"சமத்தன் சந்தைக்குப் போனால்
ஊரறிந்த பழமொழி
"சமத்தனுடன் சந்தைக்குப் போனாலும்
சாமான் வா ஙக முடியாது" என்பது
நானறிந்த புதுமொழி
நெருங்கிய நண்பனொருவனின்
புதுமனை புகுவிழாவிற்கு
திருமுருகன் திருவுருவப்படம்
பரிசளிக்கலாம் என எண்ணி
என் ஓவிய நண்பனின்
உதவியை நாடினேன்
எத்தனை கடை ஏறி இறங்கிய போதும்
எத்தனை படங்கள் எடுத்துக்காட்டிய போதும்
அத்தனையும் சரியில்லை எனச்சொல்லி
எனக்கு வெறுப்பேற்றிக்கொண்டே வந்தான்
பொறுமை இழந்து நானும்
உண்மைக் காரணம் கேட்டபோது
முடிவாக இப்படிச் சொன்னான்
"அனைத்து படங்களிலும்
குறையொன்று உள்ளது
முருகனின் சிரசுக்கு மேலாக
வேலின் கூர்முனை உள்ளது
இது வைக்கப்பட்ட வீடு
நிச்சயம் உருப்படாது "என்றான்
முருகனின் உயரத்திற்கும்
வேலின் உயரத்திற்கும்
அப்படி என்ன சம்பந்தம்
எனக்கேதும் விளங்கவில்லை
பின் அவனே விளக்கலானான்
"முருகனின் வேல் ஆயுதமில்லை
அது ஞானத்தின் குறியீடு
ஞானம் முருகனை மீறியது இல்லை
அவனுக்குள் அடங்கியதற்குள்
அவனை அடக்குவதென்பது
அறிவீனமானது "என்றான்
"சரி இருக்கட்டும்
அதனால் என்ன " என்றேன் நான்
என்னை அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்
அதில் ஏளனக் கலப்பு அதிகம் இருந்தது.
பின் தொடர்ந்து இப்படிச் சொன்னான்
"சரி இதையே மாற்றிச் சொல்லுகிறேன்
பதவிக்கு மீறிய தகுதி உடையவன்
தலைவன் என ஆனால்
பதவிக்கும் பெருமை
நாட்டுக்கும் நல்லது
பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல" எனச் சொல்லி
என்னை கடந்து போனான்.
வழக்கம்போலவே
ஏதும் விளங்காது
நான் கல்லாய் சமைந்து நின்றேன்
23 comments:
சத்தியமான வார்த்தைகள். அற்புதமான வரிகள். தொடர வாழ்த்துகிறேன்.
உங்க நண்பன் ஞானி குரு......
//பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது//
செவியில் அறைந்தார் போல் இருக்கு...
//பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது//
இதை படிச்சுட்டு எனக்கு உடனே நினைவுக்கு வந்தது ஆ ராசா'வும் அழகிரி'யும்தான்...
//சரி இதையே மாற்றிச் சொல்லுகிறேன்
பதவிக்கு மீறிய தகுதி உடையவன்
தலைவன் என ஆனால்
பதவிக்கும் பெருமை
நாட்டுக்கும் நல்லது//
ஆயிரத்தில் ஒரு வார்த்தை....
//பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல"//
கண்ணாடி போல உண்மை சொல்லியுள்ளீர்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி..
இன்றைய தேர்தல் சூழ்நிலை முருகனையும் வேலையும் விடவில்லை போலும். தலைவனின் வாரிசுகளைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நிர்பந்தம் அரசியலில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் உள்ள நிலை, இங்கு மட்டுமல்ல பல நாடுகளிலும் உள்ளது. பல இரண்டாம் தலைமுறை தலைவர்களுக்குப் பதவிதான் தகுதி. அறிவைக்காட்டிலும் ஆணவம் மேலோங்கி நிற்பதைக் காணலாம். இதையெல்லாம் மீறி தனிமனித வாழ்க்கைத் தரம் உயர கலாச்சாரம் அமைய வேண்டும்.
"முருகன்+வேல்=தலைவன்+தகுதி"
என்றவரை கண்டு பிடித்து விட்டீர்கள். மேற்படிச் சமன்பாட்டில் கலாச்சாரம் என்பதைக் சேர்த்துப் புது சமன்பாடு கொடுத்தால் நாடு உருப்பட வழி கிடைக்கும். முயன்றுதான் பாருங்களேன்.
நல்லதோர் கருத்தை நயம்பட உரைத்திருக்கிறீர்கள்..
சாட்டையடி
ரொம்ப நல்ல வந்து விழுந்திருக்கு வார்த்தைகள்
பகிர்விற்கு நன்றி
இதையும் படிக்கவும்
http://suharaji.blogspot.com/2011/03/blog-post_08.html
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.
ஐந்தாவது வரியில் இரண்டாவது வார்த்தை
‘வஙக’ என்பதை ’வாங்க’ எனத் திருத்தனுமோ?
அந்த விளக்கத்தை பற்றி யாரிடமாவது கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளலாமே!
விளக்கம் தெளிவாயிருக்கே !
///பதவிதான் தகுதி என ஒரு தலைவன் இருப்பானாகில் அவனும் உருப்படமாட்டன் அவன் நாடும் உருப்படாது/////
தலைவர்களை குறை கூறி பயனில்லை அந்த தலைவர்களை தேர்ந்து எடுப்பவர்களைத்தான் குறை கூற வேண்டும். நல்ல மக்கள் தகுதியான தலைவனைத் தேர்ந்து எடுத்தால் அந்த தலைவன் நாட்டை நல்வழியில் கொண்டு செல்வான்.
சிந்திக்க தூண்டக்ககூடிய நல்பதிவு......தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை...வாழ்துக்கள் என்றென்றும்.
சிந்திக்க வேண்டிய விஷயம். கவிதை நன்றாக வந்துள்ளது!
அற்புதம். இன்றைய நிகழ்வுக்கு ஏற்ற ஒன்று
அண்ணா...சமீப கால நிகழ்வுகளுக்கு (அரசியல் உள்பட) சரியான பொருத்தமான வரிகள்...சூப்பர் அண்ணா...லாவகாமாய் வந்து விழுகுது பளிச் வரிகள்...
விளங்காது இருத்தலும் சில சமயம் நன்மைக்கே. BLESSED ARE THOSE THAT ARE IGNORANT....!
ரமணி அண்ணா, சும்மா பின்னுறீங்க. நிறைய வரிகள் அழகா, அர்த்தம் நிறைந்து, ரசிக்கும் படி இருக்கு.
என்ன ஒரு நிதர்சனம்.
அருமை.
பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி இருக்கிறீர்கள்.
நிறைய தெரிந்து கொள்வதும் ஒருவிதத்தில் சங்கடமே..... நல்ல ஆழ்ந்த கருத்து.. ;-)))
"பதவிக்கு மீறிய தகுதி உடையவன்
தலைவன் என ஆனால்
பதவிக்கும் பெருமை
நாட்டுக்கும் நல்லது
பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல"
அருமையான, நிதர்சனமான வரிகள்! மேன்மேலும் அருமையாக எழுத அன்பு வாழ்த்துக்கள்!!
சாட்டையடி
Post a Comment