Monday, May 19, 2014

மிக எளிமையாய் ஒரு புதிய பிரணவம்

இதற்கு முன்பு
எத்தனைமுறைத் தொடர்புகொண்டிருந்தபோதும்
பிறரைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
முன் அபிப்பிராயங்கள் ஏதுமின்றி
முதல் தொடர்பு  இது எனும்
எண்ணத்துடனேயே தொடர்பு கொள்கிறேன்
தொடர்பு இயல்பானதாகத் தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனைமுறை சந்தித்திக்க இருக்கிறபோதும்
பிறரைச் சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
பின் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி
இறுதி சந்திப்பு இது எனும்
எண்ணத்துடனேயே சந்தித்து மகிழ்கிறேன்
சந்திப்பு உணர்வுபூர்வமானதாகத் தொடர்கிறது

இதற்கு முன்பு
எத்தனைப் படைப்புகளைத் தந்திருந்தபோதும்
ஒவ்வொரு புதுப்படைப்பின் போதும்
அது குறித்த அகந்தை ஏதுமின்றி
முதல் படைப்பு இது எனும்
எச்சரிக்கையுடனேயே படைக்கத் துவங்குகிறேன்
படைப்பு சுகமான அனுபவமாய்த் தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனைப் படைப்புகளைத் தர இருக்கிறபோதும்
ஒவ்வொரு படைப்பின் போதும்
அது குறித்த கற்பனைகள் ஏதுமின்றி
இது இறுதிப்படைப்பு எனும்
அதீத அக்கறையுடனேயே படைக்கத் துவங்குகிறேன்
படைப்பு கனமான ஒன்றாகவே அமைகிறது

இதற்குப் முன்பு
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருந்தபோதும்
காலை கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும்
கடந்தகாலச் சுமைகள் ஏதுமின்றி
புதிதாகப் பிறந்திருக்கிறேன் எனும்
புத்துணர்ச்சியுடனேயே நாளைத் துவங்குகிறேன்
இந்த நாள் சிறந்த நாளாகவே தொடர்கிறது

இதற்குப் பின்பு
எத்தனை ஆண்டுகள் வாழ இருக்கிறபோதும்
கடமையைத் துவங்கும் ஒவ்வொரு நாளும்
எதிர்காலக் கவலைகள் ஏதுமின்றி
இதுவே எனக்கான கடைசி நாளெனும்
எச்சரிக்கையுடனேயே நாளைத் தொடர்கிறேன்
இந்த நாளும் பயனுள்ள நாளாகவே முடிகிறது

24 comments:

Bagawanjee KA said...

வாழும் கலையை உங்களிடம் பயின்றேன் !
த ம 2

Anonymous said...

To me...''..ஒவ்வொரு புதுப்படைப்பின் போதும்
அது குறித்த அகந்தை ஏதுமின்றி
முதல் படைப்பு இது எனும்
எச்சரிக்கையுடனேயே படைக்கத் துவங்குகிறேன்
படைப்பு சுகமான அனுபவமாய்த் தொடர்கிறது...''
Thank you.
Vetha.Elangathilakam.

ரூபன் said...

வணக்கம்
ஐயா.

வாழும்நாட்களை எப்படி அனுபவிக்கவேண்டும் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் .. இறுதில் முடித்த விதம்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் said...

வணக்கம்
த.ம3வதுவாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞா் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

வாழ்வின் நடையை நடக்கும் வாிகண்டே
ஆழ்ந்தேன் அழகை அனைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

விமலன் said...

வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயன் சுமந்து/

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சிந்தனை.

Chandragowry Sivapalan said...

வாழ்க்கையைப் புரிந்து கொண்டு வாழப்பழகிவிட்டால் வாழ்வு சுகமே . இல்லையென்றால் நரகமே

ஸ்ரீராம். said...

எல்லாநாளும் புதிதாய்ப் பிறப்போம். அருமையான மன உணர்வைக் காட்டியுள்ளீர்கள்.

Jeevalingam Kasirajalingam said...

சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வு.

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுமே நமக்கு ஒவ்வொரு அனுபவப் பாடத்தைக் கற்பிக்கின்றன.

அருணா செல்வம் said...

Arumai

அம்பாளடியாள் வலைத்தளம் said...

தங்களின் சிந்தனையைக் கண்டு போற்றுகின்றேன் ரமணி ஐயா !வாழ்த்துக்கள் அருமையான சிந்தனைகள் இவை போன்று மேலும் தொடரட்டும் .

Manjubashini Sampathkumar said...

நட்பிலும் அன்பிலும் எதிர்ப்பார்ப்பின்றி பகிரும் அன்பு நிலைத்து நிற்பது போல....

படைக்கும் ஒவ்வொரு படைப்பிலும் கூட இது தான் நான் முதன் முதல் படைக்கும் படைப்பு என்ற பண்பட்ட மனதோடு...

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை வரிகளும் சத்தியம் மட்டுமே உரைக்கிறது ரமணி சார்...

உங்க அமைதியும், அன்பும், அற்புதமான ஒவ்வொரு பதிவுகளும் வாசிப்போருக்கு நல்ல அறிவுரையாகவும் பாடங்களாகவும் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத சத்தியம்....

எத்தனை அழகாக யோசித்து அமைத்திருந்தால் இத்தனை அழகான வரிகளை படைத்திருப்பீர்கள்..

தலைப்பே ஈர்க்கிறது.. புதிய பிரணவம்...

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது முந்தைய கசப்புகளை ஒதுக்கிவிட்டு புதிதாய் பிறக்கும் குழந்தையைப்போல் மனதை புத்துணர்வாக்கிக்கொள்ளும் ஆச்சர்ய பூங்கொத்து சார் நீங்க...

ஒவ்வொரு நாளின் முடிவிலும் எனக்கான கடமை முடிந்தது இனி நாளையப்பொழுதும் நலமுடன் விடியட்டும் என்ற நம்பிக்கைப்போர்வையை போர்த்திக்கொண்டு கண்ணுறங்கும் ஒரு அதிசய உற்சாக ஊற்று உங்கள் வரிகள் அத்தனையும்...


ரொம்ப நாள் கழிச்சு வந்து கமெண்ட் போடுறேன்னு என் மேல் கோபம் இருக்காது கண்டிப்பாக உங்களுக்கு. அன்பை தவிர வேறெதுவும் நான் கண்டதில்லை உங்களிடம்...

எதிர்ப்பார்ப்பற்ற அன்பு நட்பு நிலைத்திருக்கும் சரித்திரம் சொல்லும் சாட்சியாய்....

அற்புத வரிகளுக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் சார்...

த.ம.9

கே. பி. ஜனா... said...

னீங்கள் சொல்கிறமாதிரி கனமாகவே அமைந்து விட்டது இந்த கருத்துள்ள பதிவு!

‘தளிர்’ சுரேஷ் said...

மிக அருமையான பதிவு! ஒவ்வொன்றையும் புதியதாக உணரும் போது புத்துணர்வு பெருக்கெடுக்கிறது! அருமை! நன்றி!

G.M Balasubramaniam said...

கடைசி இரு பத்திகளின் தாக்கமே முதல் பத்திகள். சரிதானே.

King Raj said...

ஜப்பானிய ஜென் துறவிகள் இப்படித்தான் சொல்வார்கள் 'இந்த கனத்தில் வாழ்தல்'..... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்துமுடித்துவிடு. ஏன் ஒவ்வொரு நொடியும் கூட. அதனை உணர்த்தும் அருமையான ஆக்கம் ஐயா.

Ramani S said...

G.M Balasubramaniam said...//
கடைசி இரு பத்திகளின் தாக்கமே முதல் பத்திகள். சரிதானே.//

உங்கள் கருத்து மிகச் சரி
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Ramani S said...

Anonymous //

முகம் காட்ட மறுத்துக் கருத்துச் சொல்ல
முயல்பவர்களின் கருத்தை நான்
எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை
அது பாராட்டாயினும் தாக்குதலாயினும்...

துளசி கோபால் said...

இன்று புதிதாய்ப் பிறந்தோம் !

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல ஒரு சிந்தனைக் கருத்து! இன்றே வாழ், இன்றைய நொடிப்பொழுதே வாழ் ....ஆனால் எல்லோருமே நேற்றைய /நாளைய உலகில்தானே வாழ்ந்து தன்னையும் வருத்திக் கொண்டு, தனருகில் இருப்பவரையும் வருத்துகின்றார்கள்!

Post a Comment