமையலறை உள்ளே போய் வந்த மனைவி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.


"என்னது"?


"பிரிச்சிப் பாருங்க".


உள்ளே புத்தம் புதிய ஐநூறு ரூபாய் தாள் இரண்டு இருந்தது.


"ஏது"...?


"அந்தக் கட்சிகாரங்கதான் கொடுத்தாங்க".


"ஏன் வாங்கின".


"ம்ம்ம்...எல்லாரும் வாங்கும் போது நாம மட்டும் வாங்காம இருக்க முடியுமா".


"எல்லாரும்"...என்று மனதில் நினைத்ததை கேட்காமல் வாயடைத்தேன்.


காந்தி ஐநூறில் சிரித்துக் கொண்டிருந்தார்.


தெருவைப் பார்த்தேன்.  ரோஜா பூவிதழ்கள் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.


பறையொலியையும் பூச்சிதறல்களையும் கண்டு யாரோ இறந்துவிட்டார்கள் என்று முதலில் நான் எண்ணியது உண்மை என்றே இப்போது தோன்றுகிறது.


ஆம் பணம் படைத்தவனுக்கு வசமாகும் ஜனநாயகம்...............

.பொது ஜனங்களுக்கு சவமாகும் ஜனநாயகம்..


Tuesday, March 31, 2026

இது எப்படி இருக்கு...

 நம்மளோட வீட்டில் “அரேஞ்ச்ட் மேரேஜ்”ன்னா முதல்ல கேட்கப்படும் கேள்வி: “மாப்பிள்ளை என்ன பண்ணுறார்?”

அப்பாராவ் குடும்பமும் மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஒரு வீட்டுக்கு போனார்கள்.

டி, பிஸ்கட், வழக்கமான பேசல்கள் எல்லாம் முடிந்ததும், பெண்ணின் அப்பா மெதுவாக முக்கிய விஷயத்துக்கு வந்தார்:

“சரி, உங்கள் மகன் இப்போ என்ன வேலை பண்ணிக்கிட்டிருக்கான்?”

அப்பாராவ் கண்ணாடியை சரிசெய்து, தொண்டையை சுத்தம் செய்து இப்படிச் சொல்ல ஆரம்பித்தார்:

“எங்கள் பையன் தற்போது ஒரு Agro-based Direct-to-Consumer (D2C) ஸ்டார்ட்அப்பின் Founder மற்றும் Managing Director.”

“நாங்கள் முக்கியமாக Organic Health and Wellness துறையில் வேலை செய்கிறோம்.”

இதை கேட்டவுடன் பெண்ணின் அப்பா பாதி கவரப்பட்டார்.

"வாவ்! அப்படின்னா உங்கள் product என்ன?" என்று கேட்டார்.

அப்பாராவ் பதிலளித்தார்:

“எங்கள் portfolio-வில் முக்கியமாக High-protein roasted legumes மற்றும் பாரம்பரிய caramelized sweets உள்ளன.”

“நாங்கள் raw materials-ஐ direct wholesale supply chain-லிருந்து எடுத்து, எங்கள் சொந்த thermal processing unit-ல் dry roast செய்கிறோம்.”

“அதிலேயே biggest highlight என்னனா… எங்கள் packaging 100% eco-friendly மற்றும் biodegradable!”

இதை கேட்ட பெண்ணின் குடும்பத்தினர் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்.

இது ஏதோ பெரிய multinational company மாதிரி தோன்றியது அவர்களுக்கு!

பெண்ணின் மாமா அடக்க முடியாமல் கேட்டார்:

“உங்க company main office எங்க இருக்கிறது? எத்தனை employees?”

அப்பாராவ் தயக்கமே இல்லாமல்:

“இப்போ modern lean startup காலம்.”

“அதனால் shop rent, current bill மாதிரி unnecessary expenses எதுவும் எங்களுக்கு இல்லை.”

“எங்களுக்கு ஒரு mobile retail outlet இருக்கு. traffic மற்றும் crowd-ஐப் பொறுத்து அது தினமும் இடம் மாறும்.”

“Operations எல்லாம் எங்கள் பையன் ஒருத்தனே பார்க்கிறான் — he is a solopreneur!”

பெண்ணின் அப்பாவுக்கு முழுக்க குழப்பம்.

இந்த English அவருக்கு புரியவே இல்லை.

“அய்யா, இந்த marketing language எனக்கு புரியலை. சாதாரணமா உங்கள் பையன் என்ன பண்ணுறான் சொல்லுங்க?”

அப்போ பையனின் நெருங்கிய நண்பன் மெதுவாக சொன்னான்:

“அங்கிள்… அவர் சொல்வது என்னனா…”

“எங்கள் பையன் ஹைவே பக்கத்தில் ஒரு வண்டியில்…”

“வறுத்த வேர்கடலை விற்கிறான்.”

“மணலில் வேர்கடலை வறுப்பான் (thermal processing)… அதை பழைய newspaper-ல சுற்றி கொடுப்பான் (biodegradable packaging).”

பெண்ணின் அப்பாவின் கையில் இருந்த டீ கப் கீழே விழுந்து சிதறியது.

பின்னாடி என்ன நடந்திருக்கும்னு நீங்களே நினைச்சுக்கலாம்…

_நீதி: Marketing வார்த்தைகளின் மாயாஜாலம் ரொம்ப powerful. Presentation strong-ஆ இருந்தா, ஒரு சாதாரண வேர்கடலை வியாபாரமும் corporate startup மாதிரி காட்டலாம்!_( படித்ததும் இரசித்தேன் சிரித்தது)

Monday, March 30, 2026

அவ்வப்போது அவரவர் நினைவில் கொள்ள..

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்.                             (இங்கு நான் என்பவர் இதைப் படிக்கும் நீங்களும் தான்.)

Sunday, March 29, 2026

இட்லி மகாத்மியம்

 


அடிபட மிதிபட அதிகப்பட்ச அவதிப்பட வருகிற பக்குவம் போல              நிச்சயமாக நீதிநூல்களோ போதனைகளோ அல்லது அதிக வயதோ கூட தருவதில்லை.                           அதுபோல அரைத்தோம்          வேகவைத்தோம்  அல்லது நன்றாக எண்ணையில் பொரித்தோம் என்றாலும் கூட.  நெல்லாய்அவித்து அரிசியாகஅரைத்து  மீண்டும் ஊறவைத்து புளிக்க விட்டு                      மீண்டும் ஆவியில் வேகவைத்துத் தயாரித்த வெண்மையான மென்மையான சுவைக்க பதமான   குடலுக்கு இதமான உணவு.   உலகில் இட்லி போல வேறு இருக்க நிச்சயம் சாத்தியமில்லை...                     அறிவுலகுக்கு வள்ளுவத்தைத் தந்தது போல் உணவு உலகுக்கு இட்லி தந்த நம் முன்னோருக்கு இந்த இட்லி தினத்தில் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குவோம்..

Thursday, March 26, 2026

இராம நவமி நல்வாழ்த்துகள்

 


'ஒரு'  (ஏக )பத்தினி விரதனாகி

'இரண்டு' புதல்வர்களுக்குத்

தந்தையாகி

'மூன்று' 

அன்னையர்களின்

மடியில் தவழ்ந்து 

'நான்கு'

சகோதரர்களில் 

ஒருவராகி

'ஐந்து' என

உடன்பிறப்பாகக்

குகனை ஏற்று

'ஆறு' எழுத்தாம்

இராமாயணம் 

எனும் காவியத்தை 

'ஏழு' காண்டங்களாக

இயற்றவைத்து 

'எட்டு' எழுத்தாம்

சுந்தரகாண்டம் 

நாயகனைத் 

தன் பக்தனாக்கி

'ஒன்பது' எனும் 

திதியாம்

நவமியில் அவதரித்து 

'பத்து' தலை

இராவணணை

வதம் செய்த 

இராமபிரானை

ராமநவமி தினமான 

இன்று 

பக்தியுடன் 

போற்றி வணங்கிடுவோம்!

அனைவருக்கும் இனிய ராமநவமி 

நல்வாழ்த்துக்கள்!

உண்மைதான்...

 ஒரு மனிதன் தன் குரங்குகளுடன் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். அந்தப் படகில் இருந்த மற்ற பயணிகளில் ஒரு தத்துவஞானியும் இருந்தார். அந்தக் குரங்கு இதற்கு முன் படகில் பயணம் செய்ததில்லை, அதனால் அது சங்கடமாக உணர்ந்தது. அது கத்தவும் மேலும் கீழும் குதிக்கவும் தொடங்கியது, படகில் இருந்த யாரையும் நிம்மதியாக உட்கார விடவில்லை. படகோட்டி எரிச்சலடைந்தார், மேலும் இந்தக் குழப்பத்தால் படகு மூழ்கிவிடுமோ என்று பயணிகள் கவலைப்பட்டனர்.  குரங்கு அமைதியாகவில்லை என்றால், அது படகை மூழ்கடிக்கக் காரணமாகிவிடும்.

அந்த மனிதன் இந்தச் சூழ்நிலையால் கலக்கமடைந்தான், ஆனால் குரங்கை அமைதிப்படுத்த எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தத்துவஞானி எல்லாவற்றையும் கவனித்துவிட்டு உதவ முடிவு செய்தார்.

அவர், “நீங்கள் அனுமதித்தால், இந்தக் குரங்கை ஒரு வீட்டுப் பூனையைப் போல என்னால் அமைதியாக்க முடியும்,” என்றார்.

அந்த மனிதன் உடனடியாக ஒப்புக்கொண்டான். இரண்டு பயணிகளின் உதவியுடன், தத்துவஞானி குரங்கைத் தூக்கி ஆற்றில் வீசினார். தண்ணீரில் மிதக்கப் போராடிய குரங்கு, வெறித்தனமாக நீந்தத் தொடங்கியது.

அது சாகும் தருவாயில் இருந்தது, தன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, தத்துவஞானி குரங்கை மீண்டும் படகிற்குள் இழுத்தார். இப்போது குரங்கு அமைதியாகி ஒரு மூலையில் சென்று அமர்ந்தது.

குரங்கின் மாறிய நடத்தையைக் கண்டு அந்த மனிதனும் அனைத்துப் பயணிகளும் ஆச்சரியப்பட்டனர்.

அந்த மனிதன் தத்துவஞானியிடம், “முன்பு அது அமைதியின்றி அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தது. இப்போது அது ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமர்ந்திருக்கிறது. ஏன்?” என்று கேட்டான்.


தத்துவஞானி பதிலளித்தார், “நான் இந்தக் குரங்கைத் தண்ணீரில் வீசியபோது, ​​அது நீரின் சக்தியையும், தன் வாழ்வின் மதிப்பையும், படகின் பயனையும் புரிந்துகொண்டது.”


இந்தியாவில் எல்லாவற்றையும் தொடர்ந்து விமர்சித்து, கருத்துரைத்து, எதிர்க்கும் நபர்களை ஆறு மாதங்களுக்கு வட கொரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, ஈராக், பாலஸ்தீனம், பாகிஸ்தான், இலங்கை அல்லது சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு, அவர்கள் தானாகவே ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமைதியாகி, நாடு முன்னேற வழிவகுப்பார்கள்.


“இந்தியா”வைத் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பும் அனைத்து நண்பர்களுக்கும் அர்ப்பணம்... படித்ததில் பிடித்தது