Sunday, July 27, 2014

துரோகம் ( 11 )

மிக மிக வேகமாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த
சுப்புப்பாட்டி சட்டென ஒரு நீண்ட பெருமூச்சை
விட்டுச் சிறிது நேரம் மௌனமானார்

இப்படியானால் நிச்சயம் ஏதோ ஒரு அழுத்தமான
பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார் என்பது
எங்களுக்கும் பழகிப் போயிருந்ததால் நாங்களும்
அவராக தொடரட்டும் என மௌனம் காத்தோம்

எதிர்பார்த்தபடி மீண்டும் சம நிலைக்கு வந்த
சுப்புப்பாட்டி கதையைத் தொடர ஆரம்பித்தார்.

"சில முக்கிய நிகழ்வுகள் சிலரை முன்னிலைப்படுத்தும்
அதைப்போலவே சிலரால்தான் சில நிகழ்வுகள்
முன்னிலைப்படுத்தப்படும்னு பெரியவா சொல்வா.

ராமாயணத்திலே கைகேகியும் பாரதத்தில் சகுனியும்
இல்லையானா கதை சுவாரஸ்யப்படுமா என்ன ?

இங்கே இந்த மீனா விஷயத்திலே சுந்தரமையர்
இல்லையாட்டி இது விஷயம் யாருக்கும் எதுவும்
நிச்சயம் தெரியாமலேயே போயிருக்கும்

அன்று காலையில் அவர் வந்ததும் கூட ஒருவேளை
பாலமீனாம்பிகையின் வழிகாட்டுதலால் கூட
இருக்கலாமோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி
தோணுவதுண்டு

அதிகாலைப் பூஜைக்கு வீட்டிலிருந்து கோவிலுக்கு
வரவேண்டிய காசி ஐயர் கோவிலிருந்து வீட்டிற்குப்
போறதும் இந்த நேரம் குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருக்கிற மீனாஅவங்க அப்பா கூட
இருக்கிறதும் சுந்தரமையருக்கு இதிலே ஏதோ
விஷயம் இருக்குன்னு பட்டிருக்கு

சும்மாவே ஆடறவன் கொட்டடிச்சா
கேட்கவா வேணும்னு
கிராமத்திலே ஒரு பழமொழி சொல்லுவா
அதை மாதிரி எங்கேடா வம்பு கிடைக்கும்னு அலையிற
பிரகிருதி இந்த சுப்பையர்.சும்மா இருப்பாரா ?

வழக்கம்போல பிரத்தட்சிணமா சுத்தி முறைப்படி
போகிற பொறுமை அவருக்கில்லை.ஏற்கெனவே
சன்னதி நீரோடையச் சரி செய்யப்போகிற விஷயம்
எல்லோரையும் போல அவருக்கும் தெரியும்கிறதுனாலே
சட்டென நேராகவே அம்பாள் சன்னதிக்குப்
போயிருக்காருடி

அவருக்கு அந்த சாரப்பலகையைப் பார்த்ததும்
அதிகச் சந்தேகம்.யாரும் சன்னதியில் இல்லாதது
அவருக்கு ரொம்ப வசதியாகப் போயிருக்கு
சட்டென பலகையைத் தூக்கிப்பார்த்தா பெரிய பள்ளம்
அபிஷேக நீர் போனா பள்ளம் விழ வாய்ப்பிருக்கு
ஆனா இவ்வளவு பெரிய பள்ளத்திற்கு
நிச்சயம் வாய்ப்பில்லையேன்னு அவருக்கு சட்டென
ஒரு சந்தேகம்.நிச்சயம் உள்ளே இருந்து ஒரு
கனமான பொருளை எடுத்திருக்கா.அதை மூட
அதிக மண் தேவைப்பட்டதாலே நேரம் இல்லாததாலே
பலகையை வைச்சு டெம்பரவரி வேலை என்னவோ
பண்ணி வைச்சிருக்கான்னு அவருக்குப் புரிஞ்சு போச்சுடி

காசி அய்யர் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டுப்
போனதை வைச்சு நிச்சயம் என்னவோ நடந்திருக்கு
அதுவும் போக அவர் போகையிலே கையில் ஏதும்
இல்லாததுனாலே அப்படி எதை எடுத்திருந்தாலும்
நிச்சயம் அது கோவிலைவிட்டு வெளியேற
வாய்ப்பில்லைனு அவருக்கு திட்டவட்டமா
புரிஞ்சு போறது.விடுவானா மனுஷன்

அம்பாள் சன்னதி,சுவாமி சன்னதி நடராஜர் சன்னதி
முன்னால இருந்த தகர சப்பர ஷெட் எல்லாம்
சல்லடைபோட்டு அலசிப் பார்த்தும்
ஒண்ணும் இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்ப
அலுத்துப்போய் கோவில் வெளிப்பிரகாரத்தில் இருக்கிற
நந்திக்கு முன்னால் உட்காருரார்

அங்கே

அவருக்கு நேர் எதிரே

இருந்த மடைப்பள்ளிப் பூட்டைப்
பார்த்து அவர் அதிர்ச்சியாகிப் போறார்,

ஏன்னா அவருக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து
நேற்று வரை அந்த மடைப்பள்ளியைப் பூட்டி
அவர் பார்த்ததே இல்லை,

(தொடரும் )

Saturday, July 26, 2014

துரோகம் ( 10 )

எதையும் குழப்பமின்றித் தெளிவாக அவசரப்படாது
சுவாரஸ்யமாகச் சொல்லுகிற நெளிவு சுழிவு
கொஞ்சமேனும் எனக்கு இருக்கிறது எனில்
அதற்கு முழுமையான காரணம் சுப்புப்பாட்டியும்
எனது தாயாரும்தான்.

நான் அடுத்து என்ன நடந்தது என அறிய
பதட்டப்பட்டபோது அம்மா இப்படிச் சொன்னாள்
"நூற்கண்டின் நுனி கிடைக்க தாமதமாகிறதுன்னு
அவசரமாக நூலை அறுத்தெடுப்பது நிச்சயம்
மேலும் சிக்கலைத்தாண்டா உருவாக்கும்.
கொஞ்சம் பொறுமையா நுனியை எடுத்துட்டா
பின் சிக்கல் வர வாய்ப்பேயில்லை.

முதலில் சுப்புப்பாட்டி மூலம் நான் மீனா மாமியை
அறிமுகம் செய்துக்கிறேன்.உனக்கும்
ராகவனை அறிமுகம் செய்து வைக்கிறேன்.
இன்றைய தேதிவரை அவசரப்படாது சுப்புமாமி
மூலமே நடந்ததைத் தெரிஞ்சுக்குவோம்.
பின் நாமா இவா மூலம் மேற்கொண்டு
விஷயங்களைத்தெரிஞ்சுக்கப் பார்ப்போம்
அதுதான் சரியா வரும்"என்றாள்

எனக்கும் அது சரியெனத்தான் பட்டது

அடுத்து பத்து நாளில் வந்த ஒரு ஞாயிறு அன்று
சுப்புப் பாட்டியையும் என்னையும் அழைத்துக் கொண்டு
மீனாப்பாட்டி வீட்டிற்கு என அம்மா அழைத்துப் போனார்

ஏற்கெனவே ஒரு வாரத்தில் சுப்புப்பாட்டி
மீனாப்பாட்டியை நான்கு ஐந்து முறை
சந்தித்திருப்பார் போல இருந்தது
ஆகையால் அந்தச் சந்திப்பு அவ்வளவு
.உணர்வு பூர்வமாக இல்லை.எங்கள் அம்மா கையோடு
கொண்டு வந்திருந்த பழக்கூடையை மீனாப்பாட்டியிடம்
கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்.
நானும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன்..

அப்போதுதான் குளித்து முடித்து வந்த ராகவனை
எங்களுக்குச் சுப்புப்பாட்டி அறிமுகம்
செய்துவைத்தாள்."அடிக்கடி வாங்கோ "என்கிற
சம்பிரதாயமானஅழைப்புடனும்"அவசியம்
வருகிறோம்" என்கிற சம்பிரதாயமான பதிலுடன்
அந்த முதல் சந்திப்பு எவ்வித சுவாரஸ்யம்
 ஏதுமின்றி முடிந்தது

அடுத்த வாரத்தில் காலேஜ் எதற்கோ விடுமுறை
அப்பா ஆபீஸ் போயிருந்தார்வீட்டில் அப்பள ஸ்டாக்
இருந்தும்அம்மா உளுந்து அப்பளம் வைக்க
ஏனோ ஏற்பாடு செய்திருந்தார்.

"எதற்கம்மா இவ்வளவு இருக்கும் போது திரும்பவும்.."
என்றேன்

"எல்லாம் ஒரு டெக்னிக்தான் இல்லையானா
சுப்புப்பாட்டியைஇரண்டு மணி நேரம் ஒரு இடத்தில
உட்கார வைக்க முடியாது.
இனியும் அரைக்கதையைக் கேட்டு வைச்சும்
அவஸ்தைப்படமுடியாது
அப்பளம் வைக்க ஆர்ம்பிச்சா போதும் அது முடிய
எப்படியும் இரண்டு மூணு மணி நேரமாச்சும் ஆகும்
சுப்புப் பாட்டியின் கைப் பக்குவம் சூப்பரா இருக்கும்
கதைக்கும் கதையாச்சு.அப்பளத்துக்கும்
அப்பளமாச்சு.என்னாலயும் முன்னப்போல இரும்பு
உலக்கையைத் தூக்கி இடிக்க முடியலை.உனக்கும்
ஒரு வேளை கொடுத்தமாதிரி ஆச்சு.
எப்படி என் ஐடியா"என்றாள்

அம்மா ஐடியா அற்புதமா ஒர்க் அவுட் ஆச்சு

மாவு இடித்து முடித்து பாம்பு போல்
ஒரே சமமாய்த் திரித்துமிக நேர்த்தியாய்
ஒரே அளவாய்ஒவ்வொன்றாய் சுப்புப்பாட்டி
கத்தியால் நறுக்கிப்போட்ட விதம்
அத்தனை அற்புதமாய் இருந்தது

அப்பளப்பலகையை எடுத்துப் போட்டு நான்கு ஐந்து
அப்பளம் இட்டு முடித்ததும் என் அம்மா மிகச் சரியாக
சுப்புப்பாட்டியைப் பார்த்து "என்ன மாமி சும்மா கிடந்த
தேரை இழுத்து தேரில் விட்ட மாதிரி சுவாரஸ்யமா
மீனாமாமிக் கதையைச் சொல்லி பாதியிலேயே
விட்டுவிட்டேளே அன்னைக்கு இருந்து   எனக்கு
அதே நினைப்புத்தான்.அப்புறம்என்னதான் ஆச்சு "
என்றாள்

"கதை கேட்கிறவாளுக்கு மட்டும் இல்லேடி.
சொல்றவாளுக்கும்பாதியில நிறுத்திப் போறது
அவஸ்தையாய்தாண்டி இருக்கும்
சரி சரி எதுல நிறுத்தினேன்" என்றாள்

நாங்கள் அந்த நகையைப் பார்த்து மூவரும்
 திகைச்சுநின்னதைச் சொல்லி "அடுத்து "என்றோம்
பாட்டி தொடர்ந்தாள்

"இவா மூணு பேரும் தொடர்ந்து தெகச்சிப்போய்
 நிக்கபிள்ளைவாள்தான் முதலில் நிதானத்திற்கு
வந்திருக்கார் ஏன்னா அவர் அரசியலிலும் இருந்தார்
 இல்லையோஅவாளுகெல்லாம் குயுக்தியா யோசிக்கச்
சொல்லியா தரணும்
சட்டென அவர் மேல் சால்வையை எடுத்து விரிச்சு
"அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிப்போம்
முதலில அந்த நகையையெல்லாம் எடுத்து இந்தத்
துண்டில் எடுத்து வைங்கோன்னு " எடுத்து
வைக்கச் சொல்லி இருக்கார்
,
திக் பிரமையிலும் ஆசையிலும் சிக்கித்
திணறிக் கொண்டிருந்த மூணு பேரும்
மறு பேச்சில்லாமல் அப்படியே இரண்டு
கையிலேயெலும் வாரியெடுத்து
அந்தச் சால்வையில் குவிச்சிருக்கா.
அவர் அதையெல்லாம் அப்படியே ஒரு
சோத்துப் பொட்டலம் போலச் சுருட்டி மீனா வோட
அப்பா கையில் கொடுத்து "இன்னும் கொஞ்ச நேரத்தில்
விடிய ஆரம்பிச்சுடும்,
இதை என்ன செய்யலாம்னு நாளைக்கு யோசிப்போம்
முதலில் இதை அப்படியே கொண்டு போய்
மடைப்பள்ளி விறகுக்கு உள்ளே மறச்சு வையுங்கோ.
மீனாம்மா நீயும் அப்பாக்கு  உதவியா
போடாக்கண்ணுன்னு சொல்லிஅனுப்பிச்சுட்டு.
ஊமையன வச்சு அவசரம் அவசரமா குழிய மூட
ஏற்பாடு பண்ணி இருக்கார்

பெட்டி இருந்த இடம் மண் போறாம கொஞ்சம்
பள்ளமாகவே இருக்க அப்படி இருந்தா சந்தேகம்
யாருக்கும் வரும்னு சட்டுனு ஊமையன் விட்டு
வீட்டில் இருந்து ஆறு ஏழு செண்டிரிங் பலகையைக்
கொண்டு வரச் சொல்லி மேலே அடுக்கி வச்சுப்புட்டு
அவசரம் அவசரமாய் வீட்டுக்குப் போய் ஒரு பெரிய
திண்டுக்கல் பூட்டையும் கொண்டு வந்து
மடைப்பள்ளியையும் பூட்டச் சொல்லி சாவியை
மீனாவோட அப்பாக்கிட்டயே கொடுத்திட்டு
ஊமையனையும் கூட்டிக்கிட்டு
"நீங்களும் வீட்டுக்குப் போயிட்டு வாங்கோன்னு
மீனாவோட அப்பாக்கிட்ட சொல்லிட்டு
பிள்ளைவாள் வீட்டுக்கு கிளம்பியிருக்கா ருடி

பொழுது மெல்ல வெளுக்கத் துவங்கிருக்குடி

மீனாவுக்கும் அவளோட அப்பாவுக்கும் உடல்
நடுங்க ஆரம்பிச்சுடுச்சிருக்கு..
ஏன் அவர் சொன்னாருன்னுபொட்டலம் கட்டினோம்
ஏன் நம்ம பொறுப்பிலே"அவளோட "சொத்தை
இப்படி திருட்டுத்தனமாஒளிச்சு வச்சிருக்கோம்
.நம்மளை அம்பாள்தான் சோதிக்கிறாளா
இல்லை பிள்ளைவாள்தான்சோதிக்கிறாரான்னு
குழம்பியபடி குளிச்சிட்டு சட்டுனு
கோவில் அதிகாலைப் பூசைக்கு வருவோன்னு
வாசலுக்கு வர மிகச் சரியா எதிரே சுப்பையர்
வந்திருக்காண்டி

அவரைப் பார்த்ததும் மீனாவோட அப்பாவுக்கு
கூடுதலா உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருக்குடி
ஏன்னா ஈரைப்பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிறதுல
இந்த சுந்தரம் ஐயர் வெகு கிள்ளாடிடி

இதுவரை தெருவில சுந்தரமையர் சம்பந்தம் இல்லாம
 நல்லதோ கெட்டதோ நடந்ததா சரித்திரம் இல்லையடி

அவர் சம்பந்தப்படாம ஒதுங்கிப் போனாலும்
விதியோ எதுவோ அவரைத் தானா கொண்டு வந்து
சம்பத்தப்படுத்திடும்டி

இப்பவும் அப்படித்தான் சம்பத்தப்படுத்துதுன்னு
அப்பவே புரிய ஆரம்பிக்க,இன்னும் பயம் கூட
அவரைக் கண்டும் காணாம மீனாவோட அப்பா
தெருவில் இறங்கி நடக்கத் துவங்கவும்

விதியோ  எதுவோ
அதுவரை வாக்கிங் போயிட்டு கோவில் வரலாம்னு
நினைச்சு வீட்டைவிட்டுக் கிளம்பிய சுந்தடரமையரின்
மனத்தை  மாற்றி   கோவிலுக்குப் போய்விட்டு பின்
வாக்கிங் போகலாம்னு முடிவெடுக்க வைத்து 
கோவிலுக்குள் நுழையவைக்கவும்
மிகச் சரியாக இருந்திருக்குடி

(தொடரும் )

Thursday, July 24, 2014

துரோகம் ( 9 )

வெறும்கையால் சொறிந்து கொண்டிருப்பவனுக்கு
சீப்புக் கிடைத்தால் சும்மாவா இருப்பான்
சுப்புப்பாட்டியின் கதை சொல்லும் நேர்த்தியில்
அமானுஸ்யம் அறியும் ஆர்வத்தில் இருந்த எனக்கு
சன்னதித் தரையின் நடுப்பகுதி மட்டும்
வித்தியாசமாக இருந்தது கூடுதல் ஆர்வத்தை
உண்டாக்கிவிட்டது.நிச்சயம் சுப்புப்பாட்டி சொல்லிச்
சென்றது கதையில்லை நிஜம் என்பதை நானும்
நம்பத் துவங்கிவிட்டேன்

"போடா லூசு அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் என்கிற மாதிரி
கதையில் மயங்கிப்போன உனக்கு சில
கல்லு நகந்து சரிசெஞ்சது கூட உனக்கு
பெரிய ஆதாரமாப் படுது. போடா போய்ப்
படிக்கிற வேலையைப் பாருடா " என
எல்லோருடைய தாயைப் போல என் அம்மாவும்
அப்போதேச் சொல்லி இருந்தால் நான்
தொடர்ந்து இந்த மர்மதேசத்திற்குள் நிச்சயம்
புகுந்து இருக்கமாட்டேன்

மாறாக எனது அம்மா இப்படிச் சொல்லி
உசுப்பேற்றி விட்டாள்

".சுப்புப் பாட்டி உணர்வு பூர்வமாகச் சொன்னது.

நல்ல நிலையில் இருந்த இரண்டு குடும்பம்
நசிந்து போனது

வாய்வழிக் கதைதான் ஆயினும் இந்தக் கோவில்
குறித்தப் புராதானப் பெருமை

நீ இப்போ அங்கே சன்னதியில் பார்த்த
வித்தியாசமாக இருந்த சன்னதித் தளம்

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில
நிச்சயம் இது கதையில்லை எனத்தான்
எனக்கும் படுது

காசா பணமா ,நானும் சுப்புப்பாட்டி மூலம்
அடுத்த விஷயத்தைத் தெரிஞ்சுக்கப் பார்க்கிறேன்
மீனா மாமி கூடவும் கொஞ்சம் நெருக்கத்தைக்
கூட்டிக்கிறேன்.நீயும் ராகவன் கூட அதுதாண்டா
மீனா மாமியின் பையன் அவனுடன் ஃபிரண்ட்ஸிப்
வைச்சுக்கோ.

கதையை கேட்டிருப்போம்.கதையைப்
படமா பார்த்திருப்போம்,ஏன் நாம கூட நடந்ததை
கதையாச் சொல்லிச் சந்தோஷப்பட்டிருப்போம்
இப்படி கதையோடயே நாமும் வாழறதும்
கதையோட கதாபாத்திர்ங்களோட
நாமும் ஒன்னுமன்னாக் கலந்து  போற சான்ஸும்
எத்தனை பேருக்கு வாய்க்கும் ?

அது மட்டுமில்ல ஒருவேளை கதையின்
கதா நாயகனான அந்த நகைப் பொட்டலம்
இருப்பிடம் கூட  ஒருவேளை நமக்குத் தெரியக் கூட
வாய்ப்பிருக்கலாம் இல்லையா
அப்ப்டிக் கிடைத்தால் யோகம்தானே "
எனச் சொல்லிச் சிரித்தாள்

எங்கள் அப்பா அடிக்கடிச் சொல்வார்
"டேய் உங்க அம்மா பல சமயம் சொல்றது
நிஜமாக் கிண்டலான்னும் இத்தனை வருஷம்
குப்பைக் கொட்டியும் எனக்கும் புரிஞ்சு தொலைய
மாட்டேங்குதுடா "என்று

எனக்கும் கூட அம்மாவின் இந்தப் பேச்சு
இப்போது அப்படித்தான் பட்டது

ஆனாலும் இது நிஜமா அல்லது மிகச் சரியாக
கெட்டிக்காரத்தனமாகப் புனையப் பட்ட கதையா
என்பதை அவசியம் கண்டுபிடித்தே ஆவது என்று
நான் உறுதி செய்து கொண்டேன்

அந்த உறுதியின் பலனாய்
ஆண்டவன் பெயரைச் சொல்லி
மனிதன் செய்கிற சில அழிச்சாட்டியங்களும்
மனிதர்களை வைத்து ஆண்டவன்
தன் தீர்ப்பை அமல்படுத்திக் கொள்கிற சூட்சுமங்களும்
கொஞ்சம் புரியத்தான் செய்தது

தொடரும் )

Tuesday, July 22, 2014

துரோகம் ( 8 )

அப்பா வருவதைக் கவனித்ததும் சுப்புப்பாட்டித்
தன் முக்காட்டை சரி செய்தபடி எழுந்து கிளம்பத்
தயாராகிவிட்டார்.

"மாமி நீங்க சும்மா செத்த இருங்கோ
அவர் போய் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு
வரவே அரை மணிக்கு மேலாகிவிடும்
அப்புறம்தான் சாப்பாட்டுகடை .." என ஜாடையாக
கதை கேட்கத் தூபம் போட்டும் பலனில்லை

"சுப்புப்பாட்டி நானும் எங்கேயும் போகப் போறதில்லை
கதையும் எங்கும் போய்த்தொலையப் போறதில்லை
பாவம் பிள்ளையாண்டான் அப்பவே
 பசின்னு சொன்னான்அவனைக் கவனி "
எனச் சொல்லியபடி எங்கள்வீட்டைத் தாண்டவும்
 அப்பா வாசல்படியில்காலை வைக்கவும்
சரியாக இருந்தது

"என்ன நான் வந்தது சிவ பூஜையில்
கரடி போல ஆகிவிட்டதோ.இப்படின்னு முன்னமேயே
தெரிஞ்சிருந்தா இன்னும் அரைமணி நேரம்
மந்தையிலேயே இருந்து வந்திருப்பேனே " என்றார்

"யாருக்கு சுப்பு மாமிக்கு இப்படி மூடுவரும்னு கண்டது
மீனாமாமியைப் பார்த்ததும் அப்படியே தன்னை
மறந்துட்டா. .கதை சுவாரஸ்யத்தில் நானும்
ஒரு வேளையும்செய்யலை"என பெருமூச்சுவிட்டபடி
அம்மாவும் எழ நானும் மனச் சங்கடத்துடன்
எழுந்து உள்ளே போனேன்

அன்று இரவு முழுவதும் ஏனோ விதம் விதமாய்
கனவு வந்து தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது

மறுநாள் காலையில் எழுந்து பல் விளக்கி காப்பி
சாப்பிட்டு முடித்ததும் பட்டையாக திரு நீறு
அணிந்து கொண்டு வீட்டில் ரேடியோப் பெட்டியருகில்
இருந்த எவெரெடி சின்ன டார்சை கையில்
எடுத்துக் கொண்டு கிளம்புவதைப் பார்த்ததும்
அம்மா கிண்டலாக "என்ன சரித்திர ஆராய்ச்சியா
இன்னொரு சாண்டியல்யன் ஆகப் போறயா "
என கிண்டலடித்துச் சிரித்தாள்

எனக்குச் சிரிப்பு வரவில்லை.எப்படியும் இதில்
கொஞ்சமேனும் உண்மையிருக்கா இல்லையா
என்பதைஉடன் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற
வெறி என்னுள்எப்படியோ புகுந்து கொண்டு என்னை
இயக்கத் துவங்கிவிட்டது

எங்கள் ஊர் கல்யாண சுந்தரேஸ்வர சமேத
பால்மீனாம்பிகைக் கோவிலுக்கு இரண்டு
நுழைவாயில்கள் உண்டு.ஒன்று கோவிலுக்கு
மேற்குபுறம் எங்கள் தெருப்பகுதியிலும்
மற்றொன்று கிழக்குப் பக்கம் ஆசாரியார்
வீட்டுப் பக்கமும் துவங்கும்.
அதுதான் பிரதானவாயில்

நான் எப்போது கோவிலுக்கு வந்தாலும்
மேற்கு வாயில் வழியாக நுழைந்து
தெற்கோரம் இருந்தஅடி குழாயில் காலைக்
கழுவிக்கொண்டுவிநாயகர் ஸன்னதி
அரசமரத்தடிப் பிள்ளையார்
முருகன் சன்னதி சண்டிகேசுவரர் நவக்கிரகம்
பைரவர் எனக் கும்பிட்டுப் பின் சன்னதி நுழைந்து
நடராஜர் சரஸ்வதி துவாரபாலகர்கள் எனக்
முறைப்படித்தான்கும்பிட்டுப் பின்தான்
சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை என
கும்பிட்டுத் திரும்புவேன்.இது என் பாட்டி மூலம்
உண்டான பத்து வருடப் பழக்கம்

இன்றைக்கு ஏனோ  அப்படிச் செல்லப்

பொறுமையில்லை
பிரதட்ஸனமாக முறைப்படிப் போனால்
தாமதமாகும் என்று
அப்பிரதட்ஸனாகவே அவசரம் அவசரமாக உட்சன்னதி
நோக்கி  நடக்கத் துவங்கினேன்

மீனாட்சியைத் தரிசித்துத் திரும்பிக் கொண்டிருந்த
சுந்தரம் அய்யர் "அப்படி என்னடா உனக்கு
கொள்ளை போறது,அப்படி அவசரம் என்றால் வராமலே
இருந்து தொலைக்கலாமே அபிஸ்டு " என
திட்டியபடி என்னை கடந்து போனார்

அதையெல்லாம் கண்டு கொள்கிற மன நிலையில்
நான் இல்லை.பாலமீனாம்பிகை சன்னதியில்
பாலமீனாம்பிகையின் திருவுருவம் கொஞ்சம்
உள்ளடங்கி இருக்கும்

அம்பிகைக்கு முன்னால் மட்டும் தூண்டா விளக்கு
இருக்கும் என்பதால் சன்னதியின் முன்புறம் கீழே
எப்போதும் இருள் மண்டியேக் கிடக்கும்

அதனால் இதுவரை.சன்னதியின் கீழ்த்தரைப்பகுதியை
நான் கவனித்ததே இல்லை

நல்லவேளை நான் சன்னதி உள் நுழைந்த வேளை
யாரும் உள்ளே இல்லை.அது மிக வசதியாகப் போயிற்று
நான் டிராயர் பையில் வைத்திருந்த டார்ச்சை எடுத்து
சன்னதியின் கீழ்ப்பகுதியில் அடித்துப் பார்த்தேன்

அங்கே
மிகச் சரியாக ஆறுக்கு நான்கு சைஸில் இருந்த
கல்தரை மட்டும் சுற்றுப் பகுதியைவிட கொஞ்சம்
மாறுபட்டும் புதியதாகவும் இருந்தது
தெளிவாகத் தெரிந்தது


(தொடரும் )

Sunday, July 20, 2014

துரோகம் ( 7 )

கதையைப் போலவே சுப்புப்பாட்டியின்
 மனோ நிலையும் அடுத்த நிலைக்கு
மாறுவதைப் போல இருந்தது
இதுவரை இயல்பாக இருந்த அவளது முகம் சற்று
இறுக்கமாக மாறுவதைப் போல இருந்தது

எனக்குள்ளும் அதுவரை இருந்த சுவாரஸ்ய
மனோ நிலை மிக லேசாக பய உணர்வுக்கு
மாறுதலாகிக் கொண்டிருந்தது
.நான் அம்மாவை ஒட்டிஅமர்ந்து கொண்டேன்

சுப்புப் பாட்டி தொடர்ந்தாள்

"நீ வேதம் படிச்சவரின் பொண்ணு. உனக்கு
அதிகம் விளக்கவேண்டியதில்லை.ஆறு வகைப்
பிரமாணங்களில் இதுவரை நான் சொன்னதெல்லாம்
பிரத்தியட்சம் மாதிரித்தான்.
ஏன்னா இப்ப சொன்ன விஷயமெல்லாம் நான்
நேரடியா அறிஞ்சது பார்த்தது
சம்பத்தப்பட்டவர்களிடம்நேரடியாகக் கேட்டது

இனி சொல்லவதெல்லாம்
அனுமானம், ஆப்தவாக்கியம்,உபமானம் மாதிரித்தான்
விதை செடியாகற மாதிரி,கரு உருவாகறமாதிரி
அந்த நாளுக்குப் பின்னால் இயல்பா மிகச் சிறப்பா
இருந்த அந்த ரெண்டு பேரின் குடும்பமும் இப்படி
வேறு மாதிரி தலைகீழாப் போனதுக்கு ஊர் நம்புற
காரணம் நிச்சயமா இருக்கதான் இருக்கணும்டி
யார் நம்புறாங்களோ இல்லையோ நான் நம்பறேன்

இப்ப மாதிரி இல்லையடி,
அப்பவெல்லாம் உள்சன்னதிக்குள்ள
நம்ம தெருவைச் சேர்ந்தவா
பிள்ளைமார் தெருவில சில குடும்பம்,
கோனார் தெருவிலே ரெண்டு குடும்பம்
இந்த செட்டியார் சீதாராம ராஜுக் குடும்பம் தவிர
யாரும் வரமாட்டாங்கடி.
ஜாதி வித்தியாசம்னு இல்லை
எப்படியோ பரம்பரையா அப்படிப்பழகிப் போச்சு
கருப்புச் சட்டைக் காரங்க  வெளியிலே ஆ ஊன்னு
பேசினாலும் கூட அந்த வெளிச்சன்னதி தாண்டி
வருந்தி கூப்பிட்டாக்கூட வரமாட்டாங்கடி,

ஆகையாலே அந்த சன்னதி நீர்தாரையை அடைக்க
யாரையும் கூப்பிடாம மீனா அப்பா பிள்ளைவாள்,
எடுபிடி வேலைக்கு அவா சொந்தத்திலே
ஒரு ஊமையன்இருந்தான்,வேலை நேரம் போக
மீதி நேரம்கோவிலிலதான் அவன் கிடைப்பான் அவன்
ஆக இது ரொம்பச் சின்ன வேலை என்பதால
 மூணு பேருமட்டும் இருந்து செய்யறதுன்னு
 முடிவு பண்ணிஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி
ஒன்பது மணிக்கு மேல கோவில் நடை
சாத்திர நேரத்தில இருந்து செய்யிறதா
முடிவு செஞ்ச்சாங்கடி,

ஏன்னா வெள்ளிக்கிழமை எட்டுமணிவரை எப்பவும்
கோவில்ல கூட்டம் ஜெ ஜேன்னும் இருக்கும்
அதுமாதிரி சனிக்கிழமையும் நவக்கிரஹம் சுத்த
காலையிலேயே கூட்டம் சேர்ந்திடும்

எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அந்த வெள்ளிக்கிழமை
வழக்கம்போல பட்டுப் பாவாடைக் கட்டி குஞ்சம் வைச்சு
சடைப்போட்டு,தலை நிறையப் பூ வச்சு
அந்த பூஜைக்கான போக்கூடைய தூக்கிக் கிட்டு
மீனா தங்க விக்ரகம் போல கோவிலுக்குப் போறப்ப
நானும் கூடத்தான் போனேன்

கோவில் திபாராதனை முடிஞ்சு பிரசாதம் வாங்கிண்டு
கிளம்பறச்சே மீனாவோட அப்பா மீனாக்கிட்டே
"இன்னைக்கு அப்பா கோவில் தங்கல்டா கண்ணா
வேலை இருக்கு வீட்டுக்கு வரமாட்டேன்,
அம்மாகிட்டே சொல்லி நாலு பேரு சாப்பிடற மாதிரி
லெமன் சாதமும் வடாமும் செஞ்சு தரச் சொல்லி
கொண்டு வா. பிள்ளைவாள் விரும்பிச் சாப்பிடுவார்
உங்க அண்ணன் வேண்டாம்.நீயே கொண்டுவா
வேணுமானா துணைக்கு இவளைக் கூட்டிண்டு வா "
என்றார்

எதனாலயோ மீனா என்னைக் கூப்பிடலை
அது கூட நல்லதுக்குத்தானோன்னு இப்பப் படுது

சரி விஷயத்துக்கு வாரேன்,இப்ப இருந்து அனுமானம்
ஆரம்பிக்கிறதுடி,

முதலிலே உடஞ்ச கல்லை மட்டும் எடுத்துட்டு
ஓட்டையை சிமெண்ட் வைச்சு அடைச்சிடறதுன்னு
நினைச்சுத்தான்,சின்ன வேலைன்னும் நினைச்சுத்தான்
ஆரம்பிச்சிருக்கா.ஆனா அதை உடைச்சதும்
இத்தனை நாள் அபிசேக தீர்த்தம் ஓடி
 மண் அலசிப்போக அடுத்து அடுத்தக் கல்லும்
சட்டெனச் சரிய்வேறு வழி இல்லாம சுத்துக் கல்லு
மூணு  நாலையும்சேர்த்து எடுக்க வேண்டி வந்திருக்குடி

சரி செய்றது  செய்றோம்  சரியாச் செய்துடுவோம்னு
ஊமையனை விட்டு முழுசும் வெளியே
எடுக்கச் சொல்லிப்பாக்கிறப்பத்தான் அத்தனைப் பெரிய
ஒரு தேக்குப் பெட்டிஇருந்திருக்குடி.
பெட்டியை சேதாரம் இல்லாம முழுசா வெளியே
எடுக்க மூணு பேரும் முயற்சி செஞ்சும்
முடியாமப் போகஉள்ளே வெச்சே பெட்டியை
உடைச்சுப் பார்த்தாஎல்லோரும்
திகைச்சுப்போயிட்டாளாம்
உள்ளே முழுசும் மீனாட்சிக்கான தங்க வைர
ஆபரணங்களாண்டி,திறந்ததும் அப்படிச் ஜொலிச்சதாம்

அதுவரை பேசிக்கிட்டே வேலை
பார்த்துக் கொண்டிருந்த மூணு பேருக்கும்
அப்புறம் பேச்சே வரவில்லையாம்
மூணு பேரும் ஓய்வெடுக்கிற சாக்கில்
ஒவ்வொரு மூலையில்
வாயடைச்சு உட்கார்ந்திட்டாளாம்.

எல்லா பெண்களுக்கும் வர்ற ஆசை மாதிரி
தன் தாய்வீட்டு சீதன நகைகளைப்
போட்டுப்பார்க்கிறஆசை வந்ததோ இல்லை
மூணு தலைமுறையா விசுவாசமா தனக்கு
சேவை செய்த இந்த இரண்டு குடும்பமும்
உண்மையாகவே விசுவாசமா சேவை செய்திருக்காளா
அல்லது சந்தர்ப்பம் கிடைக்காததால
நல்லவளா இருக்காளாஎனச் சோதிக்கிற எண்ணம்
 பாலமீனாம்பிகைக்கு வந்ததோன்னு
சரியாத் தெரியலடி

ஆனா மூணு தலைமுறையா சாஸ்திர சம்பிரதாயம்
மீறாமவாழ்ந்திருந்த அந்த இரண்டு குடும்பத்தையையும்
பிடிச்சுஆட்டமுடியாம இருந்த சனீஸ்வரனுக்கு இந்த
நகைப்பொக்கிஸம்நல்ல குடுமிப்பிடியாப்
போயிருக்கும்போல

அவா நாளு பேரு மனசிலேயும் ஒவ்வொரு
ஆசையைகற்பனையை   அவா அவளுக்குத் தகுந்தபடி
தூண்டிவிட்டுச் சனீஸ்வரன் விளையாட
ஆர்ம்பிச்சது தெரியாமஉச்சச் சரிவிலிருந்து
அதல பாதாளத்தில் விழப்போறதும்
தங்கள் தலைமுறையே நாசகாடாகிப்
போகப்போறதும் தெரியாமஅந்த நகையை
எப்படி அவா அவாளுக்குக் தகுந்த
மாதிரி பிரிச்சுக்கிறதுஅதுவரை எப்படி மறைக்கிறது
என்கிற நினைப்பில்ரொம்ப நேரம் கிடந்தாதாங்களாம்

மறு நாளில் இருந்த அவர்கள் மட்டும் இல்லை
அவர்கள் வாழ்வும் மெல்ல மெல்ல
 மாறத்  துவங்கிடுச்சுடி

அதை வைச்சுத் தான் நான் அனுமானமா
சொன்னவா மூலம்கேள்விப்பட்டதெல்லாம்
நிச்சயம் நிஜம்னு நம்பத் துவங்கிணேன்டி

உனக்கும் அதைப் புரியச் சொன்னா நிச்சயம்
இது அனுமானம் இல்லை பிரத்தியட்சம்னு
 நீயும் நம்புவே"எனச் சொல்லி நிறுத்தி
தெருக்கோடியை ஏனோ
சுப்புப் பாட்டி கொஞ்சம் உற்றுப் பார்த்தாள்
தெரு விளக்கு வெளிச்சத்தில் அப்பா வருவது தெரிந்தது

(தொடரும் )

Tuesday, July 15, 2014

துரோகம் ( 6 )

கதை சொல்பவருக்கும் சுவாரஸ்யம் கூட
கதை கேட்பவரின் ஆர்வ வெளிப்பாடு ஒரு
காரணம் என்றால் கதை கேட்பவருக்குஆர்வம் கூட
கதை சொல்லியின் திறன் மிக முக்கியமாகும

கதையின் சூழலை மிகச் சரியாகப் படிப்பவருக்குப்
புரிய வைத்து பின் கதை மாந்தரின் குண நலன்களை
எவ்வித ஐயப்பாடும் இன்றி மிகச் சரியாக உணரவைத்து
பின் கதை நிகழ்வுக்கு வருவதே கதை சொல்வதற்கான
மிகச் சரியான முறையாகும்

இந்த சூட்சுமங்களையெல்லாம் கதை மற்றும்
திரைக்கதை அமைப்பதற்கான பயிற்சிப் பள்ளிகளில்
சேர்ந்து கற்றதை இயல்பாகவே பெற்றிருந்த
சுப்புப்பாட்டியை இன்று நினைத்துப் பார்த்தால் கூட
ஆச்சரியமாக இருக்கிறது

அத்தனை நேர்த்தியாக அன்று சுப்புப்பாட்டி கதை
சொல்லவில்லையாயின் முப்பது ஆண்டுகளுக்கு
முன்பு சொன்னதை இன்று நடப்பதைப்போல
 உணரவோசொல்லவோ நிச்சயம் சாத்தியமே இல்லை

எத்தனை திருஷ்டி சுற்றியும் பலனில்லையெனச்
சுப்புப்பாட்டிச் சொன்னதும் என்னுள் அன்று
சட்டென ஒரு சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது

அதுவரை படுத்துக் கொண்டு கதை
 கேட்டுக் கொண்டிருந்த நான் சட்டெனத்
தலையணையைமடியில் வைத்தபடி நிமிர்ந்து
 உட்கார்ந்தேன்.அப்பா இன்னும் தாமதமாக
 வந்தாலும் பரவாயில்லைஇடையில் வந்து இடஞ்சல்
செய்துவிடக் கூடாதுஎன ஆண்டவனை
வேண்டிக் கொண்டேன்

சுப்புப் பாட்டி தொடர்ந்தாள்

"சனி யாரை எப்படிப் பிடிப்பான் என்பதை யாரும்
நிச்சயம் கணிக்க முடியாதுடி.அவனுடைய
சர்வ வல்லமையை உத்தேசித்துத்தான்
அவனுக்கு ஈஸ்வரப் பட்டமே.
ஆனால் எப்படி சர்வவல்லமை படைத்தவானாலும்
அவனுக்கு யாரையும் பிடிக்க
ஒரு பிடி கிடைக்க வேணுமடி

நீ கூட கேள்விப்பட்டிருப்பயே,ஒரு முனிவரைப்
பலகாலம்முயற்சி செய்து முடியாது
 கடைசியா மிகச் சரியாக
கழுவப்படாத பின்னங்கால் வழியா பிடிச்சான்னு

அப்படித்தான் எல்லா விஷயத்திலும்
 மிகச் சரியாக இருந்த
பூசாரி மீனா அப்பாவையையோ தர்மகர்த்தா
பாலசுப்ரமணியத்தையோ அவ்வளவு சுலபமா
பிடிக்கமுடியல போல.அதுக்கு அவன் கடைசியா
ஒரு சுருக்குவழியைக் கண்டிபிடிச்சு இருப்பான் போல

அதுவரை பாலமீனாம்பிகை சன்னதில இருந்து
தீர்த்தத் தொட்டிக்கு மிகச் சரியாகப் போய்க்கிட்டிருந்த
அபிஷேக பாலும் தீர்த்தமும் சில நாளா சரியாப் போய்
தொட்டியில விழலை.என்னன்னு பார்த்தப்போ
சன்னதியின் கீழே அந்த கருங்க்கல் தீர்த்த்தாரையிலே
ஒரு சின்ன வெடிப்பு வந்து வற்ர அபிஷேகத்
தீர்த்ததையெல்லாம்உள்ளே வாங்கிட்டு இருந்தது

பூசாரியும் எதை எதையோ வைச்சு அடைச்சுப்
பார்த்திருகார்எதுவும் கதைக் காகலை .
பால் உள்ளே போகப் போககொஞ்ச நாளா
ஒரு கெட்ட வாசமும் பாச்சா பல்லியும்
வர ஆரம்பிச்சுடுச்சு.சரி, இனியும் இதை இப்படியே
விட்டாசரிப்பட்டு வராதுன்னு பெரியவங்களும்
தர்மகர்த்தாவும் பூசாரியும் கல்ந்து பேசி
அந்த கருங்க்கல் தீர்த்தத்தாரையை
உடனடியா உடைச்சி எடுத்துட்டு சிமெண்டால புதுசா
சரியா ஒண்ணு கட்டணும்னு முடிவு செஞ்சு
அதுக்கு ஒரு நாளையும் குறிச்சா

உள்ளே ஒரு பெட்டி ரூபத்திலே
சனி உட்கார்ந்திருக்கறதும்
ஆசைக் காட்டி இந்த இரண்டு குடும்பத்தையும்
அந்துல சந்துல விடப்ப\போறாங்கறதும் பாவம்
அப்ப யாருக்கும் தெரியாது.

(தொடரும் )

Saturday, July 12, 2014

துரோகம் ( 5 )

அம்மா கொடுத்த உற்சாக டானிக்
சுப்புப்பாட்டியை அதிக உற்சாகப்படுத்தியது
மிகத் தெளிவாகத் தெரிந்தது.இதுவரை தெருவைப்
பார்த்தபடி யாரிடமோ கதை சொல்வது போல்
சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது என் அம்மாவின்
பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்

"என்னடி மணி எட்டாகப் போகிற மாதிரித் தெரியுதே
உன் ஆம்படையானை இன்னும் காணோமேடி "
என்றாள்

" இல்லை மாமி ஏழு மணி பஸ்ஸை விட்டிருப்பார்
இனி அடுத்த பஸ் பிடித்து வர ஒன்பதுக்கு
மேலாகிவிடும் நீங்க சொல்லுங்கோ மாமி "
என்றாள் என் அம்மா

பாட்டித் தொடர்ந்தாள் "உனக்கு இன்னும் கொஞ்சம்
விவரம் சொல்லி இவள் கதைக்கு வரவேண்டி இருக்கு
அப்பத்தான் உனக்கு மிகச் சரியாக கதைக்குள்
இருக்கும்சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளமுடியும்

பொம்மனாட்டிகளுக்கு எல்லாம் பிறந்த ஊரும்
வேறு வேறயா இருக்கும்.எனக்கு என்னவோ
முறைப்பையனே ஆம்படையானதாலே எனக்கு
கொண்டதும் இந்த ஊருதான்.கொடுத்ததும்
இந்த ஊராகவே ஆகிப் போச்சு.ஆகையாலே
எல்லோரையும் விட எனக்கு இந்த ஊரைப் பத்தி
ரொம்ப நல்லாத் தெரியுமடி

இப்போ பிள்ளைமார் தெரிவிலே இடிஞ்சபடி
ஒரு பெரிய மாடி வீடு இருக்குதே .அதில
கடைசியா இருந்தது பால சுப்ரமணிய பிள்ளை
அவங்க குடும்பந்தான் மூணு நாளு தலைமுறையா
இந்தபால மீனாம்பிகைக் கோவிலுக்கு தர்மகர்த்தா
மீனாவோட குடும்பம்தான் மூணு நாளு தலைமுறையா
கோவிலுக்கு பரம்பரைப் பூசாரி.கோவிலுக்கு
நிலபுலம் ரொம்ப ஜாஸ்திடி.மேற்கே ஊரணியத் தாண்டி
அந்த கல்பாலம்வரை இருக்கிற நெலமெல்லாம்
அப்போகோவில் நிலம்தாண்டி.

கல்யாணசுந்தரேஸ்வரரா சிவன்
அருள் பாலிக்கிறதாலேமுகூர்த்த நாள் வேண்டுதல்
 கட்டளை அதுஇதுன்னு எல்லா நாளும் கோவில்
 எப்போதும் ஜே ஜேன்னு இருக்கும்

கோவில் சிறப்பா இருந்தா பூசாரிக்கும் சிறப்புதானே
மீனாவோட அப்பாவுக்கும் ஊரில் நல்ல மரியாதை
 செல்வாக்குமீனா பிறக்கறதுக்கு முன்னாடி
எப்படியோ தெரியாது

மீனா பிறந்த பின்னாலே அவர் பேரே
மீனாவோ அப்பான்னே ஆகிப்போச்சு.
அவர் பேரு காசின்னு பழைய மனிஷா
கொஞ்சபேருக்குத்தான் தெரியும்.
அதுக்கும் காரணம் இருந்தது

மீனாவுக்கு ஒரு அண்ணன் உண்டுடி.
அவன் இப்போ இல்லை
அவனுக்கு விச்சுன்னு பேரு.அவன் பிறந்து
ஏழுவருஷம்கழிஞ்சுதான் இந்த மீனாப் பிறந்திருக்கா,
."ஒரு பேச்சுக்கு சொல்ற மாதிரி இல்லேடி.நிஜமாகவே
மீனா பிறக்கும் போதே தங்க விக்ரமாதிரித்தாண்டி
அதுவும் பூர நட்சத்திரப் பிறப்பு வேற
கேட்கவா வேணும்னு".எங்க அம்மா இருக்கிறவரை
அடிக்கடிச் சொல்லுவா

படிக்கிற காலத்தில் கூட நாங்க பத்துபேர்
எப்படித்தான்அல்ங்காரம் பண்ணிக்கிட்டு
மினுமினுக்கப்பார்த்தாலும்அவ கால் தூசி பெறமாட்டோம்
.வெள்ளிக்கிழமை அதுவுமாஅவ பட்டுப் பாவாடை
பட்டுச்சட்டை போட்டுக்கிட்டு பூ வைச்சு
 நெத்திச் சூடி வைச்சு கோவிலுக்கு
வந்தா அந்த பால மீனாம்பிகையே எதிரே வர்றமாதிரி
இருக்கும்டி.நிஜமாவே எங்களுக்கெல்லாம் ரொம்பப்
பொறாமையா இருக்கும்டி.அதுவும் அவங்க அப்பா
 "வாடாபாலமீனாம்பிகைன்னு "செல்லமா
கூப்பிடறப்போஎங்க எல்லாரோட மனசிலேயும்
பொறாமைகொழுந்துவிட்டு எரியும்.
எங்களுக்கே அப்ப்டின்னா ஊர்ல கேட்கவா வேணும்

அவங்க அப்பா எல்லோரும் பொறாமையா
எல்லோரும்பார்க்கிறதை ரொம்ப்த் திமிரா ரசிச்சாலும்
அவங்கஅம்மாதான் ரொம்பப் பயப்படுவா

வெள்ளிக்கிழமைத் தவறினாலும் அவளுக்கு
திருஷ்டி கழிக்கிறதை மட்டும் மறக்கவே மாட்டா
ஆனா அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்
கழிப்பெல்லாம்  தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது

(தொடரும் )

Tuesday, July 8, 2014

துரோகம் ( 4 )

ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்ய இருப்பவர்
தன்னைத் தயார் செய்வதுபோல சுப்புப்பாட்டியும்
நன்றாக சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு
தொண்டை யை இறுமிச் சரிசெய்து கொண்டு தயாரானாள்

நானும் குப்புற படுத்துக் கொண்டு தலையணையை
மார்பில் முட்டுக் கொடுத்துக் கொண்டு
ஆவலுடன் கேட்கத்தயாரானேன்.

"எனக்குப் பின்னால இந்த ஊருக்கு வாக்குப் பட்டு
வந்தவ நீ.உனக்கு இது தெரிஞ்சும் இருக்கலாம்
தெரியாமலும் இருக்கலாம்.தெரியாட்டி
 தெரிஞ்சுக்கிட்டாநல்லது.

மதுரைக்கு ஆதிகாலத்தில இருந்து படைஎடுப்பு ஆபத்து
அது இதுன்னா வடக்கே இருந்துதான். தெக்கே இருந்து
பிரச்சனையே இல்லை.அதனாலதான்
கோட்டை கொத்தளம்எ ல்லாம் வடக்கேயும்
கிழக்கேயும் மேற்கேயும் இருக்கும்
நம்ம தெக்குப் பக்கம் அது கொஞ்சம் கம்மி

ஆனா தெக்குப் பக்கம்தான் முக்கியமான பகுதி
இது இயல்பாகவே பாதுகாப்பான பகுதிங்கிறதனாலே
அந்தப்புரம்,அரண்மணைப் பெண்கள் புழக்கம் எல்லாம்
இந்தப் பக்கம்தான் இருந்ததாகத்தான் சொல்லுவா.

மதுரை மீனாட்சி குழந்தையா இருக்கறச்சே
இங்கேதான் இருந்து வளர்ந்ததாச் சொல்லுவா
அதனாலதான் இங்கே பால மீனாம்பிகைக் கோவிலே
இருக்குத் தெரியுமோ

பின்னால நாயக்கர் காலத்திலே பாளையம் பாளையமா
பிரிச்சப்பக்கூட  நம்ம ஊருக்கு
முக்கியத்துவம் கொடுத்து முதல் பாளையமா
இருக்கட்டும்னு நம்ம ஊருக்கு
பிள்ளையார் பாளையம்னு பேரு வைச்சா
அப்புறம் தான் இந்த ஆரப்பாளையம் கோரிப்பாளையம்
மகபூப்பாளையம்,கட்றாப்பாளையம் இன்னும்
என்ன என்னவோ பாளையம் எல்லாம்

இந்த ஊரு சரித்திரம் தெரியாதவா நாகரீகமா ஊரை
மாத்திறதா  நினைச்சு இப்போ அவனியாபுரம்னு
பேரை வைச்சுத் தொலைச்சிருக்கா.

அதுக்கு என்ன அர்த்தம்டான்னு நானும் அந்த
கணக்குப்பிள்ளைக் கிட்டே கேட்டேன்
மாமி மரமும் சோலையுமா இருந்ததாலே
அவன்யூ புரம்னும் இருக்கட்டும்னும்வைச்சதாகவும்
அதுவே அவனியாபுரம்னு ஆனதாகவும் சொன்னான்

என்ன எழவோ போ பேரை மாத்தி ஊரு
பெருமையையும் மாத்தி இப்ப இதை ஆயிரம்
ஊரிலே ஒரு ஊருன்னு ஆக்கிப் புட்டா " எனச் சொல்லி
நிறுத்தினார்

நான் எதிர்பார்த்திருந்த கதைக்கு இவையெல்லாம்
சம்பந்தமில்லாமல் இருப்பது போலப் பட்டதால்
எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய
அதிகம் பசிப்பதுபோலப் பட்டது

"அம்மா சாப்பாடு போடும்மா பசிக்க ஆரம்பிச்சுடுச்சு
அப்பா வருகிற நேரமாகியும் போச்சு " என
அனத்தத் துவங்கினேன்

"கொஞ்சம் அப்பா வருகிற வரை பொறுடா
சுப்புப்பாட்டிக்கு  கதை மூடு வருவதே கஷ்டம்
இதை விட்டா கஷ்டம்டா "என்றாள்

"என்ன உன் பையனுக்கு  கதை போறடிச்சுடுச்சா
போய் சாதத்தைப் போட்டுவிட்டு வா " என்றாள்

"இல்லை மாமி நீங்க சொல்லுங்கோ.அவங்க
அப்பா வந்தவுடன் சேர்ந்து சாப்பிட்டாப் போச்சு"
என மாமியைத் தூண்டினாள் அம்மா

"இல்லப் பாட்டி கதை போரடிக்குது
நீங்க மீனாட்சி கதையச் சொல்லச் சொன்னா
ஊர் கதையைச் சொல்றேள்."என்றேன் எரிச்சலுடன்

"டேய் லூசு சும்மா இருடா.சுப்புமாமி மட்டும்
புத்தகத்திலே கதை எழுத ஆரம்பிச்சிருந்தா
கல்கிக்கு மேலயே பிரபல்யம் ஆகியிருப்பா
மாமிக்கு மூடு இருக்கு நீ கெடுத்துப்பிடாத
அப்புறம் அமையறது கஷ்டம் ,நீங்க
சொல்லுங்கோ மாமி " எனச் சுப்புப்பாட்டிக்கு
உசுப்பேத்தினாள் அம்மா

"எனக்கு இப்படி உன்னைப்போல ஆர்வமா
கேட்கிறவங்க்களைக் கேட்டா சந்தோஷம்டி
வாய் வழியா பரம்பரையா சொன்னதெல்லாம்
யாரும் மிகச் சரியா கவனிக்காம பதிவு செய்யாம
எத்தனை விஷயம் ஊரு உலகுக்குத் தெரியாம
போச்சுத் தெரியுமா.நம்மை ஊருக் கதையும்
போயிரப்படாதுன்னு என பாட்டி எனக்குச் சொன்னதை
எல்லாம் இப்படி சமயம் கிடைக்கிறப்போ நான்
சொல்லிவைக்கிறேன்.எவனாவது அதை எழுதி
ரிகார்ட் பண்ணாமலா போயிடுவான் " என
நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்

தெருவில் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று
கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக வீட்டினுள்
போக வம்பு தேடி அலையும் பாலுமாமா மட்டும்
 சுந்தரம்மாமா வீட்டை நோட்டம் விட்டபடி மெதுவாக
அந்த வீட்டைக் கடந்து கொண்டிருந்தார்

பாட்டி மெல்ல குரலைக் குறைத்தபடி
"நான் விஸ்தாரமா  ஊரைப் பத்தியும் கோவிலைப்
பத்தியும் சொன்னதுக்கு காரணம் இருக்குடி
ஏன்னா இந்த மீனாட்சி வாழ்க்கைக்கும் அந்தக்
கோவிலுக்கும் நெருங்கிய  சம்பந்தம் இருக்குடி"
எனச் சொல்லி நிறுத்தினாள்

நான் எழுந்து உட்கார்ந்து ஆவலுடன் கேட்கத்
தயாரானேன்

( தொடரும் )

Sunday, July 6, 2014

துரோகம் ( 3 )

பாதித் தெரு கடந்து பஜனைமடத்தைத் தாண்டியதும்
சாமானை ஏற்றி வந்த வண்டி கொஞ்சம்
ஒதுங்கி வழிவிட கூட்டு வண்டி
அதைத் தாண்டி முன்வர
சுப்புப்பாட்டி இன்னும் கூடுதல் பரபரப்பாகி விட்டாள்

நானும் எழுந்து நின்று அப்படி என்ன விஷேசம் என
எட்டிப்பார்க்க எங்கள் தெருவின் எல்லோருடைய
வீட்டு வாசலிலும் அதே பரபரப்போடு சிறுவர் முதல்
பெரியவர்கள் வரை நின்று கொண்டிருப்பதுத் தெரிந்தது

அந்தக் கூட்டு வண்டி மிகச் சரியாக சுந்தரம் மாமா வீட்டு
வாசலில் நிற்க ஓட்டி வந்த ஐயனார் முதலில்
கீழே இறங்கி"சாமி நீங்க கொஞ்சம் முன் நகர்ந்து
 உட்காருங்கள்"எனச் சொல்லிவிட்டு
சாட்டைக் கம்பியை வண்டியின்
பக்கவாட்டில் சொறுகிவிட்டு வண்டியை
அழுத்திப் பிடித்துக் கொண்டு "இப்ப பைய முதல்ல
நீங்க பேரும் இறங்கிக்கிட்டு சின்னச் சாமியை
இறக்கிவிட்டுட்டு அப்புறம் சூதானமா பெரியம்மாவை
இறக்கிவிடுங்கம்மா " என்றான்

எட்டி நின்ற சுப்புப்பாட்டி இப்போது எங்கள் அம்மாவிடம்
நெருங்கி வந்து "இப்போ முன்பாரமா
 உட்கார்ந்திருக்கானேஅவன்தான்
மீனாட்சியின் பிள்ளை .பின்னே இறங்கிற ரெண்டும்
 மூத்த தாரத்துப் பிள்ளங்க"எனக் கிசுகித்தாள்

முன்னால் வண்டியில் அமர்ந்திருந்த ராகவனை
அப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்
கொஞ்சம் கட்டை குட்டை வயது நிச்சயம் முப்பதுக்கு
மேலிருக்கலாம்.மற்றபடி சொல்லிக்
கொள்ளும்படியான சிறப்பம்சம் ஏதும் எனக்கு
அப்போது தெரியவில்லை.

பின்னால் முதலில் இறங்கிய மாமிக்கு வயது
நாற்பதுக்கு மேல் இருக்கலாம்.கணவனை இழந்தவர்
என்பதுபார்த்ததும்தெரிந்துகொள்ளமுடிந்தது.
இரண்டாவதாகஇறங்கியவருக்கு
வயது முப்பதந்து இருக்கலாம்
உடன் இடுப்பில் ஒரு பையனைச் சுமந்தபடி கீழே
இறங்கி பையனை கீழே இறக்கிவிட்டு இருவரும்
சேர்ந்து அந்த வயதான பாட்டியை
இரு தோள்பட்டைலும்கைகொடுத்து இறக்கி
கைதாங்களாக வீட்டுக்குள்அழைத்துப் போனார்கள்.

அந்த தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அந்த
மீனாட்சியைப் பார்த்தேன்.அப்போது நான்
காந்தித் தாத்தாவுக்குபெண் வேஷம் போட்டால்
இப்படித்தான் இருப்பாரோ எனஎண்ணியது
இப்போதும்  நன்றாக நினைவிருக்கிறது
வெள்ளை நார்ப்புடைவையில் முக்காடிட்டபடி
 இறங்கியஅவரைப் பார்த்ததும் வறுமையின்
கோரப்பிடியில்நைந்து போனவராகத் தெரிந்தாலும்
ஏதோ ஒருஈர்ப்புச் சக்தி அவரிடம்
இருப்பது போலப் பட்டது

இப்போது மீண்டும் எங்கள் வீட்டுப் படிக்கட்டில்
நன்றாக சாய்ந்து உட்கார்ந்த சுப்புப்பாட்டி
"இவ தாண்டி நேத்து நான் சொன்னகிரேட் மீனாட்சி
எங்க காலத்தில்  அப்படித்தான் எல்லோரும்
அவளச் சொல்வாங்க.கொஞ்சம் மா நிறமானாலும்
அழகுன்னா அவ்வளவு அழகுடி,காலம் அவள
எப்படிச் சிதைசிருக்குப் பாரு.
கையெழுத்து நல்லா இருக்கிறவா தலையெழுத்து
நல்லா இருக்காதுன்னு சொல்வா
அழகா இருக்கிறவ தலைய்ழுத்தும்
அப்படித்தான் போல"என சொல்லி நிறுத்தினாள்.

சுப்புப்பாட்டியால் துவங்கிய விஷயத்தை முடிக்காமல்
தூங்க முடியாது எங்கள் அம்மாவும்  துவக்கியதை
முடிக்காமல் யாரையும் விட்டு விடமாட்டாள்.

நிச்சயம் கதை சோகமாக இருந்தாலும்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என
எனக்குப்பட்டதால்லேசாகக் கிளம்பிய பசியையும்
பொருட்படுத்தாதுநானும் கதை கேட்கத் தயாரானேன்

(தொடரும் )

Friday, July 4, 2014

துரோகம் ( 2 )

நான் முதன் முதலாக ராகவனைச் சந்தித்தது
இன்றிலிருந்து ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு
மேல் ஆகி இருந்தாலும் கூட அந்த நேரமும்
நிகழ்வும் இன்னும் என்னுள் பசுமையாகத்தான்
இருக்கிறது

அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும்
பள்ளி இறுதி வகுப்பு அப்போதுதான் கல்லூரியில்
புதுமுக வகுப்பு சேர்ந்திருந்த நேரம்
வேட்டிக்கு மாறி வேட்டியும் மிகச் சரியாக
மனதளவில் ஒட்டாது டிராயரையும் முழுவதும்
விட்டு விடாது மிகச் சரியாகச் சொன்னால்
விடலையாய் அனைத்து விஷயத்திலும்
இருந்த காலம் அது

மதுரையை ஒட்டி இருந்த ஜாதிவாரியாக
தெருப்பெயரைக் கொண்டிருந்த அந்த ஊரில்
கல்லூரிப் படிப்புப் படிப்பவர்கள் மொத்தமே
பத்து பதினைந்து பேர்தான் இருப்போம்
அப்போது கல்லூரியில் படிப்பவர்கள் என்பதால்
ஊரில் எங்களுக்கு இருந்த  மதிப்பு தனி

அந்த ஒன்பது மணி டவுன் பஸ்ஸில்
பின் நெட்டுச் சீட்டில் எங்களைத் தவிர
யாருமே உட்கார மாட்டார்கள்.பஸ் ஊரை விட்டுக்
கிளம்பி கிரைம்பிராஞ்ச் போகிற வரை
நாங்கள் செய்யும் அலப்பறையை இப்போது
நினைத்தாலும் மனம் இளமைத் துள்ளல்
போடத்தான் செய்கிறது

இந்த இளமைத் துள்ளலாட்டம் எல்லாம்
வெளியில் மட்டுமே.வீட்டிற்கு வந்து வேட்டியைக்
கழற்றி டிராயரை மாட்டியதும் மீண்டும் பள்ளிச்
சிறுவனைப் போலாகி விடுவேன்

இது என்னுடைய இயல்பாய் இருந்ததா அல்லது
வீட்டில் என்னை வளர்ந்தவனாக அங்கீகரிக்காததாலா
என்கிற மனக்குழப்பம் இன்றுவரை  இருக்கத்தான்
செய்கிறது.

அதனாலேயே மாலை கல்லூரிவிட்டு வந்து வந்ததும்
கிணற்றடியில் முகம் கைகால் கழுவி விபூதி தரித்து
சாமியறையில் சொல்லவேண்டிய சுலோகங்களைச்
சொல்லிமுடித்து திண்ணைக்கு வருகையில் அம்மா
எனக்குத் தின்பதற்கு எதையாவது வைத்திருப்பாள்
அனேகமாக கூடுமான வரையில் வறுத்தகடலையாகவோ
அல்லது ஏதாவது சுண்டலாகவோ இருக்கும்

அதைக் கொறித்தபடி அம்மாவின் மடியில்
படுத்தபடி "அப்புறம்,,,"என்றால் போதும்
அம்மா எனக்கு ஆயிரம் ஊர் விஷயம் வைத்திருப்பாள்
அல்லது நான் கல்லூரி விஷயம் ஏதாவது
சுவாரஸ்யமாக வைத்திருப்பேன்.அந்தப் பொழுது
எத்தனை சுவாரஸ்யமானது சுகமானது என்பது
அனுபவித்துப்பார்த்தவர்களுக்குத்தான் புரியும்

அன்று அம்மாவிடம் சொல்வதற்கு என்னிடம்
விஷயம் எதுவும் இல்லை.ஆனால் அம்மாவிடம்
ஏதோ ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது
என்பதை அவளுடைய பரபரப்பான அசைவுகளில்
இருந்தும் அவள் அடிக்கடி தெருவின்
வடக்குக் கோடியைப் பார்ப்பதிலிருந்தும்
புரிந்து கொண்டேன்

மெல்ல மெல்லமாலை மறைந்து இருள் சூழத் துவங்க
தோப்புபோல் இருந்த எதிர்ச்சந்து மரங்களில்
காகங்கள் கரைந்தபடி அடையத் துவங்கியது

மூணாவது வீட்டு சுப்புப் பாட்டி தனது தலை
முக்காட்டைச் சரிசெய்தபடி அவசரம் அவசரமாக
எங்கள் வீட்டு கீழ் திண்ணையில் அமர்ந்தபடி
"அதோ வந்துட்டாங்க போல இருக்கே  "என்றாள்

நானும் யார் என ஆவலுடன் திரும்பிப் பார்க்க
வடக்குக் கோடியில் ஒரு இரட்டை மாட்டு வண்டியும்
ஒரு கூட்டு வண்டியும் எங்கள் தெருவில் நிதானமாக
நுழைந்து கொண்டிருந்தது ஒரு நிழற்படம்போல் தெரிந்தது

(தொடரும் )

Wednesday, July 2, 2014

துரோகம் ?

செல்போன் மணியடிக்க சட்டென விழித்தேன்
இரவு மணி பதினொன்றாகி இருந்தது.

முன்பு கிராமத்திற்கு தந்தி அலுவலர் வந்தால்
ஏற்படும் கலக்கம் இப்போது அகால நேரத்தில்
செல் போன் மணி அடித்தால் ஏற்படத்தான் செய்கிறது

கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்க்க
அழைப்பு கிருஷ்ணனிடம் எனத் தெரிந்தது.
கிருஷ்ணனும் தேவையில்லாமல் போன்
பேசுகிறவன் இல்லை,என்வே நிச்சயம் ஏதோ
ஒரு அவசர காரியம் எனப் புரிந்தது

" என்ன நல்ல தூக்கத்தில் எழுப்பிவிட்டேனா ?"
போனை ஆன் செய்ய கிருஷ்ணனே பேசினான்

"இல்லையில்லை  சொல்லு சொல்லு
இப்பத்தான் அசந்தேன்எதுவும் அவசரமா.இல்லையேல்
நீயே பேசமாட்டாயே "என்றேன் சம்பிரதாயமாக

"ஒன்றுமில்லை இன்று காலையில் ஆபீஸ்
வேலையாக ராஜபாளையம் வரை
போக வேண்டி இருந்தது.அங்கு  நம் உறவினர்
சொல்லித்தான் ராகவன் உடம்பு சௌகரியம்
இல்லாமல் இருக்கிறார் எனத் தெரிந்தது
அவரைப் பார்த்தும் ரொம்ப நாளாகிவிட்டதால்
இந்தச் சாக்கில்பார்த்துத் திரும்பலாமே எனப் போனேன்
போய்ப் பார்த்ததும் ரொம்பச் சங்கடமாகிவிட்டது"
எனச் சொல்லிவிட்டு சிறிது அமைதியாய் இருந்தான்

பின் அவனே தொடர்ந்தார் "உடம்பு சௌகரியம்
இல்லையெனச் சொன்னவர்,இவ்வளவு
சீரியஸாக இருக்கும்எனச் சொல்லாததால்
அவரைப் பார்த்ததும்அதிர்ந்து போனேன்.
இரண்டு நாளாய் சிறுநீர் சரியாகப் போகாததால்
சிரிஞ்ச் வைத்துத்தான்எடுக்கிறார்களாம்.
வயிறும் கொஞ்சம் வீங்கி இருந்தது
ரொம்பப் பாவமாய் இருந்ததுடா.என்னைப்பார்த்ததும்
ரொம்பச் சந்தோஸப்பட்டார்,அவரே  அவரைப் பற்றி
ஒருமுடிவுக்கு வந்திருப்பது அவர் பேச்சில் தெளிவாய்த்
தெரிந்தது.அடிக்கடி உன்னைத்தான் விசாரித்தார்
முடிந்தால் பார்க்கவேண்டும் எனச் சொல் என்றார்
அரை மணி நேரத்திற்குள் உன்னை விசாரித்தது
ஏழு எட்டுத் தடவைக்கு மேல் இருக்கும்
தப்பா நினைக்காதே.அவர் பேசியது மரணப்பினாத்தல்
போலத்தான் எனக்குப் படுகிறது " என சொல்லி
நிறுத்தினான்

"என்னடா அவ்வளவு சீரியஸாகவா இருக்கிறது
மூன்று மாதத்திற்கு முன்னால் கூட அவருடைய
தங்கை பையனை ஒரு கல்யாணத்தில் பார்த்து
விசாரித்தேனே.நன்றாக இருப்பதாகத்தானே
சொன்னான்"என்றேன்

"அவன் கதை பெரிய கதை.அவன் அவரை
 விட்டுப்போய் இரண்டு வருஷத்துக்கு
 மேலாகி விட்டதாம்
அதைப்பத்தியெல்லாம் நேரடியாகப்
 பேசிக்கொள்ளலாம் நீ நாளைக் காலையில்
முதல் பஸ்ஸைப் பிடித்து அவரைப் போய்ப்
பார்க்கிற வேலையைப் பார்
அவரைக் குறைமனத்துடன் சாகவிட்டால்
உனக்குத்தான் பாவம் " என்றான்

நிச்சயம் பார்க்கவேண்டும்தான்.போனால் திரும்ப
இரவாகிவிடும்.நாளை இளையவள்  பள்ளியில்
பேரண்ட்ஸ் மீட். இந்த முறை அவசியம் அப்பாவையும்
கூட்டி வரச் சொல்லி இருக்கிறார்கள் என என் மனைவி
ஏற்கெனவே முன் தகவல் கொடுத்திருந்தாள்

"சரிடா நாளை போகப் பார்க்கிறேன்.இல்லையேல்
நாளை மறுநாள் அவசியம் போய்பார்த்துவிட்டு
வந்து விடுகிறேன் "என்றேன்

நான் இதைச் சொல்லி முடிப்பதற்குள் சட்டென
இடைமறித்த கிருஷ்ணா "வேண்டாம்டா
தாமதம் பண்ணாமல் நாளைக் காலையிலேயே போ
மறுநாள் போய் அவரைப் பார்க்கமுடியாது போனால்
பின்னால் நீ அதிகம் வருத்தப்படவேண்டி இருக்கும்
அறிந்தோ அறியாமலோ அவருக்கு நீ ஒரு பெரிய
துரோகம் செய்த்து விட்டாய்..இந்தக் குறையும்
சேர்ந்தால்உன்னால் நிம்மதியாய் இருக்க முடியாது.
அவ்வளவுதான் சொல்வேன்" எனச் சொல்லிவிட்டு
சட்டென போனை கட் செய்துவிட்டான்

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது

ஆறு மாதங்களுக்கு முன்பு
ராகவன் குறித்த ஏதோ ஒரு பேச்சு வருகையில்
"நம்பினவனுக்கு கெடுதி செய்வது மட்டும்
துரோகமில்லை.நம்பினவனுக்கு
செய்ய வேண்டியதைச்செய்யாமல் விடுவதும்
நிச்சயம் துரோகம்தான் "எனச்
சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும்
நினைவுக்கு வர மனம் மிகச் சோர்ந்து சோபாவில்
மெல்லச் சாய்ந்தேன்.

அந்தச் சொல்லாமல் விட்டத் துரோகம்
என்னுள் தீயாய்ப் பரவி என்னை எரிக்கத் துவங்கியது

(தொடரும் )

Tuesday, July 1, 2014

விதுர நீதிப் பேசிப்பேசி......

உழைத்து உழைத்து ஓயாது
மனசு வெந்துச் சாகாது-நீ
செழித்து வாழ வழியொன்று
சொல்வேன்  உனக்கு மிகஎளிதாய்

வெட்டிப் பேச்சுப் பேசாது
நியாயம் நீதி பேசாது-நீ
நிச்சயம் தொடர்ந்து செய்தாலே
வெற்றி விளையும் தன்னாலே

சொத்துப் பத்து உன்கணக்கில்
கூடக் கொஞ்சம் சேர்த்துவிடு-நீ
சொல்லிச் செல்லும் எல்லாமே
உண்மை யாக  மாறிவிடும்

எனவே  இனியேனும்

தர்ம நியாயம் பேசாது-மனச்
சாட்சி என்று மயங்காது
சொத்துப் பத்தைச் சேர்த்துவிடு
சொர்க்க மாகும் உன்வாழ்வு

பத்து பேரை  உன்பின்னால்
எப்போதும் நீ   நிற்க விடு-நீ
செய்யும் செயல்கள் எல்லாமே
சிறந்த செயலாய் தோன்றிவிடும்

எனவே இனியேனும்

எந்தக் கூத்துச்  செய்தேனும்
அள்ளி எதையோ கொடுத்தேனும்-நீ
வெட்டிக் கூட்டம் சேர்த்துவிடு
உயர்ந்து போகும்  உன்வாழ்வு

பதவி ஒன்றை  நீபிடித்து -
பந்தாவாக அமர்ந்துவிடு -நீ
எதைநீ உளறி னாலுமது
வேத வாக்கா உலகேற்கும்

எனவே இனியேனும்

எத்தனைப்  பொய்யைச் சொல்லியேனும்-
எதனைக் காவு கொடுத்தேனும்-நீ
நல்ல பதவிப் பிடித்துவிடு
நாடே உந்தன் வீடாகும்

எனவே  இனியேனும்

உ ழைத்து உழைத்து ஓயாது
மனசு வெந்துச் சாகாது-நீ
செழித்து வாழத்  தெரிந்துகொள்
உலகின் போக்கைப் புரிந்துகொள்

விதுர  நீதிப்  பேசிப்பேசி
வெட்டித் தனமாய்த் திரியாது
புதிய   வழியைத் தேர்ந்தெடுத்துப்
பிழைக்கும்   வழியைப் பார்த்துக்கொள்