Friday, July 4, 2014

துரோகம் ( 2 )

நான் முதன் முதலாக ராகவனைச் சந்தித்தது
இன்றிலிருந்து ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு
மேல் ஆகி இருந்தாலும் கூட அந்த நேரமும்
நிகழ்வும் இன்னும் என்னுள் பசுமையாகத்தான்
இருக்கிறது

அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும்
பள்ளி இறுதி வகுப்பு அப்போதுதான் கல்லூரியில்
புதுமுக வகுப்பு சேர்ந்திருந்த நேரம்
வேட்டிக்கு மாறி வேட்டியும் மிகச் சரியாக
மனதளவில் ஒட்டாது டிராயரையும் முழுவதும்
விட்டு விடாது மிகச் சரியாகச் சொன்னால்
விடலையாய் அனைத்து விஷயத்திலும்
இருந்த காலம் அது

மதுரையை ஒட்டி இருந்த ஜாதிவாரியாக
தெருப்பெயரைக் கொண்டிருந்த அந்த ஊரில்
கல்லூரிப் படிப்புப் படிப்பவர்கள் மொத்தமே
பத்து பதினைந்து பேர்தான் இருப்போம்
அப்போது கல்லூரியில் படிப்பவர்கள் என்பதால்
ஊரில் எங்களுக்கு இருந்த  மதிப்பு தனி

அந்த ஒன்பது மணி டவுன் பஸ்ஸில்
பின் நெட்டுச் சீட்டில் எங்களைத் தவிர
யாருமே உட்கார மாட்டார்கள்.பஸ் ஊரை விட்டுக்
கிளம்பி கிரைம்பிராஞ்ச் போகிற வரை
நாங்கள் செய்யும் அலப்பறையை இப்போது
நினைத்தாலும் மனம் இளமைத் துள்ளல்
போடத்தான் செய்கிறது

இந்த இளமைத் துள்ளலாட்டம் எல்லாம்
வெளியில் மட்டுமே.வீட்டிற்கு வந்து வேட்டியைக்
கழற்றி டிராயரை மாட்டியதும் மீண்டும் பள்ளிச்
சிறுவனைப் போலாகி விடுவேன்

இது என்னுடைய இயல்பாய் இருந்ததா அல்லது
வீட்டில் என்னை வளர்ந்தவனாக அங்கீகரிக்காததாலா
என்கிற மனக்குழப்பம் இன்றுவரை  இருக்கத்தான்
செய்கிறது.

அதனாலேயே மாலை கல்லூரிவிட்டு வந்து வந்ததும்
கிணற்றடியில் முகம் கைகால் கழுவி விபூதி தரித்து
சாமியறையில் சொல்லவேண்டிய சுலோகங்களைச்
சொல்லிமுடித்து திண்ணைக்கு வருகையில் அம்மா
எனக்குத் தின்பதற்கு எதையாவது வைத்திருப்பாள்
அனேகமாக கூடுமான வரையில் வறுத்தகடலையாகவோ
அல்லது ஏதாவது சுண்டலாகவோ இருக்கும்

அதைக் கொறித்தபடி அம்மாவின் மடியில்
படுத்தபடி "அப்புறம்,,,"என்றால் போதும்
அம்மா எனக்கு ஆயிரம் ஊர் விஷயம் வைத்திருப்பாள்
அல்லது நான் கல்லூரி விஷயம் ஏதாவது
சுவாரஸ்யமாக வைத்திருப்பேன்.அந்தப் பொழுது
எத்தனை சுவாரஸ்யமானது சுகமானது என்பது
அனுபவித்துப்பார்த்தவர்களுக்குத்தான் புரியும்

அன்று அம்மாவிடம் சொல்வதற்கு என்னிடம்
விஷயம் எதுவும் இல்லை.ஆனால் அம்மாவிடம்
ஏதோ ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது
என்பதை அவளுடைய பரபரப்பான அசைவுகளில்
இருந்தும் அவள் அடிக்கடி தெருவின்
வடக்குக் கோடியைப் பார்ப்பதிலிருந்தும்
புரிந்து கொண்டேன்

மெல்ல மெல்லமாலை மறைந்து இருள் சூழத் துவங்க
தோப்புபோல் இருந்த எதிர்ச்சந்து மரங்களில்
காகங்கள் கரைந்தபடி அடையத் துவங்கியது

மூணாவது வீட்டு சுப்புப் பாட்டி தனது தலை
முக்காட்டைச் சரிசெய்தபடி அவசரம் அவசரமாக
எங்கள் வீட்டு கீழ் திண்ணையில் அமர்ந்தபடி
"அதோ வந்துட்டாங்க போல இருக்கே  "என்றாள்

நானும் யார் என ஆவலுடன் திரும்பிப் பார்க்க
வடக்குக் கோடியில் ஒரு இரட்டை மாட்டு வண்டியும்
ஒரு கூட்டு வண்டியும் எங்கள் தெருவில் நிதானமாக
நுழைந்து கொண்டிருந்தது ஒரு நிழற்படம்போல் தெரிந்தது

(தொடரும் )

26 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

கடந்த கால நினைவுகளை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
நன்றி
அன்புடன்
ரூபன்

vimalanperali said...

அம்மாக்களிடம் சொல்ல ஆயிரம் உண்டுதான் எப்போதுமே/ஆனால் நம்மிடம் சொல்ல,,,,,,,,கூட்டு வண்டிகளும்,வில் வண்டிகளும் சுமந்த ஊர்களின் வீதிகள் நிறையவே இருந்திருக்கிறது,இன்னும் இருந்து கொண்டும் இருக்கிறதுதான்.

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டுவிட்டது! அப்புறம்?!

ஸ்ரீராம். said...

அபார வர்ணனைகளுடன் ஆரம்பம். தொடர்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

தொடரும் சுவாரஸ்யம். தொடரட்டும்!
த.ம.4

ADHI VENKAT said...

அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்பது.... சுகமானது.

தொடர்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாகப் பொறுமையாகச் செல்லும் இந்தத் தொடரை ரஸித்துப்படித்தேன்.

//வீட்டில் என்னை வளர்ந்தவனாக அங்கீகரிக்காததாலா//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! லேஸில் அங்கீகரிக்க மாட்டார்கள். எப்போதும் நம்மைக் குழந்தை என்றே நினைப்பர்கள். அதுதான் உண்மையும் கூட.

//அந்தப் பொழுது எத்தனை சுவாரஸ்யமானது சுகமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும்//

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

பகிர்வுக்கு நன்றிகள். தொடருங்கள்.

Anonymous said...

சொல்லுங்கள்...தொடருகிறேன்....
வேதா.இலங்காதிலகம்.

Yarlpavanan said...

கதை நகர்வு சூடு பிடிக்கிறது.
சுவைபடக் கதை நகர - அடுத்த
பகுதியைப் படிக்க
உள்ளம் தயாரகிறது!

RajalakshmiParamasivam said...

யார் வந்தது வில் வண்டிக்குள்........சுவாரஸ்யம்.

Unknown said...

# ஒரு இரட்டை மாட்டு வண்டியும்
ஒரு கூட்டு வண்டியும் #
ராகவன் எந்த வண்டியிலிருந்து இறங்கினார் ?அவருடன் வந்தவர்கள் அவரின் பெற்றோர்கள் தானே ?அறிய ஆவல் ஏற்படுகிறது !
த ம 5

Seeni said...

ஆவலாக இருக்கு..

KILLERGEE Devakottai said...

தாயின் மடியில் படுத்துக்கொண்டு கதைகேட்ட காலங்களை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள் ஐயா....

கோமதி அரசு said...

அம்மாவின் மடியில்
படுத்தபடி "அப்புறம்,,,"என்றால் போதும்
அம்மா எனக்கு ஆயிரம் ஊர் விஷயம் வைத்திருப்பாள்//
அம்மாவின் மனத்தை அழகாய் சொன்னீர்கள்.
யார் வந்தார்கள் ?
தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்...

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன். இந்தத் தொடராவது முற்றும் வரை போகுமா.?ஏற்கனவே இரண்டு மூன்று தொடர்கள் முற்றுப் பெறாமலேயே இருக்கிறதாக நினைவு.

Thulasidharan V Thillaiakathu said...

சுவாரஸ்யம் கூடுகின்றது! அடுத்த பதிவிற்கு காத்திருக்கின்றோம்!

//அதைக் கொறித்தபடி அம்மாவின் மடியில்
படுத்தபடி "அப்புறம்,,,"என்றால் போதும்
அம்மா எனக்கு ஆயிரம் ஊர் விஷயம் வைத்திருப்பாள்
அல்லது நான் கல்லூரி விஷயம் ஏதாவது
சுவாரஸ்யமாக வைத்திருப்பேன்.அந்தப் பொழுது
எத்தனை சுவாரஸ்யமானது சுகமானது என்பது
அனுபவித்துப்பார்த்தவர்களுக்குத்தான் புரியும்//

மிகவும் ரசித்தோம்! இந்த வரிகளை! இதை வாசிப்பவர் யாராக இருந்தாலும், தங்கள் தாயின் நினைவுகளையும், தாயின் மடியையும் அந்த இனிய அனுபவத்தையும் நினைத்து அந்த இனிய நினைவுகளில் மூழ்காமல் இருக்க முடியாது!

த.ம.

மாதேவி said...

ஆவலுடன் தொடர்கிறேன். .....

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்....

கதை கேட்பதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு.... அதனோடு நானும் இப்போது....

கரந்தை ஜெயக்குமார் said...

கதை கேட்பது என்றாலே அலாதி இன்பம்தானே
தொடருங்கள் ஐயா
ஆவலுடன் காத்திருக்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 11

கவிதை வானம் said...

இந்த அம்மா அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை நான் படிக்க அம்மாவை விட்டு இளம்வயதிலேயே பிரிந்துவிட்டேன்..உங்கள் பதிவு அந்த அனுபவத்தை தந்தது .நன்றி

கீதமஞ்சரி said...

அழகான இளமைக்கால நினைவுகள். அம்மா மடியில் படுத்துக்கொண்டு கதை கேட்பது போலவே சுவாரசிய நடை. தொடரக் காத்திருக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கடந்த கால நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதி. நன்றி. தொடர்வோம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!
மேற் கொண்டு இதையும் படித்ததில் இன்னும் ஆவல் அதிகரிக்கின்றது.இள வயது நினைவலைகள் எப்போதும் இனியானவை! யார் வந்தார்கள்? என்ன நடந்தது? என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நடபுடன்,
கமலா ஹரிஹரன்.

Post a Comment