Showing posts with label வ(வி)சன கவிதை. Show all posts
Showing posts with label வ(வி)சன கவிதை. Show all posts

Saturday, February 20, 2016

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரன்

 நாட்டு நிலையறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்திகள்  கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
எதற்கோ ஏங்கித தவிக்கிறது  ?

இருப்பதையெல்லாம்
முற்றாக மறந்துவிட்டு
பறப்பதைப்   பிடிக்கத் துடிக்கிறது  ?

காரணம் அறிந்தவன்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கிறான்

காரண்ம் அறியாதவனே
 சிம்மாசனதிலமர்ந்தும்
 பிச்சைக்காரனாய்  தினம்புலம்பித் தவிக்கிறான் 

Monday, December 21, 2015

சிம்பென்னும் வம்பனை...

தீயவை எல்லாம் சாலை யோரங்களில்
மிக எளிதாய்க் கிடைக்க

தேவையானவைகள்
அவசியமானவைகள்
எல்லாம் கிடைக்காதும்
எங்கோ ஒளிக்கப்பட்டிருக்கும் சூழலில்,

கிடைப்பதே சரியானதென்றும்
எட்ட இருப்பவையெல்லாம்
தேவையற்றவை என்றும்

இளைய சமூகம்
குழம்பிக் கிடைக்கையில்

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

மக்களின் கவனத்தைத்  திருப்ப
இதுவும் ஒரு சதியென
இவனும் ஒரு கருவியென
புரிந்த போதிலும்...

கஞ்சா விற்பதும்
பயன்படுத்துவதும் மட்டுமன்று
மறைவாய் விளைவிப்பதும் குற்றமென்று
.அறியாததுபோல் நடிப்பினும்...

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

தவறுக்கு மண்டியிடாதவரை அவனை
மனிதனென்றே மதியாதீர்

Monday, December 14, 2015

நாங்கள் தயாராகிவிட்டோம்...

மண்ணைக் கீறி
ஆழமாய் விதைக்கப் பட்ட
வீரிய மிக்க விதை மட்டுமல்ல

நெஞ்சைக் கீறி
ஆழமாய் விதைக்கப்பட்ட
 அதீத வெறுப்பும் கூட

நிச்சயம்  அதற்கான காலத்தில்
தடைகள் தகர்த்து
வெளிக் கிளம்பவே செய்யும்

"நிர்கதி " என்ற
சொல்லின் பொருள்
அனுபத்தில் விளங்கும்படியாய்
நாங்கள் நின்ற அந்த ஒரு வார காலம்

"நித்சலன் " எனும்
வழக்கொழிந்த சொல்லுக்கு
நேரடி விளக்கமாய்
நீங்கள் கழித்த அந்த ஒரு வாரம்..

பெருங்கனவினிலும்
நீங்காத நினைவாய்
பெரும் மகிழ்விலும்
உறுத்தும் துயராய்
நீறி பூத்த நெருப்பாய்
ஆழப்பதிந்தே கிடக்கிறது...

சோதனைக்காலங்களில்
உங்கள் மனங்களை
உங்கள் செயலற்ற தன்மையால்
நிர்வாணமாகவே  கண்டுவிட்டோம்

இனி உங்கள்
எந்த முகமூடிக்கும்
எந்தப் பித்தலாட்டப் பார்முலாக்களுக்கும்
நாங்கள் ஏமாறத் தயாராயில்லை

மொத்தத்தில்
சுருங்கச் சொன்னால்
நாங்கள் தயாராகிவிட்டோம்

நீங்கள் தாயாராகிக் கொள்ளுங்கள்
அதுவே ஏமாற்றம் தவிர்க்க எளிய வழி  ..

Thursday, August 6, 2015

மரண பயம்.?

குற்றவாளிபோல் நான் இருக்க
என்னைச் சுற்றி
மகனும் மகளும் மருமகளும்

"நான் என்ன குறை வைக்கிறேன்னு
நீங்களே நேரடியா கேளுங்கோ
காலையில் ஆறு மணிக்கு
ஸ்ராங்கா ஒரு கப் காஃபி
வாக்கிங் போய் வந்ததும்
ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி
பதினொரு மணிக்கு
முளைகட்டிய பயறு ஏதாய்ச்ச்சும்
மதியம் காய்கறியோடு
அளவான சாப்பாடு
சாய்ந்திரம் ஏதாவது ஜூஸ்
ராத்திரி எண்ணையில்லாம
சப்பாத்தி நாண் இப்படி ஏதாவது
முடியுதோ முடியலையோ
நான் சரியாகத்தான் செய்து தந்தேன்
இப்போது ஒரு மாதமாய்  அவர் சரியாக
சாப்பிடரதும் இல்லை
முகம் கொடுத்து பேசரதும் இல்லை"
முந்தானையால் கண்ணீரைத்
துடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்

" கோவில் போய்வர ஆட்டோ
ஆன்மீக டூர் போகணுமா
ஆறு மாதத்துக்கு ஒருமுறை
அதுக்கும் ஏற்பாடு பண்ணித்தாரேன்
என்னிடம் பணம் கேட்கச்
சங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு
நானும் யோசிச்சு யோசிச்சு
முடிந்ததையெல்லாம் செய்யரேன்
அப்படியும் ஏன் இப்பவெல்லாம்
சரியா பேசமாட்டேங்கராருன்னு தெரியலை"
பல நாள் அடக்கிவைத்ததை
கொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்

"மனதில் என்ன குறை இருந்தாலும்
சொல்லுப்பா
எதுன்னாலும் செய்யுறொம்
எங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா"
எனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்
பார்த்துப் போக வந்த மகள்

நான் என்னவெனச் சொல்வது ?
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

ஆட்டுக்குத் தேவையான அனைத்தும் கொடுத்தும்
எதிரில் புலியை கட்டிவைத்த கதையாய்...

வீட்டுக்குள் கரு நாகம்படமெடுத்து நுழைந்ததை
கண்ணாரப் பார்த்தும்
இருப்பிடம் தெரியாது வீட்டுக்குள்
பயந்து திரிபவன் ..நிலையாய் 

நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்
அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்
காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?

எப்படி அவர்களை நோக வைப்பது ?

Saturday, June 20, 2015

விதியும் விதிகளும்

விதி எனில்
விதிக்கப்பட்டது
எவராலும் மாற்ற இயலாதது
என நம்பப்படுவது

விதிகள் எனில்
நம்மால் உருவாக்கப்பட்டது
பயனில்லையாயின்  மாறுதலுக்குட்பட்டது
என ஏற்றுக் கொள்ளப்பட்டது

அருளப்பட்டதான
இறக்கப்பட்டதான நம்பிக்கையில்
மாற்றவே இயலாததான
மதத்தின் பாதுகாப்பில் விதி

அனுபவத்தின் அடிப்படையில்
வகுக்கப்பட்டதே ஆயினும்
முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை எனில்
மாறியாக வேண்டியது
விதிகளின் விதி

மாற வேண்டியவர்கள்

விதியை சொல்லித் தன்
பிழைப்பை ஓட்டுபவர்கள் மட்டுமல்ல

விதிகளைச் சொல்லி
தன்னை நிலை நிறுத்த விரும்புவர்களும் கூட..

அநாகரீகத்தை
நாகரீகமாகச் சொல்லுதல் கூட
சகித்துக் கொள்ளக் கூடியதே

நாகரீகத்தை
அநாகரீகமாகப் போதித்தல்
நிச்சயம் அநாகரீகமானதே

Monday, January 19, 2015

வ(வி)சன கவிதை

பேருந்து நிலையங்களில்
விற்கப்படும் பொட்டலங்களில் இருக்கும்
அவித்த கடலை போலவும்..

அடுக்கு மொழிக்காரரின்
நீண்ட சொற்தொடருக்குள் இருக்கும்
சிறு விஷயம் போலவும்...

தடித்துக் கனத்தத்
தோள் நீக்கக் கிடைக்கும்
சிறு பலாச் சுளைப்  போலவும் 

மாதாந்திர கடனையெல்லாம்
அடைத்தப்பின் மிஞ்சும்
மாதச் சம்பளம் போலவும்....

விளம்பரங்களுக்கு இடையிடையே
வந்து போகும்
தொலைக்காட்சித் தொடர்போலவும்

ஆடம்பர அலங்காரங்களுக்குள்
மூச்சுத் திணறும்
உண்மை அழகு போலவும்

இசையின் இரைச்சலுக்குள்
புதைந்துத் தவிக்கும்
சினிமாக் கவிதை போலவும்
...
இலக்கண விதிகளுக்குள்
கருவையும்  கருத்தையும்
ஒண்டிக்கிடக்க விரும்பாதுதான்..

மரபின் மாண்பினை
நன்கு அறிந்தும்
ஒதுங்கிச் செல்கின்றோம்

காலச் சூழலில்
துரித உணவே
சாத்தியம் என்பதாலேயே

பந்தியைத் தவிர்த்து
கையேயேந்தி பவனில்
"கொட்டிக் " கொள்கின்றோம்