Showing posts with label வலைத்தளம். Show all posts
Showing posts with label வலைத்தளம். Show all posts

Sunday, May 1, 2016

வாழ்த்துரை...



தாய்மையின் வாஞ்சையுடன்
சமூகத்தின் பால் கொண்ட அதீத அக்கறையுடன்
ஒவ்வொரு படைப்பையும் கொடுக்கும்
திருமதி. கௌரி சிவபாலன் அவர்களின்
எழுத்தின்  தீவிர இரசிகன் நான்.

இதுவரை நேரடியாகவோ குரல் வழியோ கூட
தொடர்பு கொண்டதில்லை என்றாலும் கூட
ஒரு நாள் மின் செய்தி வழி , அவர்கள்
தங்கள் படைப்புகளை நூல்வடிவாகக்
கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகவும்
அதற்கு ஒரு நான்கு வரி வரும்படியாக
ஒரு வாழ்த்துப்பா  வழங்க முடியுமா
எனக் கேட்டிருந்தார்கள்

மனதிற்குப் பிடித்து நான் தொடர்கிற அனைத்துப்
பதிவுகளையும் முழுவதுமாகப்  படித்து
அதில் உள்ள சிறப்புகளை மிகச் சரியாகக்
குறிப்பிட்டுப்  பின்னூட்டமிடுவதாலும்

சில சமயங்களில், இது இப்படி இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என
உரிமை எடுத்துப் பின்னூட்டமிடுவதாலும்,

பதிவர்கள் சிலர் தங்கள் நூல் வெளியீட்டின் போது
என்னிடம் உரிமையுடன் வாழ்த்துரையோ,
முன்னுரையோ கோருவது உண்டு

அந்த வகையில் இது என்னுடைய ஐந்தாவது
வாழ்த்துரை என நினைக்கிறேன்

ஜெர்மெனியில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு
திருமதி. கௌரி சிவபாலன்  அவர்களின் 
"முக்கோண முக்களிப்பு "என்னும் நூல்
 ஸ்ரீலங்காவில் வெளியிடப்படுவது
மிக்க மகிழ்வளிக்கிறது

திருமதி.கௌரி சிவபாலன் அவர்கள்
பதிவுலகிலும், எழுத்துலகிலும் தொடர்ந்து
தன் சிறப்பான பதிவுகளைக் கொடுத்து
சிகரத்திலேயே தொடர்ந்து நிலைக்க
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

என்னுடைய வாழ்த்துப் பா

"தாய்மை நிரம்பி வழியும்
  தூய விரிந்த மனமும்
  ஆய்ந்து அறிந்துத் தெளிந்த
  அன்னைத் தமிழின் திறனும்

  வரமாய்ப் பெற்று "வலையில் "
   மலையாய் நிலைத்த கௌரி
   அறம்போல் என்றும்   உந்தன்
   எழுத்தும்  நிலைக்கும். வாழி  !  "
   

வாழ்த்துக்களுடன்...


Friday, October 30, 2015

கொசுறு

நான் பதிவர்கள் மைய அமைப்பு இருந்தால்
மிக மிக நல்லது என்கிற கருத்துப் பதிவுக்கு
பின்னூட்டமிட்ட கர்னல் கணேசன் அவர்கள்
கீழ்க்குறித்தபடி ஒரு அற்புதமான கருத்தை
பின்னூட்டமிட்டிருந்தார்


the poles "colonelpaaganesanvsm.blogspot.com" said...

Excellent idea.All registered Bloggers contribution can be published
as a book for the the benifit of the posterity.
Like "Pura Nanooru" is the contribution of many poets
.A good number of Bloggers are arround Pudukkottai.
It can be thought over by Mr.Muthunilavan sir.
congratulations Mr.Ramani for thr the story and the idea.

அந்த வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்
வெளியிடுகிற மாதிரி வினா விடை போல
(அதற்கு இருக்கும் மதிப்பு அனைவரும் அறிந்ததே )

குறிப்பிட்ட பதிவர்கள் பத்துஅல்லது
இருபது பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
அவர்களிடம்  அவர்கள் விரும்புகிற
ஐந்து/அல்லது பத்துப்   படைப்புகளைப் பெற்று
( முதல் நூல் கவிதையாக இருக்கலாம்)
பதிவர் அமைப்பின் முதல் வெளியீடாக
அதை வெளியிடலாம்

தனி ஆசிரியரின் நூலாக இல்லாமல்
ஒரு அமைப்பின் நூலாக  இருக்குமாயின்
கதம்ப மாலை போல அதுவும்
இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்

பதிப்புச் செலவை அந்த ப் பத்து/இருபது
படைப்பாளிகளை ஏற்றுக் கொள்ளச் செய்து
அதற்கு ஈடாக அவ்ர்களுக்குத் தேவையானப்
புத்தகங்களைக் கொடுத்து மீதம் உள்ளதை
விரும்பும் பதிவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்

காலப் போக்கில் பதிவர்களின் நூல்கள்
என்கிற புதிய வெளீயீடுகள் பெரும் வரவேற்பை
 நிச்சயம் பெறும்படிச் செய்யலாம்

ஆயிரம் புத்தகங்கள் கொண்ட முதல் வெளியீடு
இருபது/பத்துப் படைப்பாளிகளின் நூறு கவிதைகள்
இருக்கும்படியாக வெளியிடப்படுமாயின்
இருபதில் அல்லது பத்தில் நானும் ஒருவனாக
 இருக்கிறேன் என்பதையும்,

மொத்தச் செலவில் இருபதில்
அல்லது பத்தில் ஒரு பங்கைத் தரவும்
ஐம்பது அல்லது நூறு நூல்களைப் பெற்றுக்
கொள்ளவும் சம்மதிக்கிறேன் எனவும்
தெரிவித்துக் கொள்கிறேன்

இது குறித்து பதிவர்கள் தங்கள்
விரிவான கருத்தினைப் பதிவிடலாமே

வாழ்த்துக்களுடன்...

மழையைத் தொடரும் தூவானம் ( 3 )

நான் இந்தத் தொடரில்  முதலில் சொன்ன
பீர்பால் கதை, தொடர்ந்து முயன்று கொண்டிருந்தால்
எதையும் காரிய சித்தி ஆக்கிவிடமுடியும்
என்பதை வலியுறுத்தத்தான்

எவர் மனத்துள்ளும்  நம்  கருத்தை
நிலை நிறுத்திவிடமுடியும்  என்பதற்காகத்தான்

நம் பதிவர் சந்திப்புக்கென மைய அமைப்பு
நிச்சயம் வேண்டும் எனது அவா.
பெரும்பாலோரின் அவாவும் கூட..

ஐந்தறிவை ஆறறிவு அடக்கிப் பயன்படுத்திக்
கொண்டாலும் ஆறாவதை வழி நடத்த ஒரு ஏழாவது
அறிவு தேவைப்படுவதைப் போல

சிறந்த  மனிதர்களாயினும்   அவர்களை
ஒருங்கிணைத்து வழி நடத்திக் கொண்டு செல்ல
ஒரு ஏழாவது மனிதன் தேவைப்படுவதைப் போல

ஒரு சில மாவட்டங்களில் தனித்தனியாக
பதிவர்கள் அமைப்பு இருந்தாலும் கூட
தூண்டுதலுக்கு ஒரு மைய அமைப்பு இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் அவா.

சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில்
மதுரைக்கும் ஈரோட்டுக்கும் அடுத்த சந்திப்பு
நடத்துவது தொடர்பாக ஒரு போட்டியே இருந்தது

மதுரைக்குப் பின் புதுகை என ஏக மனதாக
முடிவு செய்ய்ய்ப்பட்டது. புதுகைக்குப் பின் எது
என புதுகையில் முடிவு செய்யப்படவில்லை

ஒரு மைய அமைப்பு இருக்குமாயின் இதுபோன்ற
விஷயங்களில் கவனம் செலுத்த இயலும்

மேலும் இரண்டாவது தொடரில் அசரீரிக் குறித்து
விளக்கியதைப் போல அனைவர் மனதிலும்
மைய அமைப்புக்குத் தகுந்த தலைமையும்
செயல்வீரர்கள் படையும் புதுகையில்
அமைந்திருப்பதால்......

உடன் அங்கு ஒரு மைய அமைப்பு அமைப்பதற்கான
ஆயத்த வேலைகளைச் செய்யலாம் என்கிற ஒரு
திடமான குரல் ஒலித்துக் கொண்டே இருப்பது
நாம் அனைவரும் உணர்வதே.....

அந்தக் குரலை அலட்சியப்படுத்தாது
 ஒத்த கருத்துடைய பதிவர்களை
ஒருங்கிணைத்து உடன் பதிவர் கூட்டமைப்பு
ஏற்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளை
புதுகைப் பதிவ்ர்கள் ஐயா முத்து நிலவன் அவர்கள்
தலைமையில் உடன் செய்ய வேண்டும் என்பதை
வலியுறுத்தவே .....

மழையைத் தொடரும் தூவானமாய்
பதிவர் சந்திப்புத் தொடரைத் தொடர்ந்து
இந்தத் தொடர் பதிவு

தங்கள் வெளிப்படையான மனம் திறந்த
கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமாய்
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்.... 

Tuesday, October 27, 2015

மழையைத் தொடரும் தூவானம் ( 2 )

ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்பு
நடந்த ஒரு சிறு சம்பவம்

அப்போது அரசுத் துறையில் பொறியியல் துறையில்
பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த
அடிப்படை ஊழியர் தன் மகனுக்குத் தீவீரமாக
பெண்பார்த்துக் கொண்டிருந்தார்.

பையன் பார்க்கக்  கொஞ்சம் லெட்சணமாகவும்
இருப்பான். தனியாக ஒரு மோட்டார் மெக்கானிக்
ஷாப் வைத்தும் நடத்திக் கொண்டிருந்தான்
எனவே நிறைய  இடத்தில் இருந்து சம்பந்தம் பேச
வந்தார்கள்.

அவர்கள்  கொஞ்சம் சீர் செனத்தி ஜாஸ்தி
கொடுக்கும் /வாங்கும் இனமாக இருந்ததால்
இவர்கள் எதிபார்க்கும் அளவு கிடைக்காததால்
நிறையச் சம்பந்தம் தட்டிப் போய்க் கொண்டிருந்தது

அந்த வகையில் ஒரு நாள் லீவு எடுத்து வெளியூரில்
பெண் பார்க்கப் போய் வந்திருந்தார்.
எப்போதும் எல்லோரும் என்னிடம் தங்கள் தனிப்பட்ட
விஷயங்களை மனம் திறந்து பேசுவார்கள்
நானும் மனம் திறந்து எனக்குத் தோன்றும் கருத்தை
அக்கறையோடுச் சொல்வேன்

அந்த வகையில் வெளியூர் பெண் பார்க்கச் சென்ற 
விஷயம் குறித்து அவரிடம் விசாரித்தேன்

அவரும் " ,பொண்ணு அழகா இருக்கு
பையனுக்குப் பிடிச்சிருக்கு.பொண்ணுக்கும்
பையனைப் பிடிச்சிருக்கு.சீர் செனத்தியெல்லாம்
நாம் எதிர்பார்க்கிற அளவு செய்வார்கள்
ஆனாலும்.. " என இழுத்தார்

" என்ன ஆனால்.. இது இரண்டும் தானே
நீங்க எதிர்பார்த்தது .முடித்துவிடவேண்டியதுதானே"
என்றேன்.

" என் மனைவியும் அதைத்தான் சொல்கிறாள்
ஆனால் எனக்குத்தான் ஒரு சிறு குறை
அவர்கள் வசதி வாய்ப்பாக இருந்தாலும்
நகைப் பணம் சேர்த்திருந்தாலும் வாடகை வீட்டில்
இருப்பது எனக்கு ஒப்பவில்லை
சொந்த வீடு இல்லாத இடத்தில் எப்படிச்
சம்பந்தம் செய்வது " என்றார்.

எனக்குத் திக்கென்றது.

நானும் அப்போது வாடகை வீட்டில் இருந்தேன்
 வீடு கட்டிக் கொள்ளும் அளவு இடமும் 
பணமும் இருந்ததாலும்
பொறியியல் துறையிலேயே இருந்ததாலும்
எப்போது நினைத்தாலும்  நம்மால் கட்டிக் கொள்ள
முடியுமே என்கிற அலட்சிய மனோபாவத்தில்
இருந்தேன்

இவர் இப்படிச் சொன்னது சட்டென என்னை
உலுக்கிப் போனது

அப்போது என் இரண்டு பெண் குழந்தைகளும்
உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்

நாளை நாமும் ஒரு நல்ல சம்பந்தம் பேச
இருக்கையில் சம்பந்திகளுக்கும் இப்படி ஒரு
எண்ணம் வந்தால் என்ன செய்வது ?

குழந்தைகள் கல்லூரிப் படிப்புக் கென
தயாராகையில் நாம் வீடு கட்டிக் கொண்டிருந்தால்
சரியாக வருமா என்றெல்லாம் யோசனை
மட மட வென எகிறியது

சரி ஆண்டவன் அசரீரி போல இவர் மூலம்
நமக்கு ஏதோ குறி காட்டுகிறார். இனியும்
அலட்சியம் காட்டக் கூடாது என அடுத்த
முஹூர்த்த நாளிலேயே தச்சு செய்து
ஆறு மாதத்தில் வீடு கட்டி முடித்து புதிய
வீட்டில் குடியேறி விட்டேன்

குழந்தைகள் புதிய வீட்டிலிருந்தே பொறியியல்
பட்டப் படிப்பும் முடித்து வேலைக்கும் சேர்ந்து
திருமணமாகியும் செட்டிலாகிவிட்டார்கள்

இப்போது நினைத்தால் கூட அந்த சமயத்தில்
அசரீரி போல அந்த வாக்கை எடுத்துக் கொள்ளாமல்
அசட்டையாக இருந்திருந்தால் நிச்சயமாக
வீடு கட்டி இருப்பேனா என்று சந்தேகமாகத்தான்
இருக்கிறது

அது சரி. நீங்கள் வீடு கட்டிய கதைக்கும்
இப்போது மழையைத் தொடரும்  தூவானம் என்பதற்கும்
அந்தப் பீர்பால் கதைக்கும் என்ன சம்பந்தம்
என்கிறீர்களா ?

அடுத்த பதிவில் அவசியம் சொல்கிறேன்

( தொடரும் )

மழையைத் தொடரும் தூவானம்

 ஒருமுறை பீர்பாலும் மன்னரும் நடந்து
சாலை வழி மாறுவேடத்தில் போய்க்
கொண்டிருக்கையில் ஒருவன் இறைவனைக்
குறித்து வேண்டிக் கொண்டிருக்கிறான்

அப்போது மன்னர் பீர்பாலை நோக்கி
 " என்ன பீர்பால்இவன் இங்கு அமர்ந்து
வேண்டிக் கொண்டிருப்பது
அந்த ஆண்டவனுக்கு எப்படிச் சேரும் ?
ஏன் இப்படி காலத்தை விரயம்
செய்து கொண்டிருக்கிறான் ?" என்கிறார்

அதற்குப் பீர்பால்  "இவன் உண்மையாக
உறுதியாக வேண்டிக் கொண்டால் நிச்சயம்
அது ஆண்டவனுக்குச் சேரும் மன்னா ?"
என்கிறார்

மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை
" இதை நிரூபிக்க முடியுமா ?" எனச் சவால்
விடுகிறார். பீர்பாலும் அந்தச் சவாலை
ஏற்றுக் கொள்கிறார்

பின் பீர்பால் ஒரு கிராமத்தானை ஏற்பாடு செய்து
" நான் மன்னரைக் காணவேண்டும் " எனத்
திரும்பத் திரும்பச் சப்தமாகத் தினமும்
சாலை ஒரம் அமர்ந்து சொல்லச்
சொல்கிறார்.

முதலில் இதைப் பார்த்த ஒற்றன் எவனோ
கிறுக்கன் உளறுகிறான் எனக் 
கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறான்

நாளும் பொழுதும் அதே இடத்தில்
அதே வார்த்தையைச் சொல்லிக்
கொண்டிருப்பதைக் கண்ட ஒற்றன் இதைத் 
தலைமை ஒற்றனிடம் சொல்கிறான்

முதலில் இதை வெறும் தகவலாக மட்டும் கொண்ட
ஒற்றர் தலைவன், இது தொடர்ந்து
தொடர்வதைக் கண்டு எதற்கும் சேனாதிபதியிடம்
சொல்லிவிடுவோம் எனச் சொல்லி விடுகிறான்

இப்படியே தகவல் மந்திரி கடந்து மன்னரிடம்
சென்றுவிடுகிறது.முதலில் தகவலாக
அதை எடுத்துக்கொண்ட மன்னர் தொடர்ந்து
 அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்
எனத் தெரிய ஒரு நாள் ஏன் தான் நம்மைப் பார்க்க
வேண்டுமென்பதில் இவ்வளவு உறுதியாய்
இருக்கிறான் எனத் தெரிந்து கொள்ளும்
ஆவலில் அவன் இருப்பிடம் தேடி வருகிறார்

அப்போதும் அதையே சொல்லிக் கொண்டிருந்த
அந்தகிராமத்தானை நோக்கி "
இதோ மன்னனே வந்து விட்டேன்.
என்ன விஷயம் சொல் " என்கிறார்

கிராமத்தானோ "மன்னா மன்னிக்க வேண்டும்
பீர்பால்தான் தினமும் இப்படி இங்கே அமர்ந்து
இப்படிச் சப்தமாய்ச்  சொல்லிக் கொண்டிரு
மன்னர் நிச்சயம் வருவார். அப்படி வருகிற நாளில்
நான் உனக்கு நூறு பொற்காசுகள் தருவேன் என்றார்
தங்கள் கருணையால் எனக்கு இன்று நூறு
பொற்காசுகள் கிடைக்கப் போகிறது" என்கிறான்

மன்னருக்கு  பீர்பால் ஏன் இப்படி ஏற்பாடு செய்தார்
என்கிற விஷயம் விளங்கவில்லை

உடன் பீர்பாலை வரவழைத்து காரணம் கேட்க
பீர்பால் 'மன்னா தாங்கள் அன்றொரு நாள்
தொடர்ந்து வேண்டிக் கொண்டிருப்பவன் குரல்
எப்படி ஆண்டவனுக்கும் கேட்கும் எனக்
கேட்டதற்கு இதுதான் பதில்

ஒரு சாதாரண கிராமத்தானின் புலம்பல்
அவன் சந்திக்கவே முடியாத மன்னருக்குக்
கேட்கும்பொழுது,ஒரு பக்தனின் குரல் எப்படி
அந்த எல்லாம் வல்லவனுக்குக் கேட்காமல் இருக்கும்"
என கேட்க மன்னருக்கும் இது சாத்தியம் தான்
புரிய, கிராமத்தானுக்கு தானே நூறு  பொற்காசுகள்
கொடுத்து பீர்பாலை மனதாரப் பாராட்டுகிறார்

அது சரி இந்தக் கதை இப்போது எதற்கு
என்கிறீர்களா ? அதை அடுத்துச் சொல்கிறேன்

Thursday, February 5, 2015

வாளினும்.....

ஐநூறு கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
ஐந்து கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்

ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
ஐயாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்

கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஐம்பதாயிரம் பேரே
படித்திருக்கச் சாத்தியம்

வலைத்தளம் போல்
மூன்று இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை

புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
ஐயாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்

வலைத்தள பின்னூட்டம் போல்
முப்பதாயிரம் தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை

எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்

நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும் புதுமொழி பரப்புவோம்

அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்

Thursday, October 17, 2013

குமுதத்தின் ராஜதந்திரம்

குமுதம் இதழ் இந்த வாரம் தீபாவளி
சிறப்பு மலர்களில் ஒரு மலராக
இணையச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது
அதில் ஒரு கட்டுரை வலைத்தளம் குறித்த
கட்டுரையாக வெளிவந்திருக்கிறது,

அந்த கட்டுரையை வலைத்தளத்தித்தில்
அதிகப் பரிட்சயம் உள்ளவர்தான் எழுதியிருக்கிறார்
 என்பதுநம் வலைத்தளதின் பலம் மற்றும்
 பலவீனங்கள் குறித்து மிக எளிமையாகச்
சொல்லிப் போவதுபோல்அடிஆழம் தொட்டு
இருப்பதில் இருந்து நிச்சயமாக
புரிந்து கொள்ளமுடிகிறது.

சிறந்த முதலாளி என்பவர் எப்போதும்
எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளியை
 பயன்படுத்திக்கொள்வது என்பதிலும்தான் ---

உண்மையில் தொழிலாளிக்கு அதிகம்
பயன்படாமல்பயன்படுவதுபோல் நடிப்பது
எப்படி என்பதிலும்தான்---
மிக கவனமாக இருப்பார்

கெட்டிகார அரசியல்வாதி கூட தான் அதிகம்
 தியாகம்செய்வது போல் நடித்தபடி மக்களை
 எப்படித் தனக்காக அதிக பட்ச தியாகம்
செய்ய வைப்பது என்பதில்
மிகக் குறியாக குறியாக இருப்பார்

இணையத் தளத்தின் வளர்ச்சி நிச்சயம்
 பத்திரிக்கைகளுக்குசாதகமானதில்லையென்பது
 குமுதம் போன்ற வெகு ஜனப்
 பத்திரிக்கைக்காரர்களுக்கு புரியாதிருக்க
வாய்ப்பில்லை,ஆயினும் அவர்கள் ஏன் தனியாக
இணையத் தள சிறப்பிதலும் அதில் வலைத்தளம்
குறித்த கட்டுரையும் வெளியிடுகிறார்கள் எனில்
"அதில்தான் இருக்கிறது ஆச்சாரியரின்
 விபீஷண வேலை "

காலத்தின் போக்கோடு அனுசரித்துப் போகாத எதுவும்
கரையோரம் ஒதுக்கப்படும் என்பதுவும்
அதனோடுஇயைந்து போதலுமே நிலைத்தலுக்கான
சூத்திரம் என்பதுவும்அவர்களுக்குத் தெரியும்

இப்போது வருகிற சினிமாக்களில் எல்லாம்
பத்திரிக்கைகளுக்குநன்றி தெரிவித்து வாசகம்
போடுவதில் நமதுவலைத்தளங்களுக்க்கும்
சேர்த்து நன்றி சொல்வதில்
மிக கவனமாக இருக்கின்றன

காரணம் பத்திரிக்கையில் வருகிற விமர்சனத்தை விட
இணையம் மூலம் வருகிற விமர்சனங்கள் விரைவாக
மட்டுமின்றி மிகவும் கூர்மையாகவும் இருப்பதால் அது
தங்கள்  வசூலை பாதித்துவிடக் கூடாது என்பதில்
ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வே காரணம்.

அதைப்போலவே பத்தாம்பசலித்தனமாக இன்னமும்
சினிமாவுக்கெனவும் பயனற்ற வெறும் பொழுது போக்கு
விசயங்களுக்காக அதிகப் பக்கங்கள் ஒதுக்கியும் தனது
வியாபாரத் தந்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிற
ஒரு பத்திரிக்கை----

மக்கள் கவனம்  கொள்ளவேண்டிய விஷயங்களை
மிகச் சாதுர்யமாய் மறைத்து தேவையற்ற விஷயங்களில்
கவனம் கொள்ளவைப்பதில் மிகக் கவனமாய் இருக்கிற
ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கை---

மிகச் சரியாக தாமும் தற்கால உலகின் போக்கை
புரிந்து கொண்டிருக்கிறோம் என பம்மாத்துக் காட்டி
தன் வியாபார சாம்ராஜ்ஜியத்தை
நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கிற அற்ப
முயற்சியே இது

பிற பத்திரிக்கைகள் போல நல்ல வலைத் தளங்களையும்
நல்ல முக நூல் வாசகங்களையும் அறிமுகம் செய்து
அதன் மூலம் நல்ல கருத்து மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும் என்கிற எண்ணம் இல்லாது----

அதன் மூலம் இணையத் தளம் மற்றும் வலைத்தளம்
ஆகியவற்றின் வீச்சை மக்கள் அறியவிடாது----

வலைத்தளத்தையும் இணையத்தளத்தையும்
மேலோட்டமாக சொல்லிச் செல்வதன் மூலமே--

தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கெட்டிக்காரத்தனமாகச் செய்கிற அற்பத்தனத்தை
 நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்வோம்

அவ்வப்போது இதுபோன்ற அற்பப் பத்திரிக்கைகளுக்கு
நம் வலைத்தளம் மூலம் ஆப்படிப்பதன் மூலம்
அவைகளை மைய நீரோட்டத்திலிருந்து
ஒதுக்கிப் போடுதலே இலக்கியத்திற்கும்
 மக்களுக்கும் நாம் செய்யும்
மகத்தான தொண்டு எனப்புரிந்து
தொடர்ந்து செயல்படுவோம்