Sunday, December 4, 2016

இயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்

Saturday, December 3, 2016

பெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...

முன்பெல்லாம்
மழைக்காலங்களில் தவறாது
மழை பொழிந்தது
அதனால்
புயல் மழை என்பது
வில்லனைப் போலத் தெரிந்தது
தந்தியைப் போல
பயமுறுத்துவதாய் இருந்தது

இப்போதெல்லாம்
மழைக்காலத்தில் தவறியும்
மழை பொழிவதில்லை
அதனால்
புயல்மழை ஒன்றே
வரம் போலப் படுகிறது
இப்படிச் சிறப்புக்
கவிதையும் பெறுகிறது

என்ன செய்வது
முன்பு
மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்
எனக் கவி புனைந்த நாம்

இனி
பெரும் புயல் போற்றுதும்
பெரும் புயல் போற்றுதும்
எனப்பாடி மகிழ்வோம்

சூழலைக் கெடுத்தேனும்
சுகம் காணத் துடிக்கும் நமக்கு
வேறு ஏது வழி ?
இது தானே கதி

சுகப்பிரசவ சுகம்வேண்டி........

எதிர்பாராது
நாவில் தித்திப்பாய்
ஒரு வார்த்தை
நர்த்தனமாடி
இப்போதே
என்னை அரங்கேற்று என்கும்

சட்டென
உள்மனதில்
ஓர் உணர்வு
நிர்வானமாய் நின்று
உடனடியாய்
எனக்கு ஆடை அணிவி என்கும்

திடீரென
அடிமனதில்
ஒரு இராகம்
சுயம்புவாய்த் தோன்றி
மிகச் சரியாய்
எனக்கு வடிவு  கொடு என்கும்

சில நொடியில்
இமை இடுக்கில்
ஒரு நிகழ்வு
காட்சியாய் விரிந்து
அப்படியே
என்னைக் காட்சிப் படுத்து என்கும்

வார்த்தையா
உணர்வா
இராகமா
நிகழ்வா
எது சரிவரும்
நான் குழம்பித் தவிக்கையில்

உள்ளுணர்வு
"கண்டுகொள்ளாது விட்டுவிடு
வலுவுள்ளது ஜெயிக்கட்டும்"என்கும்

வழக்கம்போல்
சுமையும் வலியும்
தாங்கும் அளவைத் தாண்டினும்
இமைமூடித்
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
சுகப்பிரசவ சுகம்வேண்டி...

Thursday, December 1, 2016

வெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...

அழகைச் சொன்னதைவிட
அழகாகச் சொன்னதும்
புரிந்ததைச் சொன்னதைவிட
புரியச் சொன்னதும்
நல்லதைச் சொன்னதைவிட
நன்றாகச் சொன்னதும்
நிலை பெறும் உலகிது
நினைவினில் இது கொள்

உள்ளத்தைச் சொன்னதை விட
உள்ளதுபோல் சொன்னதும்
உண்மையைச் சொன்னதைவிட
உண்மைபோல் சொன்னதும்
பயனுறச் சொன்னதைவிட
நயமுறச் சொன்னதும்
வென்றிடும் உலகிது
நெஞ்சினில்    இதைக் கொள்

சொல்வதைப் பொருத்தன்றி
சொல்பவனைப் பொருத்தும்
நல்லதனைப் பொருத்தன்றி
வெல்வதனைப் பொருத்தும்
நிலைமாறும் நிறம்மாறும்
கலையறிந்த  உலகமிது
நிலைத்திட  நினைக்கினில்
நினைவினில்  இதைக்கொள்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
என்கிற சொலவடை
மின்னுவதொன்றே  பொன்னென
முற்றாக  மாறி
காலம் வெகுவாகிவிட்டது
ஞாலம் குணம் மாறிவிட்டது
வெல்லுதலுன் நோக்கமெனில்
உள்ளமதில் இதைக்கொள் 


Wednesday, November 30, 2016

பின்னணி பாராது பின்னணி தொடரின்.....

முந்தைய காலங்களில்

முன்னணி இருந்தவர்
பின்னணிப் பார்க்கின்..

உழைப்பு இருக்கும்
தியாகம் இருக்கும்
நேர்மை இருக்கும்
வீரமும் இருக்கும்
விவேகமும் இருக்கும்

இன்றைய காலங்களில்

முன்னணி நிற்பவர்
பின்னணிப் பார்க்கின்

ஜாதி இருக்கும்
மதம் இருக்கும்
பொய்மை இருக்கும்
பணமும் இருக்கும்
பரம்பரையாயும் இருக்கும்

இனியும் வரும் காலங்களில்

முன்னணி செல்பவர்
பின்னணி பாராது
பின்னணி தொடரின்..

எந்நிலை ஆயினும்
மேலும் கொள்ளும்
 நம் நிலை  நிச்சயம்
கையறு நிலையே

உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே 

Tuesday, November 29, 2016

மீன்பிடிப் போட்டி...

குளம் கலக்கும் குணம்
குளம் அழிக்கும் குணம்
மீன் பிடிக்க
நினைப்பவர்களுக்கே வரும்

குளம் ஆக்கும்  மனம்
குளம் காக்கும் குணம்
நீரின் அருமை
அறிந்தவர்களுக்கே தகும்

மீன் பிடிப் போட்டியில்
சேறும் சகதியும்
குளத்து நீரை
சாக்கடையாக்கியத் தினங்கள்

ஒரு கெட்டக்
கனவினைப் போல
மெல்லக் கடந்து போக

மெல்லத் தெளியத்
துவங்குது
எங்கள் ஊர்க்குளத்து நீர்

துவேஷமும் வெறுப்பும்
மெல்லப் படிய
சீராகிடும் மனம் போலும்  

Monday, November 28, 2016

காலம் கடக்கும் பேராசை...

காலங்கடக்கும் பேராசை
துளியும் எனக்கில்லை
அதன் காரணமாகவே
என்படைப்புகளுக்கும்
அந்தப் பேராசை துளியுமில்லை

பொசுக்கும் மணற்பரப்பில்
வெற்றுக் காலுடன்
தகித்து வருவோனுக்கு
கொஞ்சம் ஒதுங்க இடம்தரும்
ஒற்றைப் பனைமரமாய்...

நீண்டு விரிந்த நெடுஞ்சாலையில்
தன் எடை மீறிய சுமையுடன்
ஒடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் நிமிர இடம் தரும்
ஒரு கற்சுமைதாங்கியாய்...

கொட்டும் பெருமழையில்
முற்றாக நனைந்து ஊறி
நடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் ஒடுங்க இடம் தரும்
ஒரு பாழடைந்த கோவிலாய்..

தனிமை தரும் வெறுமையில்
சூழல் கூட்டும் கொடுமையில்
நசுங்கித் தவிப்போனுக்கு
கொஞ்சம் இளைப்பாற வழிசொல்வதே
இலக்கியம் எனக் கொண்டதால்...

என் படைப்புகளுக்கு
காலம் கடக்கும் ஆசை
துளியும் இல்லை
அதன் காரணமாகவே
எனக்கும் அந்தப் பேராசை
என்றும் எப்போதும்
வருவதே  இல்லை