Thursday, February 26, 2015

வாழ்வை ரசிப்போம்

நிழலைத் தொடர்பவனோ
அது குறித்த நினைவிலேயோ
பயணத்தைத் தொடர்பவனோ
நிச்சயம் இலக்கினை அடைவதில்லை

நிழல் தொடரத்தான் வேண்டும்
அது விதி என்றுணர்ந்தவனே
எல்லையினைக் கடக்கிறான்

கூலி குறித்தோ
பயன் குறித்த கற்பனையிலோ
கடமையினைச் செய்கின்றவன்
நிச்சயம் உயர்வடையச் சாத்தியமில்லை

உழைப்பின் மதிப்பின் கீழ்
கூலியிருக்க விரும்புபவனே
அடையாததையெல்லாம்  அடைகிறான்

நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை

நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்

அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்

Wednesday, February 18, 2015

உறவுகள்

எண்பதின் துவக்கம் அப்போது நான்
உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கும் அனறைக்கும் காலக்கணக்கில்
முப்பது ஆண்டுகள்தான் இடைவெளி என்றாலும் கூட
உண்மையில் இன்றைய உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்தி
இருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கி
வேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.வீடுகள் வாடகைக்கு இருக்காது
இருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காது
நல்ல ஹோட்டலகள் இருக்காது.உயர் அதிகாரிகள்
யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோ அல்லது தேனிக்கோ சாப்பாட்டுக்கு
சென்று விடுவார்கள்,

மொத்தத்தில் அரசு பணியாளகளைப்
பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதை
ஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்
எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும்
பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காது
என்பதாலும் மாறுதல் என்பது முயன்று
பெற்றால்தானே ஒழிய அவர்களாக மாற்றமாட்டார்கள்
என்பதாலும் கொஞ்சம் தெனாவெட்டாகத்தான்
வேலை பார்ப்பார்கள்அலுவகப் பணி நேரம்
குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாக
மதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்கு
ஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.
அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காக
அவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்
அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு
செல்பவர்களுக்குகொஞ்சம் தாமதமாகத்தான் போகும்

ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம்
வயல்வெளியில்நடந்துபோய்ச் சேர எப்படியும்
 தினமும் ஒருமணி நேரம்தாமதமாகத்தான் ஆகும்
 என்றாலும் அந்த ஊர் மக்களும்
அதிகாரிகளும் அதற்கு அனுசரித்து இருக்க
பழகிக் கொண்டார்கள்.அதைப் போல மாலையிலும்
ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும்
என்பதாலும்எல்லோரும் மூன்று நாற்பதிற்கே
அலுவலக்ம் விட்டுபுறப்பட்டுவிடுவார்கள்.
இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்
தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரி
 அலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்
ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்

கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்
தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்
செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்
உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படி ஒரு நாள் புகைவண்டி கிளம்பிக்
கொண்டிருக்கையில்எதிர்பாராதவிதமாக
 எங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம் வரும் வரையில் நாங்களும்
கண்டு கொள்ளவில்லைபல்கலைக் கழகத்தில்
கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்
கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்
பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்
அப்படி என்னதான் இருக்கிறது என நான
முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்டப்
பெண்தானஎனத் தெரிந்த போதும்
வயதும் முக  லட்சணமும்
எதோ ஒரு தவிர்க்க முடியாத சூழலில்
அப்படி ஆகி இருக்கக் கூடும் என்கிற எண்ணத்தை
பார்ப்பவர்களுக்குதோன்றும்படியாகத்தான்
அவள்  இருந்தாள்
எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்தது
ஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடி
அந்தப் பார்வை பார்த்தார் என்பதும் எனக்கு
 இப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்து
ஆடத்துவங்க எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்
அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாக
அமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிசம்
செய்யத் துவங்கிவிட்டார்.
எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோக
அனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றி
காரசாரமாக விவாதித்து வருவோம்
சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்
அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம
மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்
இவையெல்லாம் குறித்து அந்த எதிர் சீட் நண்பர்
எல்லோரையும் விட மிக தெளிவாகவும்
ஆணித்தரமாகவும்உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்க்கள் எல்லாம் அவர்பேச்சில் உள்ள
தார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது
பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கை
என்னுள் என்னவோ செய்தது. சந்தர்ப்பம்
கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

நான்சடாரென எழுந்து அந்தப் பெண்
அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்ச்யம் சாப்பிட்டு
இருக்கமாட்டாள்எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா "
 என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது "
என்றாள்

"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து என்
பையில் இருந்தமூன்று அடுக்கு டிபன் பாக்ஸ்
மற்றும் தண்ணீர் பாட்டிலைஅவளிடம் கொடுத்து
இன்னும்  "இன்னும் இருபது நிமிடத்தில்
உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள் இறங்கிவிடுவோம்
அதற்குள் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை
கழுவிக் கொடுத்துவிடு"எனச் சொல்லிக் கொடுத்தேன்.

அவள் பசியின் காரணமோ என்னவோ
சம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.
எனக்கும்  சாப்பிடக்கொடுத்ததின் மூலம் நண்பனின்
சில்மிஷ சேஷ்டைகளைசெயய முடியாமல்
 போகச் செய்யவும் பசியில் இருந்த ஒரு
பெண்ணுக்கு உதவிய திருப்தியும் கிடைக்க
இருக்கையில்வந்து அமர்ந்து விட்டேன்.

நண்பனும் எரிச்சலுடன் என்
எதிரிலேயே வந்து விட்டான் .அந்தப் பெண்ணும்
அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு  நாங்கள்
இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸை
மிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டு
எங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்
நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
 செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.
நாங்கள் இறங்கி நடக்கத் துவஙக
எல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்
மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும்
நினைத்ததும் இல்லைஎங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்
அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்
உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காக
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்
ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து
 "என்னைத் தெரிகிறதா " என்றாள்

உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா அண்ணே "
என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  ந்டுத்தரகுடும்பத்தைச் சேர்ந்த
பெண் போலவேமுற்றாக  மாறி இருந்தாள்
.குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலே
கேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்
அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலே
பிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டு
பேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து இருப்போமான்னு கேட்டாங்க
எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்தது
நானு சரின்னு சொன்னேன்.வீரபாண்டி கோவிலிலே
இந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள் சொல்வதைகேட்கக் கேட்க எனக்கு மிகுந்த
சந்தோஷமாக இருந்தது.ஆனாலும் நம்மிடம் ஏன்
இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாகக் கசிய்த் துவங்கிய
நீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவது
உங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு
தோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு
இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது
ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிர
நானேதும் அவளுக்கு செய்தததில்லை.

அது அவளுள்இத்தனை பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி
இருக்கிறதென்றால்அவள் அரவனைப்பு இன்றி
அது நாள்வரைஎப்படி அவதிப்படிருப்பாள் என
எண்ண எண்ணஎன் கண்களும் லேசாக க்
கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில்
"பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.
விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும்
வாங்கிக் கொடு "என
கையில் கிடைத்த ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும் சேர்த்துப்
பிடித்து"சாருக்கு வணக்கம் சொல்லு " என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை
என் காலடியில் போட்டுஅவளும் தரையில் வீழ்ந்துக்
கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது
அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது

Tuesday, February 17, 2015

வெறுங்கை முழம்

வித்தியாசமாக
சுவாரஸ்யமாக
பயனுள்ளதாக
எதைச் சொல்லலாமென
எப்படித்தான்  முயன்றபோதும்
எத்தனை நாள்  முயன்றபோதும்
ஏதும் பிடிபடாதே போகிறது

ஆயினும்
கவர்ந்ததை
ரசித்ததை
உணர்ந்ததை
சொல்லத் துவங்குகையிலேயே
வித்தியாசமும்
சுவாரஸ்யமும்
பயனும்
இயல்பாகவே
தன்னை இணைத்துக் கொண்டு
படைப்புக்குப்
பெருமை சேர்த்துப் போகின்றன

எத்தகைய
ஜாம்பவனாகினும்
வில்லாதி வில்லனாகினும்
இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க   இயலாதென்பதும்   ...

விஞ்ஞானத்திற்கான
அடிப்படை இலக்கணம் மட்டும் அல்ல அது
படைப்பிலக்கியத்தற்கான
அடிப்படை விஞ்ஞானம் என்பதும்
மறுக்க இயலாதுதானே  ?

விபச்சாரர்

அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெளகீக விஷயங்கள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில் பூரித்துப்போனாள்

"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச் சொன்னதுகூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு எ ப்படி யிருந்தாலும் சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்

"திருமணத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பதுகூட தாத்தா பாட்டிக்காதத்தான்
எனக்கு துளிகூட 

இதிலெல்லாம் நம்பிக்கையில்லை" என்றார்
அவளுக்கும் இது சரியெனததான்பட்டது

"திருமணமண்டபம் நல்லதாய் இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்" என்றார்
அதுகூட அவளுக்கு ஏற்கும்படியாகத்தானிருந்தது

சீர்வரிசையில் ஒரு சிறுகுறையென்று
அவரது ஒன்று விட்ட மாமன்
மண்டபத்தையே உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும் இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல்
எனக்காகவேனும் 

இதைமட்டும் செய்துகொடுங்கள்"என்றார்
அவளுக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை

கல்யாண அமர்க்களங்களெ ல்லாம் முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைறயினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்" 

எனச் சொல்லக்கூடுமோ எனப் பயந்தாள்

அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச் சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில்

 நியூட்டனால் கண்டுபிடிக்க முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்

"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன் வந்து போனது

அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ? 

தவறல்லவா"என்றாள்

தமிழச்சியின் கூற்றும்  

சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி சேர்த்து
விபச்சாரர் எனச் சொல்லலாமா"என்றாள் இவள்


உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய் சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்

வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள் புரியாது
தனது முதல் முத்தத்தில்
அவள் நிலைகுலைந்து போனாள் என
ஆண்மைக் குரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான்

அந்த  "விபச்சாரர்"

Sunday, February 15, 2015

லெட்சுமணக் கோடு

பொறுமை கொஞ்சம்
அளவை மீறினால்
அது எருமை மாட்டுத்தனமே

சிக்கனம் கொஞ்சம்
கூடுதலாகிப் போனால்
அது கஞ்சத்தனமே

உரிமையும் கொஞ்சம்
எல்லை மீறினால்
அது அடாவடித் தனமே

அறவுரையும் கொஞ்சம்
அளவைத் தாண்டினால்
அது எல்லை மீறலே

பாண்டித்தியமும் கொஞ்சம்
அளவு தாண்டினால்
அதுவும் பாமரத்தனமே

அமிர்தமும் கொஞ்சம்
அளவு கூடினால்
நிச்சயம் அது விஷமே

சாலை விதிகளில்
கடக்கக் கூடாத
மஞ்சள் கோட்டைப் போன்றே

வாழ்க்கைப் பாதையிலும்
கடக்கக் கூடாத
லெட்சுமணக் கோடுண்டு

அறிந்து தெளிவு பெறுவோம்
தொடர்ந்து சிகரம் தொடுகின்ற
சூட்சுமம் அறிந்து உயர்வோம்

Friday, February 13, 2015

கவியாகும் காதலன்

நிச்சயமாகச் சொல்கிறேன்
நான் கவிஞனில்லை
கற்பனைக்கும் எனக்குமான
தூரம் எப்போதும் மிக மிக அதிகமே
தொடர் சிந்தனைக்கும் எனக்கும் என்றும்
தொடர்பு இருந்ததே இல்லை

ஆயினும்
என்னுடன் இருந்து நீ பிரிந்த
சில நிமிடங்களில்...

திரு விழா முடிந்த மறு நாளில்
அனைத்து அலங்காரங்ளையும் இழந்து
அலங்கோலமாய்க் கிடக்கும்
வெட்டவெளி மைதானமும்

அறுவடை முடிந்து அம்மணமாகி
வானம் பார்த்து வெறித்துக் கிடக்கும்
அடுத்த விதைப்புக்கு ஏங்கிக் கிடக்கும்
பொட்டலான வயல்வெளியும்

கடைசிப் பேருந்தும் போய்விட
அழுது வடியும் தெரு விளக்கு வெளிச்சத்தில்
விடியலுக்கு ஏங்கிக் கிடக்கும்
கிராமத்துப் பேருந்து நிலையமும்

கோடை விடுமுறைப் பள்ளியும்
நீர் நின்று போன தெருவோரக் குழாயடியும்....

இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய் என்னுள் நிறைய
எனக்கு கவிஞனாகி விடுவேனோ என பயமாயிருக்கிறது

எனக்காக இல்லையெனினும்
கவிதையைக் காப்பாற்றவாவது
என்னை விட்டுப் பிரியாதிருக்க முயற்சி செய்

Thursday, February 12, 2015

விட்டு விலகி...

மௌனித்து இருப்பவனுக்கே
அதிகம் பேசுபவனை விட
வார்த்தைகளின் பலம் தெரியும்

பசித்து இருப்பவனுக்கே
தொடர்ந்து உண்பவனை விட
உணவின் ருசி தெரியும்

விலகி இருப்பவனுக்கே
ஒட்டித் திரிபவனை விட
உறவின் அருமை தெரியும்

முற்றாக இழந்தவனுக்கே
அணைத்து வைத்திருப்பவனை விட
பொருளின் மதிப்புத் தெரியும்

ஆம்
அதிக தூரம் முன்தாண்ட முயல்பவன்
கொஞ்சம் பின் செல்வதைப் போல

என்றும்
எதிலும்
நாமாகவே

கொஞ்சம்விட்டு  விலகி
எதிர் நிலை நின்று
நிகழ்வுகளை இரசிக்கப் பழகுவோம்

என்றும்
எங்கும்
எப்போதும்

கிடைத்த வாழ்வினை
இரசித்தபடி
தொடர்ந்து பயணிக்க முயலுவோம்

Monday, February 9, 2015

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..

அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிக நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்

எனவே....

Saturday, February 7, 2015

பயனுள்ள பகிர்வு ( 2 )

Friday, February 6, 2015

தொலைக்காட்சிக் கனவான்களே ...

குடிக்கிற காட்சி வருகையில்
குடி குடி கெடுக்கும் என
கீழே எழுத்துப் போடுவது மாதிரி

சிகரெட் குடிக்கையில்
புகைப் பிடிக்கும் பழக்கம்
புற்று நோயை உண்டாக்கும் என
எழுத்துப் போடுவது மாதிரி

நமது தொலைக்காட்சிச் தொடர்களில்

வில்லிகள் அடுத்த குடும்பத்தைக் கெடுக்க
சதி செய்கிற போது
இது குணக்கேடு தீங்கானது என்றோ

வில்லன்கள்அடுத்தவன் மனைவியை
அடைய முயற்சிக்கையில்
இது மகாப் பாவம் என்றோ

போட்டுத் தொலைத்தால் என்ன ?

வில்லன்களைகதா நாயகனை விட
புத்திசாலிகளாகச் காட்டுவதும்

வில்லிகளைகதா நாயகியை விட
அழகாய் காட்டுவதும்

தொடர் முடிகிற கடைசி நாளில் மட்டும்
நல்லவன் சுகப்படுவதும்

கடைசி காட்சிவரை
தீயவர்கள் சுகமாகத் திரிவதும்

கொஞ்சம் சமநிலை
மனதுடையோரை
குழப்பிவிட்டுத்தான் போகிறது

எனவே

அய்யா
தொலைக்காட்சிக் கனவான்களே
ரேட்டிங் பார்ப்பதிலேயே
முழுக் கவனமாய் இல்லாமல் கொஞ்சம்
நாடு குறித்தும் கவனம் கொள்ளுங்களேன்
பிளீஸ்..................

பயனுள்ள தகவல்


இன்றைய இந்து நாளிதழில் வந்த அனைவருக்கும் பயன்படும் அருமையான தகவல்முடிந்தவரை பகிருங்களேன்

Thursday, February 5, 2015

வாளினும்.....

ஐநூறு கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
ஐந்து கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்

ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
ஐயாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்

கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஐம்பதாயிரம் பேரே
படித்திருக்கச் சாத்தியம்

வலைத்தளம் போல்
மூன்று இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை

புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
ஐயாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்

வலைத்தள பின்னூட்டம் போல்
முப்பதாயிரம் தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை

எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்

நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்

அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்

காதல் என்றால் இதுதானா ?

அவர்கள் காதலிக்கத் துவங்கியதிலிருந்து

அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மறந்துத்  தொலைந்தான்
எப்போதும் அவள்  குறித்த
 நினைவிலேயே  அலைந்து திரிந்தான்

அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை  அடியோடு விடுத்து
அவனைக் குறித்த சிந்தனையிலேயே
 நாளையும் பொழுதையும்  கழித்தாள்


அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவனம் கொண்டான்
அவனது  தேவைகளை மறந்தே போனான்

அவளும் அதுபோன்றே
அவனது தேவைகளையே
 நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்

அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து

அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்

அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்

அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து

அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்

அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்

இந்த அதிசய மாறுதலுக்கு காரணம் புரியாது
நான் குழம்பிக்கிடந்த  வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
 இப்படிச் சொன்னான்

"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது

 தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
 அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்

அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சயம  இது புரியச சாத்தியமில்லை "என்றான்

நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்

Monday, February 2, 2015

எங்கோ இருந்து என்னை இயக்கும் அழகுப் பெண்ணே ரதியே

ஆத்து நீரு போகும் போக்கில்
போகும் மீனைப் போல-வீசும்
காத்தின் போக்கில் நித்தம் ஓடும்
கருத்த மேகம் போல-உன்

நினைப்பு போகும் போக்கில் தானே
நாளும் நானும் போறேன்-அந்த
நினைப்பில் பிறக்கும் சுகத்தைத் தானே
பாட்டாத் தந்துப் போறேன்

வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும்
அழகு மலரைப் போல-இரும்புத்
துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும்
விந்தைக் காந்தம் போல-உன்

அழகு போகும் போக்கில் தானே
மயங்கி நானும் போறேன்-அந்த
சுகத்தில் விளையும் உணர்வைத் தானே
கவிதை யென்றுத் தாரேன்

மறைந்து கிடந்து வீட்டைத் தாங்கும்
அஸ்தி வாரம் போல-மண்ணில்
மறைந்து இருந்து மரத்தைக் காக்கும்
ஆணி வேரைப் போல-மறைந்து

எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே-சகியே
உந்தன் தயவில் நானும் கவியாய்
மாறிப் போறேன் தினமே

கொடிகளும் நிறங்களும்...

ஏழ்மையை
இருவகையில் அழிக்கலாம்

ஏழைகளை அழித்தாலும்
ஏழ்மை அழிந்துவிடும்

ஏழ்மையை அழித்தாலும்
ஏழைகள் அழிந்திடுவர்

நம் அரசியல்வாதிகளுக்கெல்லாம்
ஏனோ முதலில் சொல்லியதே
சுலபமானதாகப் படுகிறது

செல்வத்தை
இருவகையில் பெருக்கலாம்

செல்வர்களை வளர்த்து
செல்வத்தைப் பெருக்கலாம்

செல்வத்தைப் பெருக்கியும்
செல்வர்களைப் பெருக்கலாம்

நம் அரசியல் தலைவர்களுக்கெல்லாம்
நம் தலையெழுத்தோ என்னவோ
முன்னதே சுலபமானதாய்த் தெரிகிறது

என்ன செய்வது
கொடிக்கம்பத்தில்
வேறு வேறு வண்ணத்தில்
தெரிகிற கொடிகளெல்லாம்
வேறு வேறு கொள்கையைச் சொல்வதாய் எண்ணி
நாமும் மாறி மாறி ஓட்டளித்து
ஓட்டாண்டி ஆகிக் கொண்டிருந்தும்..

அனைத்து கொடிகளும்
ஒரே ஆலையில் நெய்யப்பட்டு
வித்தியாசமாகத் தெரியவேண்டும்
என்பதற்காக மட்டுமே
பல்வேறு நிறமேற்றப்பட்டவை என்பது மட்டும்
எத்தனை அடிவாங்கியும்
நம் புத்திக்கு  மட்டும்
இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை