Saturday, May 31, 2014

காதலின்றி கவிபிறக்கத் தகுமோ ?

மொழியின்றி ஒலிவாழக் கூடும்
ஒலியின்றி மொழிவாழத் தகுமோ ?
நினைவின்றி மனம்வாழக் கூடும்-உன்
நினைவின்றி நான்வாழத் தகுமோ ?

ஊரின்றி வழிசெல்லக் கூடும்
வழியின்றி ஊரிருக்கத் தகுமோ
நானின்றி நீயிருக்கக் கூடும்-இங்கு
நீயின்றி நானிருக்கத் தகுமோ ?

பயிரின்றி நீரிருக்கக் கூடும்
நீரின்றி பயிர்வாழத் தகுமோ ?
உழைப்பின்றி செல்வமதுவும் கூடும்-உன்
துணையின்றி மகிழ்ந்திருத்தல் தகுமோ ?

காடின்றி மழைபெய்யக் கூடும்
மழையின்றி காடிருக்கத் தகுமோ ?
கூடின்றி குயிலிருகக் கூடும்-உன்
காதலின்றி கவிபிறக்கத் தகுமோ ?

Thursday, May 29, 2014

மாத்தி யோசி

கொள்கைகளை முடிவு செய்துவிட்டு
கூட்டணி அமைக்கத் துவங்கினால்
குழப்பமே மிஞ்சும்

கூட்டணி குறித்து முடிவு செய்து விட்டு
பின் கொள்கை முடிவெடுப்போம்
கொள்கைகள் தகமைத்துக் கொள்ளும்

பதவிகளை பிடித்து விட்டு
அதற்கானத் தகுதிபெற முயல்வோம்
அதுவே பிழைக்கும் பார்முலா

தகுதிப் பின் பதவி பெற முயன்றால்
பதவி நிரப்பப்பட்டிருக்கும்
பின் ஏமாற்றமே தொடர் கதையாகிவிடும்

கடனில் பொருட்கள் பெற்று
அனுபவிக்கத் துவங்கிவிடுவோம்
அதுவே இன்றைய வாழ்க்கை முறை

பணம் சேர்த்துப் பின் அனுபவித்தல் எனில்
வயதும் கடந்திருக்கும்
அனுபவிக்கும் மனமும் மாறித்தொலைக்கும்

தர்மங்கள் யுகத்தை முடிவு செய்வதில்லை
யுகமே தர்மத்தை முடிவு செய்கிறது
இந்தப் போதனை கூட நமக்குச் சாதகமே

மாத்தி மாத்தி யோசிப்போம்
பிராணவாயு கெட்டால் என்ன
பிராணாயாமம் செய்யப் பழகுவோம்

எல்லை மீறி யோசிப்போம்
உலகு எப்படி ஆனால் என்ன
நம்சுகத்தைக் காக்கப்   பயிலுவோம்

Monday, May 26, 2014

சிறுகதை விமர்சனப் போட்டி - தொடர்பாக

பதிவுலகப்  பிதாமகர்  வை.கோ   நடத்தி வரும்   - தொடர்பாக 
சிறுகதை  விமர்சனப் போட்டியில்  ஜாதிப்பூ  எனும் 
சிறுகதைக்கு  நான்  எழுதிய  விமர்சனத்திற்கு 
பரிசு கிடைத்தது  மகிழ்வளித்தது 
நடுவர்  அவர்களுக்கும்  வை.கோ அவர்களுக்கும் 
மனமார்ந்த நன்றி 

அடுத்து சூழ் நிலை  என்கிற  சிறுகதைக்கு 
 என் விமர்சனத்தை விட   மிகச் சிறந்த  விமர்சனத்தை 
அளித்தவர்கள் பரிசு பெறுவது  கூடுதல்  மகிழ்வளிக்கிறது

என்னுடைய  விமர்சனத்தை இங்கு  ஒரு பார்வைக்காக 
பதிவு செய்வதில்  மகிழ்ச்சி கொள்கிறேன் 

பரிசு பெற்றவர்களுக்கு  எனது மனமார்ந்த  நல்வாழ்த்துக்கள்   


சூழ்நிலை

இந்தக் கதைக்கான விமர்சனத்தினை எழுதும் முன்பாக
ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்வது
எனது கருத்தை மிகச் சரியாக புரியவைக்க உதவும்
என நினைக்கிறேன்

தப்புத் தாளங்கள் என்று ஒரு திரைப்படம்
பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது
அதில் ரஜினி அவர்கள் பெரிய ரவுடியாகவும்
கதா நாயகி விலைமகளாகவும் நடித்திருப்பார்கள்
ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் மன ரீதியாக
ஒன்றுபட திருமணம் செய்து கொண்டு
 ஒரு முறையான வாழ்வைத் தொடர முயல்வார்கள்

ஆயினும் 
விலைமகளின் வீட்டிற்கு தொடர்ந்து வரும்
வாடிக்கையாளர்களின் தொந்தரவினால் மீண்டும்
அவர்கள் பழைய அவல வாழ்விற்கே 
திரும்ப வேண்டியநிலை வருவதாக படம் முடியும்

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் 
திருமணத்திற்குப்பின் அவர்கள் விலைமகளின் 
வீட்டில் மட்டும் இல்லாது வெளியேறி இருந்தால் 
இந்தத் தொந்தரவுகள் தொடரவழியின்றிப் போயிருக்கும்.
நமது பண்பாட்டு முறையின்படியும் கணவன் வீட்டில் 
குடியேறுவதுதானே முறையும் கூட

ஆனாலும் கதையின் போங்கு கெட்டுப்போனவர்கள்
திருந்துவதற்கு இந்தச் சமூகம் அனுமதிப்பதில்லை
என இருக்க வேண்டும் என விரும்பும்
 இயக்குநர் சிகரம் அவர்கள்அதற்கு வசதியாக கதையில் 
கதா நாயகனுக்குவீடு இல்லாதது போன்ற 
ஒரு நிலையை உருவாக்கிமிகச் சாமர்த்தியமாக கதையை
 நகர்த்திக் கொண்டு போயிருப்பார்
நாமும் சொல்லிச் செல்லும் நேர்த்தியில் நாம்
இந்தச் சிறு சாமர்த்திய நகர்த்தலை கவனிக்க 
மறந்து விடுவோம்

அதுதான் அந்தப் படத்தின் வெற்றியின் ரகசியம்
படைப்பாளியின் திறன் மிக்க சாமர்த்தியம்.

இந்தச் சூழ் நிலைக் கதையிலும் பதிவுலக சிறுகதை
ஜாம்பவான் மிகச் சாமர்த்தியமாக இந்தத் டெக்னிக்கை
மிகச் சாமர்த்தியமாகக் கையாண்டுள்ளார்

உண்மையில் ஒரு சுப நிகழ்வில் இருக்கையில் கேட்க
நேர்கிற அவலச் செய்தியை சுற்றி இருப்பவர்கள்
அறியாதபடி இக்கதை நாயகர் சமாளிக்கிற விதம்
வெகு வெகு அருமை.அது அனைவரும் அவசியம்
இது போன்ற சூழலில் அவசியம் கைக் கொள்ளவேண்டியப்
படிப்பினையும் கூட

ஆயினும் அவர் அந்த நிகழ்வு முடிந்து வெளிவந்தபின்
அவ்வாறு பேச நிகழ்ந்தச் சூழல் குறித்து
அவர் மனைவிக்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டியது
மிக மிக அவசியம்.அதுதான் சரியானதும் கூட

ஆயினும் அப்படிச் செய்தால் கதாசிரியர்
இது போன்ற சூழலில் நடந்து கொள்ள வேண்டிய கருத்துக்கு
அழுத்தம் கொடுக்க இயலாது போய்விடும்

அதற்காகவே  அவர் மனைவிக்கு ஏற்படும்
மன அழுத்தத்தை நமக்குள்ளும் ஏற்றி நம்மையும்
அவரைப் போல எரிச்சலுற வைத்து முடிவாக
இறுதியில் தான் அப்படிப் பேசவேண்டி வந்த சூழலை
சொன்னவிதம் அவர் நம்முள் பதிய வைக்க விரும்புகிற
கருத்தினை மிகச் சரியாக ஆழமாக பதிய வைத்துப் போகிறது

ஒரு படைப்பாளி ஒரு படைப்பை படைக்கத் துவங்குகையில்
எந்தக் கருத்தை எந்த உணர்வை வாசகனிடம்
சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்க்கவேண்டும்
என விரும்புகிறாரோ அதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்
அதன் போக்கிலேயே தனது சொல்லிச் செல்லும் யுக்தியை
மிகக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்

இதற்கு ஒரு நல்ல வழிகாட்டிக் கதையாக அமைந்திருக்கும்
இந்தச் சூழ்நிலைக் கதையைப் படைத்திருக்கும்
பதிவுலகப் பிதாமகர் வை, கோ அவர்களுக்கு
எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....

Thursday, May 22, 2014

கல்யாணியின் வாரீசுகள்

அப்பா ஜாதக்கட்டை எடுத்தவுடனேயே
புலம்பத் துவங்கினாள் கல்யாணி
"அம்மா என்னைப் புரிஞ்சுக்கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கனும் அப்பாகிட்டே சொல் " என்றாள்

" உன் அப்பன் யாரு பேச்சை
என்னைக்குக் கேட்டார்
 இது நாள் வரைஉன் அப்பாவை நீ
புரிந்து கொண்ட லெட்சணம் இதுதானா ?"
மன்ம் வெதும்பிச் சொன்னாள் அம்மா

கல்யாணி சோர்ந்து போகாது
அப்பாவைக் கெஞ்சினாள்

"கல்யாணி முதலில் என்னை நீ புரிஞ்சுக்கோ
அடுத்த வருடம் நான் ஓய்வு பெறனும்
அதற்குள்ளே உன் திருமணம் முடிக்கணும்
புரிஞ்சுதா ? " என்றார் கண்டிப்புடன் அப்பா

குடும்ப நிலவரம் புரியாது
சக்திக்கு மீறிய இடமாகக் கொண்டுவந்தார்
கமிஷனுக்கு ஆசைப்பட்ட புரோக்கர் மாமா

ஸ்வீட் கொடுத்து
எதிரில் அமர்ந்து வெட்கப் பட்டு
சீர் செனத்தி பேசிமுடித்தாலும்
"பெண்ணையும் பையனையும்
கொஞ்சம் தனியாக பேசவிடுங்கள்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் "
என்றார் முற்போக்கு மதராஸ் மாமா

புழக்கடையில் ஐந்து நிமிட நெளிசளுக்குப் பின்
"உனக்கு சினிமா பிடிக்குமா ?யார் படம் பிடிக்கும் ?"
என்றான் மாப்பிள்ளை

"பார்த்திபன் எனச் சொன்னால்
ஒரு மாதிரி நினைப்பாரோ என நினைத்து
"ரஜினி " எனச் சொன்னாள் கல்யாணி

ஆரம்பத்திலேயே குழப்பவேண்டாம் என நினைத்து
" எனக்கும்தான் "எனச் சிரித்தார் மாப்பிள்ளை

" கோழிக் குழம்பு சமைக்கத் தெரியுமா
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் " என்றான்

தெரியும் என்பது போலவும்
தெரியாது என்பதுபோலவும்
குழப்பமாகத் தலையாட்டி வைத்தாள் கல்யாணி

தனக்குத் தேவையான பதிலை எடுத்துக் கொண்டு
பூரித்துப் போனார் மாப்பிள்ளை

இப்படியாக ஒருவரை ஒருவர்
 மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள
 மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்து முடிந்தது

மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்
அடுத்து அடுத்து குழந்தை பிறக்க
அதை வளர்ப்பதற்கான போட்டியில்இருவரும்
இறக்கைக் கட்டிப் பறக்க
ஒருவரைஒருவர்
புரிந்து கொள்வதற்கான அவகாசமின்றியே
காலமும் இறக்கை கட்டிப் பறந்தது

அப்பா ஜாதகக் கட்டை எடுத்ததும்
"அம்மா என்னை புரிஞ்சுக் கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கணும் " என்றாள்
கல்யாணியின் மூத்த மகள் நித்யா

இருபது வருடங்களுக்கு முன்பு
அம்மா தனக்குச் சொன்ன பதிலையே
சொல்லவேண்டியிருப்பதை எண்ணி
குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினாள் கல்யாணி

 அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
 ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து  தானும்  இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது

Tuesday, May 20, 2014

தீதும் நன்றும்.............

தீதும் நன்றும்
பிறர் தர வருவதில்லை
நாம் பெற்று வைத்துக் கொள்வதே
நமக்கான தாகிவிடுகிறது

இனியேனும் தீமைகளை மறுத்து
நன்மைகளை மட்டுமே பெற  முயலுவோம்

நட்பும் பகையும் கூட
வெளியில் நிச்சயம் இல்லை
நம் பலமே நண்பன்
பலவீனமே பகைவன்

இனியேனும் பலவீனத்தை ஒதுக்கிவைத்து
பலத்தை மட்டுமே பெருக்கப பயிலுவோம்

வெற்றியும் தோல்வியும்
பிறருடனான ஒப்பீட்டில் இல்லை
நம்முடனான ஒப்பீடுமட்டுமே
சரியானதும் முறையானதும்

இனியேனும்  பிறர் உயரம் விடுத்து
நம்மை அளக்கப் பழகி உயர்வோம்  

வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இல்லை
அது பயணம்  மட்டுமே

இனியேனும்  அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை  அர்த்தப்படுத்தி மகிழ்வோம்  

Monday, May 19, 2014

மிக எளிமையாய் ஒரு புதிய பிரணவம்

இதற்கு முன்பு
எத்தனைமுறைத் தொடர்புகொண்டிருந்தபோதும்
பிறரைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
முன் அபிப்பிராயங்கள் ஏதுமின்றி
முதல் தொடர்பு  இது எனும்
எண்ணத்துடனேயே தொடர்பு கொள்கிறேன்
தொடர்பு இயல்பானதாகத் தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனைமுறை சந்தித்திக்க இருக்கிறபோதும்
பிறரைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
பின் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
இறுதி சந்திப்பு இது எனும்
எண்ணத்துடனேயே சந்தித்து மகிழ்கிறேன்
சந்திப்பு உணர்வுபூர்வமானதாகத் தொடர்கிறது

இதற்கு முன்பு
எத்தனைப் படைப்புகளைத் தந்திருந்தபோதும்
ஒவ்வொரு புதுப்படைப்பின் போதும்
அது குறித்த அகந்தை ஏதுமின்றி
முதல் படைப்பு இது எனும்
எச்சரிக்கையுடனேயே படைக்கத் துவங்குகிறேன்
படைப்பு சுகமான அனுபவமாய்த் தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனைப் படைப்புகளைத் தர இருக்கிறபோதும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
அது குறித்த கற்பனைகள் ஏதுமின்றி
இது இறுதிப்படைப்பு எனும்
அதீத அக்கறையுடனேயே படைக்கத் துவங்குகிறேன்
படைப்பு கனமான ஒன்றாகவே அமைகிறது

இதற்குப் முன்பு
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருந்தபோதும்
காலை கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும்
கடந்தகாலச் சுமைகள் ஏதுமின்றி
புதிதாகப் பிறந்திருக்கிறேன் எனும்
புத்துணர்ச்சியுடனேயே நாளைத் துவங்குகிறேன்
இந்த நாள் சிறந்த நாளாகவே தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனை ஆண்டுகள் வாழ இருக்கிறபோதும்
கடமையைத் துவங்கும் ஒவ்வொரு நாளும்
எதிர்காலக் கவலைகள் ஏதுமின்றி
இதுவே எனக்கான கடைசி நாளெனும்
எச்சரிக்கையுடனேயே நாளைத் தொடர்கிறேன்
இந்த நாளும் பயனுள்ள நாளாகவே முடிகிறது

Saturday, May 17, 2014

பெரியார் உழ அண்ணா பரம்படிக்க.....

பெரியார் ஆழமாக உழ
அண்ணா அருமையாகப் பரம்படிக்க
அன்புத் தம்பிகள் வீரிய விதைகளை
மிக நேர்த்தியாய் விதைக்க

விளைந்துச் செழித்த
வயல்வெளி ஏன் இப்படி
பட்டுப் போனதோடு அல்லாமல்
பரிதாபப்படும்படி
பொட்டலாகியும் போனது ?

பண்ணயாய் இருந்த
அந்தப் பூமியை
பண்ணையார் பூமியாக்க முயன்றதாலா ?

அண்ணன் தம்பியாய் இருந்த
விவசாயப் பெருங்குடி மக்களை ஒதுக்கி
அண்ணன் தம்பிகளே
சொந்தம் கொண்டாடத் துவங்கியதாலா?

எது எப்படியோ
எதனால் இப்படியோ

பக்கத்துக் குளத்து
தாமரைக் கொடி மெல்ல
வயல்வெளியில் படரத் துவங்கிவிட்டது

ஒரு பூ பூத்து
மெல்ல இடம் பிடித்து
விரைவாய் பரவவும் துவங்கிவிட்டது

இனியேனும்
தூங்குவது போல் நடிக்காமல்
பண்ணையார் விழிகளைத் திறப்பாரா ?

நிலத்தை மீண்டும் பொதுவாக்கி
பண்ணையாக்கும் பணிதனைச்
செய்திடும் வழிகளைப் பார்பாரா ?

இல்லை வழக்கம்போல்
பட்டுப்போனதற்கு  புதுவிளக்கம் சொல்லி
தன் புலமையைத் தானே ரசிப்பாரா ?

மாலை சூடி
மன்னவானாக்கி மகிழ்ந்த காலம்
பதில் வேண்டிக் காத்துக் கிடக்கிறது

சரியான பதில் இல்லையெனில்
தான் சூடிய  மாலையை  பிய்த்து எறியும்
உறுதியான மன நிலையோடும்....

Wednesday, May 14, 2014

விட்டில் பூச்சிகள்

இம்முறை நான் சென்னை மற்றும் பெங்களூர் சென்று
திரும்புகையில் எனது சீட்டை அடுத்து
நடுத்தர வயதுடைய மனிதர் ஒருவரும்
அவருடைய மகனும் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர்.

வழக்கம்போல பெயர் மற்றும் ஊர் விசாரிப்புக்குப் பின்
அவருடைய பையன் குறித்த பேச்சு வந்தது

அவருடைய மகன் தற்போதுதான்
பிளஸ் 2 முடித்துள்ளதாகவும் இந்த முறை
பொறியியல் கல்லூரியில் சேர்க்க விண்ணப்பம்
வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்

அது குறித்து எனது மகிழ்ச்சியைப் பகிர்வு
செய்து கொண்டபின் அந்தப் பையன் எடுத்த
மதிப்பெண்  குறித்துக் கேட்க அவன் தன்னுடைய
கட்-ஆஃப் மதிப்பெண் 150 எனச் சொல்ல
எனது மகிழ்ச்சி கொஞ்சம் ஆட்டம் காணத் துவங்கியது

அடுத்து அவன் எந்தப் பிரிவை எடுத்துப் படிக்க
விரும்புகிறான் எனக் கேட்ட போது
மெரைன்,அல்லதுஏரோ நாட்டிகல் எனச் சொன்னான்

இந்த பிரிவுகளின் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது
எனக் கேட்க தனது நண்பர்கள் சொன்னார்கள்
எனச் சொன்னான்

சென்றமுறை இந்தப் பாடப் பிரிவுகள்
 உள்ள கல்லூரிகள் அதற்கான கட் ஆஃப்
எல்லாவற்றையும் அவனுக்கு எடுத்துக் கூறி
கலந்தாய்வு மூலம் அது கிடைப்பதற்கான வாய்ப்பு
எவ்வளவுகுறைவு என எடுத்துக் கூற அந்தப் பையன்
 சிறிதும்சங்கடப்படாமல்
 "அதற்காகத்தான் நாங்கள் நிர்வாகக்
கோட்டாவில் கேட்டிருக்கிறோம்.
தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் "என்றான்

"அதற்கு அதிகம் செலவாகுமே  " என்றேன்

"ஆம் விசாரித்து விட்டோம்.நான்கு ஆண்டுகளுக்கு
மொத்தம்பன்னிரண்டு லட்சங்கள்தான் ஆகும் "
என்றான்

அந்தப் பையனின் அப்பாவும் "நீங்கள் பூனே
போயிருக்கிறீர்களா ?அங்கு தான் துலானி என்கிற
கல்லூரியில் சேர்க்க இருக்கிறோம்.பூனே ஊர் எப்படி ?
என விசாரிக்கத் துவங்கினார்

நான் அங்கு என் தங்கை இருப்பதால் அங்கு போய்
வந்து இருப்பதால் அந்த ஊர் விவரம் எல்லாம் சொல்லி
"பிலானி கல்லூரி கேள்விபட்டிருக்கிறேன்.
அது என்ன துலானி "என்றேன்

"அதுவும் பிலானி கல்லூரியைச் சேர்ந்த கல்லூரிதான்
விசாரித்துவிட்டோம்,"என்றான் அந்தப் பையன் தெளிவாக

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அவர்கள்
இருவரையும்பார்க்கும்போதே நிச்சயம் அவர்கள்
சராசரி வருமானப் பிரிவைச்சேர்ந்தவர்கள் என்பது
தெளிவாகத் தெரிந்ததுஅவர்கள் எப்படி இப்படி
 அகலக்கால் வைக்கிறார்கள் எனவும்
ஆச்சரியமாக இருந்தது

சரி இதற்கு மேல் இது குறித்து இவர்களிடம்
பேசுவதில்பயனில்லை.என நான் அடுத்து
தேர்தல் முடிவுகள் குறித்து
பேசத் துவங்கினேன்.அவர்களும் சந்தோசமாக
அவர்கள் தொகுதி குறித்த விவரங்களை
விளக்கத் துவங்கினர்

அது சமயம் அந்தப் பையனின் அப்பாவுக்கு ஒரு
போன் கால் வந்தது.அவர் பேசிய விவரம்
....................................................

"ஆம் சார் நாங்கள்தான் ஆன் லைனில் லோனுக்கு
அப்ளை செய்திருந்தோம்

-------------------------------------------\

"நான் பிரைவேட் கம்பெனியில் வேலைபார்க்கிறேன் சார்
மாதச் சம்பளம் பதிமூன்றாயிரம் சார்
ஒயிப்பும் பிரைவேட்டில்தான் ஆறாயிரம் வாங்குகிறார் சார்

-------------------------------------------------

"வீடு வாடகை வீடுதான் சார்.ஆனா திருச்சியில
இரண்டு இடம் இருக்கு சார்.ஐந்து லட்சம் போகும் சார்


------------------------------------------------------------

'சரி சார் அந்த டாக்குமெண்ட்டோட வேற எது எது சார்
கொண்டு வரணும்..


---------------------------------------------------

"அவசியம் அடுத்த வாரம் நேரடியா பேங்குக்கு வாறோம்
சார்.ரொம்ப தாங்க்ஸ் சார்."

அவர் பேசிமுடித்ததும் "லோனுக்கு ஆன் லைனிலேயே
விண்ணப்பிக்க முடிகிறதா ? எந்த பேங்க் "என்றேன்

ஒரு பிரவேட் பேங்கின் பெயரைச் சொன்னார்

அதீத வெளிச்சத்தால் கவரப்பட்டு ஆசைப்பட்டு
தன் சக்தியறியாது மோதிச் சாக ஒரு விட்டில்பூச்சி
என்னைக் கடந்து விளக்கு நோக்கி  பறந்து கொண்டிருந்தது

Thursday, May 8, 2014

கவிதைப் பெண்ணும் காதல் நண்பியும்

காக்க வைத்து தவிக்க விட்டுப்
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து  நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்

தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்

கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித்  திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்

ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்

பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது  மட்டும்  தன்னை
மறைக்க முயல்வதில்
 
கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த    நண்பி(மனைவி ) தன்னை
நினைவில்   நிறுத்துமே

Wednesday, May 7, 2014

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

Tuesday, May 6, 2014

கவிமூலம்

சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா ?

இனிய நினைவு உன்னில் பெருக 
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா ?

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா ?

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-நீயும்  
அந்த  ராமா னுஜனைப் போல
உரத்துக்  கதற மாட்டியா ?

விதையாய் கவிதை அனவரி டத்தும்
நிறைந்து தானே  கிடக்கு
விரைந்து வெளியே  விளைந்து வரவே
தவித்துத் தானே  கிடக்கு
முறையாய் இதனைப்  புரிந்து  கொண்டால்
மட்டும்  போதும் போதுமே--உன்னுள்  
நிறைவாய்க்  கவிதை நூறு  கோடி
தானாய்ப்  பெருகிக் கொட்டுமே  ! 

Sunday, May 4, 2014

பிணம் கொண்ட மாலை

நாசிக்கு மணமும்
நாவுக்குச் சுவையும்
ஊசிமனைக் குறையும் இன்றி-உணவு
முழுமையாத் தந்த போதும்

உடலுக்கு ஊறு
விளைவிக்கு மாயின்
விஷம்போலத் தானே உணவு-அதை
விலக்குதல் தானே அறிவு

மயங்கிடும் வண்ணமும்
மதித்திடும் வண்ணமும்
உயர்தர உடையே ஆயினும்-அதனால்
மதிப்பது கூடும் போதினும்

சூழலுக்கு மாறாய்
இருந்திடு மாயின்
தீயது தானே உடையே-அதைத்
தவிர்த்திடல் தானே முறையே

அரண்மணை அளவும்
மயக்கிடும் அழகும்
நிறைந்தே இருந்த போதும்-வீடு
வியத்திட வைத்த போதும்

நிம்மதிக்கு ஊறாய்
இருந்திடு மாயின்
நிச்சயம் வீடும் காடே-அதில்
வசிப்பதும் துயரம் தானே

பாகுபோல் எதுகையும்
பால்போல் மோனையும்
ஏதுவாய் கலந்த போதும்-கவிக்கு
சுவையாக அமைந்த போதும்

பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை   தானே

Saturday, May 3, 2014

முரண்

இன்றைய நிலையில்-----
அமைதியான சூழலுக்கு
அன்றாடம் போராடும்படியானதும்
எளிமையாக இருப்பதற்கு
அதிக செல்வச் செழிப்பு வேண்டும்படியானதும்
சும்மா இருப்பதற்கு
அதிகப் பிரயத்தனப்படும்படியானதும்
வாழ்வாங்கு வாழ அன்றாடம்
செத்துச் செத்துப் பிழைக்கும்படியானதும்

முரணெனப்பட்டாலும்
துயரெனப்பட்டாலும்
வாழ்வினை
அர்த்தப்படுத்துவதும்
அழகுப்படுத்துவதும்
அதுவாகத்தானே இருக்கிறது ?

சாரமற்ற வாழ்வில் ருசிகூட்டவும்
சோம்பலை ஒழித்து வேகம் கூட்டவும்
வெறுமையான வாழ்வினைச் சுவாரஸ்யப்படுத்தவும்
ஒருவகையில் முரண் என்பதுவும்
தேவையாகத்தானே இருக்கிறது ?