Tuesday, July 1, 2014

விதுர நீதிப் பேசிப்பேசி......

உழைத்து உழைத்து ஓயாது
மனசு வெந்துச் சாகாது-நீ
செழித்து வாழ வழியொன்று
சொல்வேன்  உனக்கு மிகஎளிதாய்

வெட்டிப் பேச்சுப் பேசாது
நியாயம் நீதி பேசாது-நீ
நிச்சயம் தொடர்ந்து செய்தாலே
வெற்றி விளையும் தன்னாலே

சொத்துப் பத்து உன்கணக்கில்
கூடக் கொஞ்சம் சேர்த்துவிடு-நீ
சொல்லிச் செல்லும் எல்லாமே
உண்மை யாக  மாறிவிடும்

எனவே  இனியேனும்

தர்ம நியாயம் பேசாது-மனச்
சாட்சி என்று மயங்காது
சொத்துப் பத்தைச் சேர்த்துவிடு
சொர்க்க மாகும் உன்வாழ்வு

பத்து பேரை  உன்பின்னால்
எப்போதும் நீ   நிற்க விடு-நீ
செய்யும் செயல்கள் எல்லாமே
சிறந்த செயலாய் தோன்றிவிடும்

எனவே இனியேனும்

எந்தக் கூத்துச்  செய்தேனும்
அள்ளி எதையோ கொடுத்தேனும்-நீ
வெட்டிக் கூட்டம் சேர்த்துவிடு
உயர்ந்து போகும்  உன்வாழ்வு

பதவி ஒன்றை  நீபிடித்து -
பந்தாவாக அமர்ந்துவிடு -நீ
எதைநீ உளறி னாலுமது
வேத வாக்கா உலகேற்கும்

எனவே இனியேனும்

எத்தனைப்  பொய்யைச் சொல்லியேனும்-
எதனைக் காவு கொடுத்தேனும்-நீ
நல்ல பதவிப் பிடித்துவிடு
நாடே உந்தன் வீடாகும்

எனவே  இனியேனும்

உ ழைத்து உழைத்து ஓயாது
மனசு வெந்துச் சாகாது-நீ
செழித்து வாழத்  தெரிந்துகொள்
உலகின் போக்கைப் புரிந்துகொள்

விதுர  நீதிப்  பேசிப்பேசி
வெட்டித் தனமாய்த் திரியாது
புதிய   வழியைத் தேர்ந்தெடுத்துப்
பிழைக்கும்   வழியைப் பார்த்துக்கொள்

26 comments:

ரூபன் said...

வணக்கம்
ஐயா.

விதுர நீதிப் பேசிப்பேசி
வெட்டித் தனமாய்த் திரியாது
புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப்
பிழைக்கும் வழியைப் பார்த்துக்கொள்

அற்புதமான வரிகள் நல்ல அறைகூவல். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்

த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Bagawanjee KA said...

இந்த கவிதை வஞ்சப் புகழ்ச்சி அணியை சேர்ந்ததை போலிருக்கே !
த ம 3

கோமதி அரசு said...

இப்போது நாட்டில் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறது கவிதை.

Ramani S said...

சிலர் என்பதற்குப் பதில்
பலர் எனக் கூடச் சொல்லலாம் போல உள்ளது
நாட்டின் நிலைமை
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

Bagawanjee KA //

அதே அதே
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

ரூபன் said...

அற்புதமான வரிகள் //


உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிழைக்கும் வழியைச் சொன்னது இனிமை. உண்மை. பாராட்டுக்கள்.

Anonymous said...

ஐறோனிக் என்று வஞ்சப் புகழ்ச்சியே தான்.....
இன்று இது தான் உலகம். இப்படி நானும் மனம் வெதும்புவதும் உண்டு.
வேதா. இலங்காதிலகம்.
எனது 1000 மாவது ஆக்கமாக நாட்டியப் பேரோளி
Vetha.Elanagthilakam.

Jeevalingam Kasirajalingam said...

"சொத்துப் பத்தைச் சேர்த்துவிடு
சொர்க்க மாகும் உன்வாழ்வு" என்றால்
"வெட்டித் தனமாய்த் திரியாது
புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப்
பிழைக்கும் வழியைப் பார்த்துக்கொள்" என்றாகிறதே!
சிறந்த வழிகாட்டல்!

ஸ்ரீராம். said...

நிதர்சனம்.

அம்பாளடியாள் வலைத்தளம் said...

நல் வழி காட்டி நிற்கும் சிறந்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .இன்று என் வலையில் ஒரு காதல் பாடல் (டூயற் )உள்ளது அதைப் பாடி மகிழ்ந்து கருத்திடவும் அழைக்கின்றேன் ஐயா வாருங்கள் .

அருணா செல்வம் said...

பதவி.....????

சும்மா இருக்கும் போதே பதவி கிடைத்திடுமா?
முட்டி மோதி வெட்டினால் தானே கிடைக்கும்.

நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லி இருக்கிறீர்கள்.
அருமை இரமணி ஐயா.

G.M Balasubramaniam said...

/ எந்தக் கூத்துச் செய்தேனும்
அள்ளி எதையோ கொடுத்தேனும்-நீ
வெட்டிக் கூட்டம் சேர்த்துவிடு
உயர்ந்து போகும் உன்வாழ்வு/
பணமிருப்பவன் பின்னாலும் பைத்தியக்காரன் பின்னாலும் பத்துபேர் இருப்பார்கள்.சொல்லிச் சென்றவிதம் மனங்கவர்ந்தது.

கவிஞா் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!!

சூடும் சுரணையும் அற்ற தமிழனுக்குப்
பாடும் கவியால் பயனுண்டோ? - வாடுகிறேன்
என்றன் தமிழினம் என்று தெளிவுறுமோ?
ஒன்றும் அறியேன் உறைந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

கவிஞா் கி. பாரதிதாசன் said...


தமிழ்மணம் 7

‘தளிர்’ சுரேஷ் said...

நடப்பைச் சொல்லும் நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
அருமை
தம 8

வெங்கட் நாகராஜ் said...

பலர் இப்படித்தான் இன்று இருக்கிறார்கள்... :(

Dr B Jambulingam said...

தற்காலத்தில் பலர் இவ்வாறாகத் தான் பிழைப்பு நடத்துகின்றார்கள். வேதனையை வெளியிட்டுள்ளீர்கள் போலுள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

// செழித்து வாழத் தெரிந்துகொள்
உலகின் போக்கைப் புரிந்துகொள் //

உணர வேண்டிய வரிகள் ஐயா...

rajalakshmi paramasivam said...

பதவியின் பெருமையைப் பற்றி இதை விடவும் அழகாய் யாராலும் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.

கீத மஞ்சரி said...

நிர்வாணமாய் நிற்கும் ஊரில் கோவணம் உடுத்தியவன் பைத்தியக்காரன் என்னும் நிலை. அதைப் பிரதிபலிக்கும் அருமையான வரிகள் ரமணி சார்.

இராஜராஜேஸ்வரி said...

புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப்
பிழைக்கும் வழியைப் பார்த்துக்கொள்

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு ஆகாதே..!

Thulasidharan V Thillaiakathu said...

விதுர நீதி அருமையாகச் சொன்னீர்கள்! உலகில் பெரும்பான்மைக் கூட்டம் இப்படித்தானே இருக்கின்றார்கள்! நாற்காலியைப் பிடிக்க அதன் பின்னே செல்ல எதை வேண்டுமானாலும் செய்வார்கள்! அத்தனை வெறி! நிலை கெட்ட மனிதர்கள்!

அருமையான வரிகள் சார்!

ravi lingam said...

Sir, Vithru neethi indrum pesapaduvathe athan sirapputhane

Post a Comment