Tuesday, February 16, 2016

ஆயாசம்

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம் 
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்

"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"

பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"

ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி

தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்

"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் "  மூத்த மகன்

கண் கலங்கியபடி பேரன் மட்டுமே 
"அதனையே  "பார்த்துக் கொண்டிருந்தான்

"அதுக்கும் " கூட
"அதன்  "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீள் பதிவாயினும், எனக்கும் மிகவும் பிடித்தமான, உலக யதார்த்தத்தை சொல்லும் ஆக்கம் இது. பாராட்டுகள்.

Ramani S said...

வை.கோபாலகிருஷ்ணன் sir //

பதிவுகளைப் புத்தகமாக்கும் எண்ணம் இருக்கிறது
அதனால் மீண்டும் ஒருமுறைப் படித்து சிறுச் சிறு
மாறுதல்களைச் செய்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்

மேலும் தொடர்பவர்கள் பெரும்பாலானவர்கள்
புதியவர்களாகவே இருக்கிறார்கள்
அதற்காகவும் இப்படி...

முதல் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

பழக்க தோஷத்தில் கீழே லைக் பட்டனைத் தேடுகிறேன்! அருமை. நானும் இதே பொருளில் ஃபேஸ்புக்கிலும், பின்னர் பதிவிலும் ஒன்று பகிர்ந்திருந்தேன். அது இதுதான்!

அழுது கொண்டிருந்த
அனைவரும்
ஆற்றங்கரைக்குப்போய்க்
குளித்து விட்டு
வந்த பிறகு
புன்னகைக்கத் தொடங்கினார்கள்...

அடுக்களையை
எட்டிப்பார்த்த
அக்கா சொன்னாள்..
'எளவு..
எலையப் போட்டா
சாப்பிட்டுக் கிளம்பிடலாம்..
டிரெயினுக்கு நேரமாகுது...'

தம +1

பழனி.கந்தசாமி said...

இப்படித்தான் உலகம் இயங்குது.

Avargal Unmaigal said...

///பதிவுகளைப் புத்தகமாக்கும் எண்ணம் இருக்கிறது
அதனால் மீண்டும் ஒருமுறைப் படித்து சிறுச் சிறு
மாறுதல்களைச் செய்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்///

சிற்பியை போல மேலும் மேலும் செருகூட்டிகிறீர்கள் போல.....அருமை.....

அர்த்தம் பொதிந்த அழமான கவிதை...

ரூபன் said...

வணக்கம்
ஐயா
அற்புதமான கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam said...

நம் இயக்கத்தையும், யதாரத்தத்தையும் அருமையாக வெளிப்படுத்தும் பதிவு.

sury Siva said...

இந்த நிகழ்வினை இன்னொரு கோணத்தில் பார்த்தால், இந்த மாதிரியான சம்பிரதாயங்கள் எல்லாம் தேவைதானா என்றும் யோசித்துப் பார்க்கவேண்டும் .

நான் சொல்லும் உளுத்துப்போன சம்ப்ரதாயம்:
கல்யாணத்துக்குப் போனாலும் போகாவிட்டாலும், கருமாதிக்குக் கண்டிப்பாய் போகத்தான் வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம். அதைக் கடைப்பிடிக்கவில்லை என்று சொன்னால், வராதவர் மேல் காட்டப்படும் தேவையற்ற கோபம்.

எனது நண்பர் ஒருவர் அவரே இதய வால்வ் சம்பந்தப்பட்ட சிகிச்சை மேற்கொள்பவர். அவரது சகலை (அவரை விட இளையவர் தான்) திடிரென மன்னார்குடியில் இறந்தபோது, இவர் தஞ்சையில் இருந்து அவரை பார்க்கச்சென்றார். இறுதி மரியாதைக் காகத்தான். அங்கு பிணத்தை எடுத்துச் செல்லும் நேரத்தில் எல்லோரும் கதறும் போது அதைத் தாங்க இயலாது , இவரும் ஒரு மாஸிவ் ஹார்ட் அட்டாக்கில் இரண்டே நிமிடங்களில் இறந்தார். யாருக்கு முதல் மரியாதை ? யாரை முதலில் எடுத்துச் செல்வது என்று வேறு வைதீகர்கள் வாதமும் தர்க்கமும் சேர்ந்து கொண்டது.

பரிதாபமான சூழ்நிலை. இவரது பையன் தூபாய் இலிருந்து வரவேண்டும். ஆக, அவர் வரும் வரை காத்திருக்கவேண்டும் அந்த இறந்தவரின் உறவினர்கள்.

இது போன்று எப்பொழுதுஆவது நடக்கிறது என்றாலும் நடக்கும்போது பார்க்க இயலவில்லை.

நான் சொல்வதெல்லாம் இது தான்: உங்கள் உற்றத்தில் இது போன்ற இறப்புகள் நடக்கும்போது, உங்கள் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, செயல் படுங்கள். வீட்டில் இருந்து கொண்டே சென்ற உயிரின் ஆத்மா சாந்தியடைய ஒரு பிரார்த்தனை செய்யுங்கள். அது போதும்.

சுப்பு தாத்தா.

மீரா செல்வக்குமார் said...

மிகவும் உணர்ச்சிகரமான கவிதை...
சமீபத்திய உங்கள் கவிதைகளில் இது என்னை மிகவும் உலுக்கிய கவிதை,,,,நன்றிகளும்..வாழ்த்துகளும்..

தி.தமிழ் இளங்கோ said...

பழைய பதிவில் என்ன கருத்துரை எழுதினேன் என்று நினைவில் இல்லை. இந்த பதிவினைப் படித்ததும் நினைவில் வந்த வரிகள் - “ அண்ணன் என்னடா? தம்பி என்னடா? அவசரமான உலகினிலே .... “

Patta Arivu said...

வெறும் சடங்கினால் உறவுகொள்ளத் தொடங்கியவர்களுக்குப் பிற தேவைகள் வந்தவுடன் பழைய உறவுகள் வலுவிழந்துதான் போகும். இதற்க்கு எல்லாம் பரிதாபம் காட்ட முடியாது. "அதுக்கும்"கூடச் சிந்திக்கத் தெரியாது!

இக்கால இயல்புகளை வெளிப்படுத்தும் இப்பதிவு நன்று.

அருணா செல்வம் said...

‘‘அது‘‘வும் பாவம் தான்...

அருமை இரமணி ஐயா.

S.P.SENTHIL KUMAR said...

அற்புதமான கவிதை அய்யா!
இன்றைய மயான காடுகளில் நடக்கும் நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்தது. 'அதுக்கும்' கூட என்ற இடம் கிளாஸ். பின்னூட்டங்களும் கவிதையாக இருக்கின்றன.
த ம 7

நா.முத்துநிலவன் said...

எதார்த்த உலகின் வெப்பம் தெறிக்கும் கவிதை. உங்கள் கவிதைத் தொகுப்பில் அவசியம் முன்வரிசையில் இருக்கவேண்டிய கவிதை. த.ம.8

புலவர் இராமாநுசம் said...

இதுதான் உண்மை!

'நெல்லைத் தமிழன் said...

சுய'நலம் மட்டும்தான் மனிதனை இயங்கவைக்கிறது. குழந்தைகளுக்கு சந்தோஷம் தவிர வேறு எதுவும் இல்லை. (ஐய்..டிரெயின்ல போறோம். தாத்தா செத்துப்போயிட்டாரு)...

சுப்புத்தாத்தா சொல்வது போல், சம்பிரதாயம் தேவையில்லைதான். ஆனால் சம்பிரதாயம் நம்மை மூடிவைத்துள்ளது. அதைக் கடைபிடிக்கவில்லை என்றால், நமக்கே தவறு தவறு என்று மனது அடித்துக்கொள்ளும். அதனால்தான் இது வந்தது என்பதுபோல் தீங்கு வரும்போதெல்லாம் தோன்றும்.

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரிகள்.... நிதர்சனம்.

தில்லியில் இப்படி பல முறை பார்த்து “இவ்வளவு தான் உலகம்” என்று பேசிக் கொண்டதுண்டு......

Post a Comment