Saturday, January 10, 2015

அதிருப்தி எனும் அட்சயம்

ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னைப்
புரட்டிப்   போட்டுப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை
எங்கோ நீருபூத்துக்  கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரியத்  துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிவிட்டு
வேறொருவனாக்கிப்  போகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது.....

எப்போதும்
 எதிலும்
 என்றும்
திருப்தியடையாத
என்  கவிமனது

13 comments:

KILLERGEE Devakottai said...

எப்போதும்
எதிலும்
என்றும்
திருப்தியடையாத
என் கவிமனது

உண்மையான வார்த்தை கவிஞரே...
எனது பதிவு மோதகமும், அதிரசமும்.

பழனி. கந்தசாமி said...

உள்ளத்தில் எழும் ஆதங்கங்களே கவிதைகளாக வெளிவர முடியும்.

திண்டுக்கல் தனபாலன் said...

திருப்தி அடையாமல் தொடரட்டும் ஐயா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல படைப்பாளியின் குணம் எவ்வளவு சிறப்பாக படித்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று சிந்திப்பது. அந்தப் பண்பு உங்களுக்கும் உண்டு

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! நமது படைப்புகளில் திருப்தி என்பது இல்லாமல் இருந்தால்தான் மேலும் மேலும் அதைச் செம்மைப்படுத்தி நல்ல படைப்புகளைத் தர முடியும். இது ஒரு நல்ல படைப்பாளியின் குனம். கர்வமற்ற குணம். வாழ் நாள் முழுவதும் தேடித் தேடிப் படிப்பதின் ஆர்வம் உள்ள தன்மையை,தங்களின் தன்மையை அழகாய் உரைத்துள்ளீர்கள்!

Bagawanjee KA said...

#"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் #
இது எனக்கும் பொருந்தும் :)
+1

புலவர் இராமாநுசம் said...

திருப்தி உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ! படிப்பவர்களுக்கு உறுதியாக உண்டு!இரமணி!

அம்பாளடியாள் said...

இந்த அதிதிருப்தியே வெற்றியின் ஏணிப்படி அந்த வகையில் தாங்களும் வெற்றியாளரே ரமணி ஐயா .வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்ச்சி காண .

‘தளிர்’ சுரேஷ் said...

படைப்பாளி திருப்தி அடைந்துவிட்டால் அப்புறம் புது படைப்புக்கள் உருவாகாதுதான்! அருமை! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

ஆங்கிலத்தில் Contentment smothers improvement எனச் சொல்லலாம்.ஆனால் தமிழில் போது மென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றுதான் அதிகம் போதிப்பிக்கப் படுகிறது. ஒரு கவிதை உருவவதை அழகுபடச் சொல்லி இருக்கிறீர்கள்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
தத்துவம் நிறைந்த வரிகள் கவியாக புனைந்த விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

மகிழ்ச்சி, சோகம், அதிர்ச்சி, ஆச்சரியம் – எதுவாக இருந்தாலும் கவிஞனின் உள்ளத்து எழும் கவிதை உணர்வுக்கு ஏது தடை? என்பதனை அழகாக வெளிப்படுத்திய வசன கவிதை.
த.ம.8

Iniya said...

தேடல்கள் அதிருப்தியில்
தானே ஆரம்பிக்கிறது
அதனாலேயே பயணம்
தொடர்கிறது முன்னோக்கி
முரண்பாடின்றி.

உண்மை நிலையை உணர்தியது.
இனியா தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ...!

Post a Comment