Monday, April 29, 2013

வெறுங்கை முழம்

வித்தியாசமாக
சுவாரஸ்யமாக
பயனுள்ளதாக
எதைச் சொல்லலாமென
எப்படித்தான்  முயன்றபோதும்
எத்தனை நாள்  முயன்றபோதும்
ஏதும் பிடிபடாதே போகிறது

ஆயினும்
கவர்ந்ததை
ரசித்ததை
உணர்ந்ததை
சொல்லத் துவங்குகையிலேயே
வித்தியாசமும்
சுவாரஸ்யமும்
பயனும்
இயல்பாகவே
தன்னை இணைத்துக் கொண்டு
படைப்புக்குப்
பெருமை சேர்த்துப் போகின்றன

எத்தகைய
ஜாம்பவனாகினும்
வில்லாதி வில்லனாகினும்
இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க   இயலாதென்பதும்   ...

விஞ்ஞானத்திற்கான
அடிப்படை இலக்கணம் மட்டும் அல்ல அது
படைப்பிலக்கியத்தற்கான
அடிப்படை விஞ்ஞானம் என்பதும்
மறுக்க இயலாதுதானே  ?

Sunday, April 28, 2013

மனக் குகை விசித்திரங்கள்

விமானப் படிக்கட்டை விட்டு
இறங்கியதும் எதிர் இருந்த
என் வீட்டு வாசலில்..

நான் பத்து வயதாயிருக்கையில்
இறந்து போன என் பாட்டி
என் ஐந்து வயது பேரனுக்கு 
உணவூட்டிக் கொண்டபடி
"வாடா என வரவேற்கி றாள்

இது எப்படி சாத்தியமென
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே
எதிரே அவசரமாக
சைக்கிளில் போய்க்கொண்டிருந்த
நிதியமைச்சர் பாட்டியைப் பார்த்து
டீச்சர் சௌக்கியமா 
 "எனக்கேட்டுப் போகிறார்..

நான் அதிர்ந்து போய்
பாட்டி உனக்கு இவரைத் தெரியுமா "
 எனக் கேட்க
பாட்டி அலட்சியமாய்
"நான் தாண்டா அவனுக்கு
 பத்தாம் வகுப்புக்கு கணக்கு டீச்சர் "என்கிறாள்

எனக்குள் பயம் பாம்பாய்ப் படமெடுக்க
அரண்டுபோய் இரண்டடி பின் செல்ல
"கொஞ்சம் பார்த்துப்பா "என்கிறது தெருவில்
ஒருக்களித்துப் படித்திருந்த நாய்

"பாட்டி எனக்குப்  பயமாயிருக்கிறது
நம்ம ஊரில் நாய் பேசுமா
எனக் கேட்டு முடிப்பதற்குள்
"அது தானே " என ஆச்சரியப்பட்டது
குட்டிச் சுவர் அருகில் இருந்த கழுதை

அரண்டு வெலவெலத்துப்  போய்
இனியும் இங்கு இருக்கலாகாது எனத்
தலைத் தெறிக்க ஓடிய நான்....
தவறிப் போய் அந்த வண்ணான் குளத்தில்
தலை கீழாய் விழுந்து நிமிர்ந்து விழித்தபோது..
.
."....என்ன இன்றும் பேய்க் கனவா
தண்ணி குடித்துவிட்டுப் படுங்க "
என்றபடி புரண்டு படுத்தாள் மனைவி
மெலிதாய் எரியும் இரவு விளக்கு
சுவரில் நீண்டு தெரியும் என் கரிய உருவம்
மின் விசிறித் சத்தம்

வாசலில் விடாது குரைக்கும் நாய்

உண்மையாய் நிஜமாய் இருக்கும்

யதார்த்தங்களில் வர வர சுவாரஸ்யம்

குறைந்து கொண்டே போகிறது எனக்கு

காலம் நேரம் தூரம்
யதார்த்தம் உண்மை தர்க்கம்
அனைத்தையும் ஒரு நொடியில்

தகர்த்தெரியும் விளக்கமுடியா

அமானுஷ்யமே இப்போதெல்லாம்
 எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது

எனவே 
மீண்டும் ஆர்வமுடன்
அமானுஷ்யங்களுடன்  உறவாட த் 
துயிலத் துவஙகுகிறேன் நான்

Friday, April 26, 2013

ஒரு கோடிச்சொல்லும் ஒரு சிறு செயலும் ....

எதிர்படும் யதார்த்தங்களை
எதிர்கொள்ளும் துணிவற்றதால்தான்

கற்பனைத் தேரேறி
கவிதையூர்  செல்கிறேனோ ?
கண்ணை மூடிக் காட்சி தேடும்
கபோதி யாகிறேனோ ?

மிதிபடும் துரும்பெடுக்கவும்
குனிவதற்கு தெம்பற்றுத்தான்

எண்ணத்தால் மலையசைத்து
இறுமாந்துத் திரிகிறேனோ ?
வார்த்தைகளால் உலகத்தை
ஏமாற்றித் திரிகிறேனோ ?

துரத்துகிற துயரங்களை
எதிர்க்கின்ற  துணிவின்றித்தான்

வான்நோக்கி மண்ணில் நடந்து
ஞானியாக முயல்கிறேனோ ?
வெறும் கையில் முழம்போடும்
கவிஞனாகி மகிழ்கிறேனோ ?

கனவுகளில் கற்பனையில்
சுகித்திருத்தல் தனைவிடுத்து
புறவெளியின் புழுதியினை
என்று ரசிக்கப் போகிறேன் ?

மாடம் விட்டு கீழிறங்கி
மண்ணில் நடக்கப் போகிறேன்?
மனித வாழ்வின் உன்னதத்தை
நிஜமாய் உணரப்  போகிறேன் ?

கோடிக் கோடி வார்த்தையது
ஒருசிறு செய லதற்கு
ஈடு இல்லை என்பதனை
என்று தெளியப் போகிறேன் ?

பிண்ட மதனைப் பெற்றுவிட்டு
தாயெனவே  மகிழ்வதற்கு
மலடிப்பட்டம்  சிறந்ததென
என்று உணரப் போகிறேன் ?

Thursday, April 25, 2013

அறிதல் குறித்த ஒரு புரிதல்

அறியாதிருந்தும்
அறியாததை அறிந்திருந்தும்
அறியாதபடியே காட்டிக் கொண்டுமிருப்பவன்
நிச்சயம் நல்லவனே

அறிந்திருந்தும்
அறிந்ததை அறிந்திருந்தும்
அறிந்தவானாய்க் காட்டிக் கொண்டுமிருப்பவன்
உண்மையில் வல்லவனே

அறிந்திருந்தும்
அறிந்ததை அறிந்திருந்தும்
அறியாதவனாய்க் காட்டிக் கொண்டிருப்பவன்
சந்தேகமில்லாமல் உயர்ந்தவனே

அறியாதிருந்தும்
அறியாததை அறிந்திருந்தும்
அறிந்தவனாய்க் காட்டித் திரிபவன்
 கடைந்தெடுத்த முட்டாளே

என்ன செய்வது
எண்ணிக்கையில்  இவர்கள் அதிகம் இருப்பதால்
இன்று முட்டாள்களின் அறிவுரைகளைத் தானே
நல்லவனும் வல்லவனும் உயர்ந்தவனும்
கேட்டுத்  தொலைக்கவேண்டியிருக்கிறது

என்னசெய்வது
ஜன நாயகக்கோட்பாடின்படி
அவர்கள்  வழிகாட்டுதலின்படித்தானே
வாழ்ந்தும்  தொலைக்கவேண்டியிருக்கிறது

அதனால்தானே  வாழ்வும் நாடும்
நாசமாகவும் போய்க்கொண்டிருக்கிறது

Monday, April 22, 2013

உள்ளும் புறமும் ( 9 )

எந்த ஒரு பிரச்சனையும் உச்சம் தொட்டபின்
நாம் விரும்பினபடியோ அல்லது மனம்
வெறுப்படையும்படியோ ஒரு முடிவுக்கு
வந்துதானே ஆக வேண்டும்.

இதில் எங்கள் வீட்டுப் பிரச்சனையும்
விதிவிலக்கா என்ன ?

சிலை உடைப்பு விவகாரம் ஜாதிக் கலவரமாய்
விஸ்வரூபம் எடுத்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு
விடுமுறை அறிவித்திருந்ததும்
நானும் விடுமுறையில் இருந்த காரணத்தாலும்
முதல் நான்கு நாட்களுக்கு நாங்கள் யாரும்
வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே இல்லை

பந்தோபஸ்துக்கு வந்திருந்த துணை ராணுவத்தினர்
வீட்டிற்கு நீரெடுக்க வருகையில் அப்போதைக்கு
அப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற
நிலவரத்தைச் சொல்லிப்போவார்கள்.

ஐந்தாம் நாள் நிலைமை கொஞ்சம்
சீரடைந்திருந்தது,போலீஸ் பாதுகாப்புடன்
பஸ்கள் ஓடத் துவங்க்கின,துணை ராணுவமும்
வாபஸ்பெறப்பட்டு சில குறிப்பிட்ட இடங்களில்
மட்டும் போலீஸ் காவலுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்கள்

சரி இனியும் காலம் தாழ்த்துவதில் பயனில்லை
உடன் பாஸ்போர்ட் விவகாரத்தை முடித்துவிட்டு
வீட்டைக் காலி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்
 எனநான் போலீஸ் ஸ்டேஸன் கிளம்புகையில்
எம்பார்மெண்ட் பிச்சையே சைக்கிளில் எங்கள்
வீடு தேடி வந்தான் அதுவும் நல்லதாய் போயிற்று

கடந்த வாரம் பார்த்ததை விட பிச்சை மிகவும்
சோர்ந்து போயிருந்தான்,நாமாக கேட்கவேண்டாம்
எப்படியும் அவனே சொல்லிவிடுவான் என
அவனுக்கு திண்ணையில் சேரில் உட்காரவைத்து
காபி பலகாரம் கொடுத்து உபசரித்த பின்
வந்த விஷயம் குறித்து விசாரித்தேன்

அவன் கொஞ்சம் சோர்வாகவே முதலில்
பேசத் துவங்கினான்

"சார் இந்த சிலை உடைப்பு பிரச்சனை ரொம்ப
பெரிய பிரச்சனை ஆகிப் போச்சு சார்.
தமிழ் நாடு பூரம் கலவரம் பரவிப் போனதால
சென்னையிலிருந்து பெரிய பெரிய அதிகாரிகள்
எல்லாம் உடனேஸ்பாட்டுக்க்கு
வந்துட்டாங்க சார்,
அவங்க எல்லோருமே மது விலக்கு அமலில்
இருக்கிற போது எப்படி இவ்வளவு தைரியமா
சாராயம் விக்கிறாங்கன்னு அதிர்சியடைஞ்சு
போனாங்க சார்.நிச்சயம் எவனாவது
குடிகாரப் பயதான் இந்த வேலையச் செஞ்சிருப்பான்
சிலை உடைப்புக்கு குடியும் அதுக்கு
சப்போர்ட்டா இருந்த அதிகாரிகளும்தான்
காரணம்னு வி ஏ ஓ ஏட்டுஇன்ஸ்பெக்டர்
எல்லோரையும் உடனடியா வேற மாவட்டத்துக்கு
மாத்திபுட்டாங்க்க சார் " என்றான்

நான் எரிச்சலுடன் :அவங்கள  மாத்தி என்ன
ஆகப் போகுது,அடுத்து வரப்போற அதிகாரிகளும்
காசை வாங்கிட்டு  அதைத்தான்
 செய்யப் போறாங்க "என்றேன்

அவன் அவசரமாக "அதுதான் இல்லை சார்
இந்தப் பிரச்சனை முதல்வர் வரை போனதாலே
கொஞ்சம் எல்லோரும் ஜாக்கிரதையாகவே
இருக்காங்க சார் நீங்க அந்தப் பக்கம்
போகையலையே போய் பாருங்க
முள் காட்டையெல்லாம் ஒரே நாள்ல வெட்டி
நீட்டா ஆக்கிட்டாங்க.சிலைய இப்போ
 துணி போட்டு மூடிவைச்சு வெங்கல சிலைக்கு
ஆர்டர் கொடுத்திருக்காங்க அடுத்து ரோடும்
 போடப்போவதாக சொல்றாங்க "என்றான்

"எல்லாம் நல்லதுதானே நீ ஏன்
வருத்தமா இருக்கே"என்றேன்

அவன் பெருமூச்சுவிட்டபடி சொன்னான்"
எல்லாத்துலயும் நல்லதும் இருக்கு கெட்டது
 இருக்கு சார்.இந்த வியாபாரிக
ஸ்டேஷனை கவனிக்கிறப்ப எனக்கும் என்னவாவது
செலவுக்குக் கொடுப்பாங்க.அது கெட்டுப் போச்சு
இனி வரப்போற போலீஸும் ஏட்டும் நமக்கு எப்படி
இருப்பாங்களோ .எல்லாம் சரியாக கொஞ்ச நாளாகும்
அதுவரை நம்ம பாடு கஷ்டம் சார் "என்றான்

பின் அவன் வந்த விவரத்தைக் கேட்க பழைய
தேதியிலேயே இன்ஸ்பெக்டர் கையெழுத்துப்
போட்டுப் போவதாகச் சொல்லி இருப்பதாகவும்
 நாலு பேருக்கு எண்ணூறு ரூபாயும்  நாலு பேரு
 பாஸ்போர்ட் சைஸ் போட்டாவுடன் வரும்படியும்
 சொல்லிப் போனான்

நானும் மறு நாள் பணத்துடனும் பாஸ்போர்ட்
 சைஸ் போட்டாவுடனும் போய் கையொப்பமிட்டு
 வந்தேன் அப்போதுதான் அந்த சாராயம்
விற்ற ஏரியாவைப் பார்த்தேன்.
வெட்டவெளி பத்து ஏக்கருக்கு மேல் இருக்கும்

அதைப்போல சிலை இருந்த இடத்தை சுத்தப்படுத்தி
அகலப்படுத்தி ஒரு பிரதான ஐலாண்ட் போல
ஆக்கி இருந்தார்கள்.

காவலுக்கு இருந்த ஒரு ஆயுதமேந்திய போலீஸ்காரர்
அருகில் அமர்ந்திருந்த சங்கிலி முருகன் என்னைக்
கண்டதும் வேகமாக எழுந்து வந்தார்

சந்தோஷமாக "சார் எல்லா சனியனும் முடிஞ்சு
போச்சு சார் இனிமே இந்த் ஏரியா
சூப்பரா வந்திரும் சார்,
எல்லாம் எங்க  தலைவரால வந்ததுதான் சார்
புதிய சிலை வந்ததும் திறப்பு விழா பெருசா
வைக்கப் போறோம் சார் .நீங்களும்  அவசியம்
கலந்து கொள்ளவேனும் சார் " என்றான்

சரி இவனையும் இனி பழக்கத்தில் வைத்துக்
கொள்ளவேணும் எதுக்குமுதவும் எனக் கருதி
 அவன் பேரைக் கேட்டுவைத்தேன்
"பழ நி " என்றான்

அதற்கு மூன்று மாதத்திற்குள் சாலை வசதி
 வந்து விட்டது சாராய வியாபாரம் இல்லாமல்
போய்விட்டது எனத் தெரிந்ததும்  எங்கள்
காலனியில் ஒவ்வொருவராக
தங்கள் இடம் பார்க்க வருவதும் ஒரு சிலர்
வேலை துவங்கவும் ஏரியா கொஞ்சம்
கலகலப்பாகத் துவங்கியது

அடுத்து இரண்டு மாதத்தில் பாஸ்போர்ட்
 வந்துவிட்டது ஆனாலும் ஏரியாவில்
எந்த பிரச்சனையும் இல்லை என்பதாலும்
இங்கேயே இருக்க முடிவு செய்தோம்

இடையில் ஒருமுறை எங்கள்  வீட்டுப் பக்கம்
வந்ததாகவும் அப்படியே பார்த்துப்
போக வந்ததாகவும் பிச்சை வந்தான்,
அவனுடன் சந்தோஷமாக
பேசிக் கொண்டிருந்த என் மனைவி
"வெங்கடாஜலபதிக்கு வேண்டிக் கொண்டது
வீண் போகலை,எல்லாம் நல்லவிதமாக முடிந்தது
அடுத்த மாதம் திருப்பதி போய் காணிக்கை
செலுத்தனும் "என்றாள்

என்னவோ யோசித்தபடி இருந்த பிச்சை திடுமென்று
"அப்படியே பழ நி முருகனுக்கும் போய் காணிக்கை
செலுத்தி விட்டு வாங்க " என்றான் லேசாகச் சிரித்தபடி
அது எனக்கு என்னவோ நக்கல் சிரிப்பு
போலேனக்குப்பட்டது

"நாங்க பழ நீ முருகனுக்கு வேண்டிக்
கொள்ளவில்லையே "என்றாள்
வெள்ளந்தியாய் என் மனைவி

"நீங்க  வேண்டினது வெங்க்கடாஜலபதி தான்
 ஆனா செஞ்சது என்னவோ
 பழ நி முருகன்தான் "என்றான்சிரிப்பு மாறாமல்

அவன் ஒருவேளை கடவுளை நம்பாதவனாக
இருக்கலாம் என முடிவு செய்து மனைவிக்கு
 கண் ஜாடை செய்து பேச்சை அத்துடன்
முடித்து வைத்தேன்

அடுத்து சில நாட்களில் நாலைந்து பேரோடு
வீடு வந்த சிலை க் காவலன் பழ நி சிலை
 திறப்பு விழா நோட்டீஸ் கொடுத்து அன்பளிப்பும்
 வாங்கிக் கொண்டு அவசியம்
வர வேண்டும் எனச் சொல்லிப் போனான்

நானும் சிலை திறப்பு விழா நாளில் சிறிது
 முன்பாகவே அங்கு போயிருந்தேன்.
விழா ஏற்பாடு மிகப் பிரமாதமாகச்
செய்திருந்தார்கள்.என்னுடன் விழாக் கமிட்டியார்
எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்துக்
கொண்டிருந்த பழ நி திடுமென்று
சாலையில் வந்து கொண்டிருந்த உயர்தர
கார் ஒன்றைக் கண்டதும்
மிக வேகமாக காரை நோக்கி ஓட ஆரம்பித்தார்

அருகில் இருந்தவரிடம் "யார் வருகிறார்கள்
கட்சித் தலவரா " என்றேன்

"இல்லை இல்லை இந்த விழாவுக்கு அதிக நிதி
கொடுத்தவரும் எங்களுக்கு வழி காட்டியும்
அவர்தான்" என்றார் அருகிலிருந்தவர்

அவரை சரியாகத் தெரிந்து கொள்ளும்  நோக்கில்
"அவர் பெயர் என்ன "  என்றேன்

"முருகன் " என்றார் அவர்

நான் ஆவலுடன் யார் எனத் திரும்பிப் பார்க்க
நான் அன்று போலீஸ் ஸ்டேஷனில்
இன்ஸ்பெக்டருக்கு சவால் விட்டுப்போன
பிரகாஷ் ராஜ் போலிருந்தவர்
காரிலிருந்து சிரித்தபடி இறங்கிக் கொண்டிருந்தார்

கூட்டம் பழ நியையும் முருகனையும் நோக்கி
வேகமாக விரைந்து கொண்டிருந்தது

Wednesday, April 17, 2013

உள்ளும் புறமும் ( 8 )


வீட்டிற்கு  வந்து வெகு நேரம் ஆயினும்
எம்பார்மெண்ட் பிச்சையின் எச்சரிக்கை ஒரு
பயமுறுத்தலாய் என்னை அரித்துக் கொண்டே
இருந்தது

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் இருப்பது
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை.
இனியும் எதையும் மனைவியிடமும் குழந்தைகளிடமும்
மறைப்பது அர்த்தமற்றது என உணர்ந்து
நான் பார்த்த பாண்டிச்சேரி ஏரியா குறித்தும்
அங்கு சிலைக்குக் காவலிருந்தவன்
சொல்லிய தகவல்களையும் போலீஸ் ஸ்டேசனில்
பிச்சை செய்த எச்சரிக்கை
அனைத்தையும் ஒன்று விடாமல் விளக்கினேன்.

உண்மையில் அது வரை எனது மனைவி
கொண்டிருந்த தைரியம் கூட அசட்டுத் தைரியம்தான்
என்னை பலவீனப்படுத்தக் கூடாது என்பதற்காக
அவள் நடித்ததுதான் என்பது அவள் முக பாவத்தில்
இருந்தே தெளிவாகப் புரிந்தது.குழந்தைகளும்
அதிகம் குழம்பிப் போனார்கள்

நானே ஒரு முடிவோடு அவர்களுக்கு இனி
செய்ய வேண்டியது குறித்து விளக்கினேன்

"எப்படியோ சொந்த வீடு ஆசையில் அதிகம்
விசாரிக்காமல் இங்கே வீடு கட்டிவிட்டோம்
சரியாக விசாரித்திருந்தால் இங்கு கட்டாமல்
நம் வசம் உள்ள வேறு இடத்தில் கூட
கட்டி இருக்கலாம்
இந்த இடம்  டவுனுக்கு பக்கமாக இருப்பதால்
நிச்சயம் பிற்காலத்தில் நல்ல விலை போகும்
அதுவரை இந்த பாஸ்போர்ட் வேலை முடியும் வரை
இங்கு இருப்போம்.விசாரணை முடிந்து பாஸ்போர்ட்
இந்த விலாசத்திற்குத்தான் வரும் வந்தவுடன்
வாடகைக்கு விட்டுவிட்டு வீடு மாறி விடுவோம் "
என்றேன்

என் மனைவியும்  "அதுதான் சரி  ஆனாலும்
அதுவரை ஒரு மாதமோ இரண்டு மாதமோ
நீங்களும் இருக்கிற லீவைப் போட்டு
வீட்டிலேயே இருங்கள்
எனக்கும் கொஞ்சம் தைரியமாக இருக்கும் "
என்றாள்

எனக்கும் அது சரியெனப்பட்டது

அலுவலகத்தில் என் நிலையை விளக்கிச் சொல்லி
ஒரு ஐம்பது நாள் மெடிகல் லீவு போட்டேன்
காலையில்  குழந்தைகளை கல்லூரி பஸ்ஸில்
ஏற்றி விட்டு வருவது மாலையில் கூட்டி வருவது
பகல் நேரத்தில் தோட்ட வேலை செய்வது
மாலையில் வாசலில்  சேர் போட்டு அமர்ந்தபடி
என்னையும் என் குடும்பத்தாரையும் தைரியமாக
இருக்கும்படியான சூழலை உருவாக்கிக்
கொண்டிருந்தேன்

என் மனைவியும் அவள் பங்கிற்கு மஞ்சள் துணியில்
நூற்றியொரு ரூபாயை முடிந்து வைத்து எந்த
பிரச்சனையும்  இல்லாமல் வீடு மாறிப் போனால்
குடும்பத்தோடு  திருப்பதி வருவதாக
வேண்டிக் கொண்டு அவளுக்கும் எனக்கும்
குழந்தைகளுக்கும் தைரியமும்
நம்பிக்கையும் ஊட்டிக் கொண்டிருந்தாள்

ஒரு இருபது நாள் வரை  எந்தப் பிரச்சனையுமில்லை

ஒரு ஞாயிறு காலை ஐந்து மணி அளவில்
வாசல் பக்கம் "ஓடறாங்க  பாருஅவங்களை விடாதீங்கடா
 கண்டந்த் துண்டமா வெட்டுங்கடா "என்கிற சபதமும்
அதைத் தொடர்ந்து மிகப் பெரிய கலவர சப்தமும்
அலறல் ஒலியும் தொடர்ந்து கேட்க மெதுவாக
வாசல் லேசாகத் கதவைத் திறந்து பார்த்தேன்

என் வீட்டிற்கு கிழக்கே ஒரு கும்பல்
தலை தெறிக்க  ஓட ஒரு கும்பல்
அரிவாள் கத்தி கம்புகளுடன்
கொலை வெறியுடன்  துரத்திக் கொண்டு இருந்தது
அதைப்போலவே புது நகர் பாலத்தின் பக்கமும்
கம்பு அரிவாள்களுடன் ஒரு வெறி பிடித்த கும்பல்
தெற்கு திசை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது
என்ன நடக்கிறது என எனக்குப் புரியவே இல்லை
பாதித் தூக்கத்தில் விழித்து எழுந்து வந்த
மனைவியின் முகம் பயத்தில் வெளிறி இருந்தது

சரி நன்றாக விடியட்டும் என கதவை மூடிவிட்டு
வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொண்டோம்.
வீட்டிற்குள் அம்ர்ந்திருப்பது ஏதோ
 அக்னி குண்டத்தின் இடையில்
அமர்ந்திருப்பது போலி இருந்தது

விடிந்து மெள்ள மெள்ள வெளிச்சம் பரவ
வாசலில் லாரிகள்  ஓடும் சப்தம் கேட்கத் துவங்க
கொஞ்சம் தைரியம் வர மெதுவாகக்
கதவைத் திறந்தேன்

தூரே கிழக்கே பாலத்தின் பக்கம் இருந்து ஒரு
போலீஸ் லாரி எங்கள் வீடு வாசலில் வந்து நின்றது

அதிலிருந்து இறங்கிய போலீஸ்காரர்
"ஒரு பக்கெட்டில் தண்ணீர் கொடுங்கள் " என்றபடி
லாரியில் இருந்து தலையிலிருந்து இரத்தம்
வடிந்து கொண்டிருந்த  ஒருவரை கைத்தாங்கலாக
கீழே இறக்கி எங்கள் வீட்டுப் படியில்
உட்கார வைத்தார்.பின் வாளித் தண்ணீரில்
அவர் இரத்தம் படிந்த  சட்டையை அலசச் சொல்லி
முகம் மற்றும் உடல்களை கழுவச் சொல்லி
மீண்டும் வண்டியில் உட்காரவைத்து
என்னையும் என் வீட்டையும் ஒரு முறை ஏற
இறங்கப் பார்த்துவிட்டு "இங்கேயா குடியிருக்கீங்க "
என்றார்

அவர் பார்வையில் இருந்தது ஏளனமா அல்லது
ஆச்சரியமா என எனக்குச் சரியாக விளங்கவில்லை
நான் அதனைக் கண்டு கொள்ளாத பாவனையில்
"என்ன சார் பிரச்சனை காலையில் இருந்து
இங்கே ஒரே ரகளையாக இருக்கிறது "என்றேன்

அவர் சிரித்தபடி "நிஜமாகவே ஒன்றும் தெரியாதா "
எனக் கேட்டு விட்டு சொல்ல ஆரம்பித்தார்

முதல் நாள் இரவில் யாரோ அந்தக் காலனியில்
 இருந்த அந்தத் தலைவரின் சிலையை
 உடைத்துவிட்டதையும் இரவு முதலே
 ஜாதிக் கலவரம்  பரவிதமிழ் நாடே
ஸ்தம்பித்துப் போயிருப்பதாகவும் சொல்லி
 இப்போது அந்தப் பகுதி முழுவதும்
துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்
கலவரத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்
 கண்டதும் சுடஉத்திரவிடப்பட்டிருப்பதாகவும் விளக்கி
இரண்டு மூன்று நாள் அதிகம் அனாவசியமாக
வெளிச் செல்லவேண்டாம் எனவும்
விளக்கிப் போனார்.

நாங்கள் உண்மையில் ஒட்டுமொத்தமாக
ஓய்ந்து போனோம் இனியும் பாஸ்போர்ட்
அது இது வென்று இங்கு இருப்பது
நிச்சயம் நல்லதற்கில்லை என முடிவு செய்து
அடுத்தவாரமே வீட்டைக் காய் செய்வது என
முடிவெடுத்தோம்

அதுவரை எந்தத் தீங்கும் வராமல் இருக்க
ஆண்டவனை நம்புவதைத் தவிர
வேறு வழியில்லை எனக் கருதி மீண்டும்
ஒருமுறை வெங்கடாஜலபதியை
குடும்பத்தோடு வேண்டி கொண்டோம்

அவர் எப்போதும் போலவே சிரித்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
அவர் சிரிப்பின் உள்ளார்ந்த அர்த்தம் புரிய
எங்களுக்கு ஒரு வார காலம்
காத்திருக்கவேண்டியதாக இருந்தது

(தொடரும் )


Thursday, April 11, 2013

உள்ளும் புறமும் (7)

எம்பார்மெண்ட் பிச்சை ஏழரைதான் என்றதும்
அதுவும் எங்க  ஏரியாதான் என்றதும் கலங்கிப்
போயிருந்த எனக்கு மேலும் பயமுறுத்தும் விதமாக
ஸ்டேஷனுக்குள்  பயங்கர கோபத்துடன்
இருவர் சண்டையிடும் சப்தமும் ஏதோ டேபிள் சேர்
உருளும் சபதமும் கேட்க ஆரம்பித்தது

வாசலில் அடுத்த டாட்டா சுமோவில் இருந்த
குண்டர் கூட்டம் சட்டென வண்டியில் இருந்து குதித்து
உள்ளே இருந்து ஏதாவது சிக்னல் கிடைத்தால்
உள்ளே பாய்கிற நோக்கத்தில் ரெடியானார்கள்

"நான் சொன்னேனில்லை ஆரம்பிச்சுடுச்சு ஏழரை
இனிமே இங்கே நின்னா சரியா வராது
வண்டியை எடுங்க வெளியே நின்னுகிடுவோம்"
அவசரம் அவசரமாக பிச்சை வெளியேறத்
துவங்கினான்

நானும் வேகமாக வண்டியை உருட்டியபடி
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்துவிட்டேன்

ஸ்டேஷனில் சப்தம் கூடிக் கொண்டே இருந்தது
குண்டர்கள் இப்போது ஸ்டேஷன் படிக்கட்டை
நெருங்கி இருந்தார்கள்

என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க
முடியவில்லை,என்ன நடக்கிறது என்பதை
தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும்
போல இருந்தது

பிச்சை அலட்டிக் கொள்ளவில்லை
சாவாதானமாக ஸ்டேஷனுக்கு
எதிர் வரிசையில் இருந்த வேம்பின் அடித் தூரில்
அம்ர்ந்த படி ஸ்டேஷன் வாசலில்
பார்வையை வைத்தபடியே சொல்ல ஆரம்பித்தான்

அதன் சாராம்சம் இதுதான்

ஏற்கெனவே இரண்டு பெரிய சாராய வியாபாரிகள்
ஸ்டேஷன் மற்றும் எல்லா இடங்களுக்கும் கப்பம் கட்டி
எனது வீட்டில் அருகில் இருந்த ஏரியாவில்
சாராய வியாபாரம் செய்து வர

புதிதாகஇப்போது ஸ்டேஷன் வந்துள்ள
சாராய வியாபாரியும் வேண்டிய மாமுல்
கொடுத்துவிடுவதாகவும் தனக்கும்இரண்டு கடை போட
ஏற்பாடு செய்து தருமாறும் இன்ஸ்பெக்டரிடன் பேசி
ஒரு தொகையை அடவான்ஸாசாகவும்
கொடுத்துச் சென்றுள்ளான்

ஏற்கெனவே வியாபாரம் செய்துள்ள வியாபாரிகள்
புதிதாக ஒருவரை உள்ளே வரவிடக் கூடாது
என்கிற முடிவில் ஒரு பெரும்தொகையை மாவட்டம்
மற்றும் மந்திரியிடம் கொடுத்துவிட
இன்ஸ்பெக்டரால் ஏதும் செய்ய முடியவில்லை

இன்ஸ்பெக்டர் கொஞ்சம்  பணத்தாசைப் பிடித்தவர்
ஏற்பாடு செய்ய முடியாவிட்டாலும் பணத்தையாவது
திருப்பித் தர நினைக்காது
மேலிடத்தில் கொடுத்துவிட்டேன் இனி திருப்பிக்
கேட்க முடியாது எனச் சொல்லி பல நாட்களாக
இழுத்து அடித்துக்கொண்டிருக்கிறார்

இந்த சாராய வியாபாரியும் உசிலம்பட்டி
தேனிப் பக்கம் பெரிய வியாபாரி.
ஒரு இன்ஸ்பெக்டர் தன்னை இப்படி
சாதாரணமாக ஏமாற்றுகிறாரே எப்படியும்
காசை வாங்காமல் விடக் கூடாது என அதை
ஒரு தன்மானப் பிரச்சனை போல எடுத்துக் கொண்டு
நாலைந்து முறை வந்து விட்டான் இன்றுதான்
கடைசிக் கெடு எனச் சொல்லி இருந்தான்
அதுதான் பிரச்சனை என்றான்

இவன் சொல்லி முடித்துக்  கொண்டிருக்கும் போதே
சாராய வியாபாரியை கழுத்தைப் பிடித்து
வாசலில் தள்ளியபடி "என்ன திமிர் இருந்தா
என்னையே ஸ்டேஷனுக்குள் வந்து மிரட்டுவே
தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு " என
முட்டியை உயர்த்திக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்

கீழே விழுந்த சாராய வியாபாரியை உடன்
வந்த குண்டர்கள் கைக் கொடுத்துத் தூக்க
தட்டுத் தடுமாறி எழுந்தான்.அவனுடைய நிலையைப்
பார்க்க நிச்சயம் ஸ்டேஷனுக்குள் அடித்திருப்பார்கள்
போலப் பட்டது

அவன் மெல்ல நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தபடி
"யூனிபார்ம் போட்ட திமிரு ஸ்டேஷன் வேற
அதனாலே உன்னை ஒன்னும் செய்ய முடியாதுன்னுதானே
கையை வைச்சுட்ட.பார்ப்போம்.
உன்னைய  எங்க வைச்சு யாரை வைச்சு
எப்படிப் பணத்தை வாங்கனும்னு எனக்குத் தெரியும் "
எனச் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர
இரண்டு கார்களும் ஸ்டேஷனைவிட்டு வெளியேறி
மெயின் ரோட்டில் வேகமாகப் போகத் துவங்கியது

எனக்கு உண்மையில் என்னடா இது நிஜம்தானா
இல்லை சினிமாதான் பார்க்கிறோமா என
சந்தேகமாக இருந்தது

பிச்சை மெதுவாக என் காதோரம்
"இன்ஸ்பெக்டர் நினைப்பது போல இவன்
சாதாரண ஆள் இல்லை,நிச்சயம் இந்த இன்ஸ்பெக்டரை
பழி வாங்கியும் விடுவான்.பணத்தையும்
வாங்கிவிடுவான்."என்றான்

"எப்படி அது முடியும்.என்ன ரசீதா வைத்திருக்கிறான்"
என்றேன்

"சார் கள்ள கடத்தலில் எல்லாம் ரசீது கிடையாது
ஆனால் ஏமாத்தனும்னு நினைச்சா உசிரு இருக்காது"
என்றான் சர்வ சாதாரணமாக

"சார் இன்னைக்கு நீங்க வந்த நேரம்  சரியில்லை
பேசாம போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்க
நான் ஏட்டையாவிடம் சொல்லிவைக்கிறேன் "
என்றவன் அத்தோடு நிறுத்தி இருந்தால்
பரவாயில்லை." "

இந்த இன்ஸ்பெக்டர் ஏரியாவில் ஏதாவது
பிரச்சனை செய்தால்தான் அவருக்கு இடஞ்சல் வரும்
என்று  பெரிய கலாட்டாவாக ஏதாவது
செய்தாலும் செய்வான்.அது ஒங்க
பாண்டிச்சேரி ஏரியாவாகக் கூட இருக்கலாம்
எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்" என
ஒரு குண்டைப் போட்டு முடித்தான்

அவன் அப்போது சொல்லும் போது எனக்கு
அப்படியெல்லாம் ஏதும் நடக்காது.இவனாக
ரீல் விடுகிறான் என நினைத்தேன்

ஆனால் இது நடந்த ஒரு வாரத்தில் தமிழ் நாடே
ஸ்தம்பித்துப் போகும்படியான ஒரு நிகழ்வு ஒன்று
எங்கள் பகுதியில் நடக்கும் என்று நான்
சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை

(தொடரும் )

Sunday, April 7, 2013

உள்ளும் புறமும் ( 6 )


உள்ளும் புறமும் ( 6 )

போலீஸ்காரர் வீடு தேடி வந்து வீட்டின்
இருப்பு குறித்து பார்த்துப் போனாலும்
ஸ்டேஷனில் செய்ய வேண்டிய பார்மாலிடீஸ்
குறித்துச் சொல்வதற்காகதான் முதலில்
என்னை மட்டும் வரச் சொல்லிப் போயிருக்கிறார்
எனத் தெரிந்து கொண்டேன்

எனவே எப்போதும்  வீட்டை விட்டுப் புறப்படும்
நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாகவே
கிளம்பிப்போய் போலீஸ் ஸ்டேஷன வாசலில்
வண்டியை நிழல் இருக்கும் இடமாகப் பார்த்து
நிறுத்தி விட்டு அங்கே ஸ்டேஷனுக்கு முன்பாகக்
கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலை ஒரு
சுற்றுச் சுற்றிவிட்டு பிள்ளையாருக்கும் ஒரு
கும்பிடு போட்டுவிட்டு வெளிவந்தபோது என்னையே
பார்த்துக் கொண்டிருந்த ஒருவன்
"சார் ஒரு நிமிஷம் "என்றான்

கட்டம் போட்ட கைலியும் குரொக்டையல்
அழுக்குப் பனியனும் வாரப்படாத பரட்டைத்
தலையுமாக இருந்த அவனை இதற்கு முன்பு
எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை

கொஞ்சம் அசட்டையாக "என்ன விஷயம் "
என்றேன்

"நீங்க வருவீங்கன்னு ஏட்டையா சொன்னார்
வந்தா அரை மணி நேரம் வெயிட்
பண்ணச் சொன்னார் "என்றான்

"நீ யார் ? எந்த ஏட்டையா இருக்கச் சொன்னார் ?
என்றேன் குழப்பத்துடன்

அவன் மிகத் தெளிவாகப் பேசினான்
"நான் தான் இங்கே எம்பார்மெண்ட்
என் பேரு பிச்சை
நீங்க புது நகரிலே வீடு கட்டி இருக்கீங்க
பாஸ்போர்ட் கேட்டு இருக்கீங்க இப்போ அது
ஸ்டேஷன் விசாரனைக்கு வந்திருக்கு
நேத்து ஏட்டையா உங்க வீட்டுக்கு வந்தப்ப
நீங்க இல்லை வீட்டில உங்களை வரச் சொல்லிட்டு
வந்திருக்கார் அதுதான் நீங்க வந்திருக்கீங்க
சரியா "என்றான்

சரி அந்த ஏட்டையா தெளிவானவராகத்தான்
இருப்பார் எனப் புரிந்து கொண்டேன்
அவர் மூலமாகவே அனைத்து டீலிங்கும்
இருக்க வேண்டும் என நினைக்கிறார் எனப்
புரிந்து கொண்டேன்.ஆனால இவன் எப்படி
முன் பின் பார்க்காமல் என்னை மிகச் சரியாக
எப்படித் தெரிந்து கொண்டான் என எனக்கு
ஆச்சரியமாக இருந்தது.அதைக் கேட்டும் விட்டேன்

"அதுதான் சார் எம்பார்மெண்ட் " என
பெருமையாகச் சொன்னவன் உள்ளே இன்ஸ்பெக்டரும்
ஒரு ஏட்டையா தவிர யாரும் இல்லையெனவும்
இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரியெனவும்
என் வீடு வந்த ஏட்டையா வந்தால்தான்
எதுவும் நடக்கும்  சரியாக நடக்கும்எனவும்
அதுவரை இங்கேயே கோவில் வாசலில்
உட்கார்ந்திருக்கலாம் எனவும் சொன்னான்,
எனக்கும் அது சரியெனப்பட்டது

சிறிது நேரம் வெளியில் உட்கார்ந்திருந்து
நான் வேலை பார்க்கும் அலுவலகம் மற்றும்
சொந்த ஊர் குறித்தெல்லாம் பேச
அவனும் அவனைப்பற்றியும் அவன் சித்தப்பா
பையன் ஒருவன் எங்க்கள் துறையில் வேலை
செய்வது குறித்துச் சொல்ல இருவரும் ரொம்ப
சகஜமாகிப் போனோம்.

பின் அவனே "ஒன்றும் இல்லை சார் நீங்க
நாலு பேருக்கும் பாஸ்போர்ட் போட்டா
கொண்டு வந்து இங்கே இருக்கிற ரெஜிஸ்டரில்
கையெழுத்துப் போடனும் சார்..ஒருத்தருக்கு
இரு நூறு கணக்கிலே எண்ணூறு கேப்பாங்க சார்
கொடுத்தா உடனே மேலே அனுப்பிச்சுருவாங்க சார்"
இதைத்தான் ஏட்டையாவும்  சொல்வாரு
நான் சொன்னதா காட்டிக்கிற வேனாம் " எனச்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரண்டு
டாடா சுமோ கார்கள் வழக்கத்தைவிட சற்று
அதிகமான தேவையற்ற வேகத்துடன் வந்து
ஸ்டேஷன் வாசலில் நின்றது

பின் வண்டியில் சினிமா பாணி அடியாட்கள் போல
ஏழெட்டு பேர் அமர்ந்திருக்க முன் வண்டியில்
முன் சீட்டில் இருந்து ஏறக்குறைய கில்லி
பிரகாஷ் ராஜ் போலவே  திமிராக
இறங்கிய ஒருவன் தனியாக
ஸ்டேஷனுக்குள் போனான்

இதைக் கவனித்த எம்பார்மெண்ட் பிச்சை
"எல்லாம் உங்க ஏரியாப் பிரச்சனைதான்
நிச்சயம் இன்னைக்கு ஒரு பெரிய ஏழரைதான்
ஆகப் போகுது " என்றான்

அவன் ஏழரைதான் என்றதும் அதுவும்
எங்க  ஏரியாதான் என்றதும் இன்னமும் அதிகம்
கலங்கிப் போனேன் நான்

(தொடரும் )


Friday, April 5, 2013

உள்ளும் புறமும் (5)

அனைத்துப் பாவங்களிலுமே தலையாயதாக
குடியினைச் சொல்வதன் காரணமே குடி
ஒரு நொடியில் மனதில் எண்ணமாக மட்டுமே இருந்த
ஒரு தீய செயலை சட்டென வேகம் கொடுத்து
செயலாற்ற வைத்துவிடும்,சமதள நிலையை
சட்டென  முறித்து அறிவை ஓரம்கட்டி அந்த
நிமிடத்து உணர்வை செயலாற்றத் துவங்கிவிடும்
அதுவும் குடிகாரக் குழு என்றால் கேட்கவே வேண்டாம்
திருட்டு கொலை கொள்ளை பாலியல் பலாத்த்காரம்
அனைத்திலும் பிடிபடுபவர்களைப் பார்த்தால்
அவர்கள் எல்லாம் போதையில் இருந்தது புரியும்

கொசு நிறைந்த இடமே சுகாதாரக்கேடு என்றால்
சாக்கடை சூழ்ந்த இடத்தைப் பற்றிச்
சொல்லவா வேண்டும்.எனவே  இந்த வீட்டை
வாடகைக்கு விட்டு விட்டு எத்தனை சீக்கிரம்
வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே
புத்திசாலித்தனமானது என முடிவெடுத்தேன்

நான் பார்த்த கேட்ட அந்த குட்டிப் பாண்டிச்சேரி
கதையையெல்லாம் சொல்லி மனைவியையும்
குழந்தைகளையும் பயமுறுத்த வேண்டாம் எனக் கருதி
இயல்பாகச் சொல்வதைப் போல

"இந்த இடம் மிகவும் லோன்லியாக உள்ளது
கட்டும்போது தெரியவில்லை .இருந்து
பார்க்கும்போதுதான் தெரிகிறது.கூடிய சீக்கிரம்
வேறு வீடு பார்க்கிறேன்.ஒரு நானகு ஐந்து வருடத்தில்
ஏரியா பிரமாதமாக வந்து விடும்.அப்போது
மீண்டும் வந்து விடுவோம்.அது வரை வாடகைக்கு
விட்டு விடுவோம் "என்றேன்

மனைவி சட்டென எனது கருத்தை மறுத்தாள்/

"அட நீங்க வேற
நீங்க பாட்டுக்கு ஆபீஸ் போயிருவீங்க நான்
இத்தனை வருடம் வீட்டு ஓனர்களிடம் பட்ட பாடு,
அப்பப்பா.....உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா
வந்தாலே கூட இருக்கிற மாதிரி வந்திருக்காங்களா
இல்லேபோற மாதிரி வந்திருக்காங்களா என
ஜாடையா கேட்கிறது.உடம்பு சௌகரியம் இல்லாம
இரண்டு முறை லெட்ரின் போனா கூட இன்னைக்கு
ரெண்டு தடவை மோட்டார் போடவேண்டியதாகிப்
போச்சுன்னு நக்கலாப் பேசுறது.
இன்னும் நிறைய பட்டுட்டேன்
ஆம்பிளைகளுக்கு இதெல்லாம் தெரியாது
எனக்கு வெறுத்துப் போச்சுங்க
எலி வலையானாலும் தன் வலைங்கிறதுதான் சரி
பேசாம இங்கேயே இருப்போம் ஏரியா
முன்னேறுகிற போது முன்னேறட்டும் என்றாள்.

சரி இதற்கு மேலும் ஒளித்துப் பயனில்லை
விரிவாகச் சொல்லாவிட்டாலும் லேசாகச்
சொல்லிவைப்போம் எனக் கருதி
"இங்கே பக்கத்தில் சாராயம் விற்கிறார்கள்
உனக்கு அதெல்லாம் தெரியாது
அதனாலே இங்கே கொஞ்ச காலம் யாரும்
வீடு கட்டி வருவது கஷ்டம் .அதனாலே.... "
எனச் சொல்லி முடிப்பதற்குள் அவளே தொடர்ந்தாள்

"எனக்கு எல்லாம் தெரியுமுங்க பகலிலே மேற்கே
இருந்து இருட்ட ஆரம்பிச்சதும் பத்துப் பத்துப் பேரா
கிழக்கே போவாங்க,அதுல ஒரு பெருசுக்கிட்ட
 பேசினேன்எல்லாம் கட்டிட வேலை செய்யிரவங்க.
வேலை முடிஞ்சு போறப்ப எல்லோரும்
கொஞ்சம் குடிப்போம் தாயின்னாறு
பூரம் கிராமத்துச் ஜனங்க,கெட்டது தெரியாதவங்க
அங்கே கடை இருக்கிறது கூட எனக்கு
நல்லதாத் தான் படுது.இருட்ட ஆர்ம்பிச்சதுல இருந்து
நீங்க வரும் வரை கொஞ்சம் ஆள் நடமாட்டமாவது
இருக்கு .அது இல்லாட்டி ரொம்ப கஷ்டம் "என்றாள்

எனக்கு அவள் பேச்சு அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது
சரி அறியாமல் பேசுகிறாள்.இவளிடம் அதிகம் விளக்கி
பயமுறுத்திப்போனால் நம் பாடுதான் கஷ்டம்
அவள் போக்கிலேயே போய் மெதுவாகப்
புரியவைப்போம்என முடிவெடுத்து
"இப்போ என்ன செய்யலாம் சொல் "என்றேன்

"அப்படிக் கேளுங்க.முதல்ல ஆறு மணிக்குள்ள
வீடு வரப் பாருங்க காலையிலே இன்னும்
சீக்கிரம் கூடப் போங்க.முதல்ல கேஸ் ரேஷன் கார்ட்
அட்ரெஸையெல்லாம் சொந்த வீட்டுக்கு மாத்துங்க.
அப்படியே எல்லோருக்கும் பாஸ்போர்ட்
 எடுக்கப் பாருங்க அதுக்கு எப்படியும்
 மூணு மாசம் ஆகிப் போகும்
அதுக்குள்ள நமக்கும் ஏரியா ஒத்து வருமா
ஒத்து வராதான்னு நிச்சயம் தெரிந்து போகும் .
அப்புறம் நாம் மாறுவதைப் பற்றி யோசிக்கலாம் "
என்றாள்

அவள் சொற்படிக் கேட்டு பின் எதாவது
ஏடாகூடாமாக எதுவும்  நடந்து விட்டால் பின்
' ''பொமபளை நான்என்னைத் தங்க கண்டேன்.
நான் எனக்குத் தோணினதைச்
சொன்னேன்.நீங்க தான் நாலு இடம் போறவங்க
நீங்கதானே சரியா முடிவு செய்திருக்கனும் ''னு
பிளேட்டை என பக்கம் திருப்புவாள் எனத் தெரியும்
நிறைய அனுபவப் பட்டிருக்கிறேன்,

ஆனாலும்அவள் நிலையான முகவரிக்கு
அனைத்துரிகார்டுகளையும் மாற்றச் சொன்னது
சரியானதாகத்தான் பட்டது.அது மாற்றவும்
அது சமயத்திலேயே வேறு வாடகை வீடும்
பார்க்கவும் துவங்கினால சரியாக இருக்கும் என
முடிவு செய்து நான செயலில் இறங்கிவிட்டேன்

கேஸ் முகவரி ரேஸன் கார்டு முகவரி எல்லாம்
இரு மாதத்தில் மாற்ற முடிந்தது பாஸ்போர்ட் மட்டும்
அங்கு ஆன் லைனில் பதிந்த உடன் இன்னும் ஒரு
மாதத்தில் வீட்டிற்கு போலீஸ் என்கொயரி  வரும்
அது முடிந்ததும் பாஸ்போர்ட் வீட்டு விலாசத்திற்கே
வந்து விடும் எனச் சொன்னார்கள்,நானும் அதையும்
எதிர்பார்த்தபடி வெளியிலும் வீடு பார்க்கத்
துவங்கிவிட்டேன்.தோதாக இரண்டு வீடுகள் இருந்தது
பாஸ்போர்ட் வேலை முடிந்ததும் மனைவியிடம்
சொல்லிக் கொள்ளலாம் என இருந்தேன்

நான் ஒரு வெள்ளிக் கிழமை அலுவலகம்
முடிந்து வீடு வந்து வண்டியை நிறுத்தியதும்
"ஏங்க நீங்க சொன்னதுதாங்க சரி இந்த ஏரியா
நமக்கு சரிப்பட்டு வராது.
வேற இடம் பார்க்கலாங்க "என்றாள்

அவளுடைய திடீர் மாற்றம் கண்டு நான்
பயந்து போனேன்

"ஏன் என்ன ஆச்சு நான் இல்லாதப்ப ஏதும்
பிரச்சனை ஆச்சா பயப்படாம சொல் "என்றேன்

"அதெல்லாம் இல்லீங்க .மதியம் பாஸ்போர்ட்
என்கொயரிக்கு ஒரு போலீஸ்காரர் வந்தாருங்க
அவரு நீங்க எப்படிம்மா இந்த ஏரியாவிலே தனியா
இருக்கீங்க நாங்களே இருக்க மாட்டோம்,சார்
அதிகாரியா இருக்காருங்கிறீங்க .நல்லா விசாரித்து
வீடு கட்ட வேண்டாமான்னு சொல்லிட்டு
நாளைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அப்பத்தான்
உங்களுக்குத் தெரியும் சரியான காலிப் பயக ஏரியா
அது இதுன்னு பயமுறுத்திட்டுப் போயிட்டாருங்க
போலீஸ்காரரே இப்படிச் சொல்லவும் நான் ரொம்ப
பயந்து போயிட்டேங்க்க
அதுல இருந்து மனசே சரி இல்லீங்க
காலா காலத்திலே வேற வீடு பாருங்க "என்றாள்

நான் எடுத்து வைத்திருந்த முடிவையோ
வீடு பார்த்து வைத்திருக்க விவரங்களையோச்
சொல்லாமல் அவள் சொல்லிச் செய்வதைப் போல
"சரி பார்த்தால் போச்சு "எனச் சொல்லி முடித்தேன்
வீடு மாறுவதை விட அவள் சொல்லி மாறுவது
என்பது அவளுக்கு நிச்சயம் அதிக சந்தோஷத்தைக்
கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்

மறு நாள் காலையில் ஆபீஸ் போவதற்கு
முன்பாக போலீஸ் ஸ்டேஸன் போய் விவரங்கள்
கேட்டு விட்டுப்போகலாம் எனப் போனேன்

அங்கு நடந்த ஒரு சிறு சம்பவமும்
அதற்கு ஒருவன் கொடுத்த  விரிவான விளக்கமும்
இன்னும் அதிக அதிர்ச்சி தருவதாக இருந்தது,

(தொடரும் )


Wednesday, April 3, 2013

உள்ளும் புறமும் ( 4 )


தலைவரின் சிலைக்கு மேல்
அழுது வடிந்து கொண்டிருந்த தெரு விளக்கும்
குளிர்ந்த காற்றும் சில்லு வண்டுகளின் ஓசையும்
ஏழு மணி இரவை பத்து மணிபோல்
உணரச் செய்து பயமுறுத்திக் கொண்டிருந்தது.

ஆயினும் நான் எப்போதும் இரவு எட்டு மணிக்கே
அலுவலகத்திலிருந்து வீடு வந்து பழகி இருந்ததால்
இன்னும் சிறிது நேரம் இந்த இடம் குறித்து
இவனிடம் மிகச் சரியாகப் புரிந்து கொள்வோம்
என முடிவு செய்தேன்

அவனும் தனக்குத் தெரிந்த தகவல்களை பிறருக்குச்
சொல்வதில் பெருமை கொள்பவனாகத் தெரிந்தான்.
கொஞ்சம் போதையிலும் இருந்ததால் கொஞ்சம்
உண்மையைப் பேசுவான் போலவும் பட்டது

காலை மாற்றிப் போட்டு சௌகரியமாக அமர்ந்தபடி
அவனே பேச்சைத்  தொடர்ந்தான்

"அதோ கிழக்கே தெரியிற இருபது வீடும்
அரசாங்க வீடுதான்.நாங்க எல்லாம்
கார்ப்பபரேசன் கூலிகள்
இந்தப் பொட்டல் காட்டில் மாடி வீடுகள்
கட்டும் வரை இங்கு குடி இருக்கும்படி ஓடு வீடு
போட்டுக் கொடுத்தாங்க. தண்ணீர் கிடையாது
விளக்குக் கிடையாது ரோடு கிடையாது
இருந்தாலும் வாடகை கம்மி என்பதால
சகிச்சிக்கிட்டோம்

முதல் வருஷம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை
இரண்டாம் வருஷம் இந்தப் பொட்டல் காடெல்லாம்
கருவேலம் முள் வளர்ந்து காடு மாதிரி
ஆகிப் போனதால முதல்ல ஒருத்தன் மட்டும்
சாராயம் விற்க ஆரம்பிச்சான்

நாங்க எல்லோரும் குடிப்பவர்கள்தான் அதுவும்
உசிலம்பட்டி காளப்பன்பட்டி சரக்கு.
நாங்க அடிமையாகிப் போனாம் அடுத்து அடுத்து
ஒவ்வொருவனாகக் கடை போட்டு விற்க ஆரம்பிக்க
டவுனில் இருந்து கூட்டம் சேரச் சேர பிரச்சனையும்
வர ஆரம்பித்துவிட்டது

முதல்லே அதிக போதையிலே சிலர்
ரோட்டில கிடந்தாங்க
ரோட்டில் மல்லுக் கட்ட ஆரம்பிச்சாங்க .
அது கூடபெரிசாத் தெரியலை.
நாள் போகப் போக போதையில் தடுமாறி
வழி மாறி எங்க வீட்டுப் பக்கம் வர ஆரம்பிச்சு
 திண்ணையில் படுக்க ஆரம்பிச்சு
அப்புறம் என்ன என்னவோ ஆகிப் போச்சு "

எனச் சொன்னவன் எதையோ நினைத்தபடி கொஞ்சம்
அமைதியாயிருந்தான்.எதையோ சொல்ல வந்தவன்
சுதாரித்துக் கொண்டு சென்சார் செய்கிறான்  எனப்
புரிந்து கொண்டேன்

பின் ஒரு பெருமூச்சு விட்டபடி அவனே தொடர்ந்தான்

"சரி இனியும் இந்தச் சனியனை இங்கே
இருக்கவிடக் கூடாதுன்னு போராட ஆரம்பிச்சோம்
வழக்கம்போல போஸ்டர் மனு கொடுக்கிறது
மறியல் பண்ணுறதுன்னு என்ன
என்னவோ செய்து பாத்தோம் ஒன்னும் நடக்கல
.அப்புறம்தான் இதுக்குப் பின்னால
பெரிய பெரிய ஆளுங்களும் அதிகாரிகளும்
இருக்கிறது புரிஞ்சது
.எங்களயே  காசு கொடுத்து ஒருத்தருக்கொருத்தர்
பிடிக்காத மாதிரி செஞ்சாங்க.சிலரை மிரட்டினாங்க
ஒரு கட்டத்துல இவகள எதுத்து எதுவும் செய்ய
முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு,

நாங்க ரொம்ப நம்பின ஜாதித் தலைவரும்
கவுன்சிலரும்கடை ஓட்டறதைப் பத்திப் பேசாம
 வேற உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க
செய்து தர்ரோம்னு சாராயக் காரனுக்கு
 வக்காலத்து வாங்க ஆரம்பிச்சுட்டாங்க

எங்களுக்கு கரண்ட் கேட்டோம் குழாய் கேட்டோம்
இந்தத் தலைவர்  சிலை வைக்கனும்னும் கேட்டோம்
நாங்காளா கேட்டப்ப கிடைக்காததெல்லாம்
 கடை ஓட்ட சம்மதிச்சதும் தானா கிடைச்சது.

குடிச்சவங்க இங்குட்டு வராதபடி பாத்துக்க
நாலு ஆளுங்கள போட்டாங்க்க இந்தச் சிலையைப்
பாத்துக்கிறது எங்கள்லேயே இரண்டு ஆளுங்களையும்
இருக்கச் சொல்லி மாசச் சம்பளம் கொடுத்திடுராங்க
நாங்க ஓசியிலே குடிக்சுக்கலாம்
,இன்னைக்கு என் டூட்டி
இதான் சாரே இந்த இடத்தோட வரலாறு..
இது மாறுங்க்கிற...சான்ஸே இல்லை.
நீதான்  யோசித்திருக்கனும்,
பேசாம கரச்சல் பார்ட்டி எவனுக்காவது
அஞ்சு  ஆறு வருஷம் வாடகைக்கு விட்டுட்டு
பிறகு குடி வா சாரே. உனக்கு இந்த ஏரியாவெல்லாம்
ஒத்து வராது  சாரே  "என்றபடி எழுந்தான்

உள்ளே குடித்து வந்த போதை இப்போதுதான்
வேலை செய்ய ஆரம்ப்பிக்கிரது என்பதை
அவன் பேச்சில்மரியாதை குறைவதைக் கொண்டே
 புரிந்து கொண்டு நானும் சொல்லிக் கொண்டு
 கிளம்பினேன்

எவ்வளவு சீக்கிரம்  வீட்டைவாடகைக்கு
விட்டு விட்டு கிளம்புகிறோமோ அதுதான் நல்லது
 என முடிவெடுத்தபடி வீடு நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்

எனக்கு நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ
நிச்சயம் தெரியவில்லை.காரணம் எனக்கு நேர் எதிரான
முடிவில் என் மனைவி இருந்தாள்

Monday, April 1, 2013

உள்ளும் புறமும் (3 )

தூர  த்தில் இருந்ததாலா அல்லது முதல் குரல்
அப்படி இருந்தால்தான் பயமிருக்கும் என நினைத்து
மிரட்டல் தொனியில் பேசினானா எனத்
தெரியவில்லை கொஞ்சம் அருகில் வந்ததும்
"யார் சார் நீங்க எங்கே இந்தப் பக்கம் போறீங்க "
என்றான் குரலில் கொஞ்சம் பணிவு கூட்டி.

அவன் இந்த குட்டிப் பாண்டிச்சேரிக்கு ஆதரவாளனா
அல்லது எதிர்ப்பாளனா எனத் தெரியவில்லை
ஆயினும் இவனை விட்டாலும் இந்தப் பகுதி
ஏன் இப்படி ஆனது என மிகச் சரியாக
தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால்
இவனிடன் கொஞ்சம் மனம் திறந்தே பேசிப் போகலாம்
என நினைத்து அந்த சிலையின் திட்டில்
அமரப் போனேன்

சட்டென பதறிய அவன் " அங்கே உட்காராதீர்கள்
நாங்கள் விளக்கேற்றி பொங்கல்  வைக்குமிடம்
இந்தத் திண்டில் உட்காருங்கள் " என பக்கத்தில்
இருந்த பட்டியக் கல்லைக் காட்டினான்

நானும் அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு
அந்தத் திட்டில் இருந்த திரு நீரை எடுத்து
நெற்றியில் பூசிக் கொண்டு அந்த தலைவரின்
சிலைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு உட்கார்ந்தேன்
அவனும் எனக்கு அடுத்த கல்லில் அமர்ந்தபடி
"இப்போ சொல்லுங்க " என்றான்
அவனுக்கும் கொஞ்ச நேரம் பொழுது போக
ஒரு நபர் கிடைத்த திருப்தி எனப் புரிந்து கொண்டேன்

நான் பின் எனது சொந்த ஊர், வேலை பார்க்கும் இடம்.
இங்கு இடம் வாங்கியது,வீடு கட்டியது, இப்போது
இந்தச் சூழலைப் பார்த்ததும் ஏன் வீடு கட்டினோம் என
சங்கடப்படுவது என அனைத்தையும் விளக்கமாகச்
சொல்லிஅவன் முகத்தைப் பார்த்தேன்

அவன் எந்த விதக் குழப்பமும் இல்லாமல் சட்டென
"அவசரப்பட்டு தப்பு பண்ணிடீங்களே சார்.
இது  ரொம்ப மோசமான ஏரியா சார்.
அடிதடி வெட்டுக் குத்து பொம்பளை சமாச்சாரம்
குடி,திருட்டுத்தனம் எல்லாம் இங்கே சாதாரணம் சார்
இன்னும் குறஞ்சது ஐந்து பத்து வருஷத்துக்கு இந்த
ஏரியா முன்னேறுவது ரொம்பக் கஷ்டம் சார் "என்றான்

இவனிடம் பேசப்  பேசப் பேச எவ்வளவு பெரிய
முட்டாள்தனம் செய்து விட்டோம் எனப் பட்டது
இவனிடம் பேசாமல் போயிருந்தால் கூட கொஞ்சம்
நம்பிக்கை இழக்காமல் இருந்திருப்போனோ எனப் பட்டது

(தொடரும் )