Saturday, January 31, 2015

எறும்பூற

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே
யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   கூட
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க
சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே 

முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு
மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்றே  அடைந்து உயர்வோம்

Friday, January 30, 2015

புதிய பாதை

என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து

சமையலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து

எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து

என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..

இப்படி

எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து அமர்கையில்
எதிரே

"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை

குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது

Thursday, January 29, 2015

நேர் மற்றும் எதிர்மறை

" எங்கும் இல்லை
 எதிலும் இல்லை
 எப்போதும் இல்லை
 எனவே
 நம்பிக்கைக் கொள்ளல்
 மடத்தனம் " என்றான் இவன்

"சரி " என்றேன் நான்

" எங்கும் இருக்கிறது
  எதிலும் இருக்கிறது
  எப்போதும் இருக்கிறது
  எனவே
  நம்பிக்கை கொள்வதே
  அறிவுடமை" என்றான் இவன்

"அதுவும் சரி " என்றேன் நான்

 உடன்
 முரண் கருத்துக் கொண்ட
 இருவரும் ஒன்றாகி
 என்னுடன் முரண்படத் துவங்கினர்

" இரண்டும் சரியாய் இருக்க
 எப்படிச் சாத்தியம்  ?
 ஒன்று மட்டுமே
 நிச்சயம் சாத்தியம்
 அது எது ? " என
 இருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்

 இது எதிர்பார்த்ததுதான்
 எனவே நான் சங்கடப்படவில்லை

 இருவரையும் இமை மூடச் சொல்லி
 "இப்போது என்ன தெரிகிறது " என்றேன்

 முன்னவன்
 மெல்லச் சிரித்தபடி
 "எதுவும் இல்லை " என்றான்

 பின்னவன்
 "இருள் தெரிகிறது " என்றான்

 இப்போது
 நான் மெல்லச் சிரித்தேன்

 இருவர் முகத்திலும்
 தெளிவு படரத் துவங்கியது

கீறல் ...

திசை மாறாது
பொழுது மாறாது
மிக இயல்பாய்
இருளுண்டு
அனைத்தையும்
விளங்கக் காட்டிப் போகும்
அனைத்தையும்
இயங்கவைத்துப் போகும்
அந்தக் கதிரவனினும்

திசைக் கணக்கின்றி
பொழுதுக் கணக்கின்றி
தாறுமாறாய்
இருள் கூட்டிக் காட்டி
அனைத்தையும்
மிரளவைத்துப் போகும்
அந்த ஒரு நொடி மின்னலே

மனம் கீறிப் போகிறது
அந்த நொடியினை
மறக்காது செய்து போகிறது

புரியாதே
பம்மாத்துக் காட்டும்
சில அற்புத
வசன கவிதைகள் போலவும்...

Wednesday, January 28, 2015

வரமா சாபமா ?

அளவு பொருத்து
மருந்தாகவும்
விஷமாகவும்
மாற்றம் கொள்ளும் அமுதாய்

சூழல் பொருத்தே
வரமாகவும்
சாபமாகவும்
மாற்றம் கொள்கிறது தனிமையும்..

தன்னுள்
ஆழம்போகத் தெரிந்தவனுக்கு
அற்புத முத்தெடுத்துத் தரும்
அந்த அதி அற்புதத் தனிமையே

தன் உள்
குப்பையைக் கிளறுவோனுக்கு
நாற்றத்தையும் சிதைவினையும்
தானமாகத் தந்து போகிறது

கூட்டத்திலும்
தனித்தும் விழித்தும்
இருக்கத் தெரிந்தோனுக்கு
தலைமையையை பரிசளிக்கும் தனிமையே

தனிமையிலும்
பரபரக்கும் மனத்தோனுக்கு
பதட்டத்தையும் வெறுமையையும்
சொத்தாக்கிச் சிதைத்துப் போகிறது

நிறமற்று
நிலம் வீழும் மழை நீர்
நிலம் பொருத்து
நிறம்பெறும் தன்மை போல்

தனிமைக்கும்
தனித்த குணமில்லை
மனம் பொருத்தே
தன்முகம் காட்டிப் போகிறது

ஆம்
தனிமை
வரமும் இல்லை
சாபமும் இல்லை

ஆம்
தனிமை
வரமும்தான்
சாபமும் தான்

Monday, January 26, 2015

குடியரசு தினம் ( 2 )














































இந்த 66 வது குடியரசு தினத்தை
வித்தியாசமாக ஒரு  தினமாக  சிறிய கிராமத்தில்
கொண்டாடுவது என முடிவு
செய்திருந்தோம்

அதன் படி திருப்பரங்குன்றம் ஊராட்சி
ஒன்றியத்தைச்சேர்ந்த வலயப்பட்டி என்னும்
கிராமத்தைத் தேர்ந்தெடுத்து
அங்கு ஒரு ஆரம்பப்பள்ளியில் கொடியேற்றவும்
அப்படியே வாசன் கண் மருத்துவமணையுடன்
இணைந்துஅந்தப் பள்ளி மாணவர்களுக்கு
இலவச கண்பரிசோதனைமுகாமும் நடத்துவதாக
முடிவு செய்து அதைச் சிறப்பாகச்
செய்து முடித்தோம்

தற்போது அந்தப் பகுதியில் காய்ச்சல் பரவும்
அறிகுறித் தெரிவதாகத் தகவல் அறிய நிலவேம்புக்
கசாயம் வழங்கவும் முடிவு செய்து அதைக்
அக்கிராமத்தில் அனைவருக்கும்
அதைக் காய்ச்சி வழங்கினோம்

மக்களிடம் அதற்கு அமோக வரவேற்பு இருந்தது
எங்களுக்கும் அது அதிக மன நிறைவு தந்தது

அனைவருக்கும் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


குடியரசுதினச் சிந்தனைகள்

நிராயுதபாணியான மிக மோசமான எதிரியையும்
இன்று போய் நாளை வா எனச் சொல்லிய
அவதாரப் புருஷர்களும்...

பகைவனுக்கருள்வாய் என ஆண்டவனை வேண்டும்
பரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...

தன் நாட்டினுள் நுழைய விஸா வழங்க மறுத்த
அந்த நாட்டின் ஜனாதிபதியையே குடியரசு தின
விழாவினுக்கு விருந்தினராய் அழைக்கும்
மேன்மையும்...

நமது நாட்டில்தான் சாத்தியம் எனும்
பெருமிதத்தோடு...

அனைவருக்கும் இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்

(இன்னும் நமக்கேயான பெருமிதங்களைப்
பின்னூட்டத்தில் தொடரலாமே )

Friday, January 23, 2015

சேவைப் பொங்கல்

எண்ணத்தால் இமயம் அசைப்பதை விட
செயலால் துரும்பசைப்பதே மேல் என்கிற
கருத்துடையவர்கள்  எம்போன்று
சேவை இயக்கத்தில் ஈடுபட்டுள்ள  எனது
நண்பர்கள் அனைவரும் .




(உரையாற்றிக் கொண்டிருப்பது அடியேன்

 நடுநாயகமாக வீற்றிருப்பது
மாவட்ட ஆளு நரின்  துணைவியார்
டாக்டர் ஆனந்தி   அவர்கள்
அடுத்தது ஆளு நர் , டாக்டர் ப ரகுவரன் அவர்கள்
அடுத்து அமர்ந்திருப்பவர் இந்த நிகழ்ச்சிக்குத்
தலைமைப் பொறுப்பேற்றும்  ,இந்த  நிகழ்வுக்கான
செலவின் பெரும்பகுதியை  தன சொந்தப் பொறுப்பில்
செய்தவருமான   வள்ளல்  டாக்டர் ,எம்  சுப்ரமணியம்
வட்டாரத் தலைவர் அவர்கள்  )

அந்த வகையில்  நான் தலைமைப்  பொறுப்பேற்றுள்ள
டிலைட்  அரிமா  சங்கத்தின் மூலம்
 கடந்த பொங்கல் பண்டிகைத்
திரு நாளை முன்னிட்டு  350 ஏழைத்
தாய்மார்களைத் தேர்ந்தெடுத்து புத்தாடைகள்
வழங்கினோம்

மிகச் சரியானவர்களைச் சேவை சென்றடைய
வேண்டும் என்பதற்குத்தான் மிகவும்
மெனக்கெடவேண்டியிருந்தது

(சேலையில் மதிப்பு ரூபாய்300 என்றால்
மிகச் சரியானநபர்களைக் கண்டு பிடிக்கவும்
அவர்களைஅழைத்து வந்து பின் அனுப்பிவைக்கவும்
ரூபாய் 120 ஆனது )


0

எமது பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற
மதிப்பிற்குரிய ஆசிரியர் எஸ் கனகராஜ் அவர்களுக்குவிருதுவழங்கிகௌரவித்தோம்


தொடர்ந்து அரிமா சேவையில் ஈடுபட்டுவரும்
தம்பதிகளைக் கௌரவிக்கும் விதமாக
நாங்கள் தொடர்ந்து வழங்கிவரும்
ஆதர்ச அரிமா தம்பதிகள்  விருதினை இம்முறை
மதிப்பிற்குரிய அரிமா  மோகன்-உஷா
 தம்பதியினருக்கு வழங்கி கௌரவித்தோம்

இந்தத் தம்பதியினர் தொடர்ந்து அரிமா இயக்கத்தில்
இணைந்து 20 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்து
வருவதோடு, மாவட்ட அதிகாரிகளாக அரசுத் துறையில்
பணியாற்றி ஓய்வு பெற்றபின்னரும் தங்கள்
வருடாந்திர ஓய்வுத் தொகையில்
ஒரு மாதத் தொகையைசேவைக்கெனவே ஒதுக்கி
 மக்கள் சேவைசெய்து வருகிறார்கள்என்பது
குறிப்பிடத் தக்கது(அது சுமார்  அறுபதாயிரத்திற்குக்
குறையாமல் இருக்கும்  )



எங்கள் பகுதியின் அருகில் உள்ள
இரண்டு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து
விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற
மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினோம்


சக்கரைப் பொங்கலை  விட  இந்த
சேவைப் பொங்கல்  மிக இனிப்பாகவும்
மகிழ்வளிப்பதாகவும் இருந்தது என்பதைச்
சொல்லத்தான் வேண்டுமா  ?

Wednesday, January 21, 2015

" உம் "புராணம்

"மாதா
பிதா
குரு
தெய்வம்  "

என்றான் ஆன்மீக வாதி

"மாதா"வும் "
பிதா "வும் "
குரு "வும்தான் "
தெய்வம் "

என்றான் பகுத்தறிவு வாதி

"உம் தான் "
தேவையற்ற பிரிவினைகளின்
மூலம் என நவில்ந்தபடி
நகர்ந்தான் பொருள்முதல்வாதி

 "உம் தான் "
நமக்கு மூலதனம்
அதைவிடாது பெருக்கணும்
உறுதி கொள்கிறான் அரசியல்வாதி


"உம்மின்  "
உண்மை பலம் புரியாது
உம்மென  உலவுது
ஊமையாய் ஒரு பெருங்கூட்டம்

Tuesday, January 20, 2015

அணுவும் அண்டமும்

கருப்பையே பேரண்டத்தின்
ஒரு சிறுமாதிரி
பேரண்டமே கருப்பையின்
மிகப் பெரும்விஸ்வரூபம்

துளியே பெருங்கடலின்
ஒரு சிறு மாதிரி
பெருங் கடலே துளியின்
மாபெரும் விஸ்வரூபம்

உறக்கமே மரணத்தின்
ஒரு சிறு மாதிரி
மரணமே உறக்கத்தின்
எல்லையிலா விஸ்வரூபம்

கவிதையே வாழ்வின்
ஒரு சிறு மாதிரி
வாழ்க்கையே கவிதையின்
மாபெரும் விஸ்வரூபம்

Monday, January 19, 2015

வ(வி)சன கவிதை

பேருந்து நிலையங்களில்
விற்கப்படும் பொட்டலங்களில் இருக்கும்
அவித்த கடலை போலவும்..

அடுக்கு மொழிக்காரரின்
நீண்ட சொற்தொடருக்குள் இருக்கும்
சிறு விஷயம் போலவும்...

தடித்துக் கனத்தத்
தோள் நீக்கக் கிடைக்கும்
சிறு பலாச் சுளைப்  போலவும் 

மாதாந்திர கடனையெல்லாம்
அடைத்தப்பின் மிஞ்சும்
மாதச் சம்பளம் போலவும்....

விளம்பரங்களுக்கு இடையிடையே
வந்து போகும்
தொலைக்காட்சித் தொடர்போலவும்

ஆடம்பர அலங்காரங்களுக்குள்
மூச்சுத் திணறும்
உண்மை அழகு போலவும்

இசையின் இரைச்சலுக்குள்
புதைந்துத் தவிக்கும்
சினிமாக் கவிதை போலவும்
...
இலக்கண விதிகளுக்குள்
கருவையும்  கருத்தையும்
ஒண்டிக்கிடக்க விரும்பாதுதான்..

மரபின் மாண்பினை
நன்கு அறிந்தும்
ஒதுங்கிச் செல்கின்றோம்

காலச் சூழலில்
துரித உணவே
சாத்தியம் என்பதாலேயே

பந்தியைத் தவிர்த்து
கையேயேந்தி பவனில்
"கொட்டிக் " கொள்கின்றோம்

Sunday, January 18, 2015

காணும் யாவும் கருவாகிப் போகவும்

தன்னுள் அடைக்கலமான
ஜீவத் துளியினை
உயிரெனக் காக்கும்
தாயென மாறிப் போனால்....

கூட்டில் உயிரைவைத்து
குஞ்சுகளுக்கென
பலகாதம் கடக்கும்
பறவையென மாறிப்போனால்...

இன்னும் இன்னும் என
மிக மிக நெருங்கி
ஓருடலாகத் துடிக்கும்
காதலர்கள் ஆகிப் போனால்..

விட்டு விலகி
விடுதலையாகி
தாமரை இலைத் துளிநீர்
தன்மையடைந்து போனால்..

வேஷம் முற்றும் கலைத்து
ஜனத்திரளில்
இயல்பாய் கலக்கும்
மன்னனாகிப் போனால்..

தானே யாவும்
தானே பிரம்மன் என்னும்
தன்னம்பிக்கை மிக்க
தனியனாகிப் போனால்...

மொத்தத்தில்
தன்னிலை விடுத்து
கூடுவிட்டு கூடுபாயும்
வித்தையறிந்து போனால்..

காணும் யாவும்
கருவாகிப் போகவும்
எழுதும் எல்லாம்
கவியாகிப் போகவும்
நிச்சயம் சாத்தியம் தானே ?

Saturday, January 17, 2015

எதிர்திசையில் ஓரடி

புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட

நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Thursday, January 15, 2015

பகைவனுடன் தொடர்பில் இரு

எதிரிகளை மிகச் சரியாக
அடையாளம் கண்டுகொள்
அவன் கருத்துக்கள் முழுமையாக
உன்னைச் சேரும்படி
வழிவகைச் செய்து கொள்

ஏனெனில்

உன் திட்டம் குறித்து
அதன் பலவீனம் குறித்து
உன் செயல்பாடுகள் குறித்து
உன்னை விட அவனே அதிகம் யோசிக்கிறான்
அது உனக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்

துதிப் பாடுபவனைக்
கொஞ்சம் எட்டியே வை
அவன் பாராட்டுக்கள் துளியும்
உன்னில் ஒட்டி விடாதபடி
எப்போதும் தட்டிவிட்டுக் கொண்டே இரு

ஏனெனில்

உன் செயல்பாடுகளில்
ஒரு அலட்சியம் வரவும்
அதன் காரணமாய்
உன் வேகம் குறையவும்
நிச்சயம் கூடுதல் வாய்ப்பிருக்கிறது

ஆலோசனை சொல்பவனிடம்
கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு
அவன் அலோசனைகள் எதையும்
அலசி ஆராயாது உன்னுள்
அடுக்கி வைக்கத் துவங்காதே

ஏனெனில்

முன் இருவரை விட
உன்னிடம் மிகவும் நெருங்கவும்
உனக்கே அறியாது உன் இலக்குகளை
மாற்றிவிடும் அதீத ஆற்றலும்
இவனிடம்தான் அதிகம் உள்ளது

Wednesday, January 14, 2015

தமிழர் திரு நாளிதன் உட்பொருள்

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்குக்  காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

அற்ப எல்லைகள்   கடந்து
நன்றியுடமையின்  பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

Monday, January 12, 2015

புதுப் பொங்கலில் பழைய உப்பு

மனவெளிக்காட்டினில்
மண் மேடாய் எண்ணங்கள்
சிந்தனை ஏர் நடத்தி
விதைத்து வைத்த கவி விதைகள்
கால வெள்ளத்தில்
 அழுகிச்  சிதைந்து     போமோ ?

எண்ணங்கள் கேள்வியாய்
உருமாறி என்னை
உசுப்பி விட்டுப்  போக
அகல  உழுதலை  விடுத்து
ஆழ உழுகிறேன்
கணபதியே நீயே துணை

இதய கட்டுத்தறியில்
எண்ணப் பாவுகள்
பொருட்சுவை இழையோட
நெய்துவைத்த கவியாடைகள்
கால நகம் பட்டுக்
கிழிந்தழிந்து போமோ ?

மனக் குளம் விழுந்த
சிறுகல் எழுப்பிய சிற்றலயையாய்
எண்ணங்கள் விரிந்து பரவ
அலட்சிய  பாவம் விடுத்து
அழுந்த நெய்கிறேன்
ஞானவேலா  நீயே கதி

மனப் பட்டறையில்
வார்ப்புகளாய் எண்ணங்கள்
அனுபவ உலையிலிட்டு
சீர் செய்த கவிதாயுதங்கள்
காலக் காற்றினில் துருவேறி
மண்ணாகி மக்கிப் போமோ ?

ஒண்ட வந்த கேள்விகள்
கரையானாய்  உடன் பெருகி
என்னை சாய்த்துவிடப்  பார்க்க 
ஓய்தலைவிடுத்து  ஆயுதத்தை
இன்னும் கூராக்குகிறேன்
கலைவாணியே  அருள் புரி 

Sunday, January 11, 2015

Pongal vizha

.




பாராட்டும் தொடர் ஊக்கமும்

சேவை இயக்கங்களில் மனமுவந்து தன்னை
இணைத்துக் கொண்டு சேவை செய்து வருபவர்கள்
எந்த பிரதி பலனையும் பாராட்டையும் எதிர்பார்த்துச்
செய்வதில்லை என்றாலும் கூட....

தொடரோட்டத்தில் இருப்பவர்களுக்கு சிறு நிழலும்
சிறிது தண்ணீரும் தொடர்ந்து ஓட உற்சாகமும்
கூடுதல் தெம்பும் தருவதைப் போல....

நான் தலைமைப் பொறுப்பேற்று செயல்படுத்திக் 
கொண்டிருக்கிற டிலைட் அரிமா சங்கத்தின்
நிர்வாகத்தையும் சேவையையும் பாராட்டி
மதுரை கடம்பவனத்தில் மாவட்ட அரிமா 
சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 
பொங்கல் விழாவில் நிகழ்வில் மாவட்ட ஆளுநர் 
டாக்டர். பி .ரகுவரன் பி.எம் ஜே ஃப் அவர்கள்
சிறப்பு விருது கொடுத்துக் கௌரவித்தார்கள்

அந்த நிகழ்வின் சில புகைப்படங்களை தங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்..

Saturday, January 10, 2015

அதிருப்தி எனும் அட்சயம்

ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னைப்
புரட்டிப்   போட்டுப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை
எங்கோ நீருபூத்துக்  கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரியத்  துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிவிட்டு
வேறொருவனாக்கிப்  போகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது.....

எப்போதும்
 எதிலும்
 என்றும்
திருப்தியடையாத
என்  கவிமனது

Friday, January 9, 2015

தாய்மை

அகன்று விரைந்து பரவி
ஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.

அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்

தான் முற்றாய்
மறைந்துபோனாலும்
அதன் முழு வளர்ச்சியில்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று  மகிழ்ந்தது ஒருகவிதை

அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்திப்  பொத்தி வளர்த்த பிள்ளை

சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

Tuesday, January 6, 2015

சிகரம் அடையச் சுருக்கு வழி

எவ்வளவு முழுமையாக
நுரையீரலிருந்துக் காற்றை
வெளியேற்ற முடியுமோ
அவ்வளவு வெளியேற்றுங்கள்

பின் இயல்பாக
தனக்குத் தேவையானக் காற்றை
நுரையீரல் தானகவே
நிரப்பிக் கொள்ளும்

எவ்வளவு அதிகமாக
உழைப்பாலோ உடற்பயிற்சியாலோ
பசியை மட்டும்
உண்டாக்கிக் கொள்ளுங்கள்

பின் நிறைவாக
தனக்குத் தேவையான உணவை
நமது இரைப்பைத் தானாகவே
நிரப்ப முயலும்

எவ்வளவு விரைவாக
பக்தியாலோ முயற்சியாலோ
அவ நம்பிக்கையை மட்டும்
அடியோடு விரட்டுங்கள்

மிக எளிதாக
நம்முள் கருகொண்ட
கனவுகள் யாவும்
நிஜமாகத் துவங்கும்

Monday, January 5, 2015

அதிசய விருந்துக் கூடம்

இந்த விருந்துக் கூடம்
அற்புதமானதாக மட்டும் இல்லை
மிக அதிசயமானதாகவும் இருக்கிறது

விருந்தாளியாய் வருவோரே
விருந்து கொடுப்பவர்களாகவும்
விருந்து கொடுப்போரே
விருந்தாளியும் இருப்பதால்

இந்த விருந்துக் கூடம்
புதுமையானதாக மட்டுமில்லை
புரட்சிகரமானதாகவும் இருக்கிறது

நண்பர்களை மட்டும்
அழைப்பாளர்களாய் கொள்ளாமல்
வருவோரையெல்லாம்
நண்பர்களாகக் கொள்வதால்

இந்த விருந்துக் கூடம்
பெருமைக்குரியதாக மட்டுமல்ல
பெருமைப்படுத்துவதாகவும் இருக்கிறது

விதிமுறைகள் இல்லையெனினும்
விதி மீறாதவர்களாலும்
வரையரைகள் இல்லையெனினும்
அதனை மீறாதோர் நிறைந்திருப்பதால்

ஆம் இந்தப்

பதிவர் விருந்துக் கூடம்
வியப்பளிப்பதாக மட்டும் இல்லை
விரும்பத் தக்கதாகவும் இருக்கிறது

Friday, January 2, 2015

ஜென் சித்தப்பு ( 2 )

மதி நிறைந்த நன் நாளில்
அதி உன்னத இளங்காலை
சித்தப்புவின் வயதொத்தவர் எல்லாம்
அந்தச் சித்திரை வீதியில்
சிவப்பழமாய் பஜனை செய்தபடி
பவனித்துவர....

இவர் மட்டும் மொட்டை மாடியில்
வேர்க்க விறுவிறுக்க
ஸ்கிப்பிங்  ஆடிக்கண்டிருப்பதைப் பார்க்க
சித்திக்கு மட்டும் இல்லை
எனக்கும் கோபம்
பொத்துக் கொண்டு வந்தது....

சித்தி வழக்கம்போல் அடக்கிக் கொண்டாள்
என்னால் முடியவில்லை

என் முகச் சுளிப்பைக் கண்ட சித்தப்பு

"ஒன்று என் பக்கம் வா
அல்லது அவர்களுடன் போ
ஏனெனில் இரண்டும் ஒன்றுதான் "என்றார்

எனக்கு எரிச்சல் கூடிப் போனது
"அது எப்படி ஒன்றாகும்"
கோபம் கொப்பளிக்கக் கேட்டேன்

அவர் வேர்வையைத் துடைத்தபடி
நிதானமாகச் சொன்னார்

"அவர்கள் வீட்டினுள் அமர்ந்தபடி
கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிராது
வீதியில் மூச்சிரைக்க
நாமாவளி பாடுவதும்...

வீட்டினுள் இல்லாது
மூச்சிரைக்க  வெட்ட வெளியில்
நான் ஸ்கிப்பிங்க் ஆடுவதும்
நிச்சயம் ஒன்றுதான்

அது காரணம் அறியா காரியம்
இது காரணம் அறிந்த காரியம்"
என்றார்

"எனக்கு ஏதும் விளங்கவில்லை
விளங்கச் சொல்லக் கூடாதா ? "
என்றேன் எரிச்சலுடன்

சித்தப்பு சிரித்தபடிச் சொன்னார்

"விளக்கிச் சொல்லப்படும் எதுவும்
நீர்த்துத்தான் போகும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டவையே
நிச்சயம் நெடு நாள் வாழும் " என்றார்

நான் விளங்கிக் கொள்ள
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

உண்மையாகும் கட்டுக்கதைகள்

ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி   
எங்கோ ஒரு  மலைக் குகையில்
 உயிரை ஒரு கிளியிடம் வைத்துவிட்டு 
உல்லாசமாய்  உலவித் திரிந்த
அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளி என்பது 
சாத்தியமற்றதென்றும்
இது ஒரு  அர்த்தமற்றக் 
கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
சாரமற்ற  என் படைப்பினுக்கும்
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
என்னுள்  ஒரு மாறுபட்ட சிந்தனை
மெல்ல மெல்ல மலரத்தான் செய்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ இருக்கும் உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது
அன்பிருந்தால்  நிச்சயம் சாத்தியமென்று
புரியத்தான் செய்கிறது

இப்போதெல்லாம்
அந்த அரக்கனின் கதை கூட
சாத்தியமென்றேப் படுகிறது எனக்கு 

Thursday, January 1, 2015

0...600...1000....... ?

சட்டெனத் துவங்கி
அதே வேகத்தில்
சட்டென விட்டுப் போகும்
மேதைகளை விட

நிதானமாகத் துவங்கி
விடாது தொடரும்
 "சராசரிகளும்
"அரைகுறைகளும் "

நிலைக்கவும் சாதிக்கவும்
வாய்ப்பு உண்டு என்பதற்கு
அடியேனே பதிவுலகில்
ஒரு அசலான சாட்சி

யானை நடந்து
விழாத தடங்கள்
எறும்பின் தொடர் ஊறலில்
சாத்தியமாவதைப் போல

தொடர்ந்த பாராட்டு
ஒரு சப்பாணியையும்
புயல் வேகத்தில்
ஓட வைப்பதைப் போல

மிகச் சரியாய் ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவன் கூட
தேக்கு விற்பான் என்னும்
அந்த அனுபவ மொழியினைப் போல

600க்கு மேற்பட்ட பதிவுகளுடன்
104 நாடுகளில்
400 க்கும் மேற்பட்ட தொடர்பவர்களுடன்

25000 க்கு மேற்பட்ட பின்னூட்டங்களுடன்
274000 க்கு மேற்பட்ட பக்கப்பார்வையுடன்

ஜீ + இல் 559 தொடர்பவர்களுடன்
ஐந்து  இலட்சத்து இருபதாயிரத்திற்கு
மேற்பட்ட பக்கப்பார்வையாளர்களுடன்..

நான் தொடர்ந்து
பயணிப்பத்துக் கொண்டிருப்பது
நிச்சயம் திறமையினால அல்ல
பாண்டித்தியத்தினாலும் அல்ல

எல்லாம் உங்கள்
தொடர் அன்பினாலும்
அரவணைக்கும் பண்பினாலுமே
என்பதை முழுமையாய் அறிவேன்

இந்தப் புத்தாண்டுத் தினத்தில்
உங்கள் அனைவருக்கும்
என் நன்றியினைக் காணிக்கையாக்குவதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

"கசடறத் தொடர்ந்துக்
கற்றலைத் தொடர்வோம்
பயனுறப் பகிர்ந்து
மென்மேலும் உயர்வோம் "

வாழ்த்துக்களுடன்......