Thursday, February 5, 2015

வாளினும்.....

ஐநூறு கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
ஐந்து கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்

ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
ஐயாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்

கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஐம்பதாயிரம் பேரே
படித்திருக்கச் சாத்தியம்

வலைத்தளம் போல்
மூன்று இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை

புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
ஐயாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்

வலைத்தள பின்னூட்டம் போல்
முப்பதாயிரம் தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை

எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்

நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்

அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்

14 comments:

துளசி கோபால் said...

பாய்ண்ட்டை 'டக்'ன்னு தொட்டுட்டீங்க!!!!

வலையில் இருக்கு உலகமுன்னா, அதே வலையில் இருக்கு வாழ்வு!

ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மைதான் ஐயா. கவிதை வடிவில் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

வலையுலக கவிஞர்களுக்கு சற்றே வருடலாய் உமது கவிதை.
த.ம.3

திண்டுக்கல் தனபாலன் said...

வருங்காலத்தில் மின்னூலே புது மொழி...

ஸ்ரீராம். said...

அது என்னவோ உண்மைதான்.

வாரப்பத்திரிகைகளும் வலைப்பக்கங்களைப் படிக்கின்றனர், பகிர்கின்றனர்.

கவியாழி கண்ணதாசன் said...

நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்

நீங்கச் சொன்னா சரியாத்தானே இருக்கும்

Avargal Unmaigal said...

ப்ரிண்ட் நாளிதழ் மற்றும் வார இதழ்களில் வந்தால் கூட நம்ம எழுத்துக்கள் இத்தனை பேரால் பார்த்து படித்து ரசிதுது இருக்க முடியுமா என்பது சந்தேகமே


புது பதிவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி சென்ற உங்கள் பயிர்வுக்கு நன்றிகள்

RAMVI said...

//நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்//

அருமையான புது மொழி.

G.M Balasubramaniam said...

கணக்குகள் வலைப் பதிவினருக்கு ஆறுதல் கொடுக்கலாம் ஆனால் தான் எழுதியதை அச்சில் காண்பதில் காணும் இன்பம் வலைப் பதிவில் உண்டா.வலையில் எழுதியது நூல் ஆகத் தேவை இல்லை என்கிறீர்களா? இந்தஎண்ணிக்கைகளை எல்லா பதிவினரும் அடைவதில்லையே.

Ramani S said...

G.M Balasubramaniam //

தாங்கள் பதிப்பித்துப் பார்த்தால்
உண்டாகும் மன நிறைவு எனச் சொல்வதை
மறுப்பதற்கில்லை

ஆயினும் அதிகம் பேரை நம்
எழுத்து அடையவேண்டும் என நினைப்போருக்கு
வலைத்தளமும் ஒரு நல்ல சாதனம் என்பதனையும்
மறுப்பதற்கில்லைதானே ?

Mythily kasthuri rengan said...

சரியா சொன்னீங்க சார்:)

‘தளிர்’ சுரேஷ் said...

சரியாச் சொன்னீங்க! வலைத் தளத்தில் சிறப்பாக தொடர்ந்து எழுதுவதால் பார்வையாளர்களும் கருத்துரைகளும் கூடுவது உண்மையே! நம்பிக்கை தரும் பதிவு! நன்றி!

Chellappa Yagyaswamy said...

அன்புடையீர், எப்படியோ வலையுலகை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நூலினும் வலத்தளமே பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்//

மிகவும் அருமை. இன்றைக்கு மறுக்கவே முடியாத உண்மையும்கூட.

நூல் வெளியிடுவதெல்லாம் இப்போதுள்ள சூழ்நிலையில், விஷயம் தெரியாதவர்கள், ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கும் கதைதான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

Post a Comment