Monday, April 30, 2018

அதிகம் படித்த மூஞ்சூறு கழனிப்பானையிலே...

அனைத்து மதப் பானைகளிலும்
மேற்பரப்பில் மட்டுமே
உண்ணச் சகிக்கா
அதிகம் வெந்த சோறு

பக்குமாய் வெந்து உள்ளிருக்கும்
சோற்றினை அறிந்து கொள்ளமுடியாதபடி...
அதனை  முற்றிலுமாய்  மூடி மறைத்தபடி

மேற்  கவளம் நீக்கினால் போதும்
ஆம் ஒரே ஒரு கவளமெடுத்து
கழனிப்பானையில் எறிந்தால்போதும்

மீதம் உள்ளிருப்பது எல்லாமே
உடலுக்குறுதி சேர்க்கும்
உன்னதச் சோறு தானே

அதிகம் படிந்த முன்சோறு
கழனிப்பானயிலே என்பதனை
அதிகம் படித்த  மூஞ்சூறு கழனிப்பானையிலே
எனத் தவறாய்ப் புரிந்து கொண்டதைப் போல்...

மேற்சோறேபானைச் சோறு என
இன்னும் எத்தனை நாள்
தவறாய்ப் புரிந்து திரியப்  போகிறோம் ?

மதத் தீவீரவாதிகளின் வாதத்தில் மயங்கி
மதத்தின் அருமையை
மறந்து திரியப் போகிறோம் ?

Saturday, April 28, 2018

..தனக்கான காலம் கடந்தும் ..

காலங்கடக்கும்
சக்தியுள்ள கவிதைக்கான
கரு ஒன்று
வளர்ச்சியடைய விரும்பாது
அவனுள்
கருவாகவே சுழன்று கொண்டிருக்கிறது
தனக்கான காலம் கடந்தும்  ..

அவன் படைப்பின் மீதான
சிலரின் விமர்சனம்
ஒருதலைப்பட்சமானதுதான்
என்றாலும்
இவ்வளவு உணர்சிவசப்படுதல் பிடிக்காது

அவனைப் பாராட்டும் பலரின்
பாராட்டுக்கள் எல்லாம்
மிக நியாயமானதுதான்
என்றாலும்
இவ்வளவு பெருமிதம் கொள்வதை விரும்பாது

சம நிலையடையும்
சமயம் வரட்டும் என்று...

கருவாகவே சுழன்றுகொண்டிருக்கிறது
காலம் கடக்கும் சக்தி கொண்ட
வெகு அற்புதமான கரு ஒன்று.
தனக்கான காலம் கடந்தும்  ..
.

Wednesday, April 25, 2018

மட்டுமேயை மட்டும்....

சினிமாவினால் தமிழில்
பிடிக்காத வார்த்தையாய்
பிரபலமாகிப் போன
"மன்னிப்பைக் " கூட
என்னால் மன்னித்து விட முடியுது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
மன்னிக்கவே முடியவில்லை  ( சினிமாவினால் )

அதிகப் பட்சவிலை என்பது
அநியாயக் கொள்ளைதான் என்றாலும்
உணமையைச் சொல்லித் தொலைப்பதால்
அதைக் கூட
பொறுத்துத் தொலைக்க முடிகிறது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
ஜீரணிக்கவே  முடியவில்லை  (சினிமாவினால் )

ஏதோ மிகக் குறைவான விலையை
மிகக் சரியாய்ச் சொல்வதைப் போல
எம்மை மயக்கிட நினைக்கும்
இந்த "மட்டுமேயை  "
பொருளின் விலைப்பட்டியலில்
கண்டபோதெல்லாம்
எம்மை மயக்க நினைப்பதுபோல்
எம்மை மடையனாக்குவது போல் தெரிவதால்
                                         (சினிமாவினால் )

Thursday, April 19, 2018

தப்புக்கும் தவறுக்கும்...

தப்புக்கும் தவறுக்கும் இருக்கும்
வேறுபாடு புரியாததால் தான்
தப்புக்கான தண்டனையை தவறுக்கும்
தவறுக்கான மன்னிப்பை தப்புக்கும்
தப்புத் தப்பாய்த் தந்து
நாட்டில் தப்புக்களை
தாறுமாறாய் வளரவிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

நகத்தால் செய்து முடிக்கவேண்டியதை
கோடாலி கொண்டு பெயர்த்துக் கொண்டும்
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கவேண்டியதை
நகத்தால் கீறிக் கொண்டுமிருக்கிறோமா ?
அதன் காரணமாகவே
நச்சு மரங்கள்இன்னும்
செழித்து வளர உரமிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

இல்லையெனில்
எங்கோ எவனோ ஒரு கயவன்
செய்து தொலைக்கும் கயமைக்கு
அவனுக்கு எதிராய் ஒன்று திரளாது
கயமைக்கு எதிராய் கொதித் தெழாது
 ஜாதி மதப்  பூச்சுப் பூசி
நாட்டின் இறையாண்மைக்கு
ஊறு விளைவிப்போமா ?

இல்லையெனில்
நம்மை கொதி நிலையிலேயே
அன்றாடம் நிற்க வைத்து
போராட்டக் களத்தில் குதிக்க வைத்து
தன்னை வளர்த்துக் கொள்ள நினைப்போரை
புரிந்துக்கொண்டு விலகாது
தொடர்ந்து மோசம் போவோமா?
தேச ஒற்றுமையைக்கு ஊறு விளைவிப்போமா ?

இனியேனும்
தப்புக்கும் தவறுக்குமான
வேறுபாட்டை மட்டுமல்ல
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும்
முடிச்சு போட நினைப்போரை
எதனையும் ஜாதி மதத்திற்குள்
துணிந்து நுழைக்க முயல்வோரைக்
கண்டு ஒதுங்கிச் செல்வோமா ?
நாடேபெரிதென மனதில் உறுதி கொள்வோமா ?

Monday, April 16, 2018

கவிதைக் கரு

கனல் புணர
மனம் குளிர்ந்து
ஒளியாய் உருக்கொள்ளும்
பாக்கியமற்று

காற்றின் அணைப்பில்
மனம் வெறுப்புற்று
மெல்ல மெல்லக் கரையும்
கற்பூரமாய்

உணர்வுப் புணர்வில்
மதிமயங்கி
கவியாக உருவாகும்
பாக்கியமற்று

சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக்  கரு

என்றும் போலவே
மாறாது
இன்றும் இப்போதும்

Wednesday, April 11, 2018

கவிதையை நிறைவு செய்யலாமே

போர்க்களமென
இதிகாச காலங்களில்
ஓரிடமிருந்தது
வீரர்கள் மட்டும் தம் வீரம் காட்டும்
ஒரு பெரும் மைதானமாய்...

இன்று போல்
எந்த விதத்திலும் காரணமாகாத
வெகு ஜனங்கள்
வாழும் பகுதியாய் அல்லாமல்

வீரர்களென
மன்னர் காலம் வரை
மனிதர்கள் இருந்தார்கள்
நேருக்கு நேர் நின்று போர்புரிதலே
வீரத்திற்கு இலக்கணமென

இன்றுபோல்
எங்கிருந்தோ நள்ளிரவில்
எவரோ குண்டுமழை
பொழிதல் போலல்லாமல்..

மன்னர்களென
ஒரு குடும்பமே தொடர்ந்து
நாட்டை ஆண்டுவந்தது
மக்களுக்காக வாழ்வதே
தமக்கான பணியென்று குழப்பமில்லாமல்

இன்றுபோல்
தம் குடும்ப நலன் காக்க
தம் குடும்பமே பதவியில் தொடரவேண்டும்
என்னும் சுய நலம் போலல்லாமல்

இவை அனைத்திற்கும் காரணம்...

(அவரவருக்குத் தோன்றும் காரணங்களை
சுருக்கமாய்ப் பதிவு செய்து
கவிதையை நிறைவு செய்யலாமே )

நல்வாழ்த்துக்கள்

      

நமது வலையுலக நண்பர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்
கவிதைப்  போட்டிகள் நடத்திப் பரிசுகளும்
சான்றிதழ்களும்வழங்கிப் பெருமைகொண்ட
இலங்கையை  வாழ்விடமாகக்கொண்ட
கவிஞர் ரூபன் அவர்களால் துவங்கப்பட இருக்கும்
மாதாந்திர தமிழ் இலக்கிய இதழ்
தமிழ் இலக்கிய வானில் தங்கத் தாரகையாய்
மிளிர்ந்திட வேண்டும் என
வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்

வாழ்த்துக்களுடன் ....




Thursday, April 5, 2018

அந்த முறையே கவிதை எனநாம் தெளிவோம்

சொல்ல நினைப்பதை
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்