Wednesday, June 15, 2011

அஹம் பிரம்மாஸ்மி

கடற்கரையில்
கால்கள் நனைத்தபடி நின்றிருந்தேன்

 விரிந்து பரவியிருந்த  கடல் 
காற்றில் அலையும்
நீல வண்ண ஆடைபோலவும்
அலைகள்
வெண்ணிற மணிகள் கோர்த்த
முந்தி போலவும் பட்டது
நினைவும் அனுபவமும்தான்
அதை கடல் எனச் சொல்லிகொண்டிருந்தது

 சீறிவந்த அலையொன்றை
கைகளில் தாங்க முயல
அனைத்தும் வழிந்துபோய்
ஒரே ஒரு துளி மட்டும்
உள்ளங்கையில் தங்கி நின்றது

அதனை விளக்குபோல் தாங்கி
கரையேர முயல
"என்னை இறக்கி விட்டுப் போ"
என கூச்சலிடத் துவங்கியது

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை
"பேரண்டம்போல் விரிந்து கிடக்கும்
சமுத்திரத்தில் நீ ஒரு துளி
நீ குறைந்தால் என்னவாகிவிடப் போகிறது "

அது அலட்சியத்துடன்
"நீயாக எனக்கு பெயர் சூட்டிவிட்டால்
அது என் பெயர் ஆகி விடுமா?
நான் துளி இல்லை நான் கடல்"என்றது

"எனக்குப் புரியவில்லை
நீ எப்படி கடலாக முடியும்"என்றேன்

" நீ நீயாகவே இருப்பதால்
என்னைப் புரிய சாத்தியமில்லை
உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே
என்னைப் புரிந்து கொள்ள முடியும் " என்றது

நான் குழம்பிய நிலையில்
 கைகளைச் சாய்க்க
அது கடலோடு இரண்டரக் கலந்து போனது
நான் எப்படிப் பார்த்தபோதும்
எங்கும் கடல் மட்டுமே வியாபித்திருந்தது

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதை எதையோ சிந்திக்கத்தான் வைக்கிறது.

சிறுதுளிப்பெருவெள்ளம் என்பார்கள்.

//" நீ நீயாகவே இருப்பதால்
என்னைப் புரிய சாத்தியமில்லை
உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே
என்னைப் புரிந்து கொள்ள முடியும் " //

கடல்நீரின் ஒரே ஒரு துளி சொல்லிப்போய் பிறகு கடலின் கலந்து மறைந்து விட்டதாக தாங்கள் எழுதியுள்ள, மிகச்சிறந்த கற்பனை. ஆனால் அதுதான் உண்மையும் கூட. நல்லதொரு தலைப்பும் கூட.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

கதம்ப உணர்வுகள் said...

எத்தனை பெரிய விஷயம் இப்படி எளிய வரிகளில் தரமுடிகிறது உங்களால் ஆச்சர்யம்....

துளி என்றாலும் கடல் கடல் தானே? நம்மை நாம் அறியும் வரை தான் என்ற அகந்தை நம்மை ஆட்டிப்படைக்கும்.... நான் என்பது அந்தராத்மாவா அல்லது உடலா....

துளி என்றால் அது கடலும் ஆகலாம் அன்பும் ஆகலாம் காதலும் ஆகலாம்.... கடலில் இருந்து பிரிக்கப்பட்ட துளியும் இறுதியில் இணைவது கடலிலே....

அதுபோல் மனித உயிர்களை படைத்த இறைவனையே இறுதியில் அவன் பத கமலங்களில் சரணடைந்து அவனுடன் நம் உயிரும் ஜோதியாய் கலந்துவிடும்..

மிக மிக அருமையான வரிகள் கொண்ட சிறப்பான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ரமணி சார்...

A.R.ராஜகோபாலன் said...

ரமணி சார்
கவிதையும் அதன்
கருவும்
கடலைப் போலவே
பிரமாண்டமாயிருக்கிறது
துளியானாலும்
துகளானாலும்
பிரபஞ்சத்தின்
பிரதானம்
சுயம்
அதை நீங்கள்
சொன்ன விதம்
அருமை சார்

vidivelli said...

" நீ நீயாகவே இருப்பதால்
என்னைப் புரிய சாத்தியமில்லை
உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே
என்னைப் புரிந்து கொள்ள முடியும் " என்றது
atputham ............
supper........

வெங்கட் நாகராஜ் said...

கவிதையில் சொன்ன கரு - கடலைப் போலவே பல பொருளை அடக்கியுள்ளது தன்னுள்.... நல்ல கவிதை.

G.M Balasubramaniam said...

தன்னைத் தானே தேடும் ஒருவனுக்கு இயற்கை நிறையவே பாடம் கற்பிக்கிறது. அதுவும் தேடுபவன் கவிஞனாயிருந்தால் (உங்களைபோல்)பலனடைபவரும் பலரே. அருமை தொடர வாழ்த்துக்கள்.

Anonymous said...

கத்திடும் கடலின் நீரை-உள்ளங்
கையிலே அள்ளி நீரும்
தத்துவப் கருத்து தன்னை-இங்கே
தந்ததைப் படித்(தே)ன் என்னை
சித்தமும் குளிர வைத்தீர்-பலரும்
சிந்திக்க வைத்தீர் வைத்தீர்
நித்தமும் தருவீ்ர் பாடல்-முத்
தமிழெனும் அருவி கூடல்
புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

எல்லயற்ற பரம்பொருள் ஆத்மாவாக மெய்யில் கலந்து உயிரும் மெய்யுமாய் நடமாடுகிறது.
அஹம் பிரம்மாஸ்மி. அஹம் பிரம்மம். எந்தப்பறவைதான் கூட்டில் இருக்க விரும்புகிறது?
கூக்குரல் இடுகிறது. புரிந்தவர்களுக்குப் புரியுமே...

நிரூபன் said...

சிறு துளியும் பெரு வெள்ளமாக மாறும் என்பதனை உணர்வூட்டி அழகிய கவிதையாக, வாழ்வியலுக்கான தத்துவமும் கலந்து தந்திருக்கிறீங்க சகோ.

எல் கே said...

தன்னை உணர்ந்தால் மற்றவையை உணரலாம்

அன்னைபூமி said...

அணு தான் அத்தனைக்கும் உள் உள்ள உயிர். . .அருமை sir

பிரணவன் said...

உணர்தலில் உள்ளது வாழ்க்கையின் தத்துவம். கவிதை அருமை sir. . .

Anonymous said...

சொன்ன விதம் அழகு ஐயா

மனோ சாமிநாதன் said...

அழகான கற்பனை! பல அர்த்தங்களை உள்ளடக்கிய அருமையான கவிதை!

Krishna said...

அழகான வரிகள்

Avargal Unmaigal said...

உங்கள் கவிதையை படித்துவிட்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை..எனக்கு முன் வந்து படித்து சென்றவர்களும் அழகாக விமர்சித்துள்ளனர்.மிக மிக அருமை என்பதைவிட வேறு என்ன சொல்ல முடியும்.
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
//நீ நீயாகவே இருப்பதால்
என்னைப் புரிய சாத்தியமில்லை
உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே
என்னைப் புரிந்து கொள்ள முடியும்//

அழகிய நாட்கள் said...

துளி நீர் கூட அதன் இனத்தோடு இருக்க நினைக்கிறது.
மானுட சமுத்திரம் நானென்று கூவ முடியாமல் சாதி மதம் இனம் மொழியால் பிரிந்து கிடக்கிறது.
நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுமாம் அந்த ஒட்டுதல் கூட நம்மிடம் இல்லையே
- திலிப் நாராயணன்.

ஹேமா said...

உங்கள் எண்ணங்களும் கடல்போலத்தான் விரிந்து கிடக்கிறது.பாராட்ட வார்த்தைகள் இல்லை !

சாகம்பரி said...

துளியாக இருந்தாலும் உள்ளே இருப்பதை உணர்ந்து செயல்பட்டால் அஹம் பிரம்மாஸ்மிதான். உணர்வது எப்போது?

மாதேவி said...

தத்துவதுளி சிந்திக்க வைக்கிறது.

Post a Comment