Tuesday, September 27, 2016

உங்களுக்கு நேரமிருக்க வாய்ப்பில்லை

உங்களுக்கு நினைவிருக்க
நிச்சயம் வாய்ப்பில்லை
ஏனெனில் அப்போதுதான்
தவழுதலை முடித்து
நீங்கள் சுயமாய்
நிற்கக் கற்றுக் கொண்டிருந்தீர்கள்

அன்றைய நாட்களில்
உங்கள் தாய்த்தந்தையரின்
மாலை நிகழ்வுகளில்
உங்களுடனான
மல்யுத்தம் நிச்சயம் இருந்தது

ஒவ்வொரு முறையும்
நீங்கள் உங்கள்
உச்சப் பட்ச
சக்தியினைத் திரட்டி
அவர்களை வீழ்த்த முயல..

ஒவ்வொரு முறையும்
அவர்கள் உங்களிடம்
உட்சப் பட்ச
சக்தியினைத் திரட்டி
வீழ்வதுப்  போல் நடிக்க...

நீ கைகொட்டி
முழுவாய்ப் பிளந்துச் சிரிக்க
அவர்கள் உங்கள் மகிழ்வினில்
உலகை மறந்து கிடந்ததும்
கவலை மறந்து களித்ததும்..

உங்களுக்கு நினைவிருக்க
நிச்ச்யம் வாய்ப்பில்லை
ஏனெனில் அப்போது
நீங்கள் ஏதுமறியாக்
குழந்தையாய் இருந்தீர்கள்

இப்போது உங்களுக்கு
நேரமிருக்க வாய்ப்பில்லை
ஏனெனில் இப்போது நீங்கள்
பதவியில் வசதிவாய்ப்பில்
உச்சத்தில் இருக்கிறீர்கள்

இன்றைய நாட்களில்
உங்கள் தாய் தந்தையரின்
அன்றாட நினைப்புகளில்
உங்களுடைய நினைவுகளே
அதிகம் ஆக்கிரமித்துக் கிடக்கிறது

அன்றாடம் ஏதுமில்லையாயினும்
எதையாவது மனம் திறந்து
பேசிவிட எத்தனிக்கையில்
"எதுவும் முக்கியமா ?" என
பேச்சினை முறிக்கையில்...

ஒவ்வொரு முறை நெருங்க  முயலுகையிலும்
அவசர வேலை இருப்பதாய்
செயலில் காட்டி
கையடக்கச் சனியனில்
முகம் புதைக்கையில்...

மனம் மிக நொந்தபடி
ஆயினும் மிக சந்தோஷமாய்
இருப்பதுப் போலப்போக்குக் காட்டி
இப்போதும் அவ்ர்கள்
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது இதை உணரும் மனமிருக்க
உங்களுக்கு நிச்சயம்  வாய்ப்பில்லை
ஏனெனில்
பதவியில் வசதி வாய்ப்பில் மட்டுமல்ல
நடிப்பில்   நீங்களும் 
இப்போது உச்சத்தில் இருக்கிறீர்கள்


(கண்ணீருடன்  கரு தந்த நண்பருக்கு
சமர்ப்பணம் )

Monday, September 26, 2016

வலைத்தள மேடை

இந்த மேடை எனக்குப்  
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
படுதாக்களும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

எனக்கு  இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்  சுமைகளின்றி
போலி முக வேஷங்களின்றி
எனது  குளியறையில் பாடுதல் போல்
எனது  தோட்டத்தில் ஆடுதல்  போல
இயல்பாகவே இருக்க  முடிவதாலே

எனக்கு  இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

நிழல்  உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவரும்
என்னையும்   பார்க்கும்படியாக  இருப்பதாலே 

எனக்கு  இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

கட்டுப்பாடுகளின்றி   என் இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்
பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்வெளிச்சமும்
ஆரவார ரசிகர்களின் 
வான் முட்டும் சப்தமும் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும் எனக்குள்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது
அதனால்
எனக்குள் நிலையாக
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது

Thursday, September 22, 2016

நிழலின் சூட்சுமக் சமிக்ஞைகள்...

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர

வேறு எதை எதையோ
அறிவுறுத்த முயலும்
நிழலில் சமிக்ஞைகள்
எனக்குப்  புரிந்ததில்லை எப்போதும்

நான் பிறக்கப் பிறந்து
என்னையேத் தொடர்ந்து
என்னுடனே மரிக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
ஏனோ புரிந்ததில்லை என்றென்றும்

நான் எப்போதும் போலிருப்பினும்
சிலபோது பின்னே
விஸ்வரூமெடுத்து
சிலபோது
முன்னே மிகச் சுருங்கி
பலசமயம்
கால் மிதிபடக் கிடந்து
இரவில்இருளில்
முற்றாய்ஒடுங்கி

என்னவோ சொல்ல நினைக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
புரிந்ததில்லை எஞ்ஞாளும்

ஈரக்காற்றின் சமிக்ஞை
வெளுக்கும் கிழக்கின் சமிக்ஞை
மலர்மொட்டின் சமிக்ஞை
குழந்தையின் சமிக்ஞை
ஊமையனின் சமிக்ஞை
நாணமுற்றவளின்  சமிக்ஞை
பிற மொழியாளரின் சமிக்ஞை
அனைத்தையும்
புரிந்து கொள்ளக் கூடும் என்னால்

இன்றுவரை
எனக்கான
எனக்கானது மட்டுமே ஆன
என்னை விட்டு நொடியும் விலகாத

என் நிழலின்
பிறச்  சூட்சுமச் சமிக்ஞைகளை மட்டும்
எப்படி முயன்றும்
ஏனோ புரிந்து கொள்ளமுடியவில்லை
இந்த நொடி மட்டும்

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர...

Tuesday, September 20, 2016

தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும்
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் சரியாகச்  சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதில் கொண்டு

எழுதாது இருந்து
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
மனம் துணிந்து உளரவிடும் 
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

Monday, September 19, 2016

"வரம் கொடுத்தவன் தலையிலேயே.....

"வரம் கொடுத்தவன்
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்

"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்

அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்

பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...

அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி

சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை

மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....

Friday, September 16, 2016

ஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....

ஆலயம் விட்டு
ஆண்டவன்
அவசரமாய் வெளியேறிக் கொண்டிருந்தான்

"எங்கே இவ்வளவு அவசரமாய்.."
என்றேன் அதிர்ச்சியுடன்

"ஆடம்பரமும், ஆரவாரமும்
மிக அதிகமாகிவிட்டது
சகிக்கவில்லை..அதுதான் "
என்றான்

"அப்படியாயின்
மீண்டும் காடு நோக்கி
அல்லது மலை நோக்கி அப்படித்தானே "
என்றேன்

"இல்லையில்லை
அங்கு அமைதி இருக்கும்
அன்பு கிடைக்காது
எனக்கு இரண்டும் வேண்டும் "
என்றான்.

நான் குழம்பி நின்றேன்

பின் காதோரம் இரகசியமாய்..

"ஓலைக் கூரையோ
ஓட்டு வீடோ
ஒட்டுக் குடித்தனமோ
விஸ்தீரணம் முக்கியமில்லை எனக்கு "என்றபடி
கூட்டத்தினில் மாயமாய்
மறைந்து போனான்

நானும் ஆலயம் விட்டு
அவசரமாய் வெளியேறினேன்

அவன் இல்லாத இடத்தில்
எனக்கும் இனி எப்போதும்
வேலையில்லை என்பதனாலும்..

அவன் வரவுக்காக
என்னையும் என்வீட்டையும்
சீர் செய்ய வேண்டும் என்பதற்காகவும்..

Thursday, September 15, 2016

நாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...

தனக்கென
ஒரு நிறமற்றுக் -கூடும்
நிலமதன்
நிறம்பெற்று..

தனக்கென
ஒரு சுவையற்றுச் -சேரும்
பொருளதன்
சுவைப்பெற்று..

தனக்கென
ஒரு திசையற்றுச் -சரிவு
இழுத்திடும்
திசைப்பெற்று

தனக்கென
ஒரு சுகமற்றுப் -பரவும்
வழிகளில்
சுகமீந்து

சீரும் சிறப்புமாய்
திகழ்ந்தக்  காவேரி-நாளும்
சீறிப் புலியாகப்
பாய்ந்தக்  காவேரி

தமக்கிது
உரியதென்று-வன்மம்
கூட்டுவோர்
நிலைக்கண்டு

தமக்குள்
அடக்கிடவே-முயல்வோர்
அடாவடிச்
செயல்கண்டு

தமதெல்லைத்
தாண்டுதலைப் -பொறாதுச்
சீறுவோர்
வெறிகண்டு

தனக்குள்
எரிகிறாள்-ஊழிக்
காலத்து
நெருப்பாக

கௌரவர்
சபையினில்-பாஞ்சாலி
நின்றிட்ட
நிலைபோல

எதிர்கட்சி
எல்லோரும்- ஊமையாய்ப்
பாண்டவர்
நிலைகொள்ள

ஆளூவோர்
எல்லோரும்-குருட்டுத்
திருதிராஷ்டிரன்
நெறிகொள்ள

தவியாய்த் தவிக்கிறாள்
நம்தாய்க் காவேரி-தன்னை
விடுவிக்கத் துடிக்கிறாள்
பூம்புகார்க் காவேரி

வீடெரிய
வெற்று வீதியினைக்
காத்தல்
காவலனின்
கடமை ஆமோ ?

அன்னையின்
கரமிழுக்கும்
காமுகனைப்
பொறுத்திடுதல்
கண்ணியம் ஆமோ ?

காவிரியின்
வழிமறிக்கும்
கயவர்களின்
செயல்பொருத்தல்
கட்டுப்பாடு ஆமோ ?

இனம் வாழ
ஜாதிகடந்து
மதம் கடந்து
கட்சிகடந்து
நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்

பொறுப்பதில்
பூமியெனினும்
பொங்கிடின்
எரிமலையென
உலகிது
உணரச்  செய்வோம் வாரீர்

Wednesday, September 14, 2016

ஊரை எரிக்கும் நீர்

தீர்ப்பு வந்ததும்
நிறைந்த மனத்தோடு
அணையைத் திறக்காது
கனத்த மனத்தோடு
வெறுப்பைத் திறந்தததால்

இயற்கைக்கு முரணாய்
ஊரை எரித்துப் போகிறது
என்றும் எப்போதும்
இணைத்தே மகிழ்ந்த நீர்
அணைத்தே பழகிய நீர்

எங்கள் இயல்புக்கு மாறாய்
தீ ஒன்றே தீயை அணைக்குமோ
என்னும் விஷத்தினை
எம்முள் விதைத்தபடியும்
அதனைப் புயலாய் வளர்த்தபடியும்

விளைவது கண்டேனும்
இதயக் கனம் குறைப்பீர்
இந்தியாவின்
நலம் கருதி மட்டுமன்றி
உங்கள் நலன் கருதியேனும் 

Tuesday, September 13, 2016

வன்முறைகளுக்குத் தீர்வு




முன்பு திருடர்களும், கொள்ளைக்காரர்களும்,
கொலைக்காரர்களும்,வன்முறையாளர்களும்
பயந்துப் பயந்துத் தங்களை மறைத்தபடி
எதிர்பாராதவிதமாக,தங்கள் பித்தலாட்டச்
செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்

அவர்களிடம் தர்ம, நியாயப் பயமற்றுப் போயிரிந்தாலும் கூட
சட்டப் பயம் ,தண்டனை பயம் இருந்தது

இன்று தர்ம நியாயப் பயம், சட்டத் தண்டனைப் பயம்
முற்றிலும் அழிந்து போனதன் காரணமே
இத்தனை வன்முறைகளுக்குக் காரணம்

இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கிற
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது
நடவடிக்கை எனப் புகுந்தால்,
எல்லா அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்
கூட்டுக் களவாணிகளாக இருப்பதால்
அரசியல் ரீதியாக அவர்களுக்குள் ஒரு
மறைமுக உடன்பாடு இருப்பதால்
இதற்குஒரு கமிஷன் எனப் போட்டு,விஷயத்தை
நீர்த்துப் போகவிட்டு, பின் ஏதுமற்றதாக
ஆக்கி விடுகிறார்கள்

அதற்குள் அந்த அந்தப் பகுதியில் வன்முறையை
அரங்கேற்றியவர்கள் ஒரு தாதா வாகி
அரசியல் செல்வாக்கும் பெற்றுவிடுகிறார்கள்

 எந்த மா நிலமாயினும் இதுதான் ஒரு
தொடர்கதை போலத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது

இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது இருக்க
வேண்டுமாயின் உடன் அரசு ஒரு சட்டத்தை
நிறைவேற்றலாம்

முன்பு போல இப்போது வன்முறையை
பொது இடங்களில் நிகழ்த்திவிட்டு
யார் கண்ணிலும் படாது ஓடிவிடச் சாத்தியமில்லை

இந்த பெங்களூரு வன்முறையில் கூட
தான் தான் செய்கிறேன் என்பது தெரியும்படியாகவே
வண்டியை சேதப்படுத்துபவர், தீவைப்பவர்,
ஆடையைக் கலைகிறவர் என அனைவரின்
புகைப்படங்களும் காணொளிகளும்
பகிரப்பட்டுள்ளன

அரசு எந்த ஜால்சாப்பும் சொல்லாமல் உடன் அந்தத்
தனி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து
சிறையில் அடைப்பதுடன்,அவர் செய்த
சேதாரத்திற்கானத்தொகையை
அவரிடமே வசூலிக்கும்படியாக உடன்
ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால்
இனி ஒரு அரசியல் கட்சியோ , அல்லது
ஒரு அமைப்போபோராட்டத்தைத்
தூண்டினாலும் கூட இதுபோன்ற
வன்முறைச் சம்பவங்களில் தனி நபர்கள் நிச்சயம்
ஈடுபடமாட்டார்கள்


ஒரு காணொளியை ஆதாரமாகக் கொண்டு
உடன் அந்த வன்முறை அரங்கேற்றும் நபரைக்
கைது செய்யும் அதிகாரத்தை காவல் துறைக்கு
அதிகாரம் வழங்கப் படுமாயின், ந்ச்சயமாக
இது போன்ற வன்முறைகள் இந்தியாவில் நடைபெற
சாத்தியமற்றுப் போகும்

(இப்போது எல்லோரிடமும் புகைப்படம் எடுக்கும்
அமைப்புடன் இருக்கும் கைபேசி இருப்பதால்
நூற்றுக்கு தொன்னூறு வன்முறை நிகழ்வுகள்
பதிவாகிவிட சாத்தியம் அதிகம்)

அரசு இதை பரிசீலிக்கும்படியாக நாம்
பொதுக் கருத்தை உருவாக்கலாமா ?

அதே சம்யம் பொது நல நோக்கமுடைய
அமைப்புகள் அல்லது சட்டவல்லுநர்கள்
இந்த காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொடுத்து
உடன் அந்தத் தனி நபர்களை கைதுசெய்யும்படி
பொது நல  வழக்குகள் பதிவு செய்யலாமா ?

Monday, September 12, 2016

என்று ஆவன செய்யப்போகிறோம் ?



உடற்குறைபாடுடையார் இந்தியாவில்
இன்னமும் தங்கள் நியாயமான உரிமைகளுக்காக
அவசியம் பெற வேண்டிய சலுகைகளுக்காக
போராடியபடித்தான் இருக்கிறார்கள்

PV Sindhu, PV Sindhu silver medal, PV Sindhu final match, PV Sindhu photos, PV Sindhu women singles final, Sindhu vs Carolina, Sindhu medal, PV Sindhu India, Sindhu photos, Sindhu match highlights, Sindhu match photos, Rio 2016 Olympics, Rio Games, Sports photos, Sports

இந்தியாவில் பெண்கள் தங்களுக்கு
எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக
என்ன செய்வதென்று அறியாது
திகைத்தபடியும்
சம உரிமைக்காக தொடந்து
போராடியபடியும்தான் வாழ்கிறார்கள்

ஆனாலும் கூட முழு உடற்தகுதிக்
கொண்டவர்களும்,அதிக வாய்ப்புகள் உள்ள
ஆண்களும் பெற்றுத் தராத ஒலிம்பிக்
பதக்கத்தை அவர்கள் இருவரும்தான் 
பெற்றுத் தந்து நம் இந்தியாவின் பெருமையை
உயர்த்திக் கொண்டுள்ளார்கள்

அரசும் மக்களும் அவர்கள்கள்பால்
என்று அக்கறையும்,பரிவும் கொண்டு
ஆவன செய்யப்போகிறோம் ?

Friday, September 9, 2016

கேயாஸ் (chaos)தியரி

விளையாட்டு
போட்டியாகி
போட்டி
வெறியாகி
வெறி
பகையாகி
பகை
கைகலப்பாகி
கைகலப்பு
ஆயுதத் தாக்குதலாகி
ஆயுதத் தாக்குதல்
நவீன ஆயுதத் தாக்குதலாகி...

ஆம்
வண்ணத்துப் பூச்சியின்
மெல்லிய சிறகசைப்பின் அதிர்வு
புயலாய் எதிர்வினையதுக் கொள்ளும்
எனச் சொல்லும்
,கேயாஸ் தியரியினை

மிகப் பூடகமாய்ச் சொல்லும்
(என்னுடையப்  பார்வையில்  )
எமது மதுரையைச் சார்ந்த
கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளக் காணொளி
என்னை மிகவும் கவர்ந்தது

பாருங்களேன்
உங்களையும் கவரக் கூடும்
https://youtu.be/lP3sxD2Af7g




Thursday, September 8, 2016

Railway smart card awareness

   மதுரையில் என் சகோதரர் (சாரதாகுமார் )
இயக்க எடுக்கப்பட்ட
விழிப்புணர்வுக் காணொளி இது

செய்தி சொல்வதுதான் முக்கியம் என்பது
இதுபோன்ற விழிப்புணர்வுப் படங்களின்
பிரதான நோக்கமாக இருந்தாலும் கூடக்
 கொஞ்சம் கலை உணர்வோடு
சொல்லப்படுகையில் அது இன்னமும்
சிறப்புப் பெறும்

அந்த வகையில் இந்தக் காணொளி
ஒரு நல்ல முயற்சி என்றாலும்

சிந்திய பொருளை அந்தப் பெண் எடுத்துக்
கொடுத்தபடிப் பேச்சினைத் தொடரும்படியாக
இருந்தாதிருந்தால்,

பயணியின் உடல் மொழியிலும்
பயணச் சீட்டு எடுக்கவேண்டுமே  என்கிற
ஒரு பதட்டம் பேசும்போதும் தொடர்ந்து
இருக்கும்படியாக இருந்திருந்தால்
இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்
என்பது என எண்ணம்

இதோ அந்தப் பயனுள்ளக் காணொளி ...



Tuesday, September 6, 2016

பிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் ?

மன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள்  ஏ 
அதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு
தலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்

சிற்பத்திற்குகந்த கற்களைத்
தேர்ந்தெடுத்துச் சேர்த்தல்,

சிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,

வடிவமைத்தல்,முதலான அனைத்திற்கும்
அந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்

ஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய
சிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள் 
ஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்
செய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக
சிலைகள் சேதமுறவோ,இறுதி கட்டத்தில்
சிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது
நிச்சயம் அதிகம் உண்டு

அது போன்று தவறுகள் நேரும் போது 
பயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்
சேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு

மூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்
ஆகாது என்பதாலும், 

புதியவர்கள் அதனை உடனடியாக
பிள்ளையாராக மாற்றிவிட்டால் தவறுக்கான
தண்டனையில் இருந்து விலக்களிக்க
உத்திரவாதம் இருந்ததாலும், 

பிள்ளையாராக எந்தச்
சேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது
என்பதாலும் 

புதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்
உடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்
அதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்

எந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்
செய்கிற முதல் சிலை பிள்ளையாராக
இருக்கும் என்பதால்

எந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்
பிள்ளையாராகச்செய்துவிடும் திறன்
அனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்

இப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை 
வெளியேற்றுதலையே பிரதானப்
 பணியாகக் கொண்டால்சிற்பக் கூடத்தின்
பிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்

எனவே அதனை மக்களாகவே எடுத்துச்
செல்லும் விதமாக

ஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,
குளக்கரை,நேர்க்குத்து உள்ள இடங்கள்,
கோவில் அரசமரத்தடி
என பிள்ளையாருக்கான தேவையையும் 
அதிகம் இருக்கும்படியான நம்பிக்கையையும்
உருவாக்கி வைத்திருந்தார்கள்

அனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது
இருக்குமாயின் அதற்கான  கால விரயம்,
 சம்ரதாயம்   அக்கறையின்மைக்குச்
சாத்தியம் என்பதால் கேட்காமலே
எடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்
இந்தச் சலுகையைக் கொடுத்திருந்தார்கள்

காலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்
திருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு
அப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு
திருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்
அருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா
பிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )
ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்ததால்தான்
நாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட
சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்படுகிற
பிள்ளையாரைத்  தவிர மற்ற இடங்களில் இன்னமும்
எங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்
(திருடித்தான் )வைத்துக் கொண்டிருக்கிறோம்

(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது
சுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்
இப்போதுவரை என் நினைவில் இருந்ததால்
அதனை பதிவு செய்துள்ளேன் )

Sunday, September 4, 2016

கணபதி திருவடி



கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இலையினி -தொடர் 
செழுமையே  உனக்கினி 

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உனை  
வலம்வரும்  கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது இலையினி -முழு 
நிறைவுதான் எனத்தெளி


Friday, September 2, 2016

ரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )

                        காட்சி (7  ) தொடர்ச்சி

ரஜினி:
( தன் பெட்டியிலிருந்து ஃபைல் ஒன்றை
எடுக்கத் தாணு முயற்சிக்க அதைச் சட்டெனத்
தடுத்து.. )

தாணு சார்.. ஃபுல் டிடைல்ஸ் எனக்கு வேண்டாம்
அதையெல்லாம் நீங்க பாத்துக்கங்க
எனக்கு எப்படிச் செய்யலாம்கிறதை ரேண்டமா
சொன்னாப் போதும்....

தாணு
(ஃபைலை மூடி வைத்துவிட்டு...)

சார் சூட்டிங் ஆரம்பிச்ச உடனே காஸிப் மாதிரி
படம் குறித்த செய்திகளை நாமே நாம் நினைக்கிறபடி
தொடர்ந்து பி.ஆர். ஓக்கள் மூலம்
பத்திரிக்கைகளுக்குக் கசியவிட்டுத்
தொடர்ந்துப் படம் பத்தினச் செய்தி
லைவ்ல இருக்கிறமாதிரிச் செய்யறோம்

இசை வெளியீட்டு விழாவை இதுவரை யாரும்
செய்யாத மாதிரி பிரமாண்டமா வெளி நாட்டில
வைச்சே செய்யறோம்

இதுவெல்லாம் எல்லாம் செய்யற மாதிரிதான்

ஆனா அடுத்து படம் வெளியாக இருக்கிற
ஒரு மாசத்துல நாம இதுவரை யாரும் செய்யாத
சில வித்தியாசமான விஷயங்களை உங்க
சூப்பர் ஸ்டார் பிராண்ட் வேல்யூவை வைச்சு
நம்ம படத்தோட மார்க்கெட் வேல்யூவை
இதுவரைத் தமிழ்ப் படம் எதுவும் போகாத
உச்சத்துக்குக் கொண்டு போறோம்...

(தாணு உற்சாகமாகப் பேசப் பேசப் ரஜினியும்
ரஞ்சித்தும் மிக ஆவலாய் முன் சரிந்து
கவனிக்கத் துவங்குகிறார்கள்...)

சாருக்குத்தேத் தெரியுமே
முன்னையெல்லாம் படம் ரிலீஸ் ஆன உடனே
டிஸ்டிபூட்டருக்குப் போனப் போட்டு
படத்தைப் பத்தி மவுத் டாக்
எப்படி இருக்குன்னு கேப்போம்

நாம் என்னதான் லட்சம் லட்சமா செல்வழிச்சு
வீள்ம்பரம் செஞ்சாலும் வாய் வழியா பரவுற
வெளம்பரம் மாதிரி வராது

அதைமாதிரி இப்ப முக நூலும் வலத்தளமும்
ஆகிப்போச்சு.அதுல படஎதிர்பார்ப்பைப்  தூக்கியும்
தாக்கியும் நாமே சில பதிவுக்கு ஏற்பாடு பண்றோம்

கிராமத்து வைக்கப் படப்புல ஒரு ஓரம்
பத்த வைச்சா காத்தே மத்ததை பாத்துக்கிரும் மாதிரி
நம்ம துவக்கி வைச்சாப் போதும்
மத்ததை அதுல உள்ளவங்கப் பாத்துப்பாங்க

அடுத்து அஞ்சு ஆறு வெளி நாட்டுல ரசிகர்கள்
ஆரவாரமா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறாப்பல
ஏற்பாடு செஞ்சிருவோம்.பனியன்,விளமபரம்
அது இது எல்லாம் அந்த ஏஜென்ஸியே
பாத்திக்கிடுவாங்க

அதேமாதிரி, மெடிகல் டூரிஸம் போல
 வெளி ஸ்டேட்ல இருந்து பஸ்
,ஸ்டார் ஹோட்டல் பேக்கேஜோட
நம்ம படம் பார்க்க நாலஞ்சு பஸ் ஏற்பாடு பண்றோம்

முன்னயெல்லாம் லீவு நாளாப் பாத்து
படம் ரிலீஸ் பண்ணுவோம்
இப்ப நம்ம பட ரிலீஸுக்கே லீவு விடற மாதிரி
நமக்குத் தெரிஞ்சரெண்டு மூணு கம்பெனி
மூலமா ஏற்பாடு பண்றோம்

முன்பு படம் ரிலீஸுன்னா பலூன் பற்க்க விடுவோம்,
பெரிய பெரிய போஸ்டர் அடிப்போம்
இப்ப நம்ம பட விளம்பரத்தையே ஒரு விமானத்திலேயே
வரைஞ்சுப் பறக்க விடறோம்

இன்னும் இப்படி வித்தியாசமா ரெண்டு மூணூ இருக்கு

அதையெல்லாம் அந்த ஏஜென்ஸி மூலமே செஞ்சு
அந்த பட ரிலீஸ் வாரத்திலே எங்கேயும் நம்ம
படத்தைத் தவிர வேற பேச்சே இல்லாத மாதிரி செஞ்சு
என்ன விலைக் கொடுத்தாவது முதல் இரண்டு நாள்ல
படத்தைப் பார்த்தாகணும்கிற வெறியை உண்டாக்குறோம்

மிக முக்கியமா பட டிக்கெட் கூடுதலா விக்கிறது
தொடர்பா பிரச்சனை அரசின் மூலமா வராம இருக்க
இதுக்கு முன்ன பண்ணின மாதிரி
அரசுக்கு நெருக்கமானவங்க மூலமாகவே
ரிலீஸுக்கும் ஏற்பாடு பண்றோம்

(தொடர்ந்து பேசிய தாணு ,சற்று நிறுத்தி
 ரஜினி அவர்களின் கருத்தறிய முகம் பார்க்கிறார்)

ரஜினி
(மெல்ல புன்முறுவல் பூத்தபடி )
வெரி நைஸ் ..வெரி நைஸ்...
நான் எதிர்பார்த்தத்துக்கு மேலே
ரொம்ப அருமையா ஒர்க் பண்ணி இருக்கீங்க
தாணு சார்.. ரொம்ப தாங்க்ஸ்.ரொம்ப  தாங்க்ஸ்

(பின் இரஞ்சித் பக்கம் திரும்பி)

தாணு சார் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை  ஏற்படுத்திடுவாரு
அப்படி எதிர்பார்ப்போட வர்றவங்க
 ஏமாறாம சந்தோஷமா ரசிக்கிறமாதிரி
படம் பிடிக்கிறமாதிரி
நாமதான் பண்ணனும் பண்ணீடலாமா ரஞ்சித்..

(எனச் சொல்லியபடி கைகுலுக்க ரஞ்சித்தை
நோக்கித்  தன் கையை நீட்டுகிறார்)

ரஞ்சித்
(ரஜ்னி அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டபடி
உறுதியளிக்கும் தொனியில்...)

செஞ்சிடலாம் சார்..நிச்சயமா செஞ்சிடலாம் சார்

(தொடரும் )