Monday, February 29, 2016

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

சலனமின்றி  எப்போதும்போல்
காலம் நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
சவமாகிப்  போனது
அந்த மணிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

வார்த்தைகளற்ற
உன்னத இசையின் ஒலியில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாமே  நான்  என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனியாதிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்
"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள்
சுமைதாங்கிகள்
அளவீடுகளின்
எல்லையினை
சக்தியினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழ்வைப் புரிந்தவனாகிப் போக
அறியாதவனோ   அற்பனாகிப்போகிறான்

Sunday, February 28, 2016

மரமும் மனிதனும்

ஜடமாக உபயோகமற்று
 நிற்கும் மனிதனை
மரத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.

ஆயினும் அது
மரத்தினை இழிவுபடுத்துவதாகவே அமையும்

மனிதனின் கழிவுகளைக் கூட
மனிதனுக்கான்
உயிர்காக்கும் உணவாக்கும் சூட்சுமம்
மரங்களுக்கு மட்டுமே தெரியும்

கிடைக்கிறவைகளை யெல்லாம்
உண்டு அனுபவித்துச் சுகித்து
கழிவுகளை  விருத்தி செய்யவே
மனித உடலுக்குத் தெரியும்

நீரிட்டு வளர்த்தவனைக் கண்டு
பூவாகிச் சிரிக்கவும்
கனியாகக் கொடுத்து இரசிக்கவும்
உயிருள்ள மரங்களுக்குத் தெரியும்.

படைத்துக் காத்தவர்களையே
மறக்கவும் இகழவும்
ஒதுக்கிவைத்து  வாழவுமே
ஆற்றவு மனிதனுக்குத் தெரியும்.

வெட்டுப்பட்டால்   கூட
நிலையாகி,சிலையாகி

பட்டுவிட்டால் கூட
விறகாகி உரமாகி

தன் வாழ்வினை
அர்த்தப்படுத்தும் வல்லமை
புனித மரங்களுக்கு உண்டு

இறந்த பின்பும் கூட
எதற்கும் பயனற்று
சகிக்கவொண்ணாப்  பொருளாகி
 தன் இருப்பை
சுமையெனச் செய்யும் வல்லமை
மனித உடலுக்குமட்டுமே உண்டு

இனிமேல் தயவுசெய்து
விளையாட்டாகக் கூட
ஜடமாக நிற்கும் மனிதனை
மரங்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

ஏனெனில்
அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.

Saturday, February 27, 2016

விஜயகாந்த் அண்ணே....

நானும் நம்ம மதுரைதான் அண்ணே.

கண்கள் சிவப்பேற ஆரம்ப கால சினிமாக்களில்
கொடியவர்களைப்  பந்தாடுவதையும்
காக்கிச் சட்டையில் ரவுடிகளையும்
போலி அரசியல்வாதிகளையும்
போட்டுத் தாக்கியதையும்
ரசித்து புரட்சித் தலைவருக்கு அடுத்து
உங்கள் படங்களைத்தான்  அண்ணே
அதிகம் பார்ப்பேன்

பின் கொஞ்சம் நகர்ந்து நடிகர்
சங்கத் தலைவர் ஆனது
அது வைத்திருந்த கடனை அடைத்தது
எல்லாம் தங்கள் மதிப்பை என்னுள்
கூட்டியது  நிஜம்தான் அண்ணே

அணி மாறி நின்னு பின்னால தனித்து
நின்னு நீங்க செய்த அரசியலையெல்லாம்
விரிவா எழுதனும்னா அதிகப் பக்கம்
ஆகிடும் அண்ணே.அதனால அதையெல்லாம்
விடுத்து நேரடியாக இப்ப விஷயத்துக்கு
வரேன் அண்ணே.

இப்படியெல்லாம் அறிந்தோ அறியாமலோ
அல்லது அரசியல் சூழலினாலோ அல்லது
சுய நல ஆதாயத்துக்காகவோ நீங்க
மாறி மாறி நின்னதுனால உங்களுக்குன்னு
ஒரு ஓட்டு சதவீதம் இருக்குன்னு
எல்லோருக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே

உங்களுக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே
அதனாலதான் நீங்களும் இப்ப ரொம்ப
போங்கு ஆட்டம் போடறிங்க  அண்ணே

ஆனா இப்ப மிகச் சரியா முடிவு எடுக்காட்டி
அது தலைகிழா மாறவும் தரிசாப் போகவும்
நிச்சயம் வாய்ப்பிருக்கு அண்ணே

எனக்குத் தெரிய தமிழகத்தில்
ஒவ்வொரு ஜாதிக்கும்
ஒரு பெல்ட் இருக்குண்ணே

உங்க இனத்துக்கு மட்டும் ஒரு பெல்ட்டுன்னு
இல்லாம பரவலா இருக்கிறது மட்டுமல்லாம
எண்ணிக்கை ரீதியாக நடுத்தர மக்களாகவும்
இன்னும் உழைக்கும் மக்களாகவும்
கணிசமான பணக்கார்களாகவும் பரந்து
கிடக்குண்ணே

அதனாலதான் புரட்சித்தலைவரை
தி.மு.கவே எதிர்த்து போராட்டம் நடத்தத்
தயங்கியபோது நாராயணசாமி நாயுடுவாலே
ஒரு பெரிய இயக்கத்தை தலைவருக்கு எதிரா
நடத்த முடிந்தது

தி.மு.க வில் சுப்புவுக்கு  (பின் அதிமுகவில்  )
மிக மோசமாக மின்சாரத்துறை இருந்தபோதும்
ஆற்காட்டாரை விடாது கலைஞர்
 தாங்கிக்  கொண்டிருந்ததெல்லாம்
மறைமுகமாகஉங்கள் ஜாதியைத்
திருப்திப்படுத்தத்தான் அண்ணே

வை.கோ அவர்கள் பிரிந்தபோது கூட
எல்லா கட்சியிலேம் நம்ம கறிவேப்பிலைபோல
பயன்படுத்தறாங்க, இதோ நமக்குன்னு
ஒரு தலைவர்ன்னுஅவர் பின்னால
போனாங்க அண்ணே

அவர் பாவம் நிலைமை புரியாம
மோசபோட்டொமியா,கிரீஸு,மார்க்ஸுன்னு
புலி சிங்கம்முன்னு  கவுண்டமணி
மாதிரி உள்ளூரைபத்தியே பேசாம
 வெறுப்பேத்தி நோகவிட்டுட்டாரு அண்ணே

அதுல வேறுத்துப் போனது பெரும்வாரி  ஜனம்
உன்னை நம்பி உங்கப் பக்கம் இருக்கு அண்ணே

இதை மனசுல வைச்சு முடிவு எடுங்க அண்ணே
நிலைமைய கொஞ்சம்  தெரிஞ்சுக்க  அண்ணே

இல்லாட்டி முன்னால சொன்னவங்க
நிலைமைதான் உங்களுக்கும் அண்ணே

எங்களுக்கு அதுல சந்தேகம் இல்ல அண்ணே

Friday, February 26, 2016

சிரிப்பின் பலமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Thursday, February 25, 2016

எதிர்மறையே எப்போதும் முன்னே வா...

பசியே வா.....

ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி

எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா......

இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி

நான அன்பின் ஆழமதை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா......

உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்

இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா.....

நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.

அசுர வெறியோடு தேடிப் போராடி
நானாக பூரணமாய்  அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா......

பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே இரு

நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர  வேண்டும்

Wednesday, February 24, 2016

அவரவர் அளவுக்கு ......

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்

நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"என்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
அரசியல்  தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்துக்  கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

Tuesday, February 23, 2016

ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள் மன்றம்

 ஊற்று வலையுலகஎழுத்தாளர்கள்  மன்றத்தின்
( மலேசியா )சார்பாகத்   தைப்  பொங்கலை
முன்னிட்டு  நடைபெற்ற கவிதைப் போட்டியில்
என்னையும் நடுவராக இருக்கப்
பணித்த   நிர்வாகிகளுக்கு  என் நன்றியைக்
காணிக்கையாக்கி  போட்டியின்  முடிவுகளை
வெளியிடுவதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வெற்றி வாகைச்  சூடிய   மற்றும்   போட்டியில்
பங்கு கொண்ட   கவிஞர்கள்கள்  அனைவருக்கும்
என் மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள்




கவிதைகளைப்  படித்து இரசிக்க  ....
http://ootru1.blogspot.com/2016/02/blog-post.html


Monday, February 22, 2016

கலிகாலத்தில் பிழைக்கும் வழி

மன வயிற்றில்
கொதிகலனாய் எரியும்
தன் முனைப்புப் பசிக்கு
இரைதேடி
வெறிபிடித்தலையும்
மிருகங்களுக்கு
ஞான போதனை செய்து
வெறிகூட்டிவிடாது
கொஞ்சம் உணவிட்டு விலகிப்  போ

அது தவறென நிச்சயம் தெரிந்தாலும்...

நம்பிக்கைத் துரோகம்
எதிரிக்குச் சாத்தியமில்லை
உடன் ஒட்டித் திரியும்
நண்பானாலேயே
ஆகச் சாத்தியம் எனத் தெரிந்தும்
மனம் சுருக்காது
இருப்பதில் சிலவற்றை
இழக்கவென்றே   எடுத்து  வைத்திரு...

அது  ஏமாளித்தனம் எனத் தெரிந்தாலும்...

பகுத்தறிவாளனின்  பகல்வேஷமும்
பக்திமானின்  கபட வேஷமும்
ஏமாற்றுக் காரர்களிடம்
சிக்கிவிட்ட சாகச முகமூடி எனச்
சந்தேகமின்றித் தெரிந்தாலும்
ஒருபக்கமும் சாயாதிரு
வீட்டுக்குள் விபூதியும்
வெளியிடத்தில் கருப்புச்சட்டையுமே
பிழைக்கும் வழியெனப் புரிந்து கொள்....

இது பச்சோந்தித்தனம் எனத் தெரிந்தாலும்....

சமத்துவமும் சகோதரத்துவமும்
அடிமனதில் இருந்தாலும்
கண் சிவப்பையும்
முறுக்கு மீசையையும்
பார்வையில் இருக்கும்படி
எப்போதும் பராமரி
பிரச்சனைகுரியவன் எனும்படியான
பாவனைப் பராமரிப்பே
கலிகாலத்தில் பிழைக்கும் இராஜரகசியம்...

இது மனதிற்கு ஒப்பவில்லை என்றாலும்.

Sunday, February 21, 2016

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வுப்   பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாரியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பானமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ

கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ

வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைப் பெண்ணே......

உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்

என்றும்போல உன் அருளை
எமக்கும் நீ வாரிவழங்கிச் செல்



Saturday, February 20, 2016

ஊரான் வீட்டு நெய்யே.. ......

ஒரு பிரபலமான சோப்புக் கம்பெனியில்
ஒரு பெரும் பிரச்சனை.

சோப்பின் தரம்,சோப்பின் பெயர், மார்கெட்டிங்
எல்லாம்மிகச் சிறப்பாக இருந்தும்,எவ்வளவுதான்
கவனமாக இருந்தும்,இயந்திரத்தில் ஏற்படும்
சில தவறுதல்கள் காரணமாக சில சோப்பு பேக்கில்
சோப்பு இல்லாமல் மார்கெட்டுக்குப் போய்விடுகிறது.

இதனால் ஏற்படும் கம்பெனியின் மெரிட்
குறைவினைச்சரி செய்ய அந்தக் கம்பெனியின்
 உயர் மட்டஅதிகாரிகள் கூடி  விவாதித்து
முடிவுக்கு வந்தார்கள்

அதன்படி சோப்பு முடிவாக பேக் ஆகி செல்லும்
இடத்தில் எக்ஸ்ரே கருவியையப் போன்று ஒரு
கருவியை நிறுவுவதென்றும் அதன் மூலம்
சோப்பு இல்லாத பேக்கைக் கண்டு பிடித்து
எடுத்துவிடலாம் எனவும்,அதற்குச் சில இலட்சங்கள்
செலவாகும் என்றாலும் கம்பெனியின் தரம்
நிலை நிறுத்தப்படும் என்பதால் அந்தச் செலவு ஒரு
பெரிய பிரச்சனையில்லை என முடிவு செய்தார்கள்

அந்த உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டும்
எப்போதும்கீழ் நிலை ஊழியர்களிடம் கலந்து பேசி
ஒருபிரச்சனைக்குத் தீர்வு கண்டால் அது
நடைமுறைக்குச் சாத்தியப்பட்டதாக இருக்கும்
என்கிற கருத்துக் கொண்டவர்.

அதனால் எப்போதும் கீழ் நிலை ஊழியர்களிடம்
கேண்டீனில் டீ சாப்பிடுகிற சாக்கில் எப்போதும்
அவர்களுடன் ஒரு சுமுக உறவினையும்
தொடர்பினையும் வைத்திருப்பார்

அதன்படி  மறு நாள் கேண்டீனில் டீ சாப்பிட்டபடி
இந்தக் காலி டப்பா பிரச்சனைக் குறித்தும்,அதற்கு
ஒரு மிஷின் வாங்க இருக்கிற விஷயம் குறித்தும்
மெல்லச் சொல்ல...

ஒரு ஓரம் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த
ஒரு தொழிலாளி

" ஐயா நாங்களும் இது விஷயம் கேள்விப் பட்டோம்
எக்ஸ்ரே மிஷினுக்கு என அத்தனை இலட்சங்கள்
செலவு செய்வதற்குப் பதிலாக , சோப்புபேக் ஆகி
வருகிற இடத்தில் கொஞ்சம் வேகமாக
காத்துவரும்படி ஏற்பாடு செய்தால்
காலி டப்பா விழுந்து விடும்
அதற்கு அதிகம் செலவாகாது.சரியாகச் சொன்னா
ஒரு ஃபேன் செலவுதான் " என்றார்

அந்த அதிகாரி இந்த சின்ன விஷயம் நமக்கு
எப்படித் தோன்றாது போயிற்று எனவெட்கப் பட்டுப்
போனார்

இந்தக் கதை இப்போது எதற்கெனில்..

நமது தமிழ் நாடு அரசு பல ஊதாரிச் செலவுகள்
செய்துஇலட்சம், கோடியென கடன் தொல்லையில்
இருக்கிற நிலையில், தமிழில் பெயர் வைத்தால்
அந்தத் திரைப்படத்திற்கு வரி விலக்கு எனச்
சொல்லி பல இலட்சம் வருவாயை வீணாக்குவதை விட
தமிழ் அல்லாது வேறு மொழியில் பெயர்
இருக்குமானால்கொஞ்சம் வரி கட்டணும் எனச்
சொன்னால் வீண் செலவுகள் குறையுமே

கோடிக் கோடியாய் நடிகர் நடிகையருக்கு
கருப்புப்பணம் கொடுத்து படம் எடுக்கும் நபருக்கு
எதுக்கு மக்கள் பணத்தை வீணாய்க்
கொட்டித் தொலைக்கணும் ?

தமிழில் பெயர் வைப்பதும் நிச்சயம் தொடருமே

இதை  இவர்கள் யோசிக்காததன் காரணம்
தலைப்பில் சொன்னதுதான்......

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரன்

 நாட்டு நிலையறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்திகள்  கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
எதற்கோ ஏங்கித தவிக்கிறது  ?

இருப்பதையெல்லாம்
முற்றாக மறந்துவிட்டு
பறப்பதைப்   பிடிக்கத் துடிக்கிறது  ?

காரணம் அறிந்தவன்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கிறான்

காரண்ம் அறியாதவனே
 சிம்மாசனதிலமர்ந்தும்
 பிச்சைக்காரனாய்  தினம்புலம்பித் தவிக்கிறான் 

Thursday, February 18, 2016

மறை பொருள்

புரிகிறபடி மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவையெல்லாம்
அலட்சியத்தால்
கவனமின்மையால்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக

புதிராக  துளியும் புரியாதபடி
 சொல்லப்படுபவைகள்தான்
ஆர்வத்தால்
கூடுதல் கவனத்தால்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

பட்டப் பகலில் வெட்ட வெளியில்
எவ்வித குழப்பமுமின்றி
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
நம் கவனத்தைக் கவராது போக

நடுஇரவில்  கரிய இருளில்
மின்னித் தொலைக்கும் ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால் தான்
நம் கற்பனையை அதிகம் தூண்டிப் போகிறதோ ?

அண்டசராசரங்களாயினும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட

அவரவர்கள் தகுதிக்கேற்பவும்
முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
முடிவான எண்ணத்தில் தானோ ?

Tuesday, February 16, 2016

ஆயாசம்

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம் 
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்

"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"

பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"

ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி

தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்

"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் "  மூத்த மகன்

கண் கலங்கியபடி பேரன் மட்டுமே 
"அதனையே  "பார்த்துக் கொண்டிருந்தான்

"அதுக்கும் " கூட
"அதன்  "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது

அம்மணமானவர்களின் ஊரில்.........

மந்தைகளாய்த் தொண்டர்கள் இருத்தலே
தான் தலைவானாகத் தொடர்வதற்கான
மிகச் சரியான தகுதியென்பதில்
தலைவர் மிகக் கவனமாய் இருந்தார்

அதுவரை எதிரியாயிருந்த அணியுடன்
கூட்டு சேரவேண்டிய அவசியம் குறித்து
அடுக்குமொழியில் மிக அழகாகக்
காரணங்களை  அவர் அடுக்கிப் போக
தொண்டர்கள் "அசந்தே" போயினர்

கரகோஷத்தை எதிர்பார்த்த தலைவருக்கு
அவர்களின் மௌனமான சம்மதம்
சங்கடமளிக்க, அதிர்ச்சியளிக்க,
புரியவில்லையோ என்கிற குழப்பத்தில்
கதை சொல்லி விளக்கத் துவங்கினார்

"நமக்கும் அவர்களுக்கும் இடையில்
கொள்கைகளில் கோட்பாடுகளில்
மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது\
அது குறையவில்லை
அதை நான் மறுக்கவுமில்லை
ஆனாலும் கூட
பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காக
நாம் ஒன்று சேருவது என்பது
காலத்தின் கட்டாயம் "
என்ற முன்னுரையோடு
கதை சொல்லத் துவங்கினார் தலைவர்

"ஒரு கிராமத்து தோட்டத்தில்
செழித்து வளர்ந்திருந்தது ஒரு வாழைமரம்
அதன் அடியில் கிடந்தது ஒரு மண்ணாங்கட்டி
இருவரும் அருகருகே இருந்தும்
இருவரும் எதிரிகளைப் போலிருந்தனர்
ஒருவருக்கொருவர் உதவியாயில்லை
இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட
ஆதிக்க மனம் கொண்ட
காற்றும் மழையும் அவைகளை ஒழிக்கப் பார்த்தன
காற்றில் வாழை சாய்வது குறித்து
மண்ணாங்காட்டி கவலைகொள்ளவில்லை
மழையில் மண்ணாங்கட்டி கரைவது குறித்து
வாழையும்  வருத்தப்படவில்லை
அவைகள் அழிந்து கொண்டிருந்தன

அந்த சமயத்தில்தான் நம் போல
சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அந்த வாழைக்கும் வந்தது

"மண்ணாங்கட்டி நாம் மிக அருகில் இருந்தும்
சிறு சிறு வேறுபாடுகளை பெரிதுபடுத்தி
மிக விலகிப்போய்விட்டோம்
அது இந்த ஆதிக்கக் காரர்களுக்கு
மிகுந்த வசதியாய் போய்விட்டது
இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது
காற்று பலமாக வீசினால் நீ என் மீது
சாய்ந்துகொள் நான் சாயமாட்டேன்
மழையெனில் நான் உன்னை மூடிக்கொள்கிறேன்
நீ கரையமாட்டாய்"  என்றது
அது போலவே நாமும் அவர்களும் ..." என
கதை சொல்லி முடிப்பதற்குள்
கரகோஷம் அரங்கத்தை அதிரச் செய்தது

மிகப் பெரிய கொள்கை விளக்கத்தை
ஒரு எளிய கதையில் சொல்லிய தலைவரின்
மதியூகத்தை எண்ணி தொண்டர்கள்
புளங்காகிதம் கொண்டனர்

தலைவர் பெருமையுடன் கூட்டத்தைப் பார்த்திருக்க
முன் வரிசையில் இருந்த தொண்டர் ஒருவர் எழுந்து
"தலைவா நீங்கள் சொல்வது மிகச் சரி
ஆனால் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால்
என்ன செய்வது ? " என்றான்

தலைவர் அதிர்ந்து போனார்
இப்படி யோசிக்கத் தெரிந்தவன் எப்படி நம்
கட்சிக்குள் வந்தான் எனக் குழம்பியும் போனார்
இதனை வளர விடுவது ஆபத்து என்பது
அவருக்குப் புரிந்து போயிற்று
அவரது பழுத்த அரசியல் அறிவும்
உடன் கைகொடுத்தது

"கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயலுகிற இவன்
நிச்சயம் நம் தொண்டனில்லை
எதிரிகளின் ஒற்றன்
இவனை அடித்து வெளியேற்றுங்க்கள் " என்றார்

வெறி பிடித்த கூட்டம் அந்த "முட்டாளை " நோக்கி
அதி வேகமாய் முன்னேறிக் கொண்டிருந்தது

Monday, February 15, 2016

நமைச்சல்..

தனித்துக்  காட்டவா  ?
உயரம் கூட்டிக் காட்டவா ?

எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓநாய்க்கு விருந்தளிக்கவா ?

கும்பலுக்குள்  ஓர் அடையாளம் தேடியா ?

மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?

யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?

செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?

அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?

புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?

போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?

நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
சொறியாது இருக்க முடியவில்லை
எப்படி யோசித்த போதும்
ஒரு காரணமும் தெரியவில்லை

ஆனாலும்
எழுதாது இருக்க முடியவில்லை

Sunday, February 14, 2016

மீண்டும் ஒரு காதல் கவிதை

பல்லவி கிடைத்த புலவன் போல
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்த பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன ஆகிறேன்

நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே

உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே

பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும்  நிகராமோ

(காதலர்களுக்கு   சமர்ப்பணம்  )

Saturday, February 13, 2016

நானும் கவியாய் மாறிப் போறேன் தினமே

ஆத்து நீரு போகும் போக்கில்
போகும் மீனைப் போல-வீசும்
காத்தின் போக்கில் நித்தம் ஓடும்
கருத்த மேகம் போல-உன்

நினைப்பு போகும் போக்கில் தானே
நாளும் நானும் போறேன்-அந்த
நினைப்பில் பிறக்கும் சுகத்தைத் தானே
பாட்டாத் தந்துப் போறேன்

வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும்
அழகு மலரைப் போல-இரும்புத்
துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும்
விந்தைக் காந்தம் போல-உன்

அழகு இழுக்கும்  இழுப்பில்  தானே
மயங்கி நானும் போறேன்-அந்த
சுகத்தில் விளையும் உணர்வைத் தானே
கவிதை யென்றுத் தாரேன்

மறைந்து கிடந்து வீட்டைத் தாங்கும்
அஸ்தி வாரம் போல-மண்ணில்
மறைந்து இருந்து மரத்தைக் காக்கும்
ஆணி வேரைப் போல-மறைந்து

எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே-நாளும் 
உந்தன் தயவில்  தானே கவியாய் 
உலகைச் சுத்தி வாரேன் 

Friday, February 12, 2016

வலையுலகம்....

இப்போது சினிமா பார்ப்பவர்களுக்கெல்லாம்
தெரியும் முதலில் நன்றி சொல்லும்போதெல்லாம்
பத்திரிக்கையாளர்கள்,ஊடகவியலார்கள்,
தொலைக்காட்சி நண்பர்களுடன்
வலைத்தள நண்பர்களுக்கும் மறக்காது
சொல்லிப் போவது....

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை

முன்னர் சொன்ன மூவரை விட மிக விரைவாக
அழுத்தமாக ஒரு படம் குறித்த விமர்சனத்தைத்
தருபவர்கள் வலைத்தள நண்பர்களே

விளையாட்டாகச் சொன்னால் சைக்கிள்
கேப்பில் என்பதைப் போல....

இடைவேளையில் கிடைக்கிற இடைவெளியில்
கூட அதுவரையிலான படம் குறித்த விமர்சனத்தைப்
பதிவு செய்வதைக் கூட நாம் படித்திருக்கிறோம்

காக்கா முட்டையின் வெற்றிக்கும்,
சூர்யாவின் ஒரு படம் பட்ட பாட்டுக்கும்
சிம்புவின் வம்பினை வீதிவரை கொண்டு
வந்ததற்கும் வலைத்தளமே,பத்திரிக்கைகளை விட
முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை

சமீபத்தில் சென்னையில்  நேர்ந்த வெள்ள அவலம்
குறித்து அதிகம் பதிவு செய்ததும்.
வேண்டுதல்கள் மூலம் அதிக உதவிகளைச்
சேர்த்துக் கொடுத்ததும் வலைத்தளம் மற்றும்
நமது சகோதர டுவிட்டரும்
முக நூலும் என்பது அனைவரும் அறிந்தததே

இப்படி சமூகத்தில் உடனடி பாதிப்பினை
ஏற்படுத்த வாய்ப்புள்ள பலமான சக்தியாக
வலைத்தளம் இருப்பதோடு அல்லாது...

தமிழின் அருமை பெருமை,தமிழரின் தொன்மை
குறித்து அறியவும் ,அறிந்து தெளியவும்
தவறின்றி மொழியினை எழுதப் பழகவும்
கவிதை இலக்கணம்,அருமையான கவிதைகள்
கட்டுரைகள் படித்துக் கற்றுத் தேறவும்  பயனுள்ள
தளமாக அல்லாது...

தூரம் தொலைவினை வெட்டிச் சாய்த்து
உலக அளவில் ஒருங்கிணையவும்,
நட்பைனை வளர்த்து உறவாடவும் அல்லாது..

இப்படி அல்லாது அல்லாது எனச் சொல்லிக் கொண்டே
போகிற அளவு சக்தி மிக்க ஊடகமான இந்த
வலைத்தளத்தினை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த
பயிற்சிப்பெறவும் ,அதன் மூலம் இந்தச் சமூகத்திற்கு
இன்னும் கூடுதலாக பயன்படும்படியாகச் செய்யவும்
நமக்கு ஒரு அமைப்புத் தேவை என்பதை அனைவரும்
அறிந்திருக்கிறோம்

அதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக
பதிவர் சந்திப்புகளை நடத்தி அதற்கான
அஸ்திவாரமும் அமைத்து விட்டோம்

புதுகை பதிவர் சந்திப்பு இன்னும்
அதிக நம்பிக்கையையும் வாய்ப்பின் வழிகளையும் ,
நமது பலத்தையும் மிகத் தெளிவாகக்
காட்டிவிட்ட பின்னும் அதன் தொடர்ச்சியாய்
காரியங்கள் தொடராது ஒரு தேக்க நிலையில்
இருப்பதற்குக் காரணமே இது குறித்து யோசிக்கவும்
செயல்படவும் பரவலாக அனைவரையும் உள்ளடக்கிய
ஒரு மைய அமைப்பு இல்லாததே என்பது
என் எண்ணம்

இது குறித்து அனைவரும் கருத்தினைப்பதிவு செய்தால்
அடுத்து அடுத்து செயல்பட வசதியாய் இருக்கும்

இப்போதிருந்து ஆரம்பித்தால் இன்னும் ஆறு மாதத்தில்
நடக்க இருக்கிற பதிவர் சந்திப்பில் ஒருமுழுமையான
முடிவுக்கு வரவும்,செயல்படத் துவங்கவும்
வசதியாக இருக்கும் என்பதாலேயே இந்தப் பதிவினை
இப்போது எழுத வேண்டி வந்தது

மூத்த பதிவர் ஜி எம்.பி.அவர்கள் இது குறித்து
பதிவிடுவதாகப் பதிவிட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது

அனைவரின் பதிவுகளையும்,ஆலோசனைகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்து....

Thursday, February 11, 2016

வலையுலகில் புலவரெனில்....

My Photo


பேராசிரியர் என எத்துனையோ பேர் இருப்பார்கள்
ஆனால் ஒரு இயக்கத்தில் பேராசிரியர் என்றால்
அது ஒருவரை மட்டுமே குறிக்கும்
(பெயர் சொல்ல வேண்டுமா என்ன ? )

அதைப் போல பதிவுலைகில் புலவர் என்றால்
அனைவருக்கும் தெரிவது
 புலவர் இராமானுஜம் ஐயா அவர்களைத்தான்.

சென்னை என்றால் நான் பதிவுலகிற்கு வரும் முன்பு
சில இடங்கள் தான் நினைவுக்கு வரும்.

பதிவுலகில் இணைந்தது முதல் சென்னை என்றால்
முதலில் நினைவுக்கு வருபவர்
 புலவர் ஐயா அவர்கள்தான்.

கூடுமானவரையில்  சென்னை
வரும்போதெல்லாம் அவர் இல்லம் சென்று
சந்திக்காமல் வந்ததில்லை

சிலர் வீடு கோவில் போல இருக்கும்,
சிலர் வீடு நூலகம் போல இருக்கும்
அதற்குக் காரணம் அவர்கள்
அதில் கொண்டிருக்கும் ஈடுபாடு.

அதைப் போல புலவர் ஐயா வீட்டிற்க்கு வந்தாலே
ஏதோ பதிவுலக அலுவலகத்தில்  நுழைந்தது போலவே
இருக்கும். நான் வந்திருக்கும் தகவலை உடன்
முக்கியப்  பதிவர்களுக்குத்  தெரிவித்து விடுவார்
உடன் ஒரு குட்டி பதிவர்கள்  சந்திப்பு போலவே
ஒரு இரண்டு மூன்று மணி நேரம் கடக்கும்

இடையிடையே அன்புடன் அவரது புதல்வி
அவர்கள் வழங்கும் புன்னகையுடன் கூடிய
சிற்றுண்டியும் காஃபியும் நாம் நம் இல்லத்தில்
இருப்பது போன்ற உணர்வினைத் தரும்

எண்பது வயதுக்கு மேலாகியும், முழுமையாக
உடல் ஒத்துழைக்கவில்லையாயினும்
அவர் ஒரு இளைஞரைப் போல பதிவுகளைத்
தொடர்வதும், பின்னூட்டமிடுவதும் பதிவர்கள்
அனைவருக்கும் நிச்சயம் ஒரு பாடமே

அவருடைய கவித் திறன் குறித்தோ
கவிஞர் வாலி அவர்களைப் போல இயைப்புத்
தொடை, மிக இயல்பாய் இணையும்படி
அவர் வடிக்கும் கவிதைகளின் சிறப்புக் குறித்தோ
இங்கு நான் குறிப்பிடப் போவதில்லை
காரணம் சூரியன் உதிப்பது கிழக்கு என்பதைப்போல
அது பதிவர்கள் அனைவருக்கும்
தெரிந்த விஷயம் தானே

ஆனால் தமிழ் ஆசிரியர் சங்கத்தில் மாநில அளவில்
தலைவராக இருந்து அவர் அந்தச் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் அவரை நெருக்கமாக
அறிந்தவர்களுக்கே தெரியும்

ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப்
பின்னால கூட(ஏறக்குறைய  இருபத்திரண்டு
ஆண்டுகள் ) அவரது மகத்தான பணிகள் குறித்து
புதுக்கோட்டைபதிவர் மா நாட்டில்
அங்கு வந்திருந்த தமிழாசிரியர்கள்
நினைவு கூர்ந்ததை அருகில் இருந்து வியந்தவன் நான்.

அத்தகைய மூத்த பதிவருக்கு
வலைப்பதிவர்களுக்கென ஒரு மைய அமைப்பு
வேண்டும் என்பது நெடு நாளைய கனவு

நான் அவரைச் சந்தித்த நாள் முதல்
இதற்கு முன்பு சந்தித்தவரை அது குறித்து
அவர் பேசாமல் இருந்ததில்லை

புதுகை பதிவர் சந்திப்பின் பதிவுகளில் கூட
அது குறித்து கோடிட்டுக் காட்டியிருந்தேன்

ஒரு மைய அமைப்பு ஏன் வேண்டும் ?
இந்தச் சூழல் அதற்கு சரியான நேரம் எப்படி ?
அதைச் செய்ய வல்லார் யார் ?
என்பது குறித்தெல்லாம் அடுத்த பதிவில்
எழுத உத்தேசித்துள்ளேன்

இதை படிக்கிற தாங்களும் அது குறித்து தங்கள்
ஆலோசனைகளையும்,நமது மூத்த பதிவர்
புலவர் அவர்களின்  பண்பு நலன்கள்
மற்றும் அவரது கவிதைச் சிறப்புக் குறித்து
விரிவாக பின்னூட்டமிடலாமே !

வாழ்த்துக்களுடன்...

Tuesday, February 9, 2016

ஜாம்பவானி தேனம்மை லெட்சுமணன்



எளிமையாகத் தோற்றமளிப்பவர்கள்
அடக்கமாகப் பேசுபவர்கள்
இவர்களுக்குப் பின்னே மிகப் பெரும்
சாதனைச் சரித்திரம்  இருக்கும் என்பது
எனது அனுபவம்.

அந்த வகையில் வை.கோ அவர்களைப் பற்றிய
பதிவில் பின்னூட்ட மிட்டவர்களில்
பதிவர் தேனம்மை லெட்சுமணன் அவர்களும்
மிகச் சாதாரணமாக அதிகப் பின்னூட்டம்
பெற்றவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
சார் என மட்டும் பின்னூட்டமிட்டிருந்தார்.

பதிவுலகில் 2009 இல்  இருந்து இன்றுவரை
ஒரு நிலையான இடத்தில் இருப்பவர்
அவர் என்பது  சிலருக்குத் தெரியும்.

ஆனால் உண்மையில் இத்தனைச்
சாதனைக்குச் சொந்தக்காரர் என்பது
எத்தனை பேருக்குத் தெரியும்

இவர் எழுதியுள்ள பதிவுகளின்
மொத்த எண்ணிக்கை 1800 க்கும் மேலே

இவரின் பதிவினைத் தொடர்பவர்கள்
680 க்கும் மேலே

இவரது பதிவினைப் பார்வையிட்டவர்களின்
எண்ணிக்கை ஐந்து இலட்சத்திற்கும் மேலே

கதை ,கட்டுரை, விமர்சனம், கவிதை
சமையல் குறிப்பு என இவர் எழுத்தில்
இவர் தொடாத இலக்கியப் பகுதிகளே
நிச்சயம் இல்லை

ஜி + இல் இவர் பகுதியில் இணைந்தவர்கள்
ஏறக்குறைய 2300 க்கும் மேலே

பக்கப் பார்வையாளர்களின் எண்ணிகையை
நிச்சயம்  மிகச் சரியாக யாரும்
 யூகிக்கவே முடியாது

(வேண்டுமானால் யூகித்துவிட்டுப் பின்
சரியா என சோதித்துப் பாருங்களேன் /postshttps://plus.google.com/102047366403381778289/posts


இத்தகைய அளப்பரிய வலைத்தள
சாதனையாளர் எழுதுகிற வலைதளத்தில்
நானும் ஏதோ ஒரு ஓரத்தில் பதிவர் என குப்பைக்
கொட்டிக் கொண்டிருப்பதே எனக்கு மிகப்பெரிய
சாதனையாகப் படுகிறது

பெருகட்டும் அவரது சாதனைப் பட்டியல்
வளரட்டும் அவரது பன்முகத் திறன்கள் என
என் சார்பாகவும் உங்கள் அனைவரின் சார்பாகவும்
அவரை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் 

Monday, February 8, 2016

சில உணர்வுப்பூர்வமான விஷயங்கள்

(ஆன்மீகப் பயணமாகப் புறப்பட்டிருக்கிற
மதிப்பிற்குரிய ஜி எம்.பி அவர்கள் மதம், கோவில் ,
அரசியல் தொடர்பாக சில விஷயங்களை
 பதிவிட்டிருப்பதைப் படித்தேன்
அதைத் தொட ர்ந்து என்னுள் எழுந்த
சில சிந்தனைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்
ஜி.எம். சி சாருக்கு   நன்றி )

என்னைப் பொருத்தவரை தமிழகத்தில்
மதப் பிரச்சனைக்குக் காரணமே நாத்திக வாதிகள்
ஆத்திகம் குறித்து அதிகம் பேசுவதும்
ஆத்திக வாதிகள் நாத்திக வாதிகள் குறித்து
அதிகம் கவலைப்படுவதும்தான்

அரசியலில் மதம் கூடாது  என்பது இங்கு
மதவாதிகளுக்கு மட்டும் சொல்லப்படுகிறதே ஒழிய
மத எதிர்பாளர்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்வதில்லை

அரசியலில் மதம் கூடாது என்பது
இருவருக்கும் பொருந்தும் தானே

அதைப் போலவே  கட்சிக் கொள்கையாக
மத எதிர்ப்பை வைத்துக் கொண்டு
 கோவில் கோவிலாக
குடும்பத்தினரை அனுப்பிவைப்பதை யாரும்
பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

குடும்பத்தினரைக் கூட மாற்ற இயலாத இவர்கள்
இது விஷயத்தில் சமூகத்தை மாற்ற போராடுவதைக்
கண்டும் காணாது இருக்கிற சமூகத்தை
என்ன சொல்வது ?

 மதத்தை எதிர்ப்பதன் மூலமே
தனது ஓட்டுவங்கியைக் காக்க முடியும் என சில
கட்சிகள் நினைக்கிறபோது....

மதத்தை  மிகவும் ஆதரிப்பதாக காட்டிக்
கொள்வதன் மூலமே தனது ஓட்டுவங்கித்
தக்கவைத்துக் கொள்ள முடியும்
என சில கட்சிகள் நினைக்கின்றன

அது சரி என்றால் இதுவும் சரி
அது தவறென்றால் இதுவும் தவறு

நமக்கு மத அரசியலும் வேண்டாம்
அரசியல் மதமும் வேண்டாம்

நம்பிக்கை இருக்கிறவர்கள் தொடரட்டும்
இல்லாதவர்கள் விலகட்டும்

மாற்ற முயற்சிப்பதே அவர் சரி
அடுத்தவர் சரியில்லை எனச் சொல்வது
போலத்தானே

கடவுள் ஒருவரே என அனைத்து மதத்தினரும்
சொல்லிக் கொள்வது சரி
அவர் இவர் மட்டுமே என்பதில் எனக்கும்
உடன்பாடில்லை

சில உணர்வுப்பூர்வமான   விஷயங்களில்
அறிவுப் பூர்வமாகவும்
அறிவுப் பூர்வமான விஷயங்களில்
உணர்வுப்பூர்வமாகவும்  யோசிப்பது
குழப்பமே விளைவிக்கும்

(ஆகையால்

ஜி.எம் பி சார் ஆன்மீகப் பயணத்தை
மிகச் சரியாக அனுபவிக்கவேண்டுமெனில்
ஆன்மீக வாதியாகவே பயணத்தைத் தொடருங்கள்

பயணத்தில் நெருடுகிற விஷயத்தை
வந்து விமர்சித்துக் கொள்ளலாம்

வாழ்த்துக்களுடன்...... )

Saturday, February 6, 2016

பதிவுலகப் பின்னூட்டங்கள் ..

பதிவுலகில் பக்கப் பார்வைகளும்
தமிழ்மண வாக்கும் பதிவின் தரவரிசைக்கு
முக்கிய காரணங்கள் என்றாலும்...
பின்னூட்டங்களின் எண்ணிக்கையே பதிவரின்
எழுத்துச் செல்வாக்கையும் பதிவின் தரத்தையும்
 நிர்ணயிக்கிறமுக்கிய காரணியாக நான் கருதுகிறேன்

ஏறக்குறைய ஆறு ஆண்டுகள்
எழுதிக் கொண்டு வந்தாலும் நான் என் ஒரு பதிவில்
பெற்ற அதிகப் பட்ச பின்னூட்டம்
அனேகமாக  நூறு மட்டுமே இருக்கும்.
அதுவும் என்னுடைய பதில்
 பின்னூட்டங்களும் சேர்த்து..

அந்த வகையில் இன்று  மதிப்பிற்குரிய
பதிவுலகப்பிதாமகர் அவர்களின் பதிவுக்கு
நான் பின்னூட்டபோது
அது 231 ஆக இருந்தது அதிக மகிழ்ச்சியையும்
ஆச்சரியத்தையும் அளித்தது
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

மத ரீதியாக முரண்பட்ட விஷயத்தை முன்வைத்த
பதிவுகள் அன்றி நேர்மறையான ஒரு பதிவுக்கு
அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு இதுவாகத்தான்
இருக்கும் என நினைக்கிறேன்

இந்த வகையில் பதிவின் தரவுகள் குறித்து
முழுமையான தகவல் தர முடிந்த பதிவர்கள்
(மிகக் குறிப்பாக  திண்டுக்கல் தன்பாலன்,
தமிழ் இளங்கோபோன்றவர்கள்  )
அவர்களுக்குத் தெரிந்து அதிகப் பின்னூட்டங்கள்
பெற்றப் பதிவுகள் இருந்தால் பதிவிடலாமே

அது அந்தப் பதிவுகளைப் படிக்கவும்
அந்தப் பதிவரைத் தொடர இணைப்பினை
 ஏற்படுத்திக் கொள்ளவும்
 வசதியாய் இருக்கும் தானே ?

உயர்ந்தவர்கள்...

நான் ஏற்கெனவே சென்னை வெள்ள
 நிவாரணப் பணிக்காக அரிமா சங்கமும்
வில்லாபுரம் குடியிருப்போர் நலச் சங்கமும்
இணைந்து பொது மக்களிடம் தெருத் தெருவாகச்
 சென்றுநிவாரணப் பொருட்களைச் சேகரித்து
அனுப்பிய விவரத்தைப் பதிவிட்டிருந்தேன்.

எங்கள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையின்
 காரணமாகமுடிந்த அளவு நிதியும்,
அதிக அளவில் நிவாரணப் பொருட்களும்
வழங்கியவர்கள் மனதில் நீங்கா  இடம்
பெற்றிருந்தாலும் கூட..
( ஏறக்குறைய பதினைந்து   இலட்சம் )

அப்படி வசூலித்துச் செல்லுகையில்
ஒரு மசூதியின் வாயிலில்பிச்சை எடுத்துக்
கொண்டிருந்த ஒரு பெண் தன் அருகில்
இருந்த மகளிடம்  இருபது ரூபாயைக் கொடுத்து
உண்டியலில்போடச் சொன்ன நிகழ்வு
இன்று வரை மனதைத் தொடும்
நிகழ்வாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது

அதற்குப் பின் நடந்த ஒவ்வொரு கூட்டத்திலும்
இந்த நிகழ்வைபதிவு செய்து கொண்டே வந்தேன்.

அதன் படியே நேற்று மதுரை ஃபாத்திமா மைக்கேல்
மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த  மாவட்ட லியோ
சங்கத்  துவக்க விழாவில்  கலந்து கொண்ட
இந்திய அளவில்மாநில அளவில் உயர் பதவியில்
இருக்கிற அரிமாதலைவர்களிடமும் இதை ஒரு
 செய்தியாக மட்டும் பதிவு செய்தேன்.

இதனை மிக அருமையாக தன்
சொற்பொழிவின் போதுசுட்டிக் காட்டி
நெகிழ்ந்த பள்ளித் தாளாளர்
லயன்.ஸ்டாலின்  ஆரோக்கியராஜ் அவர்களின்
பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த லியோ
கூட்டு மாவட்டத் தலைவர்  லயன்.மனோஜ்  அவர்கள்
மிகச் சரியாகஅந்தப் பெண்ணிடம் போய்ச்
சேரும்படியாக ஏற்பாடுசெய்து கொடுத்தால்
அந்தப் பெண்ணின் வாழ் நாள்
முழுமைக்கும் ஒருவேளை உணவுக்கான
ஏற்பாட்டினைத் தன் சொந்தப் பொறுப்பில்
செய்து தருவதாகஅந்த மேடையிலேயே
உறுதியளித்தார்.

அதற்கான ஏற்பாடுகளை இந்த வாரத்தில் செய்து
முடித்து விடுவேன் என்றாலும் இந்த நிகழ்வின் மூலம்

"நல்லவைகளை, நல்லவர்களை எத்தனை முறை
நினைவு கூற முடிந்தாலும் நல்லதே
ஏனேனில் அது தொடர்ந்து நல்லனவற்றையே
தொடர்ந்து விளைவித்துக் கொண்டே போகும் "

என நான் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீண்டும்
உறுதி செய்து போனது மிகுந்த மகிழ்வளிக்கிறது

இதனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
கூடுதல் மகிழ்வடைவேன், நீங்களும் மகிழ்வீர்கள்
என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா என்ன ?




( பேசிக்கொண்டிருப்பவர்  தாளாளர்
லயன்  ஸ்டாலின்  ஆரோக்கியராஜ்  அவர்கள்
முன் வரிசையின் வலது  ஓரம் அமர்ந்திருப்பவர்
லயன் மனோஜ்   அவர்கள் )