Saturday, February 15, 2025

தொடரத்தான் வேண்டும்..

 "சொல்ல வேண்டியவைகளையெல்லாம்

நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு  ".....

மனதின் மூலையில் புகையாய்
 கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரைந்து பரவி
என்னைத்  திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய்த தெரியவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 எப்படியெல்லாம மாறிவிட்டன ?

வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்
எத்தனை எத்தனை  மாறுதல்கள் ?

வசதி வாய்ப்புகளே    தேவைகளை முடிவு செய்ய

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய...

சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய...

செல்வமும் செல்வாக்கும்  நீதியை முடிவு செய்ய ..

உறவுகளைக் கூடப்  பயன் முடிவு செய்ய...

உணவினைக்  கிடைக்கும் நேரம் முடிவு செய்ய...

உடலுறவைக் கூடக்  கிழமை முடிவு செய்ய..

காலம் புதுப் புதுச் சூழலை உருவாக்கிப்போக ..

புதுச் சூழல் புதுப் புதுப் பிரச்சனைகளை உண்டாக்கிப்போக ...

சட்டெனப் பற்றிய சிந்தனை நெருப்பு
கொழுந்து விட்டு   எரியத் துவங்க

 புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
  பதிவு செய்யப்படவேண்டிய பட்டியல்
அனுமார் வாலாய் நீளத் துவங்குகிறது

என்னுள்ளும் இதுவரை குட்டையாய்
 அடங்கிக் கிடந்த உற்சாகம்
கங்கைபோல்  பரந்து விரியத் துவங்குகிறது

Tuesday, January 28, 2025

ஒளி ஏற்றி இருள் நீக்கி..

 செய்யக் கூடாததைச் செய்து

பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாததைப்
பேசியவர்கள் இழந்ததை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
 அதிகம் கெட்டுத்தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
தெளிவாய் இதை நம் மனதில் நிலை நிறுத்துவோம்.
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Friday, January 24, 2025

மீண்டும் ஜென் சித்தப்பு

 "எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "

கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Tuesday, January 21, 2025

வாணீ...என்னுள் வா நீ..

 நாவும் மனமும் இனிக்க

நவின்று மகிழ்ந்துச் சுகிக்க
ஊரும் நாடும் என்னை
உச்சி மோந்து இரசிக்க
பேரும் புகழும் நிழலாய்
விடாது என்னைத் தொடர
நூறு கவிகள் நாளும்
பாட வேணும் நானும்

நாளும் கண்டு இரசித்த
அழகுக் கோலம் எல்லாம்
நாளும் உணர்ந்துத் திளைத்த
நல்ல உணர்வு எல்லாம்
நீளும் எனது கவியில்
இயல்பாய் இணையும் வண்ணம்
நாளும் கவிகள் நூறு
நவில வேண்டும் நானே

கற்றுத் தேர்ந்தோர் உறவில்
கிடைத்தக் கேள்வி ஞானம்
குட்டுப் பட்டு நாளும்
கற்ற உண்மை ஞானம்
முற்றும் விடுதல் இன்றி
முழுமை பெற்ற தாக
நித்தம் நூறு கவிதை
படைக்க வேண்டும் நானே

வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !

Saturday, January 18, 2025

எம் மதுரை...

 மஞ்சளோடு குங்குமமும்

மணக்கின்ற சந்தனமும்
மங்களமாய் ஊரெங்கும்
மணக்கின்ற மாமதுரை

சுந்தரனாம் சொக்கனோடு
சரிபாதி எனஆகி
எங்களன்னை மீனாட்சி
எமையாளும் சீர்மதுரை

அன்னைமடித் தவழ்ந்துதினம்
அகம்மகிழும் குழந்தையாக
மண்தொட்டு மகிழ்ந்தோடும்
வைகைநதித் தண்மதுரை

மணக்கின்ற மல்லியதன்
மணம்போல நிறம்போல
குணம்கொண்ட நிறைமாந்தர்
நிறைந்திருக்கும் நன்மதுரை

நகரெல்லாம் விழாக்கோலம்
நாளெல்லாம் கொண்டாட்டம்
தவறாதுக் காண்கின்ற
தவச்சீலம் தென்மதுரை

தூங்காதப் பெருநகரம்
கோவில்சூழ் மாநகரம்
ஓங்குபுகழ் தமிழ்வளர்த்த
ஒப்பில்லாத் திருமதுரை

தென்மதுரை தண்மதுரை
சீர்மதுரை வாழியவே
என்றென்றும் புகழ்மங்கா
எம்மதுரை வாழியவே







நேரம்..


செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. 


அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். 


செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். 


எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.


“யார் நீ? உனக்கென்ன வேண்டும்?”


“நான் எமதர்மராஜனின் ஏவலாள். 


இன்றோடு, 


இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. 


புறப்படு என்னோடு!”


“நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. 


நீ போய்விட்டு சில காலம் கழித்து வா!”


“அது முடியாது. 


நீ கிளம்பு என்னோடு!”


செல்வந்தனுக்கு இம்முறை சற்று கோபம் வந்தது. 


“நான் யார் தெரியுமா? 


இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர்களுள் ஒருவன்!”


“அனைவரையும் நான் அறிவது போலவே, நீ யார் என்பதும் தெரியும். 


உன் வரலாறு என்ன என்பதும் எனக்கு தெரியும். 


பேச நேரம் இல்லை. 


புறப்படு!”


“என்னுடைய சொத்து மதிப்பில் ஒரு 10 % உனக்கு தருகிறேன். 


அதுவே 50 கோடிகளுக்கு பெறும். 


எதுவுமே நடக்காத மாதிரி போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு மாசம் கழிச்சாவது வாயேன்!”


“நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? 


நீ உடனே கிளம்புகிறாயா இல்லை, உன்னை கட்டி இழுத்துக்கொண்டு போகவா?”


அடுத்த சில நிமிடங்களில், தன்னுடைய நேரத்தை நீட்டிப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த எமதூதனுடன் மும்முரமாக இறங்கினான். 


ஒரு மாதம் என்பதை ஒரு வாரம் ஆக்கினான். 


சொத்தில் பாதியை தருவதாகவும் சொன்னான். 


கடைசியில் சொத்தில் முக்கால் பங்கு தருவதாகவும் ஒரு நாள் அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டான். 


ஆனால் எமதூதன் எதற்குமே மசியவில்லை.


இறுதியில், 


தன்னால் எமதூதனை படியவைக்க முடியாது என்று புரிந்துகொண்டான்.


தனது தோல்வியை ஒப்புக்கொண்டு “சரி… இறுதியாக இதையாவது செய். 


என்னுடைய சொத்து முழுவதையும் கிட்டத்தட்ட பல நூறு கோடிக்கு மேல் மதிப்பு உள்ளது, அத்தனையும் உனக்கு எழுதித் தருகிறேன். 


எனக்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அவகாசம் கொடு. 


என் பெற்றோரையும், மனைவியையும், குழந்தைகளையும் அழைத்து நான் அவர்களை பிரியப்போவதாகவும் நான் அவர்களை மிகவும் நேசிப்பதாக சொல்லவேண்டும். 


இதுவரை நான் அவர்களிடம் என் அன்பை சொன்னதேயில்லை. 


அப்புறம் நான் என் வாழ்க்கையில் மிகவும் காயப்படுத்திய இருவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்! 


எனக்கு தேவையெல்லாம் ஐந்து நிமிடம் மட்டும் தான்! 


இதையாவது செய் ப்ளீஸ்!!” எமதூதன் பார்த்தான். 


“நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன். 


இந்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை சம்பாதிக்க உனக்கு எத்தனை காலம் பிடித்தது?”


“30 வருஷம் நண்பா. 30 வருஷம். ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துக்கு 30 வருஷமா நான் சம்பாதிச்ச சொத்தை தர்றேன்னு சொல்றேன். 


இது ரொம்ப பெரிய டீல். 


பேசாம வாங்கிக்கொண்டால் உன் வாழ்க்கையில் இனி நீ ஒரு நாள் கூட வேலை செய்யவேண்டாம். 


பத்து தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்!”


“எனக்கு உண்மையிலேயே இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியலே. 


முப்பது வருஷமா நீங்க பாடுபட்டு சம்பாதிச்சதை 5 நிமிஷத்துக்காக தர்றேன்னு சொன்னா… 


வாழும் போது ஏன் அந்த ஒவ்வொரு நிமிடத்தோட மதிப்பையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? 


முடிவு வரும்போது தான் நேரத்தோட அருமை உங்களுக்கு தெரியுமா? 


நேரத்தை நீங்க உண்மையிலேயே எப்படி மதிப்பிடுறீங்க? 


உங்களோட முக்கியத்துவங்கள் (PRIORITIES) என்ன? 


வாழும்போதே ஏன் இப்போ சொன்னதெல்லாம் செய்யலே? 


யார் எத்தனை கோடிகள் கொட்டிகொடுத்தாலும், அழுது புரண்டாலும் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள நேரத்தை தவிர ஒரு வினாடி கூட உயிருடன் இருக்கமுடியாது!!”


அடுத்த சில நொடிகளில், 


செல்வந்தனின் உயிர் அவனது உடலில் இருந்து பிரிந்தது. 


அவனுடைய பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களால், கடைசியில் அவன் செய்ய விரும்பிய செயலை செய்ய ஜஸ்ட் ஒரு ஐந்து நிமிடங்களை கூட வாங்க முடியவில்லை.


நேரத்தை ஒரு போதும் வீணடிக்காதீர்கள்.


வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியின் மதிப்பையும் உணருங்கள்.


உங்கள் குடும்பத்தார் உட்பட அனைவரையும் நேசியுங்கள். 


நல்லவற்றுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்... படித்ததில் பிடித்தது..

Thursday, January 16, 2025

காலத்தை வென்றவன்...

 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும் காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்

யார் பணக்காரன்..?

 யார் பணக்காரன்❓ யார் ஏழை❓

••••••••••••••••••••••••••••••••••••••••••••••


இதென்ன கேள்வி ... 


பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் . 


கஷ்டப்படுபவன் ஏழை . 


அது தானே உங்கள் பதில்❓


இந்த பதில் சரியா❓


சம்பவம் 1 

"""""""""""""""""""

ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு செல்கிறாள் புடவை எடுக்க .


 " எனக்கு கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள் . 


விலை மலிவாக இருக்கட்டும் . 


என் மகனுக்கு திருமணம் . 


என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும் ... " என்கிறாள் . 


சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில் மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து பணத்தை கட்டிவிட்டு எடுத்துச் சென்றாள் . 


சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறாள் . 


" என் முதலாளியம்மா பையனுக்கு கல்யாணம் . 


நல்ல சேலையா ஒன்னு அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும் . 


விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லை . 


நல்ல டிசைன்ஸ் எடுத்துப் போடுங்க என்றாள்..


சம்பவம் 2 

"""""""""""""""""""

ஒரு பெரிய இடத்துப் பெண் , 


ஒருமுறை பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாள் . 


அவளது கைக்குழந்தை திடீரென பாலுக்காக அழ , 


ஹோட்டல் நிர்வாகத்திடம் 


" குழந்தைக்கு பால் கிடைக்குமா❓ " என்றாள் . 


" எஸ் மேடம் ... கிடைக்கும் . 


ஒரு கப் நூறு ரூபாய் ஆகும் " என்று பதில் வந்தது . 


" பரவாயில்லை ... 


உடனே ஒரு கப் வேண்டும் " என்று கூறி ஆர்டர் செய்து பாலை வரழைத்தாள் . 


அவள் ஊருக்கு திரும்பிப் போகும்போது வழியில் மறுபடியும் குழந்தை பாலுக்காக அழ , 


சாலையோரம் இருந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி , 


பால் கிடைக்குமா என்று விசாரித்தாள் . 


" பசும்பாலே இருக்கும்மா " என்று கூறி அக்கடைக்கார் , 


பசும்பால் கொடுத்தார் . 


" ரொம்ப தேங்க்ஸ்பா ... 


எவ்ளோ ஆச்சு❓ " 


" பணம் வேண்டாம்மா ... 


குழந்தைங்க குடிக்கிற பாலுக்கு நான் காசு வாங்குறதில்லை " என்று பதில் சொன்னவர் , 


" இன்னும் வேணும்னாலும் வாங்கிக்கோங்க . 


போற வழியில குழந்தை அழுதா என்ன பண்ணுவீங்க ❓ " என்றார் பரிவுடன் . 


சம்பவம் 3 

"""""""""""""""""""

அலுவலகத்துக்கு புறப்படும்போது தான் அந்த இளைஞன் கவனித்தான் . 


செருப்பு பிய்ந்துபோயிருந்தது . 


பிரதான சாலை வந்ததும் அந்த செருப்பை தைக்க செருப்பு தைப்பவரை தேடிச் சென்றான் . 


ஒரு நபர் சாலையோரம் ஒரு குடைக்கு கீழே செருப்புக்களை தைத்தபடி அமர்ந்திருந்தார் . 


வண்டியை அவர் முன் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி , செருப்பை அவர் முன் போட்டவன் , 


" இதை கொஞ்சம் தைச்சு கொடுங்க . 


புது செருப்பு . 


எப்படி பிஞ்சதுன்னு தெரியலே ... " ' 


எவ்ளோப்பா ஆகும்❓


" செருப்பை வாங்கி ஆராய்ந்த அந்த தொழிலாளி , 


' இருபது ரூபா ஆகும் சார் ... " 


" இருபது ரூபாயா❓


பத்து ரூபாய் வாங்கிக்கோங்க .... 


* அந்த இளைஞரை சற்று தலையை  நிமிர்த்தி பார்த்தார் . 


கதிரவனின் கதிர்கள் சுட்டெரித்தது . 


சரியாக பார்க்க முடியவில்லை . " 


இருபதுக்கு கம்மி தைக்க முடியாது சார் ’ " 


என்ன இதுக்கு போய் இருபது ரூபாயா❓


பதினைஞ்சு வாங்கிக்கோங்க ' 


" நான் கம்மியாத் தான் சொல்லியிருக்கேன் . 


சொல்யூஷன் போட்டு ஒட்டி தைக்கணும் . 


அப்போ தான் தையல் நிக்கும் " 


இளைஞனின் பேரம் தொடர்ந்துகொண்டிருந்தது . 


இதனிடையே ... 


டீ ஆர்டர் எடுக்க பக்கத்து டீக்கடை சிறுவன் வந்தான் . 


" ஒரு டீ கொண்டு வாப்பா ..... 


சார் டீ சாப்பிடுறீங்களா❓❓


அந்த இளைஞனின் பதிலுக்கு காத்திராமல் , 


" சாருக்கும் ஒரு டீ சேர்த்து ரெண்டு டீ கொண்டுவாப்பா ... " என்றார் . 


" இல்லே ஐயா வேண்டாம் ... ! " 


பரவாயில்லை சார் ... 


சாப்பிடுங்க ... 


நல்லா இருக்கும் . 


இந்த ஏரியாவுல முப்பது வருஷமா இருக்குற கடை அது ... 


" சற்று நேரத்தில் சூடான டீ வந்தது . 


அந்தப் பெரியவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய அந்த இளைஞன் நெளிந்தபடி அந்த டீயை அருந்தினான் . 


செருப்பு தைத்து முடித்த பிறகு . 


பைசா கொடுக்கும்போது சாப்பிட்ட டீக்கும் சேர்த்து தர , 


அந்த பெரியவர் சொன்னார் ...


 " செருப்பு தைச்சதுக்கு மட்டும் காசு கொடுங்க ... 


டீக்கு வேண்டாம் ...


 என்னோட கஸ்டமர் நீங்க ... 


உங்களை உபசரிக்கிறது என்னோட கடமை .. " என்றார் . 


தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தம் அருகே உண்மையில் நடந்த சம்பவம் இது. 


நம் வாசகர் ஒருவர் கவனித்த சம்பவம். 


இங்கு யார் பணக்காரர்❓❓


காரில் வத்து விலை குறைந்த புடயை வாங்கிச் சென்ற அந்த சீமாட்டியா❓


அல்லது 


நடந்து வந்து விலையுயர்ந்த புடவையை தனது எஜமானிக்கு வாங்கிச் அவள் வீட்டு வேலைக்காரியா❓


குழந்தையின் பாலுக்கு கூட அறியாய விலை வைத்த அந்த ஸ்டார் ஓட்டல் மேனஜரா❓


அல்லது 


குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு பணம் வேண்டாம் . என்று சொன்ன இந்த சாலையோர டீக்கடைக்காரரா❓


செருப்பு தைப்பவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய பைக்கில் வந்த இளைஞரா❓


அல்லது 


டீயை அவருக்கு கொடுத்து உபசரித்த செருப்பு தைப்பவாரா❓


பணக்காரன் , 


ஏழை குறித்த தவறான மதிப்பீடுகள் ( WRONG DEFINITION ) ஆண்டாண்டு காலமாக நமது சிந்தனையில் ஊறிப்போயிருக்கிறது . 


நம்மால் இந்த உலகை மாற்றமுடியுமா என்று தெரியாது . 


குறைந்த பட்சம் இதை  படிப்பவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தலாம் . 


அவர்கள் உலகை மாற்றுவார்கள் . 


பணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் பணக்காராகிவிடமுடியாது . 


அதே நேரம் , 


பணம் இல்லாததால் ஒருவர் ஏழையும் கிடையாது . 


பணத்திற்கான ஓட்டத்தில் நாம் மனிதர்களை பொருட்படுத்துவதில்லை . பணத்தை பெரிதாக கருதாத 


இதயங்களை கவனிக்க மறந்துவிடுகிறோம் . 


தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவுவோம் . 


அது தரும் மனநிறைவை பணம் நிச்சயம் தரமுடியாது ! 


தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே.


 அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே 


பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை 


இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை....படித்ததில் பிடித்தது.