Wednesday, March 2, 2011

தேர்தல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'

14 comments:

R. Gopi said...

மிகச் சரி. தேர்தல் ஆணையம் பற்றிய பாடல் நிதர்சனம்.திருவாளர் பொதுஜனம் எப்போது திருந்துவாரோ அதுவராய் அவலங்கள் தொடரும்

G.M Balasubramaniam said...

துண்டுக்குப் பதில் வேட்டியையே விரித்துக்கட்டும் கெட்டிக்கார திருவாளர் பொதுஜனம் அம்மணமாவது தெரியாமல் மெய் மறந்து நிற்பது ஆச்சரியமில்லையே. அணில்களும் பட்டாம் பூச்சிகளும் யாரென்றுதான் விளங்கவில்லை.ஒரு சமயம் ஓட்டுப் போடாத புத்திசாலிகளோ.?அதிகாரமிக்க ஆணையம்தான் ஐயோ பாவம்...

raji said...

//பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்//

வெளியே வந்தாலும் உள்ளே இருந்தாலும்
துன்பம் திருவாளர் பொது ஜனத்துக்குத்தான்.இது என்று மாறுமோ?


*******************************


எனது பதிவில் தங்களை " பெயர்க்காரணம் "
தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்துள்ளேன்

படித்து பார்க்கவும்

அழைப்பிற்கிணங்கி பதிவை தொடர வேண்டுகிறேன்

http://suharaji.blogspot.com/2011/03/blog-post_03.html

Chitra said...

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்


.....இதை விட தெளிவாக சொல்ல முடியாது. உங்கள் கவிதைகளை ஆர்வமாய் வாசிக்க ஆரம்பிச்சாச்சு. கருத்துக்களின் செறிவுடன், மிளிர்கிறது.

எல் கே said...

சாட்டையடி .. கோபால் சார் சொன்ன மாதிரி

//அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை///

புரியலை. ஒருவேளை ஓட்டுப் போடாத இளைஞர்/இளைஞிகளை சொல்றீங்களோ ?

vanathy said...

நச் என்ற கவிதை. இப்படி எழுத உங்களால் மட்டுமே முடியும்.

Yaathoramani.blogspot.com said...

ஜி.எம் பி சார்,எல்.கே சார்
அணில்களும் பட்டாம்பூச்சிகளும் என
இந்த மிடில் கிளாஸ் மாதவன்களைத்தான்
சொல்லியுள்ளேன்
இவர்கள் ரொம்ப நல்லவர்கள்
அரசியலை அக்குவேராக ஆணிவேராக
அலசுவார்கள்.ஐ.நா.சபை செயலாளருக்குக் கூட
வீட்டுக்கூடத்தில் அமர்ந்து சவால் விடுவார்கள்.
ஆனால் தேர்தல் காலங்களில் எந்த பிரச்சனையிலும்
மாட்டிவிடக்கூடாது என்பதற்காக
வாசல் பக்கம் வருவதைகூட குறைத்துக்கொள்வார்கள்
அப்புறம் எங்கே ஓட்டுச் சாவடிக்குப் போவது?
இந்த நல்லவர்கள்தான் அனைத்து தீமைக்கும்
காரணம் என்ற எண்ணம் எனக்கு உண்டு

MANO நாஞ்சில் மனோ said...

//துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்//

சரியான சாட்டையடி....

இராஜராஜேஸ்வரி said...

"விட்டேத்தியாய்" உலா வரும்
நல்லவர்கள்தான் அனைத்து தீமைக்கும்
காரணம் .

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மின்னஞ்சலில் அனுப்பிய என் பின்னூட்டம் உங்களை அடைந்ததா ரமணி சார்?

இராஜராஜேஸ்வரி said...

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் //
விதைக்கும் போதே அறுவடைக்கும் உத்தரவாதம்.

மாதேவி said...

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

jothi said...

க‌ல‌க்க‌ல் ப‌திவு,.. அடுத்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு த‌ன் நிம்ம‌தியான‌ வாழ்க்கைக்கு இந்த‌ தேர்த‌ல் முக்கிய‌ம் என‌ கோவ‌ணான்டிக‌ளுக்கு தெரிய‌வில்லை

ஆனந்தி.. said...

/கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்//

அண்ணா..மதுரையில் எங்க ஏரியா வில் இப்பவே கவர் கொடுக்க ஆள் போட்டாங்க...:))) உங்க ஏரியா வில் அண்ணா?????

Post a Comment