Sunday, January 30, 2011

தேடல்


என் முன்னே என் பின்னே
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்" என்றேன்
என்னை ஒத்தவரிடம்
"நம் முன்னால் செல்பவர்கள் எல்லாம் தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான் நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால் அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில் என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்
"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா" என்றேன்
நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்" என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்
"நம் கால்கள் ஓடத்தான் படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான் படைக்கப்பட்டது எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட கேட்கலாம்தானே" என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்டேன்
"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன் ஓய்வாக இருக்கிறீர்கள்" என்றேன்

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்" என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும் கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் - எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

Thursday, January 27, 2011

எல்லை தாண்டி...

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம்  ?

பட்டினத்து அடிகளின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?





Wednesday, January 19, 2011

மீண்டும் ஞானப்பழம்

இருவேறு துருவங்கள்
ஒரு மையப்புள்ளியில்
நேராக சந்தித்ததுபோல்
பல வருடங்களுக்குப்பின்
நானும் அவனும் சந்தித்திருந்தோம்

முக்கிய மூன்று தேவைகளின்
அசுர நெருக்கடியில்
அல்லும் பகலும் அவதியுறும் நான்...
பள்ளி நாட்களில்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
கல்லூரிப் படிப்பினில்
தங்கப்பதக்கம்வென்றவன்

அதிகார மையங்களின் மிக அருகில்
வசதி வாய்ப்புகளில் மிக உச்சத்தில்
நாளும் பவனி வரும் இவன்...
பள்ளி நாட்களில்
"மக்கு"என பட்டம் பெற்றவன்
கல்லூரி முடிக்கையில்
தோல்விக் கோட்டின் மிக அருகில்
வெற்றி வாய்ப்பைப் பெற்றவன்

அவனின் அதீத வளர்ச்சி
மகிழ்வினைத் தந்தாலும்
மிக அதிசயமாகவும் இருந்ததால்.
அது குறித்து விவரம் தெரிந்தால்
அனைவருக்கும் ஆகுமே என
அவனிடம் அதுபற்றிக் கேட்டு வைத்தேன

"எல்லாம் நாரதர்கனி தந்த பாடம்" என்றான்
விளங்காது நான் விழித்து நிற்க
அவனே விளக்கமும் சொன்னான்.

"நீங்களெல்ல்லாம்
கனிக்கான போட்டியில்
வேலிருக்கும் மயிலுருக்கும்
உள்ளார்ந்த தெம்பினில்
உலகம் சுற்றப்போகும் முருகன்கள்

நாங்களெல்லாம்
உலகமே அம்மையப்பன்
அம்மையப்பனே உலகமென்று
அவர்களைச் சுற்றியே
கனியினைப்பெறும் வல்லபர்கள்" என்றான்

"என் கேள்விக்கும்
இந்த பதிலுக்கும்
என்ன சம்பந்தம் " என்றேன்

"தத்துவங்களை ரொம்ப விளக்கக்கூடாது
விளக்கினால் நீர்த்துப் போகும்"எனச் சொல்லி
சிரித்தபடி என்னைக் கடந்து போனான்.

உங்களைப் போலவே எனக்கும்
எதுவும் விளஙகவில்லை
ஆனாலும்
எனக்கென்னவோ
அவன் கையில் ஞானப் பழம்
கொண்டு போவது போலவும்
நான் கோவணம் கட்டி
தெருவில் நிற்பது போலவும் பட்டது

Thursday, January 13, 2011

மரமும் மனிதனும்

ஜடமாக நிற்கும் மனிதனை
மரத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்
ஏனெனில்
அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.
ஆயினும் அது
மரத்தினை இழிவுபடுத்துவதாகவே அமையும்

மனிதனின் கழிவுகளைக் கூட
மனிதனுக்கான்
உயிர்காக்கும் உணவாக்கும் சூட்சுமம்
மரங்களுக்கு மட்டுமே தெரியும்
கிடைக்கிற நன்மைகளையெல்லாம்
வாரி அணைத்துக்கொண்டு
தீமைகளை விருத்தி செய்யவே
மனித உடலுக்குத் தெரியும்

நீரிட்டு வளர்த்தவனைக் கண்டு
பூவாகிச் சிரிக்கவும்
கனியாகக் கொடுக்கவுமே
உயிருள்ள மரங்களுக்குத் தெரியும்.
படைத்துக் காத்தவர்களையே
மறக்கவும் இகழவும்
ஒதுக்கிவிட்டு வாழவுமே
ஆற்றவு மனிதனுக்குத் தெரியும்.

வீழ்ந்து விட்டால் கூட
நிலையாகி,சிலையாகி
பட்டுவிட்டால் கூட
விறகாகி உரமாகி
தன் வாழ்வினை
அர்த்தப்படுத்தும் வல்லமை
புனித மரங்களுக்கு உண்டு

இறந்த பின்பும் கூட
எதற்கும் பயனறு
நாற்றமுடைய பொருளாகி
இருப்போர்க்கும் தொல்லைதரும
சகிக்கவொண்ணா பிணமாகி
 தன் இருப்பை
சுமையெனசெய்யும் வல்லமை
மனித உடலுக்குமட்டுமே உண்டு

எனவே இனிமேல் தயவுசெய்து
விளையாட்டாகக் கூட
ஜடமாக நிற்கும் மனிதனை
மரங்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

Saturday, January 1, 2011

விழிப்பின் சூட்சுமம்.?

நாம்தான்
சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோம்

அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகின்றன

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோம்

நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போகிறது
போதி மரமாகி போகிறது

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்