Wednesday, March 30, 2011

கேள்வியே......கேள்விகளாய்.

.. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
 போகிற போக்கில் 
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
 அவனுக்கு எப்படி புரியச் சொல்வது ?

 கொத்துகிற தூரத்தில் சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
 சிறுமைகளும் துரோகங்களும்
 என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
 அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
 ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
 அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
 அவைகள் அடங்காது சீறிக் கொத்த
 ஒவ்வொரு கணமும்
 நான் நொந்து வீழ்வதும்
 ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
 சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
 உணர்வுகள் பொங்கிப் பெருக
 நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினை
 திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
 திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
 வார்த்தைகள் கிழிிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
 கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளை பிரித்துப் போட்டுக் காட்டும்
 பண்டித விளையாட்டா படைப்பு ?


இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
 இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
 இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
 எது நிர்ணயம் செய்யக்கூடும்?
பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
 ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனை கலைத்துவிட்டுப் போவதும்
 எங்கோ தலைதெறிக்கப் போகும்
 ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்
விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
 இணைகிற இணைப்பு வீணாகிப்போக
 வேண்டா வெறுப்பாக புணரும் நாளின்
 கரு தங்கிச் சிரிப்பதையும்
எப்படி எனப் புரிந்து போனால்
அவனுக்கு எல்லாம் புரிந்து போகுமோ ?

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முத்தான முத்திரை வரிகளை வெகுவாக ரசித்தேன்:

//ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
அவைகள் அடங்காது சீறிக் கொத்த//

//தலையணைக்குள் மெத்தையினை
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிற கணங்களை//

// இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாக புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும் //

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து தாருங்கள்!

Chitra said...

தலையணைக்குள் மெத்தையினை
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
வார்த்தைகள் கிழிிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?


...simply superb!!!!! இந்த வரிகளில், உங்கள் தனித்தன்மை புரிகிறது . அசத்திட்டீங்க!

இராஜராஜேஸ்வரி said...

சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
வேதனைத்தருணங்களை வார்த்தைகளில் வடித்தது தங்கள் கருத்துக் கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

முயன்றபோதெல்லாம் வராமல் திடுமென வந்து நிற்பதும் கவிதைதானே..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்
என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக//
சிறுமைகளும் துரோகங்களும் அதிகரித்துப் போனது தான் இன்றைய அவல நிலை.

குறையொன்றுமில்லை. said...

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளை பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?
இல்லியே?

G.M Balasubramaniam said...

DUE TO SITUATIONS BEYOND MY CONTROL I COULD NOT MAKE MY PRESENCE IN THE BLOGWORLD. YOU HAVE BEAUTIFULLY BROUGHT OUT THE PREDICAMENTS OF A WRITER .YOU ARE RIGHT. "PATAIPPU" IS NOT JUST THE FLOW OF WORDS ALONE. IT SHOULD HAVE A LIFE, A MEANING, A PURPOSE. BEST WISHES RAMANI SIR.

அகலிக‌ன் said...

தனக்கான வார்த்தைகளை தானே தேர்ந்தெடுத்துக்கொள்வதுதான் படைப்பு.
அந்த ரசவாதம் நிகழ அனுமதிது நிகழும்போது ஏற்படும் அவஸ்த்தைகளை
ஏற்றுக்கொண்டு அது வெளிப்பட உதவும் ஒரு தாயாய் இருப்பவன்தான்
படைப்பாளியே தவிர சோளம் போட்டால் பாப்கார்னாய் கொட்டும் எந்திரமல்ல‌
படைப்பாளி இது புரிந்தவர்கு புரியட்டும் புரியாதவர்கு புரிய வாழ்த்துக்கள்.
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்.

RVS said...

//கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனை கலைத்துவிட்டுப் போவதும்//
வாவ்! சூப்பெர்ப். கண்ணுல ஒரு நிமிஷம் வந்துட்டு போச்சு.. ;-))

MANO நாஞ்சில் மனோ said...

//கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளை பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?//

அடடடா குரு சூப்பர்.....

MANO நாஞ்சில் மனோ said...

வார்த்தைகளில் தமிழ் சும்மா சதிராடி விளையாடி அசத்துது போங்க....

vanathy said...

கலக்கலா எழுதியிருக்கிறீங்க, ரமணி அண்ணா. அழகான, அர்த்தம் நிறைந்த வரிகள்.

போளூர் தயாநிதி said...

//கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளை பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?//
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

ஹேமா said...

வாழ்வியலை.மன உணர்வை வார்த்தைகளால் நிரப்புகிறீர்கள்.ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆற அமர வாசித்தால் மனதை இன்னும் பக்குவப்படுத்தவேணுமோ என்றாகிறது !

மனோ சாமிநாதன் said...

மிக மிக அருமையான, அசத்தலான‌ கவிதை!

சில சமயங்களில் சில வரிகள் மனதைத் தாக்கும். பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வரிகளை குறிப்பிட்டு, மன உண‌ர்வுகளையும் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தலாம். ஆனால், இங்கே எல்லா வரிகளுமே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன! வாழ்க்கையின் நிதர்சனத்தை, உள் ரண‌ங்களின் வலியை வெளிப்படுத்தும் எழுத்தை எப்படி வெறும் வார்த்தைகளால் பாராட்டுவதெனத் தெரியவில்லை.

த‌மிழ் அமுதாகப் பொங்கிப்பெருகி வழிவதை ரசித்து நிற்கிறேன்!!

Matangi Mawley said...

Brilliant Brilliant words!

Post a Comment